1.எனது சிறுபிராய காலத்தில் எங்களது கமலை மாடுகளுக்கு லாடம் கட்ட ஒருவர் வருவார். அவரை பாய் என்று என் அப்பா அழைப்பது வழக்கம். அப்போது பாய் என்பதை அவருடைய பெயர் என்றுதான் நான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேனேயன்றி அது இஸ்லாமியரை விளிக்கும் ஒரு சொல் - அவர் ஓர் இஸ்லாமியர்- இஸ்லாம் ஒரு மதம் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் காலக்கிரமத்தில் எனக்குத் தெரிந்த முதல் இஸ்லாமியர் அவர்தான். ஆறாம் வகுப்பில் ஒரு மாணவர் சேர்ந்தார். அவர்தான் எனக்குத் தெரிந்த இரண்டாவது இஸ்லாமியர் என்று இப்போது கணக்கில் வைக்கிறேன். ஆனால் அப்போது தெரிந்திருக்கவில்லை.யோசித்துப் பார்த்தால் எனக்கு அப்போது வேறுசில இஸ்லாமியர்களும் பரிச்சயமாகியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒருவர் சைக்கிள் ஷாப் வைத்திருந்தார். அவரிடம் வாடகைக்கு எடுத்துதான் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர் எங்களூர் சிறார்கள். மற்றவர் குடை ரிப்பேர் செய்கிறவர். இன்னாருவர் அங்கிருந்த கூட்டுரோட்டில் சின்னதாக ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் கறிபோடும் பாய் ஒருவர். இவர்களது பெயர்களெல்லாம் நினைவில் இல்லை. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு இஸ்லாமியர் அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக வரத் தொடங்கினார். மேல்நிலை வகுப்பில் ஒரு மாணவர் எனது பெஞ்ச்மேட்.
எனது பதினேழு வயது வரை என் வாழ்வில் குறுக்கிட்ட இஸ்லாமியர்கள் இவர்கள்தான். அதாவது ஒரு கை விரல்களுக்குள் முடிந்த போகிற அளவிலானதுதான் இந்த எண்ணிக்கை. அவர்களில் இஸ்லாமிய சகோதரி ஒருவருமில்லை. அப்போது என் வயதொத்த சிறுவர் சிறுமியர் இஸ்லாத்திலும் இருக்கத்தானே செய்திருப்பார்கள்? அவர்களெல்லாம் எங்கே போனார்கள் படிக்க? அல்லது படிக்கவே வரவில்லையா? படிக்க வரவில்லையானால் அவர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அன்று தொடங்கி இன்றுவரை கணக்கிட்டால் எனக்கு இப்போது அனேக இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு நண்பர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு நானே உதட்டைப் பிதுக்கி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக் கொள்வதே நேர்மையாக இருக்கும்.
2. கமலைகள் மறைந்து ஆயில் என்ஜின்களும் மின் மோட்டார்களுமாகிவிட்ட இக்காலத்தில் மாடுகளே தேவையற்றதாகிட்ட நிலையில், மாட்டுக்கு லாடமடிக்கிற அந்த பாய் எங்கே போயிருப்பார்? யூஸ் அண்ட் த்ரோ நாகரீகம் உச்சத்திற்கு வந்துவிட்ட நிலையில் குடை ரிப்பேர் செய்கிற ஒருவர் இங்கு இன்னமும் தேவைப்படுகிறாரா? அரூர் போன்ற சின்ன நகரங்களில் குதிரை வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அந்த பாய்களும் குதிரைகளும் எந்த இரு சக்கர வாகனத்தின் கீழ் அரைபட்டு மாண்டிருக்கக்கூடும்? மோட்டார் வாகன ஒர்க்ஷாப்புகளில் ஆயிலும் கிரிசும் கரியும் படிந்து தன் சொந்த நிறத்தையும் முகத்தையும் இழந்துவிட்ட சிறுவர்களில் ஏன் பலரும் இஸ்லாமியராகவே இருக்கின்றனர்? வெகு அரிதான சிலரே வணிகத்திலும் தொழில்களிலும் அரசுப்பணியிலும் இருக்கின்றார்கள் என்றால் மற்றவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக என்ன செய்கிறார்கள்?
