அமித் பாதுரி ஒரு தேர்ந்த பொருளாதார நிபுணர். உலகமயலாக்கலுக்குப் பின்னர் இந்தியாவிலும் பிற வளரும் நாடுகளிலும் உருவாகி நடைமுறைப் படுத்தப்படும் புதிய செவ்வியல் பொருளாதாரக் கொள்கைகளையும் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் வளர்ச்சித் திட்டங்களையும் தொடர்ச்சியாக அவர் விமர்சித்து வருகிறார். வளர்ச்சிக்கான செயல் திட்டங்களில் பங்கேற்கும் உரிமை மறுக்கப்பட்ட பெரும்பான்மை ஏழை மக்களின் வலியையும் ஆற்றல்களையும் ஒன்று திரட்டி மாற்று வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து வருகிறார். DEVALOPMENT WITH DIGNITY(2005) மற்றும் THE FACE YOU WERE AFRAID TO SEE(2009)ஆகியவை இவர் எழுதிய பிரபலமான நூல்கள். புதுதில்லியில் உள்ள "COUNCIL FOR SOCIAL DEVALAPMENT" வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். இத்தாலியில் உள்ள "PAVIA UNIVERSITY"ல் பன்னாட்டு அளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட பேராசிரியராக இருக்கிறார்.அமித் பாதுரி இந்தியப் பொருளாதாரத்தில் வேலைப் பகிர்வு, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அரை நிலப்பிரபுத்துவத்தின் கீழ் விவசாய பின்னடைவு குறித்து ஆய்வு செய்துள்ளார். பின்வரும் நேர்காணல் அவர் இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி மாதிரியை விமர்சிப்பதோடு, பழைய பொருளாதார திட்டங்களின் குருட்டுத்தனத்தினால் காணத்தவறிய பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.

நீதா தேஷ்பாண்டே : இந்திய அரசின் சமீபகால பொருளாதார கொள்கைகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

அமித் பாதுரி : பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தமட்டில் நம்ப முடியாத அளவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கின்றது. ஆட்சியிலிருக்கும் கட்சி சிபிஎம் ஆக இருந்தாலும் பிஜேபி யாக இருந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகின்றனர். அதைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு காரணங்களை கூற முடியும்.

ஒன்று, ஏன் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விசயத்தில் ஒரே கருத்தைக் கொண்டிருக்கின்றன? ஏனென்றால், புதிய முதலீடுகள் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்று அவர்கள் நம்புவதின் விளைவாக, புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பான சூழலை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆட்சிக்காலத்திலும், ஏன் வி.பி.சிங் பிரதமராக பதவி வகித்த காலம் வரையிலும் கூட மேற்கொள்ளப் பட்ட பொருளாதாரத் திட்டங்களுக்கும் அதன் கொள்கைகளுக்கும் அரசே பொறுப்பாக இருந்தது. ஆனால் இப்போது இதுவும் தனியார்மயமாகிவிட்டது. இந்த மாற்றம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு உகந்த முதலீட்டுச்சூழலை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை அளித்தது. முறையான சாலை வசதிகளோ மின் வசதிகளோ அற்ற, மிகக் குறைந்த வாங்கும் திறன் கொண்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில், நல்ல முதலீட்டுச்சூழலைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்க வேண்டுமேயானால் உங்களுடைய கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு தாரை வார்த்துக் கொடுப்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகும். எனவேதான் தண்ணீர், மின்சாரம், நிலம் மற்றும் கனிமங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வாரிக் கொடுக்கிறது அரசாங்கம். இதுவே இன்றைய பொதுவான நடைமுறையாகி விட்டது.

இரண்டாவது காரணம், அரசாங்கம் அனைத்து இலாபகரமான தொழிற் செயல்பாடுகளிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டதன் விளைவாக, அது இன்றைக்கு செயலற்று முடமாகிவிட்டது. மேலும் சமூக நலன் சார்ந்த அடிப்படைக் கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் PUBLIC UTILITIES போன்ற துறைகள் தனியார்மயமாக்கப்பட்டு இலாபம் கொழிக்கும் தொழில்களாக மாற்றப் பட்டுவிட்டன. அரசின் கொள்கை முடிவுகளில் இப்போக்கு விரிவடைந்து கொண்டே செல்வதால், ஒரு சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கோ அல்லது அரசின் வருமானத்தை அதிகப் படுத்தக் கூடிய வகையில் ஒரு நடைமுறை சாத்தியமுள்ள செயல்திட்டத்தை வகுக்கவோ இயலாத நிலைக்கு நமது அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. நமது வரவு செலவுத் திட்டத்தில் உள்ள பற்றாக்குறை கூடுவதாலோ குறைவதாலோ, நாட்டின் பணவீக்கவிகிதம் அதிகரிக்கும் அல்லது குறையும் என்று நிரூபிக்க எந்த பொருளாதாரக் கோட்பாடுகளோ அல்லது பருண்மையான தரவுகளோ கிடையாது. இல்லவே இல்லை என்றும் கூட உறுதியாய்ச் சொல்லலாம்.

