"பெண்களுக்கு சமத்துவமும் சுதந்திரமும் கொடுக்கப்படும் என்று முதலாளித்துவ ஜனநாயகம் வார்த்தையளவில் வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் உண்மையில் ஒரு முதலாளித்துவக் குடியரசு கூட அது எவ்வளவு வளர்ச்சியடைந்திருந்த போதிலும் சட்டத்துக்கு முன்பாகப் பெண்களுக்கு முழுமையான சமத்துவத்தைக் கொடுக்கவில்லை. ஆண்களின் ஒடுக்குமுறையிலிருந்தும் அவர்களை நம்பியிருக்கும் நிலையிலிருந்தும் பெண்களுக்கு விடுதலை கொடுக்கவில்லை.

முதலாளித்துவ ஜனநாய‌கம் என்பது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும், கம்பீரமான வார்த்தைகளும், மிதமிஞ்சிய வாக்குறுதிகளும், ஆர்ப்பாட்டமாக ஒலிக்கும் கோஷங்களும் அடங்கிய ஜனநாயகமாகும். ஆனால் உண்மையில் பெண்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் இல்லாதிருப்பதை, உழைக்கும் மக்களுக்கும் சுரண்டப்படும் மக்களுக்கும் சுதந்திரமும், சமத்துவமும் இல்லாதிருப்பதை இவை மூடி மறைக்கின்றன." - வி.இ.லெனின்

லெனின் இதைச் சொல்லி ஏறக்குறைய 95 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்னும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் எந்த‌ மாற்றமும் இன்றி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்தியச் சூழலில் முதலாளித்துவம் மட்டுமின்றி பார்ப்பன இந்து மதமும் ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைப்படுத்தி வருகிறது.

உலகமயமாக்கல் ஏற்படுத்தி இருக்கும் கலாச்சார சீரழிவுகள்

மக்கள் மீது பெரும் சுமையாய் இறங்கியிருக்கும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள், 'ஒரு நிரந்தரமான தொழில், அதனடிப்படையிலான வாழ்க்கை' என்ற நிலைமையிலிருந்து பல்வேறு உழைக்கும் வர்க்கத்தினரையும் சிதறடித்து, அரைப்பாட்டாளிகளாகவும் உதிரிப் பாட்டாளிகளாகவும், சுய தொழில் செய்து வயிற்றைக் கழுவும் தரைக்கடை வியாபாரிகளையொத்த சிறு முதலாளித்துவ வர்க்கமாகவும் மாற்றியிருக்கிறது. நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் இந்த நிச்சயமற்ற நிலையால் நிலைகுலைந்திருக்கும் மக்கள் மீது பிழைப்புவாதத்தையும், கிடைத்தவரை ஆதாயம் என்ற கண்ணோட்டத்தையும், அறம், ஒழுக்கம், நேர்மையெல்லாம் பேசுவது பத்தாம் பசலித்தனம் என்ற கண்ணோட்டத்தையும், சமூகத்தைப் பற்றியோ, தன்னுடைய சொந்த எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லாமல் இருக்கின்றவரை அனுபவிப்போம் என்ற கண்ணோட்டத்தையும் ஆளும் வர்க்கம் பரப்பிவிட்டிருக்கிறது.

இதன் விளைவாக மிகக் கொடூரமான, வக்கிரமான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்து விட்டன. அற்பக் காரணங்களுக்காக கொலைகள், தற்கொலைகள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள், மாணவிகளைப் பாலியல் ரிதியாகத் துன்புறுத்தும் ஆசிரியர்கள், பெண்களை ஏமாற்றி நீலப்படம் எடுத்து பிளாக்மெயில் செய்யும் இளைஞ‌ர்கள், விதவிதமான போதைப் பொருட்கள், பள்ளி மாணவர்கள் வரை பரவி விட்ட மதுப்பழக்கம், வரதட்சனைக் கொலைகள் என்று சமூகமே அழுகி நாறுகிறது. இந்தச் சீரழிவுகள் அனைத்தையும் தூண்டிவிடும் நுகர்பொருள் வெறி, வரம்பற்ற தனிநபர் வாதம், சுயநலம் ஆகியவை கண்டிக்கப்படுவதில்லை என்பதோடு, அவையே நல்லொழுக்கமாகவும் பின்பற்றத்தக்க முன்மாதிரியாகவும் சித்தரிக்கப்படுகின்றன. சினிமாக்களும் தொலைக்காட்சித் தொடர்களும் பொழுதுபோக்கு என்ற போதைக்கு மக்களை அடிமையாக்கி அவர்களுடைய அரசியல் சமூக நடவடிக்கைகளை முடக்கியிருக்கின்றன. மேலும் அவை பரப்பும் கருத்துக்களும் பண்பாடும், மக்களை மிகவும் இழிந்த நிலைக்குத் தாழ்த்தியிருக்கின்றன. காமவெறியைத் தவிர வேறெந்த உணர்வுமில்லாத சதைப்பிண்டங்களாக இளைஞ‌ர்களை காட்சிப்படுத்துகின்றன; பெண்களின் உடல்களை பாலியல் பொருட்களாகச் சித்தரிக்கின்றன.