ஆளுங்கட்சியில் ஒருமுறை ஒன்றியச் செயலாளராயிருந்தவன் வாரீசுகள் கூட ஒன்பது தலைமுறைகளுக்கு உட்கார்ந்து தின்னுமளவுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளும் ஒரு சமூகத்தில், ஆளுமையும் தேசபக்தியும் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகவும் திகழ்ந்து வீரமரணமடைந்த திப்புசுல்தானின் வாரீசுகள் வேலூரில் பீடி சுற்றிப் பிழைப்பதற்கு காரணமென்ன? சுமார் 800 ஆண்டுகள் இந்த நாட்டை இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்திருந்த போதும் இஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக்கிறார்கள்? அப்படியானால் ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்களும் இந்த அடித்தட்டு இஸ்லாமியரும் வெவ்வேறானவர்கள் தானே? பின் ஏன் அந்த அரசர்கள் நிகழ்த்திவிட்டதாகக் கூறப்படும் ‘வரலாற்றுத் தவறுகளுக்காக’ இந்த அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்? கருவிலிருக்கிற இஸ்லாமியக் குழந்தைகூட கடப்பாரையால் குத்திக் கொல்லப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?
பாபர் மசூதி தகர்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு இஸ்லாமியரும் தேசவிரோதியாகவும் தீவிரவாதியாகவும் உருவகிக்கப்படுகிற அரச பயங்கரவாதத்திற்குள் இந்து பெரும்பான்மை மனோபாவம் வகிக்கும் பங்கு என்ன? தன் தேசபக்தியை நிறுவித் தொலைத்தாக வேண்டிய கட்டாயம் ஏன் இஸ்லாமியர் மீது திணிக்கப்படுகிறது?
இந்த கேள்விகளுக்கெல்லாம் சச்சார் கமிட்டி அறிக்கையிலும்கூட நமக்கு போதிய பதில்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அதன் பரிசீலனை வரம்புகளும் நோக்கங்களும் வேறாக இருப்பது மட்டுமே இதற்கான காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சச்சார் கமிட்டி ஒரு உண்மையை உணர்த்தியிருக்கிறது. அதாவது இந்த நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களின் பல்வேறு முனைகளில் இஸ்லாமியர்களது நிலை தலித்துகளைப் போல அல்லது தலித்துகளைவிடவும் கீழ்நிலையில் இருக்கிறது என்பதே அது. இங்கேதான் தலித்துகளையும் இஸ்லாமியரையும் இணைத்தும் பகுத்தும் பார்க்கும் தேவையேற்படுகிறது.
பார்ப்பனீய மேலாதிக்கவாதத்தின் வர்ணாசிரம- சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு வடிவமாக இஸ்லாத்தை தழுவியர்களே இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர். இந்த உண்மையை மறைத்து, இந்தியாவில் இருக்கிற எல்லா இஸ்லாமியரையும் வெளியே இருந்து படையெடுத்துவந்த இஸ்லாமிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கற்பிதம் செய்வித்தும், வாள்முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்று பாசாங்காய் கருணை காட்டியும் இந்துத்வவாதிகள் கிளப்பிவிடும் தேசியவெறி உலகப் பிரசித்தமானதுதான். இந்த பிரச்சாரத்தின் நோக்கம், எஞ்சியுள்ள தலித்துகளை தங்கள் பிடிக்குள்ளேயே நிறுத்திவைப்பதுதான்.
