தமிழக சட்டபேரவை உறுப்பினர் திரு. பழ.கருப்பையா அவர்கள் 'நகரத்தாருக்குரிய அடையாளங்கள் தொடர வேண்டுமென்றால், நாம் கலப்புத் திருமணத்தை (சாதி மறுப்புத் திருமணம்) முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரை நம் சமூகத்தில் இருந்து தள்ளி வைத்துவிட வேண்டும்!' என்று தனது கட்டுரையில் எழுதியுள்ளார். 'சாதிய மறுப்புத் திருமணம் செய்தால் கையை வெட்டுவேன்' என்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளார் மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் 'காடுவெட்டி குரு' (ஆனந்த விகடன் 27.06.12).

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்கள் நாகரீகமாக பேசவேண்டும் என்று பண்பாடு இன்று குறைந்து கொண்டே வருகிறது. இவர்கள் பேசிய, எழுதியவை நாகரீகம் அற்றவை என்று வெறுமனே புறந்தள்ளிவிட முடியாது, மாறாக அவர்களின் பேச்சுக்குப் பின்னால் ஒளிந்திருக்கம் சாதிய வக்கிரம், ஆணவம், நம்மை மனுநீதி சமூகத்திற்கு வாழ அழைப்பு விடுக்கின்றது. ஒரு சமூகம் நாகரீகமானது என்பதை வரையறுக்க அங்கு வாழும் மக்களிடம் காணப்படும் மானுட நேயத்தையும், பண்பாட்டையுமே அடிப்படையாக எடுத்துக் கொள்ள முடியும். இந்தியச் சமூகம் சமத்துவமற்ற சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூகம். இதற்கு அடிப்படைக் காரணம் ஆரியர்களின் வேத நூலான ரிக்வேதத்தில் 'புருஷ-சூக்தம்' என்ற பகழ்பெற்ற பாடலில் சாதிய அமைப்பிற்கான முதல் வித்து ஊன்றப்பட்டுள்ளது. அந்த பழமையான பாடலில் கதை ஒன்று கூறப்படுகிறது. புருஷன் (உலகின் ஆன்மா அல்லது மகா மனிதன்) என்று அழைக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த ஒரு மனிதன் பலியிடப்பட்டான். கடவுளர்தான் அவனைத் துண்டு துண்டாக வெட்டினார்கள். அவன் எத்தனை துண்டுகளாக வெட்டப்பட்டான்? அவனுடைய வாய் என்னவாயிற்று? அவனுடைய கரங்கள் என்னவாயிற்று? அவனுடைய தொடைகளும் பாதங்களும் என்னவாயிற்று? பார்ப்பனன் புருஷனுடைய வாய் ஆனான். ரஜன்னியன் (ச‌த்திரியன்) புருஷனுடைய கரங்கள் ஆனான். வைசியன் (வணிகன்) புருஷனுடைய தொடைகள் ஆனான். சூத்திரன் புருஷனுடைய பாதங்களானான். (இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பக் 63).

    இவ்வாறு சாதிய அமைப்பு பார்ப்பனர்களால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. அதனை கட்டிக் காக்கும் நிறுவனங்கள் தான் குடும்பங்கள். அகமணத் திருமணத்தின் மூலம் சாதியம் இன்றும் வாழையடி வாழையாக தொடர்ந்து நம் சமூகத்தில் பிரிக்க முடியாத, அழிக்க முடியாத ஆக்டோபஸ் போல பரவிக் கொண்டிருக்கிறது.

    தந்தை பெரியார் கூறுவார் சாதியைக் கட்டிக்காத்தது 'மனு'. இந்தியாவை மனுதர்ம சட்டங்கள் தான் இன்றும் ஆட்சி செய்து வருகின்றது. மனுதர்மம் சாதிய மறுப்புத் திருமணத்தை எதிர்க்கிறது. மனுவின் விதிகள் இவ்வாறு கூறுகின்றது.

பிரிவு  3:12 இரு பிறப்பாளராம் வருணங்களில், முதல் திருமணத்திற்கு அதே வருணத்தைச் சேர்ந்த பெண்ணையே மணம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

    3:13. சூத்திரன் மணைவி சூத்திரச்சியாகவே இருக்க வேண்டும்.

