மிசா என்றழைக்கப்படும் அவசர நிலை பிரகடன காலம் அது. கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட தி.மு.க. தலைவர்கள் - தொண்டர்கள் என சிறைவாசம் அனுபவித்த நேரம். அதில் அக்கட்சியை நம்பிப்போன முஸ்லிம்களும் அடக்கம். திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் அப்பொழுது அரசினர் தோட்டத்தில் இயங்கி வந்தது. ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கட்டிலில் பல்லாண்டுகாலம் அமர்ந்திருந்த ஒரு கட்சியின் தலைமை அலுவலகமா? என வியக்கும் வண்ணம் அது வெறிச்சோடி போய் கிடந்தது. கடைநிலை ஊழியர்கள் கூட வேலைக்கு வர பயந்த நேரம். தபால்காரர்கள் கூட உள்ளே வர பயந்து தபால்களை வீசி எறிந்துவிட்டு போனதாக கதைகள் உண்டு.

 அப்போதைய காலத்தில்தான் எதைப் பற்றியும் அஞ்சாத ஒரு மனிதர் அந்த அலுவலகத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தது முதல் தபால்களை எடுத்துவைக்கும் கடைநிலை ஊழியராகவே மாறி ஓராண்டு காலமும் அதை பராமரித்தார்- பாதுகாத்தார். அவர் அண்ணா காலம் முதல் கலைஞர் காலம் வரை அமைச்சராய் இருந்த சாதிக்பாட்சா. மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்து மிகச் சிறந்த வழக்கறிஞரான சாதிக்பாட்சா பின்னாட்களில் தி.மு.க.வின் பொருளாளராகவும் இருந்தார். கடைசி நாட்கள் வரை வாடகை வீட்டில் இருந்து மறைந்து போனார். தி.மு.க.வில் இப்படி ஒரு சாதிக்பாட்சா மட்டுமல்ல ஓராயிரம் சாதிக்பாட்சாக்கள் இருந்தனர்.

 தந்தை பெரியாரின் “இன இழிவு நீங்க இஸ்லாமே நல்மருந்து” என்கிற திருச்சி ரயில்வே ஊழியர் சங்கத்தில் 1947ல் பேசிய புகழ்பெற்ற உரையைக் கேட்ட, படித்த முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை விட திராவிடர் இயக்கமே முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு இயக்கம் என்கிற முடிவிற்கு வ்நதனர். திராவிட மதமே முஸ்லிம் மதம் என்கிற அந்தப் பேச்சு அன்றைய காலகட்டத்தில் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 அந்த உரையின் முக்கிய சாரம்சம் இதுதான். இஸ்லாம் எதற்கு ஏற்பட்டது என்றால் பல கடவுள் கொள்கை - மக்கள் பிரிவு பேத‌ கொள்கை ஆகியவைகளை ஒழித்து - ஒரு கடவுள், ஒரே சமூகம் ஆக்குவதற்கும் மூட நம்பிக்கைகளை விக்கிரக வணக்கத்தை ஒழித்து பகுத்தறிவிற்கு இணங்கவும் ஏற்பட்டதேயாகும். இதை அராபியர் மதம், துருக்கியர் மதம் என்பது போல திராவிட மதம் என சொல்லிக் கொள்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. எப்படியாவது மக்கள் ஜாதி பேதம், பிறவி உயர்வு தாழ்வு, பல கடவுள் உருவ வழிபாடு ஆகியவற்றில் இருந்து விலக வேண்டும். பார்ப்பானுக்கு அடிமையாய் இருந்து இழிவுபட்டு தலையெடுக்க முடியாமல் இருக்கும் கேட்டிலிருந்து மீள வேண்டும் என்பதைத் தவிர வேறு கருத்து ஒன்றையும் கொண்டு நாம் இப்படி சொல்லவில்லை என்பதை திராவிடர்கள் உணர வேண்டும்.

