இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் பி.சி.நஞ்சப்பா, மக்கள் கண்காணிப்பகத்தின் பொறுப்பாளர் ஹென்றி டிபேன் அவர்களுக்கும், கண்காணிப்பகத்தின் சார்பில் பெரியார் திராவிட கழகத்தின் பிரமுகர் பழனி கொலை பற்றிய உண்மையறியும் குழுவில் பங்கேற்ற அறிஞர்களுக்கும் சில உண்மைகளைத் தெரிவிக்கும் நோக்கத்துடன் எழுதும் திறந்த மடல்.

மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் உண்மையறியும் குழு, தளி, தேன்கனிக் கோட்டைப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்த விபரமும், அதனையொட்டி வெளியிட்ட பேட்டியையும் தினமணி நாளிதழில் பார்த்தேன். அதில் தாங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள், எனக்கு அதிர்ச்சியை அளித்தது. ஆதாரமற்ற, உண்மைக்கு மாறான தகவல்கள் அதில் காணப்பட்டன. மக்கள் கண்காணிப்பகம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு நட்புறவுடன் செயல்படும் அமைப்பு என்பதை நான் அறிவேன். அதன் முக்கிய செயல்பாடுகளில் கட்சித் தோழர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இது ஒருபுறம் இருக்க, தளி கொலை பற்றி உண்மையறிய வந்த தங்கள் குழு என்னிடமோ எங்கள் கட்சியின் மாவட்டக்குழுவிடமோ எந்த விசாரணையும் செய்யாமல், தீர்ப்பு எழுதி பத்திரிக்கைகளுக்கு அறிவித்திருப்பது எங்களுக்குப் பெரும் வேதனையைத் தந்துள்ளது. எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர்களிடம் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள் சில விபரங்களைக் கேட்டதாக பின்னர் தெரிந்து கொண்டேன். தாங்களோ தங்களின் உண்மையறியும் குழுவிலுள்ள அறிஞர்களோ எங்களை சந்திக்கவில்லை என்பதைத் தங்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் நீதி மன்றம், அவர்களின் கருத்தை அறியாமல் எந்தத் தீர்ப்பையும் எழுதுவதில்லை. அமைப்பு என்ற முறையில் எங்களுக்குள்ள ஜனநாயக உரிமைகளை முற்றாக புறக்கணித்துவிட்டு, நீங்கள் உங்கள் போக்கில் தீர்ப்பை எழுதியிருக்கறீர்கள். இந்த வருத்தத்தைத் தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் தெரிவிப்பதற்காகத்தான் இதனை எங்கள் மாவட்டக் கட்சியின் சார்பில் எழுதுகிறேன்.

தங்களின் மீதும், குழுவில் பங்கேற்றவர்கள் மீதும் எங்கள் கட்சிக்கு என்றும் நன்மதிப்புண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் தொடர்ந்து உறுதியுடன் போராடுகிறவர்கள் என்பதே இந்த நன் மதிப்புக்குக் காரணமாகும். தினமணி பத்திரிக்கைச் செய்தியில், தங்கள் அளித்துள்ள பேட்டியை தங்களுக்கே நான் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. “தேன்கனிக் கோட்டை பகுதி, தமிழகத்தில் உள்ளதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அங்கு ஜனநாயகம் இல்லை. அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழுகிறார்கள். அதற்குக் காரணம் தளியின் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் தான்” என்பதிருந்து தங்கள் பேட்டியைத் தொடங்கியிருக்கிறீர்கள்.

தேன்கனிக்கோட்டை தமிழ்நாட்டில் தான் இருகிறதா என்ற சந்தேகம் தங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள‌ முடியவில்லை. இவ்வாறு இது தனது சுதந்திரத்தை இழந்து நிற்பதற்கு ராமச்சந்திரன் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இது உங்களுக்கு கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லையா? தங்கள் சந்தேகத்திற்கு பதிலளிப்பதற்கு முன், வேறு சில தகவல்களையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிறந்து வளர்ந்து, அரசியல் பணியில் பங்கேற்றது எல்லாம் தேன்கனிக்கோட்டைப் பகுதியில் தான். இந்தப் பகுதி மக்களின் நலனுக்காக கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் கடந்த 35 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளேன். இந்த மக்களைப் பற்றி நான் நன்கு அறிவேன். இவர்களை யாருமே அடிமைகளாக வைத்திருக்க முடியாது என்று.

