‘சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நடைமுறைப்படியன்றி, வேறு எந்த வகையிலும் ஒரு நபரின் உயிரை பறித்தல் கூடாது’ என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 21 கூறுகிறது. அடிப்படை உரிமைகளில் இதுவும் ஒன்று என்பதோடல்லாமல், இதுவே பிரதானமான உரிமையாகவும் கருதப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் சற்றேறக் குறைய 30,000க்கும் அதிகமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், இயற்கை நீதிக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் புறம்பான, எழுதப்படாத சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அமலிலுள்ள சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தண்டனையைவிட கூடுதலான தண்டனைக்கு எவரையும் உட்படுத்தக் கூடாது என்பது, உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். ஆனால் எந்த சட்ட விதிகளிலும் வரையறுக்காத தண்டனை முறையானது, ‘மோதல் சாவு’ என்ற பெயரில் இன்றளவும் மிகச்சாதாரணமாக ஆட்சியாளர்களாலும், அரசு எந்திரங்களாலும் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 2012 அக்டோபர் மாதம் 30ம் நாளன்று காவல்துறை சார்பு ஆய்வாளரான ஆல்வின் சுதன் என்பவரை கொலை செய்ததாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பாரதி, பிரபு ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். இந்நிலையில் கடந்த 2012 நவம்பர் 30ம் நாளன்று, பகல்பொழுதில் மதுரையில் நீதிமன்ற விசாரணைக்காக காவலர்களால் அழைத்து செல்லப்பட்டபோது, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றார்கள் என்றும், அன்று இரவு சுமார் 9 மணிக்கு மானாமதுரையில் அடையாளம் கண்டு அவர்களை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகளை, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினார்கள் என்றும், எனவே, அவர்களிடமிருந்து தங்களை, தற்காத்துக் கொள்ளும் நோக்கில் பதிலுக்கு அவர்களை துப்பாக்கியால் சுட்டதில், அவர்கள் இருவரும் நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்து போனார்கள் என்றும் காவல்துறையால் அறிவிப்பு செய்யப்பட்டது. கொல்லப்பட்ட அந்த இருவர் மீதும் கொலை முயற்சி, அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல் என்பது உள்ளிட்ட குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் 8ம் நாள், இந்த மோதல் சாவுகள் குறித்து தனது பேட்டியில் ‘நாங்கள் மனிதர்களை கொல்வதில்லை. மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம். போலீஸ் தன் கடமையை செய்திருக்கிறது. மனிதர்களை துன்புறுத்தும் மிருகங்கள் இருக்கும்வரை இதுபோன்ற வேட்டை தொடரும்’ என்று கூறியுள்ளார் மேற்கண்ட இருவர் உட்பட தமிழ்நாட்டில் இதுவரை ஆறு பேரை மோதல் சாவு என்ற பேரில் சுட்டு கொலை செய்துள்ளதுடன், ‘என்கௌண்டர் ஸ்பெசலிஷ்ட்’ என பத்திரிகைகளால் அடைமொழியிட்டு அழைக்கப்படும் டி.எஸ்.பி.வெள்ளைத்துரை. இவரது பெட்டியில் இதுபோன்ற வேட்டை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளதிலிருந்தே இது போன்ற மோதல் சாவுகள் நன்கு திட்டமிட்டு நடத்தப்படும் கொலைகள்தான் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

காவல்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த திட்டமிட்ட படுகொலைகளானது நிகழ்த்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களின் கள ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும், வழக்கறிஞர் புகழேந்தியும் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில், இந்நிகழ்வில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன், நீதி விசாரணையும் கோரி வழக்கு தொடர்ந்தார்கள். இதுபோல பல்வேறு தரப்பினர்களிடமிருந்து வந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, தமிழக காவல்துறை இயக்குனர் இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி. (C.B.C.I.D) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

அமலிலுள்ள எந்த சட்டத்திலும், எந்த ஒரு தனி மனிதனின் உயிரையும் எடுக்க, காவல்துறையினர் உள்ளிட்ட எவருக்கும் தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. காவல்துறை அதிகாரியானவர், ஒருவரைக் கொலை செய்தால், அந்த அதிகாரியானவர், கொலைக்குற்றம் புரிந்த குற்றத்துக்குள்ளாகிறார். அது கொலையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அவர் ஏற்படுத்திய மரணம் சட்டப்படி குற்றமல்ல என்றோ அல்லது தான் அந்த கொலையைச் செய்யவில்லை என்றோ அவர் மற்ற சாதாரண குற்றவாளிகளைப் போல நிரூபித்தாக வேண்டும். அப்படி நிரூபிக்கப்படாத பட்சத்தில் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ள தண்டனையை அவர் கண்டிப்பாக அனுபவித்தாக வேண்டும். அதில் எவருக்கும், எவ்விதமான விதிவிலக்கும் சட்டத்தில் இல்லை.

