பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் வேர்கள் - இந்துமதம் கட்டமைத்த சாஸ்திர, புராணங்களில் அடங்கியிருப்பதை, பெரியார் இயக்கம் நீண்டகாலமாக மக்களிடம் எடுத்துச் சொன்னாலும், மார்க்சியர்களின் பார்வை இதில் மாறுபட்டதாகவே இருந்து வந்திருக்கிறது. பெண்களை சமூகமாகப் பிரித்துப் பார்ப்பது வர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் என்பது அவர்களின் ஒரு பார்வை. பாமர மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் மத புராணங்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது மற்றொரு பார்வை. இப்போது பார்ப்பனிய மதவாத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வளர்ந்துவிட்டார்கள். எனவே வரலாறு அணுகுமுறைகளைத் திருத்திக் கெள்ளும் பாதைக்கு நிர்ப்பந்திக்கிறது. இந்தச் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய பெண்கள் வன்முறைக்கு எதிரான மாநாட்டையொட்டி அக்கட்சியின் நாளேடான ‘தீக்கதிர்’ பெண்ணடிமையை வலியுறுத்தும் சாஸ்திர புராணங்களை கடும விமர்சனத்துக்கு உள்ளாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. இது பாராட்டி வரவேற்கத் தகுந்த மாற்றம்;  அந்தக் கட்டுரையை ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.

இந்தியாவில் இந்த ஆணாதிக்க சமூக சிந்தனையின் அடிப்படையாக இருப்பதுமனு சாஸ்திரமும் அதன்படி உருவாக்கப்பட்ட கடவுளர்கள் பெயரால் நியாயப்படுத்தப்பட்ட கதைகளும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களும் கிருஷ்ணன் உரைத்ததாக சொல்லப்படுகிற பகவத் கீதையும்போன்ற எண்ணற்ற பிற்போக்கு கருத்தியல்களேயாகும்.

சமூகத்தில் சரி பாதியாக உள்ள பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை விவரிக்க முடியாத துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் கொடுமை களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகள், சிறுமிகளுக்கு வீடுகளிலும் வீதி களிலும் இழைக்கப்படும் அநீதிகளில் துவங்கி மூதாட்டியாகி மரணத்தை தழுவும் வரை அடிமை வாழ்வே நிரந்தரமாகிப் போயிருக்கிறது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்ணின் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் தாக்கு தல்கள் தொடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இந்தியாவில் சரிபாதிக்கும் அதிகமான பெண்கள் போதிய சத்தான உணவின்றி ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ள கொடுமை; கல்வி மறுப்பு, பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை, விதவிதமான குடும்ப வன்முறைகள், எதிலும் சம உரிமை இல்லாத நிலைமை என சொல்லிக்கொண்டே போகலாம். புராதான பொதுவுடைமை சமுதாயம் அழிந்து நிலவுடைமை சமுதாயம் உருவான நிலையில் ஆணாதிக்க சிந்தனையும் நிலைபெற்றது. தாய்வழி சமுதாயமாக இருந்த நிலை மாறி சொத்துடைமை பிரதானமான நிலையில் ஆணாதிக்கம் துவங்கியது. மதங்களின் பெயரால் இது நியாயப்படுத்தப்பட்டது. உலகில் உருவான எந்த மதமும் இதற்கு விதி விலக்கல்ல.

childabuse 600இந்தியாவில் இந்த ஆணாதிக்க சமூக சிந்தனையின் அடிப்படையாக இருப்பது மனு சாஸ்திரமும் அதன்படி உருவாக்கப்பட்ட கடவுளர்கள் பெயரால் நியாயப்படுத்தப்பட்ட கதைகளும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங் களும் கிருஷ்ணன் உரைத்ததாக சொல்லப்படுகிற பகவத் கீதையும் உள்ளிட்ட எண்ணற்ற பிற் போக்கு கருத்தியல்களேயாகும். மனு சாஸ்திரத் தின் அத்தியாயம் 5இல் சுலோகம் 18 சொல்கிறது: “பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணம் ஆனபிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்தபிறகு பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி சுயமாகச் சிந்தித்து ஒருபோதும் இருக்கக் கூடாது.” ஒரு பெண் தனது சுய சிந்தனையோடு தன் விருப்பத்தின்படி பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வதற்கான உரிமையை அடிப்படையிலேயே மறுக்கிறது மனு சாஸ்திரம். மனு சாஸ்திரத்தின் அத்தியாயம் 9இல் சுலோகம் 59 சொல்கிறது: “ஆண் பிள்ளை இல்லாமல் ஒரு குலம் நசிந்து போனால் அப்போது அந்தப் பெண் தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவைப் பெற்றுக்கொண்டு தன் மைத்துனர் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகளுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ள வேண்டும்.” பெண் என்றால் பிள்ளைகளை பெற்றுத் தருவதற்கு - வாரிசுகளை உற்பத்தி செய்வதற்கு உரிய ஒரு இயந்திரம் என்ற அந்தஸ்தை மட்டுமே மனுசாஸ்திரம் வழங்குகிறது.

