கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியா இன்றைக்கு இருப்பதுபோல் ஒரே ஆட்சிப் பரப்பாக இல்லாத காலத்திலேயே, இங்கு, பிறவி சாதி என்கிற வருண வேறுபாட்டுக் கொள்கை சமுதாய வாழ்வில் இடம்பெற்றுவிட்டது. அத்துடன், யாகம் என்னும் வேள்வி செய்வதும் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் இவற்றைப் பின்பற்றும்படி பார்த்துக் கொண்டவர்கள் ஆங்காங்கு இருந்த அரசர்களும், சிற்றரசர்களுமே ஆவர். இதை 2560 ஆண்டுகளுக்கு முன்னரே சித்தார்த்தர் எதிர்த்தார்.

புத்தர் மறைவுக்குப் பின்னர் அசோகர் காலத்திலும், அவருடைய வழி வந்தவர்கள் காலத்திலும் கி.மு.180 வரை, வடநாட்டில் பவுத்தம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது.

பவுத்தம் பரவவும் காக்கப்படவும் அரசே காரணம் என்பதை உணர்ந்த புஷ்யமித்ர சுங்கன் என்கிற பார்ப்பனன் -அசோகரின் கொள்ளுப் பேரனான பிருகத்ரதனின் ஆட்சியில் படைத் தலைவனாக இருந்தவன் - படை வீரர்களின் கண் முன்னேயே, அரசனை வெட்டிக் கொன்றான். தன்னைத்தானே அரசன் என அறிவித்துக் கொண்டான். பவுத்தப் பிக்குகளைக் கொன்று, அவர்களின் தலைகளைக் கொண்டுவர ஆணை யிட்டான். பவுத்தத்தின் செல்வாக்கை அடியோடு துடைத்தான். அதுவரையில் செவிவழியாகப் புழக்கத்திலிருந்த இராமாயணம், மநுதரும சாத்திரம் இவற்றைத் தொகுக்கச் செய்தான். மநுநீதியில் விதிக்கப்பட்டபடி நால்வருண - பிறவி சாதிப் பகுப்பு நிலைபெறக் கெட்டியான அடித்தளமிட்டான்.

தென்னாட்டில், பிராமணிய - பார்ப்பனியக் கொள்கை என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதலே செல்வாக்குப் பெற்று விட்டது. தமிழ்நாட்டுச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வேத நெறிகளைப் பின்பற்றி வேள்விகளைச் செய்து, மேல் உலகத்தை அடைவதில் நாட்டம் கொண்டனர். பாமர மக்களிடம் இக்கொள்கைகள் பரவ, இராமாயணம் ஒரு வலிமையான ஊடகமாகப் பயன்பட்டது.

சமணமும், பவுத்தமும் பல பகுதிகளில் ஆட்சியாளர் களின் ஆதரவுடன் செல்வாக்குப் பெற்றிருந்தன. அந்தச் செல்வாக்கை ஒழித்திட ஒரு பக்கத்தில் சைவ நெறியாளர் களும், இன்னொரு பக்கத்தில் ஆதிசங்கரரும் முனைந்து செயல்பட்டனர்.

“சமய மறுமலர்ச்சி” என்ற பேரால், தமிழகத்தில் சைவ சமயக் குரவர்களும், அரசர்களும் சமணம், பவுத்தம் பெற்றிருந்த செல்வாக்கை 9-ஆம் நூற்றாண்டுக்குள் ஒழித்தனர்.

கி.பி.10-ஆம் நூற்றாண்டில் தொடங்கி, பிற்காலச் சோழர்களாலும், பாண்டியர்களாலும், வருணப் பாதுகாப்பு - பார்ப்பனர் பாதுகாப்பு-இராமாயணம், மகாபாரதச் செல்வாக்கு இவை 14-ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், ஆட்சி மூலமாகப் பாதுகாக்கப்பட்டன. சாத்திரக் கட்டளைகளை மக்கள் மீறுவது முடியாததாக ஆகிவிட்டது. நாயக்க மன்னர்கள் இவர்களை மிஞ்சி நின்றனர்.

இது சமூகத்தின் பேரில் மட்டும் ஆதிக்கம் பெற்றிருக்க வில்லை. மனித உரிமைகளைத் துய்ப்பது, உடைமைகளைப் பெற்றிருப்பது, அறிவைப் பெற்றுக்கொள்ளுவது என்கிற எந்த ஒன்றிலும் பெரிய எண்ணிக்கையினராக இருந்த கீழ்ச்சாதி மக்களுக்கு உரிமை இல்லாமலே இது செய்துவிட்டது.

