தொடரும் தலித் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள்

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் தலித் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக தலித் பெண்கள் இரு வழிகளில் இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றனர். ஒன்று, பெண் என்ற முறையில் இந்த ஆணாதிக்கச் சமூகம் அவர்களைச் சுரண்டுகிறது. இரண்டாவதாக, தலித் என்ற முறையில் சாதி ரீதியிலான வன்முறை அவர்கள்மேல் ஏவப்படுகின்றது. பெண்களை நாட்டின் கண்களாகவும் அளவிட முடியாத சொத்தாகவும் போற்றும் இந்த சாதியச் சமூகம்தான் அவர்களை பாலியல் இச்சையைப் பூர்த்தி செய்யும் பண்டமாக பயன்படுத்துகின்றது. இந்த பாலியல் சுரண்டலின் ஒரு வடிவம்தான் ‘தேவதாசி’ எனும் கடவுளின் அடிமை என்று கோயிலுக்கு தொண்டுசெய்யும் முறை. தேவதாசி முறை சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. தேவதாசி முறை தீண்டாமையின் ஒரு பகுதியே. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் அது இன்றும் தலித்துகளின் மீது ஏதோ ஒரு வழியில் தொடர்ந்து தினிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுக் கொண்டேதான் வந்துள்ளது. தேவதாசி முறை இதற்கு ஒரு உதாரணம். சட்டத்தால் இம்முறை தடை செய்யப்பட்டாலும் ஆதிக்க சாதிகளால் தொடரத்தான் செய்கின்றது.           பெண்களை பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் சமூக இழிவான தேவதாசி முறை பண்டை காலங்களிலிருந்தே தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

“தேவதாசி என்பவர்கள் பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக்கொண்டு சிறுவயதில் நேர்ந்துவிடப்பட்ட பெண்கள் ஆவர். இவர்கள் மேல்வர்க்கத்தினரின் பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாக்கப்பட்டனர். தேவதாசி என்பது பொருள் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை அல்லது தேவரடியார்கள்”[1] என்று அறியப்படுகின்றது. “தேவதாசி என்ற வார்த்தை இந்தியாவில் பல இடங்களில் பலவிதமாக பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர பகுதியில் இவர்களை மாதங்கி அல்லது விலாசினி எனவும், கொங்குனியில் நாயகி எனவும், மராட்டியத்தில் பாசவி எனவும், கர்நாடகாவில் சூலி, சானி எனவும், ஒரிசாவில் மக எனவும், உத்திரபிரதேசத்தில் பாவினி எனவும், அழைக்கப்படுகிறார்கள். சங்ககால தமிழ் நூல்கள் இக்கலை மாதர்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி பெண்டுகள் எனவும் அழைக்கின்றனர். தேவதாசி என்ற வடமொழி சொல்லின் தமிழ் வடிவமே தேவரடியார் என்பதாகும்”[2]. இவ்வாறு அறியப்படும் “தேவதாசி பெண்கள் கடவுளுக்காக தொண்டூழியம் செய்பவர்களாக வெளியில் சொல்லப்பட்டாலும் அவர்களை பாலியல் தேவைகளுக்கே இந்தச் சமூகம் பயன்படுத்தியது”[1]. “கடவுளின் பெயராலும் ஆன்மீகத்தின் பெயராலும் பரம்பரை பரம்பரையாக பாலின இழிவையும் கொடுமையையும் இவர்கள் அனுபவித்து வந்தார்கள். சமுதாயத்தில் தாசிகள் என இவர்களுக்கு இழிவான பெயரே இருந்தது”[3]. “பல நூற்றாண்டுகளாகக் கோயிலுக்குள்ளேயே வாழ்ந்து கோயில் திருப்பணிகளை அர்பணிப்போடு செய்துவந்தவர்கள் தேவதாசிகள் ஆவர். ஆனால், ‘இறைவனின் அடிமை’ என்கிற அர்த்தத்தில் சிறுமிகளைக் கோயில்களில் பொட்டுக்கட்டிவிட்டு, அவர்களை பாலியல் தொழிலாளியாக்கியது தேவதாசிமுறை”[4].