மோதல் சாவு நிகழ்வுகளின் போது பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை கடந்த 2003ம் ஆண்டில் உருவாக்கி, அவைகளை பின்பற்றவேண்டும் எனும் பரிந்துரைகளுடன் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும், காவல்துறை இயக்குனர்களுக்கும் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த பரிந்துரைகளை, அனைத்து மோதல் சாவு நிகழ்வுகளின் போதும் மாநில அரசுகள் முழுமையாக பின்பற்றுவதில்லை என்பதோடு, அதற்கு முரணாக மோதல் சாவு நிகழ்வுகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுக்கு இரட்டை பதவி உயர்வுகளும், பதக்கங்களும், ஊதிய உயர்வும், இலவச வீட்டு மனைகளும் ஆளும் அரசுகளால் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஆளும் கட்சிகளால் நிகழ்த்தப்படும் மோதல் சாவுகளுக்கு எதிர்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவிக்கின்றன. எதிர்ப்பின் உச்சமாக, தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டில் ‘போலி’ மோதல் சாவு மூலமாக கொலை செய்யப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவியான ராதிகா செல்வி என்பவரை, 2004ம் ஆண்டில் அப்போது எதிர் கட்சியாகயிருந்த திராவிட முன்னேற்ற கழகம் தங்களது கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வைத்ததுடன், அவரை அமைச்சராகவும் ஆக்கியது. ஆனால் 2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த, அதே தி.மு.க. ஆட்சியில் 26 பேர் மோதல் சாவு மூலமாக கொலை செய்யப்பட்டார்கள். இப்படியாக தமிழ்நாட்டில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க ஆகிய இரு கழக ஆட்சிகளுக்கும் மோதல் சாவுகள் மூலமான படுகொலைகள் தவிர்க்க முடியாதவைகளாக மாறிப்போய்விட்டன.

நாடு முழுவதும் இப்படியாக மோதல் சாவு என்ற பெயரில் நடத்தப்படும் சாவுகள் பெரும்பாலும் ‘போலி’ மோதல் சாவுகளே, அவைகள் திட்டமிட்ட படுகொலைகளே அன்றி வேறில்லை என்று பல்வேறு தரப்பு அரசியல் இயக்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள், சமூக குழுக்களின் கள ஆய்வுகள் மூலமாக தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதே கருத்தினை தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உறுதிபடுத்தியுள்ளது.

இங்கே சமூக ஆர்வலர்களாலும், உயிர்நேயம் கொண்டவர்களாலும், மோதல் சாவுகளுக்கு எதிராக வெளிப்படுத்தப்படும் கருத்துகளானது, அந்த நிகழ்வு தொடர்பான குற்றவாளிகளுக்கும், அவர்களது குற்ற செயல்களுக்கும் ஆதரவாக கருத்து தெரிவிக்கப்படுவது போல தவறுதலாக திசைதிருப்பப்படுகிறது. எவர் ஒருவர் புரிந்த குற்ற செயலும், நீதிமன்றத்தின் முன்பாக நிரூபிக்கப்படும் பட்சத்தில், சட்டத்தால் அக்குற்றத்திற்கென வரையறுக்கப்பட்டுள்ள தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட்டே ஆகவேண்டும். அதேவேளையில் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு தண்டனை வடிவத்தை எந்த சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் சட்டத்திற்குப் புறம்பான வழிகளில், மோதல் சாவு என்ற பெயரிலான படுகொலைகள் நீண்ட காலமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. தற்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த 1950ம் ஆண்டு மே மாதம் 3 ம் நாள், ‘சாம்பவன் ஓடை’ சிவராமன் என்பவரும், 5ம் நாள் ‘வாட்டக்குடி’ இரணியன் என்பவரும் காவல்துறையினரால் மோதல் சாவுகள் என்ற பெயரில் சுட்டு கொலை செய்யப்பட்டார்கள். இதுகுறித்து, ‘சாம்பவன் ஓடை’ சிவராமன் மற்றும் ‘வாட்டக்குடி’ இரணியன் ஆகிய தலைப்புகளில் இரு பெரும் தமிழ் நாவல்கள் வெளிவந்துள்ளன.

மோதல் சாவு என்ற பெயரிலான திட்டமிட்ட படுகொலைகளை, தனிமனித காவல்துறை அதிகாரிகளின் சாகசங்களாகக் காட்டி அவைகளை விவரிப்பதுடன், அதனை ஆதரித்தும் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெகுவாக வரவேற்கப்படுகின்ற மோசமான சூழலே இங்கு நிலவுகிறது. விதிவிலக்காக ‘வர்ண ஜாலம்’ என்னும் தமிழ் திரைப்படத்தில் மட்டும், போலியாக நிகழ்த்தப்படும் மோதல் சாவுகளின் மூலமாக பாதிப்புக்குள்ளாக்கப்படும் ஒரு அப்பாவி குடும்பம் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும்.