அதிக அளவு முதலீட்டுக்கு வாய்ப்பான சூழலை உருவாக்கும் போது, நிதிப்பற்றாக்குறை விகிதம் குறைவாக இருக்க வேண்டும் என்பதான சூழலும் கூடவே உருவாக்கப் படுகிறது. இதன் மூலமாக கல்விக்கோ, வேலை வாய்ப்பை உத்திரவாதப் படுத்துவதற்கோ தன்னால் தேவையான அளவு செலவழிக்கமுடியாது என்பதை அரசாங்கம் மறைமுகமாக அறிவுறுத்தி விடுகிறது. அதுமட்டுமின்றி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை பரவலாக்குவதற்கு பதிலாக தன்னிடமே வைத்துக்கொள்வதற்கு காரணம், தேவைப்படும்போதெல்லாம் அவற்றை ஒரேயடியாக நிறுத்துவதற்கும் அல்லது நீர்த்துப்போகச் செய்வதற்குமான அதிகாரத்தை தன்னிடமே தக்கவைத்துக் கொள்வதுதான்.

இந்த இரண்டு கொள்கைத் திட்டங்களைத்தான் ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட FISCAL RESPONSIBILITIES மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டப்படி நாட்டின் மொத்தப் பற்றாக்குறை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அரசாங்கத்தின் கடமையாக வறையறுக்கப் பட்டுள்ளது. இது ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவர்கள் ஒவ்வொரு நாளும் உண்பதற்குத் போதுமான உணவு கிடைக்கிறதா இல்லையா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு கிடையாது (இதன்மூலம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப விகிதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக பற்றாக்குறை உயர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் நமது மத்திய அரசாங்கம், தன் நாட்டு குடிமக்களான பெரும்பான்மை ஏழைமக்களின் நலனில் அக்கறையின்றியிருப்பதை அறிந்துகொள்ளலாம்.

நீதா தேஷ்பாண்டே : நமது பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் உரிமை அரசினுடையதா அல்லது சந்தையினுடையதா என்பதை தீர்மானிக்கும் உரிமை நமக்கு இருக்கிறதா?

அமித் பாதுரி : இல்லை. இதில் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு கிடையாது. நான் இங்கு இரண்டு வகையான கருதுகோள்களை முன்வைக்கிறேன். என்ன வகையான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஒன்று. என்ன வகையான மாற்றத்திற்காக நாம் அனைவரும் போராட வேண்டும் என்பது மற்றொன்று. மூன்றாவதாக ஒரு சக்தி உருவாகி மேன்மேலும் முக்கியத்துவமடைந்து வருகிறது என்பதுதான் இங்கு நிகழ்ந்துள்ள மாற்றம். வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு இயக்கங்களைத்தான் இங்கு நான் மூன்றாவது சக்தி என்று குறிப்பிடுகிறேன். இந்த எதிர்ப்பு இயக்கங்கள்தான் ஞாயமற்ற கொள்கைகளை ஓரளவிற்கு மேல் மக்கள்மீது திணிக்கமுடியாது என்பதை அரசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்க்களுக்கும் அறிவுறுத்துகின்றன.

விடுதலைக்கு பிந்திய இந்தியாவைப் பற்றி சற்று யோசித்துப் பார்ப்போம். பல மாநிலங்களின் கூட்டமைப்பாக இந்தியா திகழும் என்று எதிர்பார்க்கப் பட்டது. மத்தியில் ஒரு காங்கிரஸ் அரசாங்கம், ஒன்றிரண்டு மாநிலங்கள் நீங்களாக மற்ற எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசாங்கம் என்பதுதான் அன்றைய நிலை. ஆனால் இன்றைக்கு அப்படி கிடையாது. இன்று மாநிலங்களின் தனியுரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்றன. சரியோ தவறோ, இப்போதுள்ள கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களின் உரிமைகளை நாம் அங்கீகரிக்கிறோம்.