 இந்தப் போக்கில் செல்கிறது பெரியாரின் உரை.

 திவான் கலிபுல்லா சாகிப் காலத்திலேயே நீதிக்கட்சிக்கும், முஸ்லிம்களுக்கும் இருந்த உறவு தந்தை பெரியாரின் இதுபோன்ற பேச்சுகளுக்கு பின்னர் மேலும் வலுப்பெற்றது.

 1949களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அண்ணா மீலாது விழாக்களில் கலந்து கொண்டு அதை மேலும் வலுப்படுத்தினார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் பாடல் வரிகளை கவித்துவமான நடையில் அண்ணா சொன்ன விதம் முஸ்லிம்களுக்கு விருப்பமான ஒன்றாய் மாறிப் போனது. ஒரே இறை ஒரே மறை - ஒரே பிறை - ஒரே முறை என அண்ணாவின் அடுக்குமொழி முஸ்லிம்களை நெகிழ வைத்தது.

 1967 வரை காங்கிரஸ் ஆட்சியின்போது தி.மு.க. கூட்டங்களுக்கு பல வழிகளில் தடை விதித்தபோது அண்ணாவும், தி.மு.க. தலைவர்களும் மிக லாவகமாக மீலாது விழா கூட்டங்களை தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டனர். ஏற்கனவே 1909ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்துவந்த முஸ்லிம்களுக்கான கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி 1948ல் ஒழித்து கட்டியதை முஸ்லிம்களுக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்திய தி.மு.க. தலைவர்கள் காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் முஸ்லிம்கள் மாறாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.

 குறிப்பாக முஸ்லிம்களின் பணத்திலேயும், தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பிலேயும், தி.மு.க. வெகு வேகமாக வளர்ந்து வந்தது. 1967ல் ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு முஸ்லிம்களுடன் இணக்கமான உறவை வளர்த்தது. அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் வந்த கலைஞர் கருணாநிதியும் நோன்புக் கஞ்சி குடிப்பது - இதயத்தில் இடம் கொடுப்பது போன்ற வார்த்தை ஜாலங்களால் இந்த நட்பைத் தொடர்ந்தார். பின்னாட்களில் எதற்கும் ஆகாத மூனரை சதவிகித இட ஒதுக்கீடு என இந்த நட்பு நீடித்துக் கொண்டிருக்கிறது.

 எம்.ஜி.ஆர். பிரிந்து வந்தபின்னர் 1977ல் நடந்த முதல் தேர்தலில் பத்து இடங்கள் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கி அதில் ஒன்பது இடங்களில் முஸ்லிம் லீக் தோற்று ஒரே இடத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் லீக்கின் ஒரே சட்டமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீப். சட்டமன்றத்தில் பேசிய முதல் கூட்டத்திலேயே 'நீங்கள் முஸ்லிம் மக்களின் உண்மையான பிரதிநிதி இல்லை. உங்கள் கட்சியை விட எனது அ.இ.அ.தி.மு.க.வில் முஸ்லிம்கள் அதிக அளவு உள்ளனர்' எனப் பேசி அவரை அவமானப்படுத்தினார் எம்.ஜி.ஆர். முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் - இந்துக்களுக்கு இந்து முன்னணி என புதிய தத்துவம் பேசினார். எம்.ஜி.ஆரின் பல முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை அங்கேயிருந்த ராஜாமுகம்மது உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ள தயாராய் இல்லை. உண்மையில் எம்.ஜி.ஆர். அ.இ.அ.தி.மு.க. வை ஆரம்பித்த நேரத்திலும், பின்னாட்களிலும் கூட தி.மு.க.வை ஆதரித்த அளவிற்கு முஸ்லிம்கள் எம்.ஜி.ஆரை ஆதரிக்கவில்லை. குறிப்பாக தமிழ் பேசும் கடலோர முஸ்லிம்களில் இன்னமும் கொஞ்சம் பேர் கையை, கத்தியால் கிழித்தால் கருப்பு சிவப்பாய்தான் ரத்தம் வரும் என சொல்கிற கதைகளும் உண்டு.

