மக்களின் அச்ச உணர்வும், அறியாமையும் இன்று வெறுப்பு அரசியலுக்கு எரிபொருளாக ஆக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

ஊடகங்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் தப்லீக் ஜமாஅதினர் யாரும் தீவிரவாதிகளில்லை. தப்லீக் ஜமாஅத் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புமில்லை. சொல்லப் போனால், அவர்கள் உலகத்தைப் பற்றியோ, அரசியல் பற்றியோ எந்த ஈடுபாடும் இல்லாமல், அரை துறவறத்தை கடைப்பிடிக்கக் கூடிய சாமானிய மக்கள்.

100 வருடம் பாரம்பரியம் மிக்க தப்லீக் ஜமாத்தை இன்று தினமணி நாளிதழ் தீவிரவாத அமைப்பு என்கிறது. "உலகில் நடந்த பல தீவிரவாத சம்பவங்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது" என்று எழுதுகிறார் அதன் ஆசிரியர்.

இந்த 100 வருடங்களில் இந்த அமைப்பைத் தொடர்புபடுத்தி நடந்த தீவிரவாத சம்பவம் எது என்பதைக் கூடச் சொல்ல வக்கு இல்லாமல் 'தெரிய வருகிறது' என்று குறிப்பிடுவதில் என்ன நியாயம்..? இது தான் தினமணியின் ஊடக தர்மமா..?

கொரோனா காலத்தில் தப்லீக் ஜமாஅத் மாநாடு நடைபெற்றதும், அதில் பங்குபெற்ற சிலர் இன்று அரசுக்கு ஒத்துழைக்காமல் இருப்பதும் மிக மிகத் தவறு தான் என்றாலும், அதைக் காரணம் காட்டி அவர்களைத் தீவிரவாதிகள் போலவும், தேசத் துரோகிகள் போலவும் சித்தரிப்பது கொரோனாவை விடக் கொடிய விசமத்தனமாகும்.

சாதாரண காய்ச்சல், தலைவலிக்குக் கூட ‌நம் வீட்டுப் பெரியவர்களை, குறிப்பாக ஆண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது எவ்வளவு கடினமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்குக் காரணம் மருத்துவமனைகள் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சமும், நோய்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அறியாமையுமே ஆகும்.

இந்த அச்சத்தையும் அறியாமையையும் அகற்றி மக்களைக் காக்க வேண்டிய அரசு, இதில் மத வேறுபாடுகளைப் பேசி பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டே போகிறது.

மாட்டுக்காக மனிதனைக் கொலை செய்யும் இந்த நாட்டில், இனி கொரோனா பாஸிட்டிவ் இல்லாவிட்டாலும் உயிர் பயத்துடனே முஸ்லீம்கள் நடமாட வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. இது இந்தியா இன அழிப்பை நோக்கி மிக வேகமாகச் செல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

- சே.ச.அனீஃப் முஸ்லிமின்

Pin It