தங்கள் உண்மையறியும் குழு எங்கு சென்று யாரை சந்தித்தது? தகவல்களை நீங்களும் உண்மையறியும் குழுவிலுள்ளவர்களும் நேரடியாக சென்று பெற்றீர்களா? அல்லது உங்கள் அலுவலக ஊழியர்களைக் கொண்டு திரட்டினீர்களா? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. மொழி சிறுபான்மையினர் மிகுதியாக வாழும் இந்த மக்களையும் அவர்களின், பண்பாட்டு வாழ்க்கையையும் ஒரிரு நாட்களில் அல்லது சில மணி நேரங்களில் ஆய்வு செய்து, இந்த மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தது சரிதானா? என்பதை நீங்கள் மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எத்தனையோ போராட்டங்கள் இந்தப் பகுதியில் நிகழ்ந்துள்ளன. ஆதிக்க சக்திகளை எதிர்த்து உறுதியுடன் நின்று போராடியிருக்கிறோம். காவிரி, தாமிரபரணி, வைகை நதிக்கரையில் பெரும் நிலப்பண்ணையார்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்து வைத்திருந்தார்கள். இதற்காக கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களை தாங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். சுதந்திரத்தை ஒட்டி இதே கம்யூனிஸ்ட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்திய போராட்டங்களை நீங்கள் அறிவதற்கு வாயப்பில்லை. நெல்லுமாறு இனாம்தார் போராட்டம், ராயக்கோட்டை ஜாகீர்தார் போராட்டம், கெலவரப்பள்ளி, சாவாரம் பிக்கனப்பள்ளி நிலப்போராட்டங்கள் போன்ற போராட்டங்கள் நிலமற்ற ஏழைகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தியவை. இந்தப் போராட்டங்கள் பல ஆண்டுகள் நடைபெற்றன‌. இதில் சுதந்திர போராட்டக் காலத்தை சார்ந்த டாக்டர் அண்ணாஜி, லா அண்ணாஜி, டாக்டர் தெய்வம், என்.முத்து, பச்சா கவுண்டர், அரூர் அப்பாதுரை, கூடுமியான் போன்றவர்களைக் கூறமுடியும். இதற்குப் பிந்திய தலைமுறையைச் சார்ந்த இன்றைய பென்னகரம் சட்டமன்ற உறுப்பினர் என்.நஞ்சப்பன், எம்.லகுமையா, பி.இளம்பரிதி போன்றவர்கள் போராடியிருக்கிறார்கள்.

இன்று படுபயங்கர குற்றவாளியாக ஊடகங்கள் படம் பிடித்துக் காட்ட முயற்சி செய்யும் லகுமையாவின் வாழ்க்கையை தங்களைப் போன்றவர்கள் தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் எல்லைப்புறம் யாருடைய கண்ணிலும் படாத ஒதுக்குப்புறம். இங்கு நடப்பவற்றை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இனிமேலாவது இதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இந்த விபரங்கள் அனைத்தும் தேவையற்று எடுத்துரைப்பதாக தங்களுக்குத் தோன்றலாம். அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய தேவையை எங்களுக்கு உருவாக்கிவிட்டடீர்கள்.

சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் இந்தப் பகுதி மக்களின் அனைத்து சுதந்திரத்தையும் பறித்து தன்னுடைய கொடுங்கோன்மையால், கலவரப் பகுதியாகவே மாற்றிவிட்டவர் என்பது தான் தங்கள் பத்திரிக்கை பேட்டி. ராமச்சந்திரன் செயல்படும் கட்சிக்கு நான் மாவட்டச் செயலாளர். 13622 கட்சி உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டத்தில் கட்சிக் கிளை, இடைக்குழு மாநாடுகளை நடத்தி, மாவட்ட மாநாட்டில் செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன். 64 பேர் கொண்ட மாவட்டக் குழுவும் தேர்வு செய்யபட்டுள்ளது. கட்டுப்பாடுடைய கம்யூனிஸ்ட் கட்சியில் யார் தவறு செய்தாலும் அந்த குறைபாடுகளை போக்கும் வலிமையை அது கொண்டுள்ளது. கூட்டுத்தலைமையின் மூலம் எல்லாவற்றையும் கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டுப்படுத்த முடியும் என்பது எங்களின் ஆழமான நம்பிக்கையாகும். காவல்துறையின் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே கட்சியின் நிர்வாகக்குழுவில் விவாதித்து தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். ராமச்சந்திரன் மட்டுமல்ல யாருமே கட்சியின் கட்டுபாட்டை விட உயர்ந்தவர்களாக இருக்க முடியாது.