    8:366 'உயர் குலத்துப் பெண்ணைக் காதலிக்கும் அழிகுலத்தானுக்கு கசையடி கொடுத்தல் வேண்டும்: அவரவருடைய சமவர்க்கத்துப் பெண்ணை காதலித்தால் பெண்ணின் தந்தை சம்மதத்தைப் பெற்றுப் பரிசம் போட்டு அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

    (அம்பேத்கார், இந்த மனுத் தத்துவமும் - மனுதர்மமும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் - சென்னை)

    சாதிய அமைப்பை ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்கு சாதி ஒழிப்புத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணம் தான் சரியானத் தீர்வாக இருக்க முடியும் என்ற பெரியாரின் படிப்பினைகள் இந்த பெரியார் மண்ணிலே படுகுழிக்குள் போட்டு புதைக்கப்பட்டுள்ளது. 1967ம் ஆண்டு அண்ணா முதன் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது இரண்டு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவந்த காங்கிரசு கட்சிக்கு மாறாக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த அண்ணாவின் முதல் தீர்மானம், சென்னை மாகாணம், இனி 'தமிழ் நாடு' என்று அழைக்கப்படும், அடுத்தது சுயமரியாதைத் திருமணச் சட்டம். சாதி மறுத்து திருமணம் செய்பவர்களை பாதுகாப்பதற்காக அச்சட்டம் தமிழக சட்ட மன்றத்திலே நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று அதே சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர் பேசுகின்ற பேச்சுகளையும், கொள்கைத் திரட்டையும் நோக்கும்போது, ரிக்வேத கால நாகரீகத்தில் தான் வாழ்கிறோமா? என்று நம்மையே நாம் கிள்ளி பார்க்க வேண்டியுள்ளது.

    'காடு வெட்டி' குரு பேசியது, அவர் உள்வாங்கியுள்ள மனுதர்ம, சாதி ஆணவத்தின் வெளிப்பாடு. 1800 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட மனுநீதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    'ஒரு சூத்திரத்தின் பிராமணப் பெண்ணைத் தொட்டுவிட்டால் கையை வெட்டிவிட வேண்டும்.' காடுவெட்டி குரு பேசியிருப்பது மனுதர்மத்தின் ச‌ட்டத்தையே. அவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 121 கூறுவது போல் ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதை அவர் மதிப்பதில்லை. ஒவ்வொரு குடி மகனும் தனக்குப் பிடித்தமான துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதை காடுவெட்டி குரு படித்ததில்லையா? இவருக்கு மாந்த நேய சட்டமே தெரியவில்லை, எப்படி இந்திய அரசியல் சட்டம் தெரியும்?

    இது காடுவெட்டி குரு மட்டும் கொண்டுள்ள கொள்கை அல்ல, மாறாக பெண்ணடிமையே தனது கருத்தியலாகக் கொண்டுள்ள எல்லா ஆணாதிக்கச் சிந்தனையாளர்களும் இதையே பின்பற்றுகிறார்கள். நீதிமன்றங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அண்மையில் மும்பை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் 'பெண் என்பவள் கணவனைத் தொடரும் சீதை போன்றவள்' என்று கூறியுள்ளது. (உயிர்மை ஜீலை.12- 27)

    சாதி மறுப்புத் திருமணங்கள் அவ்வப்போது நடைபெற்றாலும் அவை படுகொலைகளிலும், மிரட்டல்களிலும் தான் முடிகின்றன. நாம் வாழும் காலத்தில் யாரையும் காதலிக்கக் கூடாது என்று கூற முடியாது. பத்தாண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 'காதலை அடிப்படை மனித உரிமை' என்று குறிப்பிட்டுள்ளது (இந்தியா டுடே அக்,19.2011. 35). மனிதர்கள் அனைவருக்கும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமை இருப்பது போல் அவர்கள் காதலிக்கவும் உரிமையுள்ளது. அது ஒரு குறிப்பிட்ட சாதிக்குள்ளேதான் காதலிக்க வேண்டும் என்று வரையறை செய்வது அறிவு சமூகத்திற்கு ஒவ்வாத செயல். இதனைப் புரியாத பழ.கருப்பையா போன்றவர்கள் நாட்டை ஆளும் மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பது அறிவுஜீவிகள் வெட்கப்பட வேண்டிய செயல்.