இதற்கு இடையில் கி.பி.3-ஆம் நூற்றாண்டு தொடங்கி 10ஆம் நூற்றாண்டுக்குள் பார்ப்பனக் கொள்கைப்படி இயற்றப் பட்ட புராணங்கள், நான்கு வருணங்களுக்கு அப்பால் - 4000 உள்சாதிகளைக் கற்பனையாக உருவாக்கிச் செல்வாக்குப் பெற வைத்தன. ஒவ்வொரு உள்சாதியின் முன்னோர் எவரானாலும், அவர் ஒரு மேல் வருணத்து ஆணுக்கும், ஒரு கீழ் வருணத்துப் பெண்ணுக்குப் பிறந்தவரே ஆவார். அதாவது வருண சாதியைக் கெடுத்த - சங்கர சாதியாரே ஆவார்.

நான்கு வருணங்களாகப் பிரிக்க, மூன்று தடுப்புச் சுவர்கள் போதும், புராணங்களை நம்பிய மக்கள், 3999 தடுப்புச் சுவர்களை நம்பிக்கொண்டு, 4000 சிறுசிறு உள்பிரிவு களாக-மேல், நடு, கீழ் எனப் படிக்கட்டு முறைகளை உண்டாக்கிப் பின்பற்றி அதனைக் கட்டிக் காப்பதே வாழ்க்கையின் குறிக் கோள் என்று ஆக்கிக்கொண்டனர்.

1.            மநுநீதியில் விதிக்கப்பட்டபடி இந்தியா முழுவதிலும் வருணங்கள் உண்டு. தென்னாட்டில் பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வருணங்களே உண்டு. வருணம் மாறி இப்போது திருமணங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் சட்டப்படி “இந்து” என்று மணமகனும் மணமகளும் உறுதி ஒப்பம் செய்ய வேண்டும்.

2.            உள்சாதி மாறித் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், அதனால் வருண வேறுபாடு சட்டப்படி மாற்றம் அடையாது.

3.            பார்ப்பனப் புரோகிதத்தைக் கைவிடலாம்; சிலையை உடைக்கலாம்; மநுநீதி, இராமாயணம்-பாரதம் இவற்றை எரிக்கலாம். அதாவது வேத-புராண நெறிகளை மீறி அன்றாட வாழ்க்கையில் இலக்கக்கணக்கான தமிழர்கள் - கோடிக்கணக்கான இந்துக்கள் நடக்கலாம். ஆனாலும் அதற்குப் பிறகும் அந்த ஒவ்வொருவரும் “இந்து”தான்; அவன் பிறந்த ஏதாவது ஒரு வருணத்தைச் சார்ந்தவன் தான். அதை அவன் மாற்றிக் கொள்ள முடியாது.

இந்த மாபெரும் மானிட உரிமைப் பறிப்பை - மக்கள் சமத்துவத் தடையை எதிர்த்துத்தான் மகாத்மா புலே, பண்டித அயோத்திதாசர், தந்தை பெரியார், மேதை டாக்டர், அம்பேத்கர் ஆகியோர் தத்துவங்களையும் கொள்கை களையும் வேலைத் திட்டங்களையும் நமக்கு அளித்தனர்.

இவர்களுள் நீண்ட வாழ்நாளைப் பெற்றவர் பெரியார் ஒருவரே, தம் வாழ்நாளில் சரி பகுதிக் காலத்தை - மேலே சொல்லப்பட்ட எல்லாச் செய்திகளையும் வெகுமக்கள் செவிகளில் படும்படியும், மனத்தில் தைக்கும்படியும், சிலர் இவற்றை முழுமையாகப் பின்பற்றும்படியும் ஆவதற்கு ஏதுவாகப் - பட்டிதொட்டியெங்கும் சென்று பரப்புரை செய்த ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்களே.

ஆயினும் படித்தவர்களில் - அறிஞர்கள் எனப்படு வோரில் - அரசியல் களத்தில் உள்ளோரில் - வெகுமக்களில் எத்தனை விழுக்காட்டுப்பேர் பார்ப்பன புரோகிதத்தை ஒழித்தனர் - எத்தனை விழுக்காட்டுப்பேர் இராமாயண, பாரத நம்பிக்கையைக் கைவிட்டனர் - எத்தனை விழுக் காட்டுப்பேர் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்தினர் - எத்தனை விழுக்காட்டுப்பேர் சிலை வணக்கத்தை, தேர்த் திருவிழாவுக்கும், குடமுழுக்குக்கும் செல்லுவதைக் கை விட்டனர் என்னும் வினாக்களுக்கு நம்மிடம் எந்த விடையும் இல்லை.