இந்த நிலையில் கட்சியால் வழிநடத்தப்படும் ராமச்சந்திரன் இந்தப் பகுதி மக்களை அடிமைப்படுத்த முடியுமா? பிரச்சனை வேறு. அதை எவ்வாறு கண்டறிந்து, தீர்க்க வேண்டும் என்பதில் தனிப்பொறுப்பு நம்மை போன்றவர்களுக்கு தேவைப்படுகிறது. அவசரம் அவசரமாக புராஜக்ட் தயாரித்து, மாணவர்கள் தங்கள் மதிப்பெண்கள் பெறுவதற்காக முடிப்பதைப்போல இதனையும் முடிக்கலாமா? இப்பொழுதும் சொல்கிறேன் இது எல்லைப்புற மாவட்டத்தின் சமூகப்பிரச்சனை. உலகமயப் பின்னணியில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கு இங்கு அடிததளம் இருக்கிறது, இதனை வலிமை கொண்ட மக்கள் இயக்கங்களின் மூலம் தான் மாற்ற முடியும் என்று கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.

கிருஷ்ணகிரியில் ஜூலை 18 ஆம் தேதி நீங்கள் அளித்துள்ள பேட்டியில், தளி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ராமச்சந்திரன், ஜி.எம்.ஆர் நிறுவனம் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அப்பாவி மக்களிடமிருந்து பறித்து, இடைத்தரகராக செயல்பட்டு, அந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். அவரை எதிர்க்கிறவர்களை மிரட்டுகிறார், மீறினால் அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறீர்கள். இது எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டு என்பதை நானும் கட்சியும் நன்கறிவோம்.

ராமச்சந்திரன் மீது தாங்கள் எழுப்பியுள்ள குற்றசாட்டை பரிசீலனை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு தரகராக இருந்து விற்பனை செய்துள்ளார் என்று தாங்கள் பகிரங்கமாக பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்துள்ளீர்கள். இந்தக் குற்றச்சாட்டை தங்களால் நிரூபிக்க முடியுமா? இதைப் பொய் என்று நிரூபிக்கும் பொறுப்பை கிருஷ்ணகிரி மாவட்டக் குழு ஏற்கிறது. தங்களை போன்ற அமைப்புகள் ஆதாரம் எதுவும் இல்லாமல் இவ்வாறு பத்திரிக்கைகளுக்குப் பேட்டியை அளிக்கலாமா என்ற கேள்வி எங்களை சங்கடப்படுத்துகின்றது.

நாற்பது வயது நிரம்பியவரான இராமச்சந்திரனை நான் மாணவப்பருவத்திலிருந்து அறிவேன். இளம் பருவத்திலேயே பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து, அதன் மாணவர் அரங்கத்தில் பணியாற்றிவர். கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரியில் மாணவத் தலைவராக செயல்பட்டு, பெங்களூரு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். மாணவப் பருவத்தில் அரசியல் தீவிரம் கொண்டு செயல்பட்டவர். என்றுமே அவருடைய அரசியல் வாழ்க்கை அடாவடித்தனம் கொண்டதல்ல என்பதை அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். எப்படியோ அவரைப் பற்றி மாறுபட்ட சித்திரம் தங்களுக்கு வந்துவிட்டது.

ஒருமுறை கெலமங்கலம் ஒன்றியத் தலைவராகவும், இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் தளித் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார். வேறுவகையில் சொல்வதென்றால் ஒரே இடத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் விரோத செயல் கொண்டவராக இராமச்சந்திரன் இருந்தால், ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும், இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், மக்கள் அதே பகுதியில் வாக்களித்து இவரைத் தேர்வு செய்யவார்களா?

சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் குடும்பம் வசதி படைத்த குடும்பம். இவரது தந்தை, அவர் காலத்தில் தங்கள் சொந்த நிலம்- 50 ஏக்கரில் கல்குவாரி தொழிலை தொடங்கியிருக்கிறார். அவர் காலத்திலிருந்து இன்றுவரை அந்த குடும்பம் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி அரசு ரீதியான விசாரணைகள் நடத்தினால் அதற்கு குடும்பத்தினர் பதில் சொல்லுவார்கள். இந்தத் தொழிலுக்கும் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உறுதிபடக் கூறமுடியும். அந்தக் குடும்பத்தினர் நில ஆக்ரமிப்பு செய்ததாக யாராவது குற்றம் சுமத்தினால் அதற்கான பதிலை அவர்கள் சொல்வார்கள். ராமச்சந்திரன் மீது தாங்கள் கூறியிருப்பதை போன்ற குற்றங்களை ஆதாரப்பூர்வமாக கட்சியிடம் கொடுத்தால் அதனை கட்சி பரிசீலனை செய்யும். கம்யூனிஸ்ட் கட்சியில் தவறுகள் செய்பவர் அதிக காலத்திற்கு நீடிக்க முடியாது.