3. இந்தியப் பூர்வகுடிகளாகிய நாகர்களும், வெளியே இருந்து நெடுங்காலத்திற்கு முன்பே வந்துவிட்ட த்ரேனியர்களின் வழித்தோன்றல்களாகிய திராவிடர்களும் இணைந்து உருவாக்கி நிலைபெற்றுவிட்ட ஒரு நாகரீக சமூதாயத்திற்குள் ஆரியர்களின் நுழைவு ஏற்படுத்திய மாற்றங்கள் இங்குள்ள எல்லா பேதநிலைகளுக்கும் வழியமைத்தது. நிற, இன, மொழி துவேஷங்களின் வழியாக தமது தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆரியர்களின் பதைப்பில் உருவான தீட்டு- புனிதம், உயர்வு-தாழ்வு, நல்லது-கெட்டது என்ற கருத்தாக்கங்களின் இறுகிய வடிவமாக வர்ணாசிரமக் கோட்பாடு உருவானது. வேதத்தின் முதன்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களும், போரில் தோற்றவர்களும், அடிமைகளும் வர்ணத்துக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டனர். வர்ணபேதங்களை எதிர்த்துப் போராடிய பௌத்தம் வீறு கொண்டெழுந்தபோது கட்டுக்குள் நிறுத்தப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், புஷ்யமித்திர சுங்கனின் கொலைச்செயல்களின் மூலம் மீண்டும் வெறிபிடித்தெழுந்தது. இப்போது அவர்ணர்களின் பட்டியலுக்குள் பௌத்தர்களும் நெட்டித் தள்ளப்பட்டனர்.
இருந்தபோதும் வர்ணப்பிரிவினையில் உள்ள நெகிழ்வுத்தன்மைகள் தூயத்துவத்தைக் காப்பாற்றுவதற்கு தடையாக இருந்தது. எனவே மேல்கீழ் மற்றும் கிடைமட்ட பரிவர்த்தனைகளை முற்றாக விலக்கிவிட்ட மேலும் இறுகிய வடிவமாக சாதி உருவானது. இந்த சாதியக் கட்டமைப்பிலும் பார்ப்பன மேலாதிக்கமே நிலைநிறுத்தப்பட்டது. வர்ண அமைப்புக்குள் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்ணகளுடன், சாதிக்கலப்பால் உருவான பிரதிலோம சாதி என்ற தொடத்தகாத சாதிகளும் இணைக்கப்பட்டு தீண்டத்தகாத சாதிகளின் பெருந்தொகுப்பு உருவாக்கப்பட்டது.
பார்ப்பனருக்கு பிறசாதியினர் அனைவருமே தீண்டத்தகாதவர்கள். பிறசாதியினர் ஒவ்வொருவருக்கும் தம்மைத்தவிர மற்றவையனைத்தும் தீண்டத்தகாதவை. தீண்டாமைக்கு உள்ளான சாதிகள் இந்த ஒடுக்குமுறைக்கும் ஒதுக்கிவைப்புக்கும் எதிராகத் திரண்டுவிடாதபடி ஒவ்வொரு சாதியும் உட்சாதிகளாக சிதறடிக்கப்பட்டது. இந்த உட்சாதிகளுக்குள் நிலவும் இணக்கமற்றத் தன்மைகளுக்கும் மோதல்களுக்குமான நியாயமும் தத்துவபலமும் பார்ப்பனர்களாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் வழங்கப்பட்டன.
ஒருசாதி, இன்னொரு சாதியைக் கண்காணிப்பதாகவும் கட்டுப்படுத்துவதாகவும் இருப்பதால் இவற்றுக்கு ஒடுக்கப்படுகிறோம் என்ற அவமானவுணர்வும், ஒடுக்குகிற அதிகாரம் பற்றிய பெருமிதவுணர்வும் ஒருங்கே வாய்த்தன. எல்லாவற்றுக்கும் கீழே- எல்லோராலும் ஒடுக்கப்படுகிவர்களாக- தாம் ஒடுக்குவதற்கு தமக்குக் கீழே யாருமற்றவர்களாக- தன்மீதான சகல ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவித்துக் கொள்வதற்கு முன்னிபந்தனையாக ஒட்டுமொத்த சாதியமைப்பையும் தகர்த்தெறிய வேண்டியவர்களாக தலித்துகள் மாறிய நெடிய வரலாறு இன்னும் விரிவாக பேசப்பட வேண்டியுள்ளது.