பகுத்தறிவாளர்கள், சிந்தனையாளர்கள், நாத்திகர்கள் என விளங்குவோர் இப்படிச் சிந்திப்பதில் மட்டும் - பகுத்தறிவு அற்றவர்களாக, பகுத்தறிவைக் கைவிட்டவர்களாக, மூடநம்பிக்கைக்காரர்களாக உள்ளனர். இது உண்மை,

ஏன்? எவ்வாறு?

தந்தை பெரியார், “இராமாயணத்தையும் மநுநீதியையும் எரிக்க வேண்டும்” என 1922-இல் முதன்முதலாக அறிவித்தார். மேதை அம்பேத்கர் 1927-இலேயே அப்படி முழங்கினார்.

இராமாயணம் பற்றிய கட்டுரைகள், சொற்பொழிவுகள் அடங்கிய சிறு சிறு நூல்களை 1926 முதலும்; “இராமாயண ஆராய்ச்சி” நூல்களை 1936 முதற்கொண்டும் வெளியிட்டுப் பரப்பினார். இவை கடந்த 82 ஆண்டுகளில் ஓர் இலக்கம் படிகள் அச்சிடப்பட்டிருந்தால், அதுவே அதிகம்.

தந்தைப் பெரியாரை நன்றாகப் புரிந்த ஆச்சாரியார், 1940 முதல் “சக்ரவர்த்தித் திருமகன்” என இராமாயணம் பற்றி எழுதினார்; 1954 முதல் “வியாசர் விருந்து” என மகாபாரதம் பற்றி எழுதினார். இவற்றில் ஒவ்வொன்றிலும் - ஆங்கில மொழிப் பதிப்பு மட்டும் ஒருகோடிப் படிகள் விற்பனையாகி உள்ளன. படித்த பார்ப்பனர்கள் மட்டுமின்றிப் படித்த எல்லோரும் உலக அளவில் இவற்றைப் படிக்கின்றனர்.

இவற்றுக்கு அப்பால் ஒருவர் எவ்வளவு பெரிய கல்வி பெற்றிருந்தாலும், அவர் படித்த கல்வித் திட்டத்தில் இவை எல்லாம் இடம்பெற்றுள்ளன. நேற்றும் இன்றும் நிலை இதுவே; நாளையும் இதுவே.

படித்தவர்கள் மூடநம்பிக்கையாளர்களாகவும் பழமை வாதிகளாகவும் விளங்கிட இதுதான் மிகப்பெரிய காரணம். இந்தக் காரணத்தை அரசு அகற்ற வேண்டும்.

இன்றைய இந்திய அரசு “மதச்சார்பற்ற அரசு” அன்று. எல்லா மதங்களையும் ஒன்றுபோல் கருதிப் பாதுகாக்கும் அரசு.

எனவே படிப்பிலிருந்து மதத்தைப் பிரித்திட இந்திய அரசு முன்வராது; மாநில அரசுகள் முன்வரமுடியாது. அதற்கு உரிய அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை. இது மூன்று தலைவர்களுக்கு மட்டும் புரிந்திருந்தது. 1. மேதை அம்பேத்கர், 2. தந்தை பெரியார், 3. காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி ஆகியோரே அம்மூவர்.

இதை எதிர்த்து, 1947, 1948-இல் அம்பேத்கரும், பெரியாரும் எடுத்த முயற்சிகளும்; 1957-இல் பெரியார் நடத்திய சட்ட எரிப்புப் போரும், 2008 வரை வெற்றி பெறவில்லை. ஆனால் இவர்களை எதிர்த்துக் காஞ்சி சங்கராச்சாரியர் செய்த முயற்சி 26.11.1949 அன்றே வெற்றி பெற்றுவிட்டது. அதனால்தான் படிப்பிலிருந்தோ, அரசின் நடப்புகளிலிருந்தோ “மதம்” பிரிக்கப்படவில்லை.

இது மட்டுமா?

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு இன்று ஆண்டுக்கு ரூபா.1,000 கோடி வருமானம் உண்டியல் மூலம் கிடைக்கிறது; முடி இறக்குதல் மூலம் ஆண்டுக்கு 80 கோடி ரூபா கிடைக்கிறது. அக்கோவிலுக்கு உரிமையாக ரூபா 50,000 கோடி பெறுமானம் உள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் உள்ளன. அசையாச் சொத்துக்களாக நிலங்கள், கட்டடங்கள், மடங்கள் உள்ளன.