            இந்தியாவில் “பெரும்பாலும் தேவதாசியாக்கப்படும் பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே. இறைவனுக்கே மணமுடித்து தரப்படுவதால் அவர்களால் ஒருபோதும் ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால், அவர்களை மகிழ்விக்க வேண்டும். பெரும்பாலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆண்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் (கொள்கிறார்கள்). திருமணம் என்கிற ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒருவித ஒப்பந்தத்துடனே தேவதாசி குடும்பத்திற்குள் ஓர் ஆண் நுழைவான். இந்த ஒப்பந்தத்தின்படி தேவரடியாரான அந்தப் பெண்ணுக்கும், குழந்தைபிறந்தால் அதற்கும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் அவர் செலவழிக்க வேண்டும். அந்த ஆண் அப்பெண்னை கைவிடும் நிலையில் வேறோருவர் அந்தப் பெண்னைத் தன் தாசியாக்கிக்கொள்வார்”[4].

            “இந்த அவலமான முறை 1947 ஆம் ஆண்டு தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், தேசிய அளவில் 1988-ல் தான் தடை செய்யப்பட்டது”[4]. இருந்தாலும் இம்முறை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மதத்தின் பெயரால் தலித் பெண்கள் தொடர்ந்து இந்த தீண்டாமை கொடுமைக்கு ஆளாகின்றனர். “2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேவதாசிகளாகச் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்”[4].

            பெண் குழந்தைகளை கோயிலுக்கு பொட்டுக்கட்டிவிடுதல், நேர்ந்துவிடுதல் இப்படி பல பெயர்களில் தலித் பெண்குழந்தைகள் இந்த விபரீதத்திற்கு பலியாகின்றனர். 18.06.2017 அன்று தி இந்து நாளிதழில் வெளியான செய்தி தேவதாசிமுறை தொடர்ந்து நடைமுறையில் இருப்பதை காட்டுகின்றது. கர்நாடக மாநிலம், குல்பர்கா மாவட்டம், சித்தாபூர் என்ற கிராமத்தில் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட 10 வயது தலித் சிறுமியை அதிகாரிகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டதே அந்த செய்தி. ரகசியத் தகவலின் பெயரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கு சமவா கோயிலுக்கு தலித் சிறுமி 5 வயதில் நேர்ந்து விடப்பட்டதும், தற்போது 10 வயதாகும் அச்சிறுமி, பூசாரியின் வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. தலித் சிறுமி தேவதாசியாக ஆக்கப்பட்டதின் காரணத்தை அதிகாரிகள் அச்சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்ததில், சிறுமிக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டதால் பூசாரி கூறியதன் பேரில் கோயிலுக்கு தேவதாசியாக நேர்ந்துவிட்டுள்ளனர். மேலும், தங்கள் மகளுக்கு 5 வயது இருக்கும் போது மங்கள சூத்ரா எனும் சடங்கு முடித்து பூசாரியிடம் தேவதாசியாக அனுப்பியதாக கூறியுள்ளனர். இதன் மூலம் எவ்வாறு தலித்துகள் மீது ஆதிக்க சாதியினர் கடவுளின் பெயரால் அவர்களை இழிவுக்கு உட்படுத்துகின்றனர் என்று புரிந்துகொள்ளலாம். பூசாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது, அவர் தங்கள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேவதாசிமுறை வழக்கத்தில் உள்ளது எனவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் சிறுமிகளை தேவதாசி முறையில் ஈடுபடுத்தியுள்ளோம். அந்தப் பெண்கள் இப்போதும் கோயில் பூசாரிகளுடனும், சாதி இந்து நில உடைமையாளர்களிடமும் தேவதாசியாக சேவை செய்து வருகின்றனர். இது இந்து மத சடங்காக பின்பற்றப்படுகிறது என்று கூறியுள்ளார். இதிலிருந்து இந்த முறை தடையேதும் இல்லாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளதை அறியமுடிகிறது. தலித் பெண்கள் சிறுமிகளாக இருக்கும் போதே ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தேவதாசியாக்கி ஆதிக்க சாதியினரிடம் விடுவது நடைபெற்றுவருகிறது.