அதே போல அதிகாரத்தை பஞ்சாயத்துக்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஒரு வரலாற்று நிகழ்முறை ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பஞ்சாயத்து என்ற இந்த சக்தி அரசுமல்ல சந்தையுமல்ல. இப்புதிய சக்தி அரசு என்பதையும் அதுகுறித்த புரிதலையும் மறு உருவாக்கம் செய்ய வல்லது. கார்ப்பரேட் நிறுவனங்களின் முகவராக மத்திய அரசு செயல்படும் இன்றைய கார்ப்பரேட் சார்பு வளர்ச்சி நிலையை மாற்ற வேண்டுமானால் இன்று நம்முன் உள்ள ஒரே வழி அதிகாரப் பரவலாக்கம்தான்.

மேலும், கூட்டணி அரசியலின் விளைவாக மாநில அரசுகளும் தங்கள் சொந்த நலனை முன்னிறுத்தி அதிகாரம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்திய அரசியலில் நிகழ்ந்துள்ள மிக முக்கியமான மாற்றமிது. ஒரு சிறிய கட்சிகூட அரசியலில் குறிப்பிடத்தகுந்த ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலை இன்றுள்ளது. எனவே நமது கூட்டாட்சித் தத்துவம் முன்னைவிட வலிமையாகியிருக்கிறது என நாம் கொள்ளலாம். பஞ்சாயத்துக்களுக்கான அதிகாரத்தை நாம் அங்கீகரிப்போமேயானால் இந்த வலிமை மேலும் அதிகரிக்கும். மத்திய அரசும் மாநில அரசும் பஞ்சாயத்துக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதியளிக்கும் பட்சத்தில் எங்கெல்லாம் பஞ்சாயத்துக்கள் சிறப்பாக செயல்படு கின்றனவோ அப்பகுதிகளில் மிகச் சிறப்பான வளர்ச்சி ஏற்படக்கூடும்.

நீதா தேஷ்பாண்டே : இந்திய பொருளாதாரத்தின் அதீத வளர்ச்சியைப் பற்றியும் அது சாமான்ய மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் உங்களுடைய பார்வை என்ன?

அமித் பாதுரி : பொருளாதார வளர்ச்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் அது சாமான்ய மக்களின் நலனுக்கானதல்ல என்பதை இப்போது அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த அரசாங்கம் அதீத வளர்ச்சியின் மூலமாக தன்னுடைய கொள்கைகள் சரியானது என ஞாயப்படுத்திவிடலாம் என நம்புகிறது. தன்னுடைய சொந்த நாட்டு மக்களின் நிலங்களையும் மற்ற வாழ்வாதாரங்களையும் அவர்களிடமிருந்து பறித்துக் கொள்வதன் மூலமாகத்தான் இது சாத்தியமாகும் என்ற போதிலும் அதைப் பற்றியெல்லாம் எவ்வித கவலையுமற்ற அரசாக நமது அரசாங்கம் உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிக அரிதாகவே கீழ்த்தட்டு மக்களை எட்டுகிறது என்பதால், ஜனநாயக நாடான இந்தியா இந்த வளர்ச்சி முறையை சற்றும் ஞாயப்படுத்தவே முடியாது. எனவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது சாமான்ய மக்களின் வாழ்வில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆங்கிலம் தெரியாத நடுத்தர மக்களிடம் இதைப் பற்றி நீங்கள் பேசினால் அவர்கள் அதை காது கொடுத்துக்கூட கேட்க மாட்டார்கள். உதாரணமாக ஒரு தாணி ஓட்டுனருக்கோ அல்லது ஒரு விவசாயிக்கோ நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடா அல்லது 8 விழுக்காடா என்பது குறித்து எவ்வித கவலையும் கிடையாது. இந்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை உண்டா இல்லையா என்கின்ற கவலைகூட அவர்களுக்கு கிடையாது. ஒருவேளை பணவீக்கம் குறித்து உண்மையிலேயே அவர்கள் கவலைப் படக்கூடும். ஆனால் பட்ஜெட் பற்றாக்குறைக்கும் பணவீக்கத்திற்கும் நிச்சயமாக தொடர்புள்ளது என்றோ தொடர்பேயில்லை என்றோ அறுதியிட்டுக் கூற இங்கு யாரும் தயாரில்லை.