சமூகத்தின் இயற்கை வளங்களிலும் வழிபாட்டுத்தலங்களிலும் பொதுஇடங்களிலும் நிதியாதாரத்திலும் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் தமக்கான பங்கைக் கோரி தலித்துகள் மேலெழுந்துவிடாதிருக்கும் பொருட்டு கடும் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து தலித்துகள் நடத்தியப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டில் புதிய கட்டத்தை எட்டியது. பிரிட்டிஷ் ஆட்சியில் - பல்வேறு உள்நோக்கங்கள் இருந்தபோதிலும்- தலித்துகள் பொதுவெளிக்கு வருவது சாத்தியமாகியது. அவர்கள் பிரிட்டிஷாரின் ராணுவப் படைகளில் சேர்ந்து ஆயுதம் ஏந்தியதன் மூலம் புதிய மனவலிவைப் பெற்றனர். (பிறசாதியினரும் ராணுவத்தில் சேர்ந்த பிறகு- அவர்களது சாதியுணர்வுக்குப் பணிந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலித்துகளை சேர்க்க தடையுத்தரவு பிறப்பித்து நீண்ட காலத்திற்கு அமல்படுத்தியதையும் இங்கே நினைவிற் கொள்ள வேண்டும்)
சமூகவாழ்வின் எல்லா முனைகளிலும் ஒதுக்கிவைக்கப்பட்ட தலித்துகளை, அவர்களைப் போலவே மாட்டுக்கறி உண்கிற மிலேச்சர்களான வெள்ளையர்கள் தமது சமையல்காரர்களாகவும் பங்களா உத்யோகஸ்தர்களாகவும் சேர்த்துக்கொண்டதன் உடன்விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. அதாவது ஆட்சியாளர்களின் அருகில்- அதிகாரத்திற்கு அருகே- அது சமையல்கட்டு என்றாலும்- பொதுவெளியில் தலித்துகள் புழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியது.
தன் சொந்தத் தேவைகளின் பொருட்டு அரசு கல்வியை ஜனநாயகப்படுத்தியது. ஆனால் கிறிஸ்தவ இறைப்பணியாளர்களின் மிஷனரிகளும் அரசும் திறந்த கல்விச்சாலைகளுக்குள் நுழைய தலித்துகள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. பெண்களுக்கும் இதேநிலைதான். பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கிய முதல் இந்தியர்கள் மகாத்மா ஜோதிராவ் பூலேவும் அவரது துணைவியார் சாவித்திரியும். அவர்கள் தொடங்கிய கல்விச்சாலை அன்றிரவே கொளுத்தப்பட்டது. தமக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுவதற்கான இடத்தையும் நிதியையும் அகமத்நகர் தலித்துகள் திரட்டிக் கொடுத்த பிறகும் உயர்சாதிக்காரர்களின் நிர்ப்பந்தத்தால் பள்ளிக்கூடம் திறக்க அரசாங்கம் மறுத்துவிட்ட நிலைமை 1850களிலும் நீடித்ததை அம்பேத்கர் பிறிதொரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். மீறி படிக்க வந்த இடங்களில் தலித்துகள் மீது எவ்வளவு பாரபட்சங்கள் காட்டப்பட்டன என்பதின் சாட்சியாக அம்பேத்கரின் வாழ்க்கை விரிந்துகிடக்கிறது.