 எம்.ஜி.ஆருக்குப் பின்னர் வந்த ஜெயலலிதாவின் பெண் ஆதிக்க மனப்பான்மையாலும், காலில் விழும் கலாச்சாரத்தாலும் பல முஸ்லிம்களால் அங்கே தாக்குப் பிடிக்க முடியவில்லை. இயல்பாகவே சுயமரியாதையை உலகிற்கு சொல்லிவரும் சமுதாயத்திலிருந்து வந்தவர்களால் நெடுஞ்சாண் கிடை நடவடிக்கைகளை மனதார ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சுய லாபம் அரசியல் லாபம் கருதியவர்கள் தவிர வேறு யாராலும் அங்கே இருக்க இயலவில்லை.

 இந்த இடைப்பட்ட காலகட்டத்தில்தான் குறிப்பாக 1990களில் ஆரம்பத்தில் தி.மு.க. அ.தி.மு.க. காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மீது முஸ்லிம் இளைஞர்கள் அதிருப்தியுற்றிருந்த நேரம் பாட்டாளி மக்கள் கட்சி சிறுபான்மை மக்களின் காவல் அரணாக புதிய அவதாரம் எடுத்தது. பழனிபாபாவின் கண்ணசைவிற்குக் காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் பா.ம.க.வில் இணைந்தனர். பட்டிதொட்டிகளில் எல்லாம் பா.ம.க.வை கொண்டு சேர்த்த பெருமை பழனிபாபாவிற்கு உண்டு. 1996ம் ஆண்டில் சுமார் 200 இடங்களில் போட்டியிட்டு சட்டமன்ற தேர்தலை சந்தித்த பா.ம.க. முஸ்லிம்களை மட்டும் 50 இடங்களில் வேட்பாளர்களாக நிறுத்தியது. முஸ்லிம்களின் நம்பிக்கையை பா.ம.க.வின் பக்கம் இழுத்தது.

 தனித்து தேர்தலை சந்தித்தபோது முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்திய பா.ம.க., பிற கட்சிகளுடன் கூட்டணிகளில் இணைந்து களம் கண்டு வெற்றி வாய்ப்புகள பெற்ற காலங்களில் எல்லாம் ஒரு இஸ்லாமியருக்கு கூட தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையே கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் சமூக பொருளாதார கட்டமைப்புகளைப் பற்றி குறைந்தபட்ச வேலைத் திட்டம் எதுவும் அக்கட்சியில் இல்லாததாலும், தி.மு.க. அ.தி.மு.க.வை விட மிக மோசமாக இப்தார் நாட்களைத் தவிர்த்த வேறு சிந்தனை எதுவும் இல்லாததாலும் 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை' என்கிற சாதிய சிந்தனையில் இருந்து அது வெளிவரத் தயாராய் இல்லாததாலும் முஸ்லிம்களின் ஆதரவை முழுமையாக அது இழந்தது.

 பழனிபாபா மறைவிற்குப் பின்னர் மிக வேகமாக வளர்ந்து வந்த முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 'முஸ்லிம்களை அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்துகின்றன - எனவே, அரசியலை நாங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தி புதிய வரலாற்றை படைப்போம்' என்றும், முஸ்லிம் லீக்கிற்கு மாற்றான புதிய அரசியல் தளத்தை உருவாக்குவோம் என்றும் மனித நேய மக்கள் கட்சியை கட்டமைத்தனர். ஆனால் அதுவும் பொது தளத்திற்கு செல்ல முடியாமல் இன்னொரு முஸ்லிம் லீக்காகவே சுருங்கிப்போனது.