எனவே நமது பொருளாதாரம் குறித்தான பொருளாதார மேதைகளின் மயிர் பிளக்கும் விவாதங்கள் இன்னும் அந்தரத்திலேயேதான் இருக்கின்றன. சாமான்ய மக்களின் நலன் குறித்தெல்லாம் அது கவலைப் படுவதேயில்லை. மேலும் உணவு, மருத்துவம், கல்வி போன்ற மக்கள் நலன் சார்ந்த அடிப்படை விசயங்களை மேம்படுத்து வதே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை இங்கு யாரும் பார்ப்பதேயில்லை.

உலகளாவிய மக்கள் வளர்ச்சி அட்டவணையை எடுத்துப் பாருங்கள். அதில் இந்தியாவின் இடம் கிட்டத்தட்ட கடைசியில் தான் இருக்கிறது. "இந்தியா என்பது இரண்டு வகையானது. ஒன்று பணக்கார இந்தியா மற்றொன்று ஏழை இந்தியா" என்று பொதுவாக சொல்லப்படும் கருத்து தவறானது. உண்மையிலேயே இரண்டு வகையான இந்தியா இங்கு கிடையாது. வளர்ச்சியின் பெயரால் பெருமளவு ஆதாயமடையும் மிகச்சிறுபான்மையான நபர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களும் போக மீதமிருப்பவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வரையில் எதைப் பற்றியும் அக்கறையில்லாதவர்களாகவும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்களாகவுமே இருக்கின்றனர். இப்போது உள்ள தனியார்மய முதலீட்டுச்சூழலை பாதுகாக்கின்ற வளர்ச்சிமாதிரியை தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமேயானால், நாட்டின் இயற்கை வளங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு நமது அரசாங்கம் தள்ளப் பட்டுள்ளது. இது மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடிய ஒன்றாகும். எனவேதான் நாடு முழுவதும் மிகப் பெரிய மக்கள் போராட்டங்களை அரசு சந்திக்க நேர்ந்துள்ளது.

வளர்ச்சியின் பெயரால் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களை மக்கள் எதிர்க்கிறார்கள். வளர்ச்சியின் பெயரால் தங்கள் நிலங்கள் தங்களிடமிருந்து பறிக்கப் படுவதை மக்கள் எதிர்க்கிறார்கள். அந்நிலங்கள் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாங்கக்கூடிய வகையில் வீடுகள் கட்டி விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாரில்லை. எனவே இதுபோன்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்தான் அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கின்றன.

நீதா தேஷ்பாண்டே : ஏன் வளர்ச்சியின் பயன்கள் அடிமட்டத்தில் உள்ள மக்களைச் சென்றடைவதில்லை?

அமித் பாதுரி : வளர்ச்சியின் பயன்கள் சமுகத்தின் அடித்தட்டு வரை செல்லவில்லை என்று முற்று முழுதாக நான் மறுக்கவில்லை. ஆனால் இந்திய அரசின் புள்ளி விவரங்களை நோக்கும் போது, மிகப்பெருமளவில் ஆதாயமடைந்தவர்கள் சமூகத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே என்பதை நீங்கள் அறியலாம். ஏனெனில், மிகக் குறைந்த விலையில் அனைத்து இயற்கை வளங்களையும் அவர்கள் தம் கட்டுப் பாட்டில் எடுத்துக் கொள்வதால் அவர்களால் மிகச்சுலபமாக ஆதாயமடைய முடிகிறது. உயர் நடுத்தர வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் இந்த வளர்ச்சியினால் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுவது பெரும்பாலும் உண்மைதான். எனவே, ஏறத்தாழ 30-40 விழுக்காட்டிற்கும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள மக்கள் தங்கள் வாழ்நிலையில் பெரிய மாற்றம் எதையும் அடைந்துவிடவில்லை.

ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக அதிகமான இழப்புகளை சந்தித்தவர்கள் அடித்தட்டு மக்களே. வளர்ச்சி என்ற பெயரில் நிலங்களையும், மலைகளையும், ஆறுகளையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மிகவும் அதிகரித்துவிட்டதால் வளர்ச்சியின் பயன்கள் அடிமட்டம் வரை எட்டிவிட்டதாக நாம் சொல்லவே முடியாது. நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு ஆய்வு முடிவுகளும் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. ஏன், நமது திட்டக்குழுவும் அதன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும்கூட இதனை மறுக்கமாட்டார். இதற்கான வலுவான புள்ளிவிபரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. நாம் அதைப்பற்றி விவாதிக்கலாம். உதாரணமாக, இந்தியாவில் உள்ள ஏழைகள் 33 விழுக்காடா அல்லது 40 விழுக்காடா என்று சில எண்களைக் கொண்டு நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால், வலுவான புள்ளிவிபரங்கள் உள்ளன. அதன்படி இந்தியா தற்போது முன்னெப்போதையும் விட முன்னேறிக் கொண்டுள்ளது. அதுபோலவே, அதே புள்ளிவிவரங்களின்படி மக்களின் வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகரித்துள்ளன.