விளம்பர நிறுவனங்கள் தம்முடைய விளம்பரங்களுக்கு பெரும்பாலும் பெண்களையே சார்ந்திருக்கின்றன. அவை சாதாரண பொருட்களை அறிமுகப்படுத்துவதற்குக் கூட பெண்களை ஆபாசமாக காட்டுகின்றன. பெண் என்பவளை ஆண்களின் நுகர்வுக்கான ஒரு பண்டமாகவே இவை முன்நிறுத்துகின்றன.

இளைஞ‌ர்களிடம் வர்க்க உணர்வு ஏற்படாமல் இருக்க முதலாளித்துவ ஊடகங்கள் இதை திட்டமிட்டே செய்கின்றன. இதன் மூலம் தனது இருத்தலை அவை தக்கவைத்துக் கொள்கின்றன.

பார்ப்பன இந்து மதமும் அதன் ஆணாதிக்க கருத்தியலும்

பார்ப்பன இந்து மதமும், அதன் புராண இதிகாசங்களும், மனு தர்ம சாஸ்திரங்களும் எப்பொழுதும் பெண்ணை தன் சக மனுஷியாய் பார்ப்பதில் இருந்து ஆண்களுக்கு விலக்கு அளித்தே வந்துள்ளது. உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என பெண்களை கடுமையாக ஒடுக்கி வந்தது. குமரி மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள்,  திறந்த மார்புடன் அரை நிர்வாணமாக இருக்க நிர்பந்திக்கப்பட்ட நிலையில், மார்பை மறைக்கும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றனர். இந்தப் போராட்டம் 'தோள் சீலைப் போராட்டம்’ எனப்படுகின்றது. ஆனால் திருவிதாங்கூர் அரண்மனை சார்ந்த அதிகார வர்க்கம் இப்போராட்டத்தை ‘சாணார் ரகளை’ என்று கொச்சைப்படுத்தியது.

1930-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இராமாதபுரம் மாவட்டத்திலுள்ள கள்ளர் சமூகத்தினரின் 'நாடு' என்ற அதிகார அமைப்பு தலித்துகளுக்கு எதிராக எட்டு பண்பாட்டுத் தடைகளை விதித்த‌து அவற்றுள் எட்டாவது தடை,

“துணி, ரவிக்கை, தாவணி ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் மார்பை மறைக்கக் கூடாது” என்பதாகும். மேலும் பரமாச்சார்யா என்று கூறப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் புண்ணிய தலங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கான காரணமாகப் பூப்புத் தீட்டைக் குறிப்பிடுகின்றார்.

“ஆலயங்களுக்கு உள்ளேயே நடக்கிற அநாசாரங்களை என்னைத் தவிர யாரும் எடுத்துச் சொல்ல மாட்டார்கள் போலிருக்கிறது. அதையும் நானே சொல்கிறேன். இப்போதெல்லாம் டூரிஸ்டுகள் 48,5,0 நாள் யாத்திரை கோஷ்டிகள், காலேஜ் பெண்கள், டிரெயினிங் ஸ்கூல் பெண்கள் என்று பலர் கூட்டம் கூட்டமாக கோயில்களுக்கு பஸ்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் விலகியிருக்க வேண்டிய காலத்திலும் தரிசனத்துக்கு வந்து விடுகிறார்கள். இப்படிச் செய்வது தோஷம் என்று தெரியாததாலேயே பெரும்பாலும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் வீட்டுவிலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும் கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்து விடுகிறார்கள். இந்த விலக்கினை மீறுவதால்தான் பல மகா ஷேத்திரங்களில் விபத்து, விபரீதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்."

விபத்துகளுக்கு மட்டுமின்றி இந்திய நாடு முன்னேறாததற்கும் இத்தீட்டுதான் காரணம் என்று மேற்படி ஆச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.

“இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆபீஸீக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. ‘அட்மாஸ்பெரிக் பொல்யூஷன்’ என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக் காட்டி எதிர் நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள். அந்தப் பொல்யூஷன் எல்லாவற்றையும் விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே. அது செய்கிற கெடுதல் வெளியிலே தெரியாததால் அதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள். கவனிக்கிறவர்களையும் ஆசாரப் பைத்தியங்கள் என்று ஒதுக்கிறார்கள். வாஸ்தவத்திலோ இந்தத் தீட்டு அமங்கள‌ சத்திகளையெல்லாம் இழுத்துக் கொண்டு வரும். அதை இப்படி எல்லா இடங்களிலும் கலக்கவிட்டால் ஜனங்களுக்கு எத்தனை தான் வரும்படி வந்தாலும் கவர்ன்மென்ட் எத்தனைதான் Five years plan போட்டாலும் தேசத்தில் தூர்பிக்ஷமும், அசாந்தியும், வியாதியுமாகத்தான் இருக்கும்."

 இது ஒரு மடச் சங்கரனின் கருத்தல்ல, பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட எல்லா இந்து ஆண்களின் கருத்தாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். இப்படி பெண்களுக்கு எதிராக கீழ்த்தரமான சிந்தனைகளை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் இந்து மதமும் அதன் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட இந்து ஆண்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை போன்ற கொடும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பெண்கள் இயக்கங்களில் அறிவீனப் போக்கு

தற்போது இந்தியாவில் இருக்கும் அதிகாரப்பூர்வமான 'பெண்ணுரிமை' மற்றும் மக்கள் அமைப்புகள், 90 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட புரட்சிகர ஆதிவாசிப் பெண்கள் அமைப்பான கிராந்திகாரி ஆதிவாசி பெண்கள் சங்கத்திலிருந்து விலகியே நிற்பது ஏன்? தங்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தையும், சுரங்க முதலாளிகள் தண்டகாரண்ய வனங்களிலிருந்து தங்களை வெளியேற்றுவதை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்களை விட்டு ஒதுங்கியே இருக்கிறார்களே ஏன்? பரம்பரையாகத் தாங்கள் வாழ்ந்து, உழைத்து வரும் நிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் விரட்டப்படுவது பெண்களுக்கான உரிமைப் பிரச்சனை இல்லையா?

மேலும் பெண் விடுதலைக்காக குர‌ல் கொடுக்கும் பல பெண்கள் அமைப்புகள் பொதுவாக மதச்சார்பற்ற தன்மையை கடைப்பிடிப்பதில்லை. அவை அடிப்படையில் இந்துக் கருத்தியலையோ, இஸ்லாமிய கருத்தியலையோ ஏற்றுக் கொள்கின்றன.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகளை பெற்றிருக்கின்றன. பெரும்பாலும் இந்த வகை பெண்கள் அமைப்புகள் ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த வன்முறையையும் தட்டிக் கேட்கும் திராணியற்றவையாகவே இந்த அமைப்புகள் உள்ளன.

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவமாகட்டும், தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவமாகட்டும் அல்லது இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நாள்தோறும் நடக்கும் வன்முறை சம்பவங்களாகட்டும், இதற்கு என்ன தீர்வு என்பதே நம்முன் உள்ள கேள்வி.

பல பெண்கள் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கடுமையான சட்டங்கள் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் இதற்கு நேர் மாறாக உள்ளன‌.

சங்கர மடத்தின் மனச்சாட்சியாய் இந்திய நீதிமன்றங்கள்

நீதிபதிகளின் வாழ்க்கை முறை, பெண்களின் வாழ்க்கை யதார்த்தத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறது. அதனால்தான் நீதிபதிகளின் தீர்ப்புகள் பெண்களுக்கு விரோதமாக இருக்கின்றன. விசாரணை நீதிமன்றங்கள் தண்டனை அளித்தாலும் கூட உயர் நீதிமன்றங்கள் வழக்கமாக அத்தீர்ப்புகளைத் தலைகீழாகத் திருப்பி, குற்றவாளிகளை விடுதலை செய்கின்றன. உயர்நீதிமன்றம் அளித்த ஆணாதிக்கத் தீர்ப்புகளின் ஒரு சில மாதிரிகளைப் பார்ப்போம்.