 தே.மு.தி.க., ம.தி.மு.க. என மத்திய தர அரசியல் கட்சிகளும் முஸ்லிம் மக்களை பொது தளத்திற்கு வரச்செய்து அவர்களின் அரசியல் பங்களிப்பை உறுதி செய்ய நினைக்கவில்லை. முஸ்லிம்களை சிறுபான்மையினராக வைத்திருக்கவே எல்லா அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன. சிறுபான்மைப் பிரிவு என்கிற ஒரு தனித்த அணியை கட்சிக்குள் வைத்து 'வீட்டுக்குள் வந்து விடாதே, அருகில் உள்ள ஓட்டுக் கொட்டகைக்குள் ஒடுங்கிக்கொள்' என்கிற சிறுபான்மை தீண்டாமையை திட்டமிட்டு கடைபிடித்து வருகின்றன. அரசியல் கட்சிகளின் அடிமை முஸ்லிம்களும் இந்த நவீன தீண்டாமையை எதிர்த்து எவ்வித போரையும் நடத்தவில்லை. அடங்கிப் போதலும் அடிமையாய் இருப்பதும் தனக்கு நலம் என்றே அந்தந்த கட்சிகளில் இருந்த முஸ்லிம்கள் எண்ணினர்.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் சிறுபான்மைப் பிரிவுக்கு பொறுப்புக்கு வர முஸ்லிம்களுக்குள் பலத்த போட்டி வேறு. இதில் வேடிக்கை என்னவென்றால், சமூக அடக்குமுறைக்கு எதிராகவும் ஒட்டுமொத்த தமிழர் நலன் என்கிற பெயரிலும் கட்சி ஆரம்பித்த டாக்டர் ராமதாஸ் தன்னுடைய கட்சியிலேயே சிறுபான்மைப் பிரிவை அமைத்ததுதான். இதற்கு விடுதலைச் சிறுத்தைகளும் விதிவிலக்கல்ல. அதுவும் சிறுபான்மைப் பிரிவை வேறு பெயரில் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை என்று வைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துபவர்கள் சிறுபான்மைப் பிரிவை வைத்திருக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?

 எல்லாவற்றிற்கும் மாற்று என முஸ்லிம்களுக்காக கட்சி ஆரம்பித்தவர்கள் பொதுத் தளத்திற்கு வர இப்போதும் தயாராய் இல்லை. மளிகைக் கடை வைத்தால் கூட எல்லோரும் வாங்க வேண்டுமென விரும்புகிற நாம் எல்லா மக்களுக்குமான அமைப்பைக் கொண்டுவரத் தயாராய் இல்லை. அச்ச உணர்வும் சிறுபான்மை சிந்தனையும் அதை தடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கருணாநிதியால் - ஒரு ஜெயலலிதாவால் - ஒரு வை.கோவால் - ஒரு விஜயகாந்தால் எல்லாருக்குமான தலைவராக பொதுத்தளத்தில் உலாவர முடியும் என்றால் நம்மால் ஏன் பொது அரசியல் தளத்தில் வெற்றிபெற இயலவில்லை என்பதை இஸ்லாமியர் உணரவில்லை.

எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் எண்ணெய்யும் தண்ணீருமாக ஒட்டாமல் நிற்கிற ஒரு சமூகம்.

சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுகிற ஒரு சமூகம்.

அரசியல், சமுதாயம் ஆகியவற்றில் தனக்கான இடத்தைப் பெறாத ஒரு சமூகம்

எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாத தலைவர்களைக் கொண்ட ஒரு சமூகம்

கடந்த கால வரலாறுகள எதிர்காலத்திற்கு சேமித்து வைக்காத ஒரு சமூகம்.

இப்படி எதற்கும் கவலைப்படாத மக்களாய் இஸ்லாமிய சமூகம் வாழும் வரை எப்படி வெற்றியை நோக்கி பயணிக்கும்?

இந்த கேள்விக்கு விடை கிடைக்கும் வரை, எல்லாக் கட்சிகளும் நம்மை காட்சிப் பொருளாக மட்டுமே வைத்திருக்கும்.

- கே.எம்.சரீப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It