எப்போழுதெல்லாம் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறதோ, அப்பொழுதெல்லாம் சமூகத்தின் மேல்தட்டில் உள்ளவர்கள் மிகப்பெரும் அளவில் பயனடையவும் செய்கின்றனர். அதன் மூலமாக அவர்களிடம் அதிகரிக்கும் வாங்கும் சக்தியைக் கொண்டு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆடம்பர பொருள்களை வாங்கிக் குவிக்கின்றனர். அது நவ நாகரீக ஆடையாகவோ அல்லது புதிய வகை மகிழுந்தாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது கிராமங்களில் உற்பத்தி செய்யப் படுவதில்லை. எனவே மேல்தட்டு மக்களின் ஆடம்பரத் தேவைகள் அதிகரித்தபடியே செல்வதால் அதற்கான உற்பத்தியும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. அந்த உற்பத்திக்கு தேவையான உழைப்பு சக்தியில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக கிராமங்களில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து நகரச்சேரிகளில் வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களை இதுபோன்ற ஆடம்பர பொருள் உற்பத்தியில் ஈடுபடுத்துவதால், அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி குறைந்து அவற்றின் விலை உயர்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. நகரங்களை நோக்கி ஒடம்பெயரும் அம்மக்களையும் இவ்விலை உயர்வு பாதிக்கிறது. எனவே அவர்களின் வருமானம் உயர்ந்தாலும் அவர்களுடைய வாங்கும் சக்தி உயர்வதில்லை. எப்படி இருந்தாலும் சாதாரண மக்களால் முற்றிலும் குளிரூட்டப் பட்ட உயர்தர பேரங்காடிகளுக்கு (MALL) செல்லமுடியாது. பிறகு யார்தான் செல்வார்கள்? அவர்கள் எத்தனை விழுக்காடு? நாம் சில்லறை வர்த்தகம் பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் யாரெல்லாம் அந்தப் பொருட்களை வாங்கமுடியும்? யாரெல்லம் நடுத்திர வர்க்கத்திற்கு கிழே உள்ளார்களோ அவர்களால் அவற்றை வாங்க முடியாது. இதுதான் சந்தை விதி.

குளிரூட்டப்பட்ட உயர்தர பெரு அங்காடி ஒன்றை கட்டும் போது உங்களால் மரபான தொழிற்திறன்களை அங்கே பயன்படுத்த முடியாது. இதனால் இந்த வளர்ச்சி நிகழ்முறைகளிலிருந்து பெரும்பாலான இந்தியர்கள் விலக்கி வைக்கப்படுகின்றார்கள். இதுபோல் பெரு அங்காடிகளையும், நிலத்தரகு தொழிலையும் தக்கவைப்பதற்காக சமனற்ற வளர்ச்சி ஊக்குவிக்கப் படுவதால் இந்தியாவில் வளர்ச்சி என்பதே நியாயமற்றதாக இருக்கிறது. அதிகரித்துக்கொண்டே செல்லும் ஏற்றத்தாழ்வினால் வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கு நேர்மாறாக குறைந்து கொண்டே வரும் ஏற்றத்தாழ்வினால் வளர்ச்சியின் விகிதம் குறையும். எனவே வளர்ச்சி என்பதே ஒரு நச்சு சூழல்தான்.

நீதா தேஷ்பாண்டே : வறுமைக்கோடு என்ற கருத்தாக்கத்தைப் பற்றி உங்களுடைய பார்வை என்ன?