            இதில் கொடுமையான விசயம் அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியர்களுக்கும் இந்த கொடுமை தெரிந்தே நடைபெற்று உள்ளது. குழந்தைகளையும், சமுதாயதையும் நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே பாலியல் சுரண்டலுக்கு துணைபோயுள்ளனர். அந்த அளவிற்கு சாதிய வன்மம் சமூகத்தில் அனைவரது மனதிலும் நிறைந்துள்ளது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதை தலித்துகளின் மேல் சாதியவன்முறையாக பயன்படுத்துகின்றனர். “மனித உரிமைக்கும், மகளிரின் நலனுக்கும் எதிரான தேவதாசி முறை கர்நாடகாவில் 1982-ம் ஆண்டு முழுமையாக தடைசெய்யப்பட்டது. இருப்பினும் கர்நாடகாவில் சுமார் 10 ஆயிரம் தலித் பெண் குழந்தைகள் தேவதாசி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. குல்பர்கா மாவட்டத்தில் மட்டும் 3,600 பேர் இன்னும் தேவதாசி முறையில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”[5].

            இதுபோல் தொடர்ந்து பல இடங்களில் வெளியில் தெரிந்தும் தெரியாமலும் தலித் பெண்கள் தேவதாசி முறையில் வலியத் தள்ளப்பட்டு பாலியல் ரீதியாக சுரண்டப்படுகின்றனர். இந்த சமூக அநீதி, தலித்துகளுக்கு எதிராக சமூக அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. விளிம்பு நிலை மக்களாகிய தலித்துகளின் மீது இவ்வன்முறை தொடர்ந்து ஏவப்பட்டுக்கொண்டே இருப்பதைக் கண்கூடாக ஆய்வுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. பாலியல் சுரண்டலைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்தும் அவை அனைத்தும் செயல்பாட்டளவில் இல்லாமல் இருப்பது வேதனையளிப்பதோடு இதுபோன்ற சமூக அவலம் நடைபெறுவதற்கு துணைபுரிவதாக உள்ளது.தலித்துகள் இந்த சாதிய சமூகத்தில் நீண்ட நெடுங்காலமாக பல்வேறு வழிகளில் சுரண்டப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் வருகின்றனர். தெய்வங்களின் பெயரால் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆட்படுத்தும் தேவதாசி முறையை அடியோடு ஒழிப்பது அரசின் கடமை அதற்கு துணை நிற்க வேண்டியது அனைவரின் தலையாயப் பொறுப்பு.         

துணை நூல்கள்

[1] https://ta.wikipedia.org/wiki/தேவதாசி_முறை

[2]  தேவதாசிகளை கற்பழித்த சமூகம், www.ujiladevi.in/2010/09/blog-post_22.html 

[3]  மீண்டும் தேவதாசி முறையா? www.unmaionline.com/new/1618-2.html

[4] ம.சுசித்ரா, பார்வை: தகர்க்க முடியாத தாசி சிறை, சமூகம்-பெண் இன்று, may,7,2017, www.tamil.thehindu.com/society/women/பார்வை-தகர்க்க-முடியாத-தாசி-சிறை/article9684465.ece

[5 ]இரா. வினோத், தேவதாசியாக கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட 10 வயது சிறுமி மீட்பு: கர்நாடகாவில் தொடரும் கொடுமை, June, 18, 2017, www.tamil.thehindu.com/india/தேவதாசியாக-கோயிலுக்கு-நேர்ந்து-விடப்பட்ட-10-வயது-சிறுமி-மீட்பு-கர்நாடகவில்-தொடரும்-கொடுமை/article972930.ece

Pin It