    சாதிய மறுப்புத் திருமணங்களை இவர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. இந்தியாவின் தேசப்பிதா என்று காங்கிரஸ் காரர்களால் வலிந்து திணிக்கப்பட்ட 'மகாத்துமா' காந்தியடிகள் அவர்களும் எதிர்த்துள்ளார்.

    29.04.1933-ம் ஆண்டு அரிசன் இதழில் சாதி ஒழிப்புத் திருமணம் பற்றி காந்தி இப்படி எழுதியுருக்கிறார். 'ஜனநாயகத் தக்க வளர்ச்சிக்கு சமபந்தி போஜனம், கலப்பு மணம் (சாதிய மறுப்புத் திருமணம்) அவசியமல்ல என்பதே என் உறுதியான அபிப்ராயமாகும்.'

    04-06-1921-ல் 'யங் இந்தியாவில்' சாதி ஒழிப்புத் திருமணம் பற்றி காந்தி எழுதியிருப்பதாவது:

    'ஒவ்வொரு ஆடவருக்கும், பெண்டிருக்கும் அவரவர் மதத்தை அனுசரிப்பதற்கான சுதந்திரம் இருக்கும் வரையில் கலப்பு மணத்திற்குத் தார்மீகமான ஆதரவு கிடையாது. கலப்பு மணங்கள் இன்ப வாழ்வுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அதை ஒரு பொதுக் கொள்கையாக அனுசரிக்கும் படி யோசனை கூறுவதற்கு காரணமே இல்லை'

    (பெ. தங்கராசு காந்தி அம்பேத்கார் கருத்து மோதல் சென்னை: புரட்சிக்கனல் வெளியீட்டகம். 1999, பக்.42.)

    ஒருவன் சாதியை ஒழிக்க வேண்டுமென்று கூறுகிறவன் இந்து மத விரோதியாகிறான் என்று அண்ணல் காந்தியடிகள் (!) கூறியிருப்பது அவரும் மனுதர்மவாதிதான் என்பதை நிரூபித்துள்ளது.

    சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால், சுயமரியாதைத் திருமணங்கள் பெருக வேண்டும். இன்றைய இளையோரிடம் சாதிமறுப்புத் திருமணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும். சாதியை கட்டிக் காப்பாற்றும் அகமண முறையை ஒழிக்க வேண்டும். சாதி ஒழியாமல் சமத்துவம் இல்லை. சாதியை வைத்துக் கொண்டே நம்முடைய தமிழ்ச் சமூகம் நாகரீக சமூகமாக வாழ முடியாது. மாந்த நேயம் பேணப்பட வேண்டுமென்றால் சாதி மறுப்புத் திருமணங்கள் அவசியம்.

    இப்பொழுது நடைபெறும் சாதி மறுப்புத் திருமணங்கள் வருங்கால தலைமுறையினர் சாதியற்ற சமூகத்தை அமைக்க அடித்தளமாக அமையும்.

    உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு வழக்கொன்றில் இவ்வாறு தீர்ப்பளித்தார். இதுவே நாம் அனைவரின் கொள்கையாக மாற வேண்டும்....

    'சாதி என்பது இந்த நாட்டின் சாபம். கலப்புத் திருமணங்களால் (சாதிய ஒழிப்பு) சாதிய அமைப்பைத் தவிர்க்க முடியும். ஆனால் சாதி ஒழிப்புத் திருமணம் செய்பவர்கள் தொடர்ச்சியாக மிரட்டப்படும் செய்திகள் நாடு முழுவதிலிருந்தும் வருகின்றன. அப்படி செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள். இது ஜனநாயக நாடு, தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.'

துணை நின்ற நூல்கள்:

1. இந்தியா டுடே, அக்.19.2011.

2. உயிர்மை ஜுலை, 2012.

3. அம்பேத்கார், இந்துமதத் தத்துவமும் மனுதர்மமும், சென்னை: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, 2007.

4. பெ. தங்கராசு, காந்தி அம்பேத்கார் கருத்து மோதல், சென்னை: புரட்சிக் கனல் வெளியீட்டகம், 1999.

5. சகாய ராஜ், பெரியார் திராவிடம் இந்துத்துவம், திண்டுக்கல்: வைகறை.

6. பிரேம்நாத் பசாஸ், இந்திய வரலாற்றில் பகவத்கீதை: கோவை விடியல் பதிப்பகம், 2004.

Pin It