அமித் பாதுரி : வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் இது முட்டாள்களின் விளையாட்டு. நான் ஏன் இதை முட்டாள்களின் விளையாட்டு என்று குறிப்பிடுகின்றேன் என்பதற்கு பல காரணங்களை என்னால் கூறமுடியும். முதலில் ஒருவர் ஒரு ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்தால் அவர் ஏழை என்றும், ஒரு ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்தால் அவர் ஏழையில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆக, வறுமைக் கோட்டிலிருந்து எவ்வளவு தொலைவு வந்தால் அவர் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பதாக கருதவேண்டும் என்பதற்கு எந்த நிர்ணயமும் இங்கில்லை. எனவே இந்த கருத்தாக்கமே பிழையானது. உடற்கூறு ஆய்வைப் பொறுத்தவரை ஒருவர் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவரா அல்லது கீழே உள்ளவரா என்பதை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். காரணம், ஒரு மனிதன் உட்கொள்ளும் உணவில் உள்ள சத்துக்களை (CALORIE CONSUMPTION) அளவிட்டால் அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும். ஆனால் திட்டக்குழுவும் பொருளாதார நிபுணர்களும், புள்ளியியலாளர்களும் பயன்படுத்தும் வறுமைக்கோடு என்கின்ற கருத்தாக்கம் மக்களை முட்டாள்களாக்குவதற்கு மட்டுமே பயன்படும்.

இரண்டாவதாக, இதை நீங்கள் சற்று விரிவாக ஆய்வு செய்தீர்களேயானால், அவை பெரும்பாலும் ஊகங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். மேலும், அவர்களால் திரட்டப்பட்ட தரவுகளையும் அவை திரட்டப்பட்ட வழிமுறைகளையும் நீங்கள் பார்த்தீர்களேயானால் அவை உங்களுடைய விருப்பத்திற்க்கேற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் இருப்பதை நீங்கள் காண முடியும். ஜனனாயகம், வளர்ச்சி, முன்னேற்றம் அல்லது இது போன்ற ஏதேனுமொரு பூடகமான கருத்தாக்கமாகத்தான் வறுமைக்கோடு என்பதையும் பார்க்க வேண்டும்.

வறுமை என்றால் என்ன என்பதை வரையறுத்துவிட்டால் பிறகு அது அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதை அறிதியிட்டு சொல்லிவிடமுடியும் என்று அரசாங்கம் கருதுகிறது. ஆனால் நான் என்ன கருதுகிறேன் என்றால் இவ்வாறு வறுமைக் கோடு என்ற கருத்தாக்கத்திற்காக தேவையில்லாமல் நேரத்தை செலவிடுவதை விட பஞ்சாயத்துகளில் அதிகாரப்பரவல் முறையை கொண்டுவந்து அதில் ஏழைகளை பங்கேற்கச் செய்யமுடியும். மேலும் அவர்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையை ஏற்படுத்துவது போன்ற நேர்மையான வழிமுறைகளின் மூலமாக அவர்களுடைய வறுமையை ஒழிக்க முடியும். அதேபோல நகர்மயமாதலின் விளைவாக ஒவ்வொரு நாளும் அதிக அளவு பாசன நீரை நகர்புறத் தேவைகளுக்காக மடைமாற்றி விடுகிறோம். இது மிகவும் அபாயகரமானதும் இயற்கைக்கு முரணானதுமாகும். அரசு இதுபோன்ற அடிப்படையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தினாலே பல்வேறு பிரச்சினைகள் தானாகவே தீர்ந்துவிடும்.

இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் அடிமட்டத்தி லிருந்து வளர்ச்சியடையாமல் வறுமை ஒழிப்பு என்பது சாத்தியமேயில்லை. மேலும் நம் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. ஏனெனில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 விழுக்காடாக இருந்தபோது வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 1 விழுக்காடாகத்தான் இருந்தது. ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில்கூட இதன் வளர்ச்சிவிகிதம் அதிகமாக இருந்தது. நாட்டின் மொத்த வளர்ச்சி 4 விழுக்காட்டிற்க்கும் குறைவாக இருந்தபோது கூட வேலைவாய்ப்பு வளர்ச்சிவிகிதம் 2 விழுக்காடாக இருந்தது. இப்போதுள்ள நடுத்தர வர்க்கம் முழுமையும் உருவாகி நிலைகொண்டது அந்த காலகட்டத்தில்தான். ஆனால் இன்றைக்கு நாட்டின் வளர்ச்சி விகிதம் உச்சத்தில் உள்ளது. ஒவ்வொரு தொழிலாளியும் மிக அதிக அளவில் உற்பத்தி செய்கிறார். ஆனாலும் பெரும்பாலான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விகிதம் உயர்வதினாலோ அல்லது குறைவதினாலோ எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஒருவகையில் பார்த்தால் போதுமான அளவிற்கு வேலைவாய்ப்பினை பெருக்கவில்லையென்றால் அதனை யதார்த்தத்தில் வளர்ச்சி என்றே கணக்கிட முடியாது.