இவற்றையெல்லாம் பெற்றிடவும், உரிமையாக வைத்துக்கொள்ளவும். “வெங்கடாசலபதி” என்கிற கல் சிலைக்குச் சட்டப்படி உரிமை உண்டு. “இதைப் பொறுத்த வரையில் - வெங்கடாசலபதியின் சிலை என்பது சட்டப்படி ஒரு மனிதன்” - ஹள கயச யள வாநளந யீரசயீடிளநள யசந உடிnஉநசநேன, ஏநமேயவயஉhயடயயீயவால’ள னைடிட ளை ய தரசனைiஉ யீநசளடிn.

இப்படியே - இந்துக் கோயில்கள்; இசுலாமியர் மசூதிகள், கிறித்துவர் மாதா கோயில்கள், சீக்கியர் குருத்துவாரங்கள் எல்லாம் அசையாச் சொத்து, அசையும் சொத்துகளை உடை மையாக வைத்துக்கொள்ள வழிதேடிய ஒரே தலைவர் காஞ்சிப் பெரியவர்தான்.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பதே அப்படி எழுதப்பட இவர்தான் வழிசெய்தார். அதற்குக் கருவியாகச் செயல் பட்டவர் இன்று 101 அகவையினராக உள்ள அக்னிகோத்திரம் இராமாநுச தாத்தாச்சாரியார் ஆவார். அரசமைப்புச் சட்டத்தில் விதி 25(2)ய என்பது இன்றைக்கு உள்ள வடிவத்தில் அமைக் கப்பட இவர்களே காரணம்.

இதனை முழுவதுமாக மக்களிடையே அம்பலப்படுத்தி எதிர்த்தவர் தந்தை பெரியார். இதைக் கருவிலேயே சிதைத்திட, 1947-இலேயே முயன்று, 1951-இல் தோல்வி யைக் கண்டு வெதும்பியவர் மேதை அம்பேத்கர்.

புத்தரையும், புலேவையும் நன்றாகப் புரிந்து போற்றிய நம் இரண்டு தலைவர்கள் தந்தை பெரியாரும், மேதை அம்பேத்கரும் ஆவர்.

இன்று தந்தை பெரியாரின் 130-ஆவது பிறந்த நாள்.

94 ஆண்டுகள் 98 நாள்கள் வாழ்ந்த பெரியார். 47 ஆண்டுகள் - செம்பாதிக் காலம் ஒரு ஜெட் வானூர்தியின் வேகத்தில் ஊர் ஊராகச் சென்று, தம் மனத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி, நிருவாணமாக - வெளிப்படையாக எடுத்துக் கூறினார்; சிந்திக்க வைத்தார்.

அம்மேதையின் அடியொற்றி நிற்கும் பல இலக்கம் தொண்டர்களுள் நானும் ஒருவன். அதேநேரத்தில், பெரியாரை நன்கு புரிந்திட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவன்.

அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே, இங்கே இவற்றை எல்லோருடைய மேலான பார்வைக்கும் முன்வைக்கிறேன்.

வருணம், கடவுள், மத நிறுவனங்கள், மடங்கள், வேத பாடசாலைகைள், இறையியல் கல்லூரிகள், அரபிக் கல்லூரிகள், பழைய பழக்க வழக்கங்கள் இவை அப்படியே இருக்கவும், நீடிக்கவும் இடம் தருபவை அரசு, அரசு நிருவாகம், நீதித் துறை, கல்வி முறை, பெரிய உடைமை உரிமை முதலான வைதாம். இவ்வளவுக்கும் உரிமையை வழங்குவது இந்திய அரசமைப்பும், இந்திய நாடாளுமன்றமும்தான்.

இவற்றை அடியோடு மாற்றிட எல்லாம் செய்வதுதான், தந்தை பெரியாரின் கொள்கை என்றேனும் வெற்றி பெற ஒரே வழியாகும்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைக் காப்பாளர் களும் அருள்கூர்ந்து இவற்றைப் புரிந்துகொள்ளவும், ஆய்வுசெய்யவும், ஆய்வில் சரி என்று படுவதை ஏற்று நடக்கவும் முன்வரவேண்டுமெனக் கோருகிறேன்.

பெரியார் கொள்கைகளை வென்றெடுக்க இவையே ஏற்ற வழிகள்.

பெரியார் கொள்கையை வென்று எடுப்போம், வாரீர்!

(17.9.2008, “சிந்தனையாளன்”)

வே.ஆனைமுத்து