தங்கள் உண்மை அறியும் குழு ஒரு பக்க உண்மையை அறிய மறுத்துவிட்டதாகவே நாங்கள் உணர்கிறோம். மறைந்த பழனிச்சாமி என்கிற பழனியை பற்றி எதுமே கூறாமல் கண்காணிப்பகம் மறைத்துவிட்டது. கொலையுண்ட நேரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவரது பின்னணி பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். தளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வெங்கடேசன் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்டார். இந்த வழக்கு இன்னமும் முடியவில்லை. இதில் முதல் குற்றவாளியாக பழனி மீது 2002 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யபட்டது. இதைப்போலவே ஒரு பெண் கொலை வழக்கிலும், ராயக்கோட்டையில் வழக்கு பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி தளிப்பகுதியை சார்ந்தவர் அல்ல. தளியிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சந்தூரை என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமாக இருந்த ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தையும் விற்பனை செய்துவிட்டதாக கூறுகிறார்கள். இன்று காலே பள்ளியில் இவர் குடியேறிய பின்னர் அதுவும் சில ஆண்டுகளில், இவரது குடும்பம் பெரும் வசதியடைந்தாகக் கூறப்படுகிறது. இதற்கு குறுக்கு வழியில் அமைந்த ரியல் எஸ்டேட் தொழில் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியை உண்மை அறியும் குழு ஏன் ஆராயாமல் தவிர்த்துள்ளது என்பது இன்றும் எங்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

தளித்தொகுதி தமிழகத்திலேயே கூடுதல் நிலப்பரப்பைக் கொண்ட தொகுதி. கர்நாடகமும் தமிழ்நாடும் காவிரி நீரை அளந்து பங்கிட்டுக் கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட பிகுண்டு இந்தத் தொகுதியில் தான் உள்ளது. இந்தத் தொகுதியில் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்ட பின்னர், எந்தெந்த வகையில் தொகுதிப் பணிகள் செய்திருக்கிறார் என்பது முக்கியமான ஒன்றாகும். தங்கள் உண்மை அறியும் குழு இதை ஆராய வில்லை. இதனை தங்களுக்குத் தெரிவிப்பது எங்களின் கடமை. உளிபேண்டா என்பது தளி தொகுதியில் சாலை வசதியற்ற மலைப்பகுதி. சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கு மலைப் பாதையை அமைக்க முடியாது என்று அரசாங்கம் மறுத்துவிட்டது. நூற்றுக்கு அதிகமான கிராமங்கள் அந்த மலைப்பகுதியில் இருக்கின்றன. மகப்பேறு முதல் அனைத்துக்கும் அந்த மக்கள் சாலை வசதியற்று படும் துயரங்களை விவரிக்க முடியாது. பல ஆண்டுகளாக வனத்துறையினரும் அந்தப் பாதையை அமைக்க தடை விதித்திருந்தனர். மக்களைத் திரட்டி கம்யூனிஸ்ட் கட்சியும் தோழர் ராமசந்திரனும் செய்த கடும் முயற்சிக்குப் பின்னர் அந்த பாதை அமைக்க‌ப்ப‌ட்ட‌து. மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தான் அந்த சாலையைத் திறந்து வைத்தார். தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் மக்களைத் திரட்டி இவ்வாறு ஒரு சாலையை அமைத்ததில்லை. இதனை ஏன் தங்கள் உண்மையறியும் குழு கண்டு கொள்ளவில்லை.

இதனைப் போலவே 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேலக்கரை என்னும் இடத்தில், 64 கிலோ மீட்டர் சுற்றி வரும் சாலைக்குப் பதிலாக 7 கிலோ மீட்டர் தூரத்தில் பாதை அமைத்து மலைமக்களுக்கு பாதையை உருவாக்கிக் கொடுத்தார். இது மக்கள் சிரமதானத்தின் மூலமாகவே நிறைவேற்றப்பட்டது. இதை எல்லாம் நீங்கள் கணக்கில் எடுத்திருக்க வேண்டும். உங்களுக்கு இவை எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்களை நீங்கள் அணுகியிருந்தால் இவற்றையெல்லாம் நேரில் அழைத்துச் சென்று உங்களுக்கு காட்டியிருக்க முடியும்.