நீதா தேஷ்பாண்டே : வறுமைக்கோடு என்பதின் வரையறை இல்லாமையாலும், அரசின் பொது உணவுப் பங்கீட்டுத் திட்டங்களிலும், நல்வாழ்வுத் திட்டங்களிலும் பயனாளிகள் யார் என்ற தெளிவான வரையறை இல்லாமையாலும் நாட்டின் வளமும், நிதியும் வீணடிக்கப்படுகின்றன என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்?

அமித் பாதுரி : ஏழைகளுக்கு மட்டுமே வழங்கவேண்டும் எனக்கூறி கிடங்குகளில் நீண்ட நாட்களாக உணவு தானியங்களை மக்க வைத்து வீணாக்குவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தியாவைப் பொறுத்தவரை தலைவிரித்தாடும் ஊழலையும் நமது அரசியல்வாதிகளின் இயல்பையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது யார் பயனடைகிறார்களோ அவர்கள்தான் பணம் செலவழிக்க வேண்டும். பெரும் கூட்டு நிறுவனங்கள் அதிக பயனடைவதால் அவர்கள்தான் உண்மையான வளர்ச்சிக்காக பெருமளவு செலவழிக்கவும் வேண்டும். இந்நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு குறித்து வெறுமே எதையாவது பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஆனால் ஏழைகளின் நலனுக்கான செயல்பாடுகளில் உண்மையாகவே முன்னேற்றம் ஏற்படவேண்டுமானால் அதற்கு அடிப்படை முடிவெடுக்கும் உரிமையை அந்நிறுவனங்களிடம் விடுவதல்ல. அதிகாரப் பரவலாக்கம்தான். உள்ளூர் சுகாதார நிலையங்களை அவற்றில் பயனடையும் மக்களே நடத்த அனுமதிக்கவேண்டும்.

நீதா தேஷ்பாண்டே : தற்போதுள்ள பணவீக்கத்தின் தன்மை குறித்து உங்களுடைய கருத்தை சொல்லுங்கள்.

அமித் பாதுரி : பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டினியிலும் அல்லது பட்டினிக்கு தள்ளப்படும் உள்ள நமது நாட்டில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தனியார்மயமாக்கல் பெருமளவு முன்னோக்கிச் சென்றுவிட்ட நாடுகளை விட்டுவிடுவோம். நம்மை ஒத்த சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில்கூட இந்த அளவிற்குவறுமை இல்லை. இங்குள்ள கட்டிடத் தொழிலாளி ஒருவர் 1900 கலோரி அளவுள்ள உணவை உட்கொள்கிறார் என்று கொள்வோம். உணவுப் பொருட்களின் விலை சிறிதளவு அதிகரித்தால் கூட அவருடைய நுகர்வு 1700 கலோரிகளாக குறைந்துவிடும். இந்நிலை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு தொடருமேயானால் அவருடைய வாழ்நாள் 10-15 ஆண்டுகள் குறைந்துவிடும். இத்தகைய பட்டினி விகிதத்தை கொண்டு பார்க்கும்போது இந்தியாவில் பணவீக்கம் ஏற்படுவது தவிர்க்கவே முடியாததாகும். அதன் காரணமாகத்தான் இந்தியாவில் பணவீக்கம் என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசியல் பிரச்சினையாக இருந்து வருகிறது.

தேர்தல்களில் எக்கச்சக்கமான பணத்தை செலவிடுவது என்றைக்கு நடைமுறைக்கு வந்ததோ, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல் கட்சிகளும் என்றைக்கு ஒரே பொருளாதாரக் கொள்கையை என்றைக்கு ஆதரிக்கத் தொடங்கினவோ அன்றைக்கே நாட்டு மக்களிடமிருந்து அரசாங்கம் அந்நியப்பட்டுவிட்டது. அதனால்தான் பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி அது கிஞ்சித்தும் அக்கறை கொள்வது இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பத்து விழுக்கட்டிற்கும் மேற்பட்ட பணவீக்க விகிதத்தைப் பற்றி யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்கமுடியாது. அப்படியே அந்நிலை ஏற்பட்டிருந்தால்கூட அன்றைய அரசாங்கமும் அதைக்குறக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கோண்டிருக்கும். ஆனால் இன்றைக்கு நாம் உருவாக்கியுள்ள ஜனநாயகம் என்பது இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தன்னை (அரசை) தனிமைப்படுத்திக் கொண்டுவிட்ட ஒன்று. அதைவிட நமது அரசாங்கமே கூட இந்தப் பிரச்சினைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றுதான் சொல்கிறது. மக்களின் அவலங்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லாத நிலை உறுதிபட உறுதிபட நமது அரசு நிர்வாகத்தின் மதிப்பு STANDARD & POOR போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்களிடம் மேன்மேலும் அதிகரிக்கிறது. இதுதான் பணவீக்கத்திற்கான அடிப்படைக் காரணம்.