தடைகளை மீறி தலித்துகளிலிருந்து கல்வி பெற்ற ஒரு பகுதியினர் உருவாகி வந்த போது அவர்கள் தமது சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையின் வரலாற்றை முன்வைத்து சிறப்புரிமைகளைக் கோரினர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஸ்தலஸ்தாபன நிர்வாகத்திலும் (அதிகாரத்திலும்) பங்கு கேட்டனர். மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களை இந்துமதத்திலிருந்து விலக்கிக் காட்டி தனிப்பிரிவாக வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்துமதத்தின் ஒருபகுதியாக வலிந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு இந்தமத வழிபாட்டுத்தலங்களில் உரிமை வேண்டும் என்று கோரியதோடு நிற்கவில்லை தலித்துகள். நாசிக் காலாராம் கோவிலுக்குள் அம்பேத்கர் தலைமையிலும், வைக்கத்தில் பெரியார் தலைமையிலும் நடந்ததைப் போல நாடு முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். மகத் நகரின் சௌதார் குளத்தில் இறங்கியதைப் போல நாட்டின் பல்வேறு நீர்நிலைகளில் அவர்கள் பருகத் தொடங்கினர்.
முதலில் உயர்சாதியினரிடம் கவனஞ் செலுத்திய கிறிஸ்தவம் பிற்பாடு அடித்தட்டு மக்களை நோக்கி பரவத் தொடங்கியபோது, இந்துமதத்தின் பிடியிலிருந்து வெளியேறும் வழியாக தலித்துகள் கிறித்துவத்தைத் தழுவினர். அங்கும் இவர்கள் சமமாக நடத்தப்படவில்லை. இந்துமதத்தின் நச்சுக்கிருமியான சாதி கிறிஸ்தவத்திலும் விஷம் பாய்ச்சியிருந்தது. ஆகவே கிறிஸ்தவத்திற்குள்ளும் சமத்துவத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் தலித்துகள் போராட வேண்டிய நிலை இன்றளவும் நீடிக்கிறது.
சோழராட்சிக் காலத்திலேயே குடவோலை முறை மூலம் ஜனநாயகப்பூர்வமாக தேர்தலை நடத்திய நாடு எங்களுடையது என்ற மோசடியான பெருமிதங்கள் நிறைய இங்குண்டு. அதிலே யாரெல்லாம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்ற விவரங்களைச் சொல்வார்களேயானால் அது எந்தளவிற்கு ஜனநாயகமானது என்பதும் அம்பலப்பட்டுப்போகும். பிரிட்டிஷார் காலத்திலும் அதுதான் நடந்தது. கல்வியையும் சொத்தையும் வாக்களிப்பதற்கான அடிப்படைத் தகுதிகளாக இடம்பெற வைத்ததன் மூலம் புதியதாக உருவாகி வந்த அதிகாரமையங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முற்பட்ட சாதியினர் வெற்றியடைந்தனர். வர்ண- சாதிய விதிகளின்படி தலித்துகளை சொத்தில்லாதவர்களாகவும், கல்வி பெற முடியாதவர்களாகவும் ஒடுக்கிவைத்துவிட்டு- அதன்பேராலேயே வாக்குரிமையும் மறுக்கப்படுவதை எதிர்த்தும் தலித்துகள் போராட வேண்டியிருந்தது.
வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற கோரிக்கையை எழுப்பியதன் மூலம் தலித்துகளுக்கு மட்டுமல்லாது தலித்துகளை ஒடுக்குகிற பிறசாதியனருக்கும் கூட அம்பேத்கர்தான் வாக்குரிமையைப் பெற்றுத் தந்தார். வாக்காளர்களாவதற்கும், போட்டியிடுவதற்கும், போட்டியிட்டு வெற்றிபெற்றால் தொடர்ந்து உயிரோடு இருப்பதற்கும் தலித்துகள் போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்பதை மேலவளவுப் படுகொலையும் பாப்பாப்பட்டி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துகளும் நமக்கு உணர்த்துகின்றன.