மோதல் சாவு நிகழ்வுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாகவும், பொது அமைப்பினராலும் உச்ச நீதிமன்றத்திலும், பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் பல தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. இருப்பினும், போதிய ஆவணங்களும், ஆதாரங்களும் இருந்தும் இதுவரையிலும் தீர்ப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு தொடர்புடைய வழக்குகள் எதிலும் எந்த ஒரு காவல் அதிகாரியும் தண்டனைக்கு உள்ளாக்கப்படவில்லை.

2011ம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம், ‘பிரகாஷ் கடம் எதிர் இராம்பிரசாத் விஸ்வநாத் குப்தா’ எனும் வழக்கில், ‘எங்களது கருத்துப்படி, விசாரணையின் போது, காவல்துறையினருக்கு எதிராக, ‘போலி’ மோதல் சாவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளதென நிரூபிக்கப்படும் வழக்குகளை, ‘அரிதிலும் அரிதான வழக்காக’ கருதி, தொடர்புடைய அதிகரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ‘போலி’ மோதல் சாவுகளானது, சட்டத்தை தூக்கிப்பிடிக்க வேண்டியவர்களே நிகழ்த்தும் கொடூரமான கொலைகளேயன்றி வேறில்லை. சாதாரண மக்கள் புரியும் குற்றங்களுக்கு சாதாரண தண்டனைகளும், காவல் அதிகாரிகள், தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு முற்றிலும் புறம்பாக செயல்படுவதால், அவர்கள் இது போன்று புரியும் குற்றங்களுக்கு, அவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும்.

தங்களது மூத்த அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளின் ஆணைகளை தான் செயல்படுத்துகிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி, ‘போலி’ மோதல் கொலைகளை காவல்துறையினர் நிகழ்த்துவதை மன்னிக்க முடியாது. ஒரு காவல்துறை அதிகாரிக்கு, அவரது மூத்த அதிகாரி சட்டத்திற்குப் புறம்பாக ‘போலி’ மோதல் சாவுகளை நிகழ்த்த ஆணை பிறப்பிப்பாரேயானால், அத்தகைய சட்டபுறம்பான ஆணையை நிறைவேற்ற மறுப்பது அந்த அதிகாரியின் கடமையாகும். இல்லையென்றால் அவர் மீது கொலை குற்றம் சாட்டப்படுவதோடு, குற்றமிழைத்ததாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவார். ‘போலி’ மோதல் சாவு என்ற தத்துவம் ஒரு குற்ற தத்துவமாகும். இதனை அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அறிந்திருத்தல் அவசியமானதாகும். மோதல் என்ற பெயரில் மக்களை விருப்பப்படி கொன்றுவிட்டு, தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் என்று கருதும் காவல்துறையினர், தங்களுக்கு தூக்குமேடை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்’ என்று தீர்ப்பிட்டுள்ளது. சிறப்புமிக்க இந்த தீர்ப்பினை காவல்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் கருத்தில் கொண்டால் நிச்சயமாக ‘போலி’ மோதல் சாவுகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்.

மேலும், காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில், அதே துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, அவ்வழக்கு குறித்து விசாரிக்கும் போக்கு இன்னமும் நீடிக்கிறது. இதன் காரணமாக வழக்கின் உண்மை தன்மை வெளிவராமல் போக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த நிலையானது மாற்றப்பட்டு, அனைத்து விதமான மோதல் சாவு நிகழ்வுகளையும், காவல்துறையின் வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்கப்பட வேண்டும்.

‘கொடிய தண்டனை’ என்றாலும், இன்றளவும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமலில் இருந்து வரும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் நீடித்து வரும் நாட்டில்தான், எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி மோதல் சாவுகள் நிகழ்த்தப்படுகின்றன. மரண தண்டனைக்கு பகிரங்கமாக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யும் மக்கள், இயற்றப்பட்டுள்ள எந்த சட்டத்தாலும் அங்கீகரிக்கப்படாத, மோதல் சாவுகளுக்கு எதிராக அதைவிடவும் கூடுதலாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் அதே அளவுக்காவது எதிர்ப்புகளை பதிவுசெய்திட வேண்டும்.

நீதிமன்றங்களும், மோதல் சாவுகள் தொடர்பான வழக்குகளில் விரைவான விசாரணைகள் மேற்கொள்வதுடன், அதிகாரங்கள் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், தொடர்புடைய காவல் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தண்டனைகளை உறுதி செய்திட வேண்டும்.

இது போன்ற செயல்களால் மட்டுமே, எழுதப்பட்ட சட்டங்களுக்கும், மக்களாட்சிக்கும் புறம்பான தண்டனை முறையான, ‘போலி’ மோதல் சாவுகள் மூலமாக இன்றளவும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் திட்டமிட்ட படுகொலைகளை தடுத்து நிறுத்தி, மக்களாட்சியின் அடிப்படை நியதியான ‘சட்டத்தின் ஆட்சி’ இங்கே நிலவிட வழிவகுக்க முடியும்.

Pin It