பணவீக்கத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு சற்றேனும் கவலை இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்திருந்தால் இந்நேரம் உணவு வழங்கல் முறையை பரவலாக்குவது தொடர்பான கொள்கையை அது வகுத்திருக்கும். அதுதான் ஒரு நாகரீகமடைந்த சமூகத்தின் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமை. அவ்வாறு வழங்கப்படும் உணவு தாணியங்களை சேமித்து வைக்கத் தேவையான கிடங்குகளை கட்டிக் கொள்ளத் தேவைப்படும் நிதியை மக்களுக்கு அரசே வழங்கவேண்டும். இவ்விசயத்தில் அரசாங்கம் சோதனை முயற்சிகளை உடனடியாக மேற்கோள்ளவேண்டும். இதைவிட்டால் அதிகரித்துவரும் பணவீக்கத்திலிருந்து மக்களை காப்பதற்க்கும், அதைக் கட்டுப் படுத்துவதற்கும் வேறு வழியே கிடையாது.

நீதா தேஷ்பாண்டே : குறுகிய கால முதலீடுகளினால் (HOT MONEY) இந்தியா எவ்வாறு பாதிக்கப்படும்?

அமித் பாதுரி : இந்த குறுகியகால முதலீடுகளினால் (HOT MONEY) இந்தியா இரண்டு வழிகளில் (வகையாக) பாதிக்கப்படும். ஒன்று, நேரடியாக. சமீபத்தில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது போன்ற நிகழ்வுகளின் மூலமாக நாம் பாதிக்கப்படலாம். இம்முதலீடுகள் எந்நேரமும் நம்நாட்டை விட்டு வெளியேறிவிடக் கூடும்.

மற்றொன்று, இது போன்ற முதலீடுகள் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் கூட்டணிக் கட்சிகளினால் ஏற்படும் பாதிப்பை விட அதிக பாதிப்பை இது அரசுக்கு ஏற்படுத்தும். முன்பு, இந்தியா அந்நிய செலாவணி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இப்போது அந்த நிலை இல்லை. ஆனால், இப்போது அரசு இது போன்ற முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் தன்னுடைய கொள்கைகளை வகுத்துக் கொண்டுள்ளது. உதாரணமாக, இம்முதலீடுகள் பெரும்பாலும் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளுக்கு எதிரானதாகவே இருக்கின்றன. எனவே அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்த வழியின்றி முடங்கிப் போயுள்ளது.

முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளுக்கு உகந்த பாதுகாப்பான சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்தே முதலீடு செய்கின்றனர். ஆனால் யார் இந்த உத்திரவாதத்தை யார் கொடுப்பது. முதலில், பன்னாட்டு நாணய நிதியமும் உலக வங்கியும் இதைச் செய்து வந்தன. இப்போது ஸ்டேண்டர்டு அண்ட் புவர் (STANDARD & POORS) என்கின்ற அமெரிக்காவைச் சார்ந்த ஒரு கடன் தரக் குறியீட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. உங்களுடைய ஜனநாயகம் சிறப்பானதென்று அவர்கள் கூறினால் அது சிறந்தது. இல்லை உங்களுடைய ஜனநாயகம் மோசமானது என்றால் அது மோசமானது. இன்றுவரை நமது வளர்ச்சியும் பொருளாதாரக் கொள்கைகளும் இதைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றன. உறுதியான முடிவுகளை (பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக) எடுக்க வல்லவர்தான் நம் நாட்டின் பிரதமராக வரவேண்டும் அல்லது அப்படிப் பட்ட ஒரு நபரைத்தான் நியமிக்க வேண்டும் என்று இப்போது அவர்கள் வேளிப்படையாகவே சொல்கின்றனர். எனவே நமது ஜனநாயகம் சிறப்பானதா அல்லது மோசமானதா என்பதை இதுபோன்ற கடன் தரக் குறியீட்டு நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன.

மொழிபெயர்ப்பு : இ.ப தங்கராஜ்

Pin It