நீலகரி, பேலப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் ஒரு சாராரை மட்டும் பார்த்துவிட்டு, ராமச்சந்திரன் இந்தப் பகுதியின் சுதந்திரத்தைப் பறித்துவிட்டார் என்று பேட்டியும் கொடுத்துவிட்டீர்கள். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியில் மறுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை அதன் கடந்த கால பாரம்பரியத்தோடு செய்து வருகிறது. இது குறித்த கள ஆய்வுக்கு தங்கள் கண்காணிப்பகம் முயற்சி செய்யுமானால் அதனை ஆதாரத்துடன் காட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் சிறப்பு பொருளார மண்டலத்திற்கு தேவையான நிலங்களை வாங்கித் தரும் புரோக்கராக செயல்பட்டுள்ளார் என்று நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள். உண்மை அறியும் குழுவினரின் கவனத்திற்கு சில உண்மைகளை சொல்லுகிறோம். 2008, 2009 ஆண்டுகளில் பைரமங்கலம், அகுண்ட பள்ளி, குந்துமாரண்ண பள்ளி ஆகிய இடங்கள் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டு, நிலங்களை அரசு கையகப்படுத்தத் தொடங்கிவிட்டது. நல்ல விளைநிலம். ரோஜா உள்ளிட்ட மலர்களும், மற்றைய பண தரும் விவசாயமும் செழிப்புற்ற மண். விவசாயியிகளின் தீவிரம் மிக்க போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தான் தலைமையேற்றது. தொடர்ந்து பலபோராட்டங்களில் தோழர் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். தவிர்க்க முடியாத மக்கள் எழுச்சியால் இது தடுக்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.லகுமையா ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிட்டு சொல்லத்தக்கதாகும். இதனைப் பற்றிய விபரங்கள் தாங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதற்கும் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்து தருவதற்குத் தயாராக இருக்கிறது.

இது போலவே பாகலூரில் மற்றொரு பிரச்சனை, விலை உயர்ந்த ஓர் இடத்தை விஜய மல்லையா எப்படியோ கைப்பற்றி விட்டார். அங்கு இருந்த நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அடித்து விரட்டப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி போராடி அந்த மக்களுக்கான குடி மனையை பெற்றுக்கொடுத்தது. இதற்கு இரவு பகலாக உழைத்தவர் ராமச்சந்திரன். இந்த மக்களை நேரில் சென்று தாங்கள் சந்தித்தீர்கள் என்றால் அந்த முழுக்கதையையும் அவர்கள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள். விமர்சனங்கள் எதையும் நிராகரிக்கக் கூடியது அல்ல கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் அது அவதூறாக முன்வைக்கப்படுமானால், அதனையும் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சியும் சில விமர்சனங்களை செய்து கொள்ளத் தயாராக இருக்கிறது. அதனை உட்கட்சி ஜனநாயகத்தின் மூலம் சரி செய்து கொள்வோம்.

நீலகிரி கோயில் திருவிழா மோதலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், பெரியார் திராவிடர் கழகமும் சம்மந்தப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளும் கடவுள் நம்பிக்கை இல்லாத கட்சிகள். பின் ஏன் அது மோதலாக வெடிக்க வேண்டும்? அங்குள்ள இரண்டு பகுதி மக்களுமே மொழிச் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மோதல் எதனால் உருவாக்கப்பட்டு, பின்னர் எவ்வாறு அரசியல் சாயத்தை பூசிக்கொண்டன என்பதையும் ஆராய வேண்டும்.

பெரியார் திராவிடர் கழகப் பிரமுகரின் கொலை கண்டிக்கத்தக்கது. ஆனால் இது போன்றே துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் நடைபெறும் கொலைகள் இந்தப் பகுதியில் கூடுதலாகவே இருக்கின்றன. இதற்குரிய சமூகக் காரணங்களை ஆராய்வது அவசியமானது. ஆனால் தங்களின் உண்மை அறியும் குழு இராமச்சந்திரன் மீது ஒரு தலைப்பட்சமாக குற்றம் சுமத்துவதில் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டதோ என்ற சந்தேகம் எங்கள் மாவட்டக்குழுவிற்கு வந்துவிட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்மைக் காலத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. ஒசூர் தொழிலாளர்களிடமும், மாவட்டத்தின் விவசாயிகளிடமும் செல்வாக்கைப் பெற்று வளர்ந்து வருகிறது. இதனை ஆதிக்க சக்திகளால் சகித்துக்கொள்ள இயலவில்லை. இதற்கு அண்மையில் நிகழ்ந்த விரும்பத்தகாத நிகழ்வை தந்திரமாகப் பன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி சுயவிமர்சனத்துடனும் எச்சரிக்கையுடனும் இந்தப் பிரச்சனையை அணுகும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் அன்புடன்,
பி.சி.நஞ்சப்பா
மாவட்டச் செயலாளர்

Pin It