எல்லா அரசாங்க வேலைகளும் பார்ப்பனர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் அடிப்படையான உடைவை ஏற்படுத்தும் பொருட்டு இடஒதுக்கீடு- மறுபங்கீடு என்ற கோரிக்கையை தலித்துகளே முதலில் முன்வைத்தனர். பின் அது பிற்படுத்தப்பட்டவர்களின் கோரிக்கையாகவும் மாறி பார்ப்பன ஏகபோகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது இந்த நாட்டின் சமூகநீதி வரலாறாகத் திகழ்கிறது.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருப்பதாக காந்திஜி கூறினார். அவரால் பெரிதும் விதந்தோதப்பட்ட அந்த ஆன்மா சாதியத்தால் தாக்குண்டு அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. கிராமப்புற உடைமைச் சாதிகள் தலித்துகள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாங்கொணாக் கொடுமைகளை எதிர்த்தப் போராட்டம் செங்கொடி இயக்க வரலாறாக பரிணமித்துள்ளது. சாணிப்பாலும் சவுக்கடியும் பாலியல் வன்முறைகளும் படுகொலைகளுமாக தலித்துகள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடியே இன்று ஓரளவுக்கு கண்ணியமான வாழ்க்கையை கிராமப்புற தலித்துகள் எட்டியுள்ளனர். ஆனாலும் உத்தப்புரங்களும் திண்ணியங்கÙம் கயர்லாஞ்சிகளும் ஒழிந்தபாடில்லை.
இவ்வாறு வாழ்வின் எல்லா நிலைகளிலும் நிராகரிக்கப்பட்ட தலித்துகள் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைக் கட்டி அதன் வழியாக தொடர்ந்து அழுத்தங்களை உருவாக்கி தங்களது கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளனர். இருந்தபோதும் இன்றளவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு தலித்துகளை கீழ்ப்படுத்தவே முற்பட்ட வகுப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
இந்துமதத்தின் பிடியிலிருந்து வெளியேறாதவரை சாதியிழிவும் தீண்டாமையும் தொடரவே செய்யும் என்பதால் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதையும் பிற மதங்களைத் தழுவுவதையும் ஒரு போராட்ட வடிவமாகவே தலித்துகள் கைக்கொண்டுள்ளனர். தலித்துகளின் மீதான தங்களது பிடி இறுகுவதை சகித்துக்கொள்ளாத இந்துத்வவாதிகள்- தலித்துகள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு உரிமையையே ஒரு துருப்புச்சீட்டாக வைத்து அச்சுறுத்துகின்றனர். பிறமதத்திற்கு செல்லும் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று இந்த அச்சுறுத்தல்களையும் மீறி மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நேற்றுவரை டாய் என்றவர்கள், இன்று பாய் என்று அழைக்கிறார்கள் என்கிறபோது ஏற்படுகிற மனநிலை மிக முக்கியமானதாக தலித்துகளால் உணரப்படுகிறது. ஆகவே இஸ்லாத் மீது தலித்துகளுக்குள்ள ஈர்ப்பை தணிப்பது- முடிந்தால் ஒழித்துக்கட்டுவது என்பதில் இந்துத்துவம் கவனங் குவித்துள்ளது. அதன்பொருட்டே இஸ்லாத்தை ஒரு பயங்கரவாதிகளின் தத்துவமாக முன்னிறுத்தும் அமெரிக்க பயங்கரவாத ஆட்சியாளர்களுடன் அது வெளிப்படையாகவே கைகோர்த்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த ‘புனிதக்கூட்டின் இளையப் பங்காளி’களான இந்துத்வாவினர்- ஏகாதிபத்தியம் முன்வைக்கிற உலாகளாவிய ஒற்றைப் பண்பாட்டைப் போலவே- இவர்களும் ஒரு ஒற்றைத் தேசிய பண்பாட்டை முன்வைக்கின்றனர். சமூகத்தின் பன்முகத்தன்மையை ஒழித்துக் கட்டுவதன் மூலம் ஏகத்துவமான ஒரு மதவாதத்தை இங்கே நிறுவும் அவர்களது கனவுகளைத் தகர்ப்பது தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் முதற்கடமையாகிறது.
தலித்துகள் தொடர்ந்து போராடி பல்வேறு உரிமைகளை அடைந்திருந்த போதிலும் அவர்கள் மீதான தீண்டாமை மற்றும் புறக்கணிப்பு, உரிமை மறுப்பு ஆகியவை தொடரத்தான் செய்கின்றன. அதை எதிர்த்த தலித்துகளின் போராட்டம் தொடர்கிறது. சச்சார் கமிட்டி அறிக்கை இஸ்லாமியர்களின் நிலையும் தலித்துகளின் நிலையும் கிட்டதட்டட சமநிலையில் முடக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இவ்விரு சமூகங்களும் ஒன்றிணைவது அவசியமாகிறது.
இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், பார்ப்பனீய மேலாதிக்கக் கனவில் முன்வைக்கப்படும் இந்துத்வாவை எதிர்கொள்ளவும், பெரும்பான்மை மதவாதத்திற்குள் இந்திய அரசு எந்திரம் மூழ்கிப் போய்விடாமல் ‘மதச்சார்பற்ற அரசு’ என்ற அரசியல் சாசன வாசகங்கள் மெய்ப்பிக்கப்படவும் இந்த ஒற்றுமை அவசியமாகிறது. சரியான தலைமைகளால் அணிதிரட்டப்படாத போது தலித்துகளில் ஒருபகுதியினர்- தங்களைப்போலவே ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் இஸ்லாமியரைத் தாக்க மதவெறியர்களால் பயன்படுத்தப்பட்டதை குஜராத்தில் நேடிரயாகக் கண்டோம். எனவே இந்துத்துவத்திற்கு எதிராக- அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தலித்- இஸ்லாமியர் ஒற்றுமை அவசியமாகிறது.
ஆனாலும் சாதி- மத அடிப்படையிலான உறவுகள் சில தற்காலிக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே உதவும் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அவரவரது தனித்தன்மைகளை அங்கீகரித்து இணங்கி வாழும் ஒரு சமூகத்திற்கான விழைவையே நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.
(‘‘தலித் எழுச்சியும் தலித்-இஸ்லாமிய எழுச்சியும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்)
- ஆதவன் தீட்சண்யா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஒரே நேர்கோட்டில் யூதர்கள் - பார்ப்பனியம்
- காசா குழந்தைகளுக்கு ஒரு கடிதம் - கிரிஸ் ஹெட்ஜெஸ்
- சுயமரியாதைத் திருமணம் : உயர்நீதிமன்றத்தின் விபரீத தீர்ப்பு
- ஆளுநரின் ஆணவத்துக்கு சாட்டை அடி
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- ‘சூர’சம்ஹாரம்
- பெரியார் மீது இழிசொற்களை சுமத்தி பல்கலையில் பார்ப்பன யாகம்
- ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - மலைவாழ் மக்களின் துயரத்தை காசக்கும் தந்திரம்
- தோழர் சங்கரய்யாவுக்கு வீர வணக்கம்
- பரோடா பெண்கள் முன்னேற்றம் - புதிய சட்ட விபரம்
- விவரங்கள்
- ஆதவன் தீட்சண்யா
- பிரிவு: கட்டுரைகள்
The writer talks as if there is no discrimination in Islam. Have you ever been to Saudi or Kuwait. There is a definite discrimination against the Indian Muslims, Shias, Ahamediayyas. The ruling caste of Saudi and Kuwait have much more privileges than a normal Arab or bedouin.
As far as hinduism is concerned, I can clearly say that casteism is not a product of hinduism. It only talks about division of society based on labour and no hierarchy amongst them.
Manu Needhi is not a hindu book. It is a book on principle and practice of law. there are other 64 similar law books.
If you decide to bash hinduism to justify your own conversion, you are ok to do. If you are so worried about why Muslim population is not well to in the organized sector, you should look at the unorganized sector (individual busineses), where they are more successful. The proportion of the small businesses in Chennai that are run by Muslims is much greater than their proportion of population. We can also always ask why there are not many IAS IPS in muslims. If you study in madrasa, how can you get into IIT or IIM or do IAS? Muslims should come out of their Madarasa culture and focus on western education as hindus and christians do to move into the organized sector.
Muslims have more business minded than hindus, thats obvious becos of their connections abroad and they ability to travel abroad (unlike hindus, who were not travelling abroad due to religious belifs)
RSS feed for comments to this post