மதுரா என்ற ஆதிவாசிப் பெண் காவல்துறையினரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றும், அவருடைய சம்மதத்துடன் தான் அது நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் கீழ் நீதிமன்றம் முடிவு செய்தது. உயர் சாதிப் பெண்கள் மட்டுமே கற்புக்கரசிகளாக திகழமுடியும் என்ற கருத்துடைய பண்பாட்டில் ஏனைய பெண்களுடைய நடத்தையைப் பற்றி சமுதாயம் கொண்டுள்ள புரிதலைத்தான் இந்த தீர்ப்பு வெளிப்படுத்தியது.

1993-ல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளியை விடுதலை செய்த ஒரிச உயர்நீதிமன்றம், பெண்ணின் உடம்பில் ஏற்பட்டிருந்த காயங்கள் பற்றிப் பின்வருமாறு கூறியது. அப்பெண் தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆகவே ஐயத்தின் பலன் குற்றவாளிக்குச் சாதகமாகிறது. (சன்யாசி கலன் சேத் எதிர் ஒரிசா அரசு 1993 (cri LJ 2784)

1993 - இல் வன்புணர்ச்சி குறித்து விசாரணையில் பெண்ணின் ஆடை கிழிந்தது குறித்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்கள் "உடைந்த வளையல்களும் ஜாக்கெட் பட்டன்கள் கழற்றி விடப்பட்டதும் வழக்கமான பொதுவான நடைமுறைதான். வன்புணர்ச்சி நடந்ததை இவை மெய்பிக்கவில்லை. (இராமச்சந்திரன் எதிர் மத்தியப்பிரதேச அரசு 1993 Cri LJ 1825)

1991 -இல் அப்பாவி கிராமப் பெண்ணை வன்புணர்ச்சி செய்த ஓர் ஆணை விடுவித்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் பின்வருமாறு கூறியது. "பாதிக்கப்பட்ட பெண் ஆணுறுப்பு நுழைந்தது பற்றி அழுத்தமாக ஏதும் சொல்லவில்லை. தன் 'மானத்தைக்' கெடுத்துவிட்டதாக மட்டுமே அவர் கூறியிருக்கிறார். ஆகவே இதில் குற்றம் ஏதுமில்லை". (பதூர்சிங் எதிர் மத்தியப் பிரதேச அரசு 1991 Cri LJ 753)

சட்டங்கள் எவ்வளவு கடுமையாக இயற்றப்பட்டாலும் நீதிமன்றமும் அதில் புரையோடிக் கிடக்கும் இந்துக் கருத்தியலும் நிச்சயம் பெண்களின் மீதான வன்முறையை கட்டுப்படுத்தாது. அதற்குப் பதிலாக‌ மேற்கூறிய கேவலமான தீர்ப்புகளே கிடைக்கும்.

தீர்வுகள்

பெண்கள் சம்பிரதாயமான சமத்துவத்துக்காகப் போராடாமல் பொருளாதார மற்றும் சமூக நீதியான சமத்துவத்துக்காகப் போராட வேண்டும். பெண்கள் குடும்ப அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு உணவு சமைப்பது, குழந்தைகளை வளர்ப்பது என்ற வகையில் நெடுங்காலமாக செய்து வரும் அலுப்பு தருகின்ற வேலைகளுக்கு, அவமானகரமான முறையில், உணர்ச்சிகள் மழுங்கிப் போகும் விதத்தில் அடிமையாக இருப்பதிலிருந்து விடுதலை பெற்று சமூக ரீதியில் பயனுள்ள உழைப்பில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் சமூக மாற்றத்துக்கான நடைமுறையில் அந்த வாய்ப்பை வழங்குவற்கு பெண்கள் வேண்டும். அதுவும் சமூகப் போராட்ட நடைமுறைகளில் உற்சாகமாக ‘நல்லெண்ணம் கொண்ட ஆணாதிக்கத்தையும்’ கூட முறியடிக்க முடியும்.

உதவிய நூல்கள்

1. இந்தியாவில் பெண்கள் இயக்கம் - ரேணு சக்ரவர்த்தி
2. சாதியும் பால்நிலைப் பாகுபாடும் - உமாசக்ரவர்த்தி
3. சட்டமும் பெண்களின் பாலியல் உரிமைகளும் - பிளேவியா அக்னீஸ்
4. பஞ்சமனா பஞ்சயனா – ஆ. சிவசுப்ரமணியன்
5. பெரியார் களஞ்சயம் தொகுதி – 5
6. புதிய கலாச்சாரம் 2008 – மார்ச்
7. தமிழகத்தில் அடிமை முறை – ஆ. சிவசுப்பிரமணியன்
8. முதலாளியம் ஒரு பேய்க் கதை – அருந்ததிராய்

- செ.கார்கி

Pin It