அது மட்டுமல்ல, அந்த பெண் விரும்பா மலேயே அவர்மீது பாலியல் தொழிலையும் மனு சாஸ்திரம் திணிக்கிறது. அதுமட்டுமல்ல, தனது கணவர், தனது மாமனார் சார்ந்த சாதிய கட்டமைப்பின் உற்பத்திப் பொருளாக மட்டுமே பெண்ணை பார்க்கிறது மனுசாஸ்திரம்.மனு சாஸ்திரம் மட்டுமல்ல, இந்தியாவில் பெரும் பான்மையான மக்கள் வணங்குகிற பல்வேறு தெய்வங்கள் பெண்களை அடிமைப்படுத்துவதை இழிவாக நடத்துவதை அங்கீகரிக்கிற தெய்வங் களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக பெண்கள்மீதான குற்றங்களை சமூகமும் ஏற்றுக் கொள்கிற அங்கீகரிக்கிற மனோ நிலை கட்டமைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு கிருஷ்ணரை சொல்லலாம். அவர் எப்போதும் பெண்களை கேலி செய்பவராக சில்மிஷங்கள் செய்பவராக புராணங்களில் உள்ளார். அவருக்கு இரண்டு மனைவிகள். அதை மத நிறுவனங்கள் முன்வைக்கின்றன. மக்கள் மனரீதியாக அதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள கட்டமைக்கப்பட் டிருக்கிறார்கள். முருகப் பெருமானை எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு இரண்டு மனைவிகள். அதை சமூகம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளலாம். பஞ்ச பாண்டவர்கள் 5 பேருக்கும் திரௌபதி என்ற பெண் மனைவி. பாண்டவர்களின் தாயார், அர்ஜூனன் கொண்டு வந்த பொருளை நீங்கள் ஐவரும் சமமாக பிரித்துக் கொள்ளுங்கள் என்கிறார். அங்கே திரௌபதி என்ற பெண் மனுஷியாக பார்க்கப் படவில்லை.

அவள் ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். அதையும் பாண்டவர்களின் தாயார் குந்திதேவி என்றபெண்மணியின் மூலமாகவே சொல்ல வைக்கிறார்கள். பெண் என்றால் போகப் பொருள் தான், ஆண்களுக்கு அடிமைதான் என்ற சிந்தனையை சமூகத்தில் வலுவாக கட்டமைப்பதற்குத்தான் இந்த புராணங்களும் கதைகளும் கடவுள்களும் சாஸ்திரங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் தான் தேவதாசி முறை சரி என்று சொல்கிறார்கள். பெண்ணுக்கு கல்வி கூடாது என்கிறார்கள். பெண்கள்என்பவர்கள் மதத்தின் குறியீடாக சாதி ஆதிக்கத்தின் குறியீடாக முன் வைக்கிறார்கள். ஒரு சமூகத்திற்கும் இன்னொரு சமூகத்திற்கும் மோதல்வந்தால், ஒரு மதத்திற்கும் இன்னொரு மதத்திற்கும் மோதல் வந்தால் அதில் வெற்றி கொள்பவர்கள் தோல்வியடைந்த சமூகத் தில் முதலில் குறி வைப்பது அந்த சமூகத்தின் பெண்களைத்தான். அவர்களை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்குவதுதான் அந்த சமூகத்தின் மீதான தங்களதுவெற்றி அல்லது ஆதிக்கம் என்று பார்க்கிற குணம் உருவாக்கப்படுகிறது.

அதற்கும் ஏராளமான உதாரணங் களை சொல்ல முடியும். சைவ மதத்தை பரப்பு வதற்காக எழுதப்பட்ட தேவாரம், திருவாசகம் போன்றவற்றை சிவனை வழிபடுபவர்களை போற்றுகிறார்கள். ஆனால் அந்த நூல்கள் ஒருபுறம் கடவுளை போற்றுகின்றன. கடவுளின் புகழைப் பாடுகின்றன. அன்பே சிவம் என்று அன்பை போதிப்பதாக தோற்றம் அளிக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் அதே நூல்களில், சைவ மதத்திற்கு எதிராக எவர் பேசினாலும் அவருக்கு எதிராக வன்முறையை தூண்டப்படுகிறது. புத்த மதத்தை சேர்ந்த, சமண மதத்தைசேர்ந்த பெண்களை சைவர்கள் கட்டாயம் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டுமென்று அதே நூல்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படை என்னவென்றால் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்களை பாலியல் வல்லுறவுக் குள்ளாக்குவது கொண்டாடப்பட வேண்டிய - கடவுளுக்கு செய்கிற கடமை போல கருதப்பட வேண்டிய செயலாக முன்னிறுத்துகிற கொடூரமான ஆணாதிக்க மதவெறிச் சிந்தனை தான். மேற்குறிப்பிட்ட மதரீதியான நிறுவனங் களும் போதனைகளும், மிகவும் வெறித்தனத் துடன் கூடிய ஆணாதிக்கச் சிந்தனையை - பெண்களை எந்தவிதத்தில் துன்புறுத்தினாலும் அது தவறு அல்ல என்று கட்டமைக்கிற சிந்தனையை முன்வைக்கின்றன. மதங்கள் வழியாக போதிக்கப்பட்ட இந்த சிந்தனைதான் இந்திய சமூகத்தில்ஆண்டாண்டு காலமாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு கிடப்பதற்கு அடிப்படை காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

இதை எதிர்த்து ஆண்டாண்டு காலமாகப் போராடியும் வந்திருக்கிறார்கள். பிரம்மாண்ட மான பெண்கள் இயக்கங்கள் வரலாறு நெடுகி லும் எழுந்திருக்கின்றன. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக பின்னாட்களில் பெண்களின் உரிமைகள் சட்டரீதியாக உறுதி செய்யப் பட்டன. அரசியலமைப்புச் சட்டம் பெண் களுக்கு சமஅந்தஸ்து வழங்கியிருக்கிறது. பிறப் புரிமையிலிருந்து சொத்துரிமை வரை அனைத் தையும் சட்டம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் இன்றைக்கும் அந்த சட்டம் ஏடுகளில் மட்டுமே இருக்கிறது. சட்டத்தில் சொல்லப்பட்டிருப் பதை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது சமூகத்திலும் ஆட்சியதிகார மட்டத்திலும் புரையோடிப் போயிருக்கிற பிற்போக்குவாத - மதவாத - வெறித்தனம் நிறைந்த மிகக் கொடூரமான ஆணாதிக்க கருத்தியலேயாகும்.

அதனால்தான் நாடாளுமன்றம், சட்ட மன்றங் களில் மகளிர்க்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய் வதற்கான மசோதா கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஆர்எஸ்எஸ் - பாஜக முன்வைக்கும் கொடூரமான சிந்தனைகளை ஏற்பவர்கள் பெண்களை சக மனுஷியாக ஏற்க மறுக்கிறார்கள். வேறு மதங்களைச் சேர்ந்தவர் களை, வேறு சாதிகளை சேர்ந்தவர்களை ஒடுக்கி ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் அவர்களது வீட்டு பெண்களை குறிவைக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்துகிறார்கள்.

காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆஷிபாவை மிகக் கொடூரமான முறையில் துள்ளத் துடிக்க பாலியல் வன்கொலை செய்தது, அந்த சிறுமி சார்ந்த பழங்குடியின முஸ்லிம் சமூக மக்களை அச்சுறுத்தி அந்த ஊரைவிட்டே வெளியேற்றுகிற நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரம் தானே. நம் காலத்தின் கண்முன்னே நடந்திருக்கிற உதாரணம் இது. எனவேதான் கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களை அடிமைகளாக, போகப் பொருளாக நடத்துகிற பிற்போக்கு, மதவாத ஆணாதிக்கச் சிந்தனையை தகர்க்க வேண்டும் என்று போராடுகிறது. அதற்கு அடிப்படையாக இருக்கிற நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சுரண்டல் கட்டமைப்பை தகர்ப்பதற்கு முன்னேறிச் செல்கிறது

நன்றி : ‘தீக்கதிர்’

Pin It