திரு. வரதராஜுலுவுக்கு கொஞ்ச காலமாக ஒருவித பயமும் நடுக்கமும் ஏற்பட்டு, அதனால் மூளை கலங்கி, எப்போது பார்த்தாலும் சுயமரியாதை இயக்க ஞாபகமும் கவலையும் ஏற்பட்டு, கனவிலும் சுயமரியாதை இயக்கம் என்கின்ற பேச்சைக் கேட்டால் நடுங்குவதாகத் தெரிய வருகிறது.

periyar 350இதனாலேயே அவரது எழுத்தும் பேச்சும் எப்போது பார்த்தாலும் “சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும்” என்றும், “அதைத் தொலைப்பதே தேசீய வேலை” என்றும் “ஒன்று சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும், இல்லாவிட்டால் நானாவது (அதாவது தானாவது) தொலைய வேண்டும்” என்றும், “இதற்காக பதினாயிரக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி வைத்திருக்கிறேன்” என்றும், “இந்த வேலையில்தான் மிகவும் முனைந்திருப்பதாகவும் இதற்கு தேசீயவாதிகள் உதவி செய்ய வேண்டும்” என்றும் பேசியும் எழுதியும் வருகிறார்.

அல்லாமலும் பொது ஜனங்களும் இந்த சுயமரியாதை இயக்கத்தை தெரியாத்தனமாக ஆதரிப்பதாகவும், இதனால் பெரிய ஆபத்து நேரிடப் போகின்றதென்றும் எழுதிவிட்டு கடைசியாக சுயமரியாதை இயக்கப் பிரசாரம் நடைபெறுவதால்தான் பார்ப்பனரல்லாதாரியக்கத்தையே தான் அழிக்க வேண்டியிருப்பதாகவும், அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்தவிடம் தெரியாமல் போக நேரிடுமென்றும் பயமுறுத்தி எழுதியும் பேசியும் வருகிறார். முடிவாக ‘திராவிடனை’ப் பற்றிக் கூட தனக்கு கவலையில்லை என்றும், நாயக்கரையும் ‘குடி அரசை’யும் ஒழித்தாலல்லது தேசீயம் உருப்படியாகாதென்பதாகவும் எழுதிவிட்டு, இறுதியாக அர்ஜ்ஜுணனுக்கு துணை இருந்த கிருஷ்ண பகவானே தனக்கு இக்காரியத்தில் துணை என்றும் சொல்லி முறையிட ஆரம்பித்து விட்டார். இதிலிருந்து ஸ்ரீவரதராஜுலு சாதித்து விடுவதைப் பற்றியும் அவர் புதிதாக சிபார்சு பிடித்திருக்கும் கிருஷ்ண பகவான் துணை புரியப் போவதைப் பற்றியும் பின்னால் பேசிக் கொள்ளலாம்.

‘கையால் ஆகாதவனுக்கு கடவுள் துணை’ என்பது போலவும் ‘சாகப் போகிறவனுக்கு சாமி துணை’ என்பது போலவும் தன் சக்தியெல்லாம் முடிந்து விட்டதாகதானே தீர்மானித்துக் கொண்டு சாமியைத் துணைக்கு கூப்பிட ஆரம்பித்து விட்டார்.

நிற்க, ஸ்ரீ வரதராஜுலு இவ்வளவு ஆத்திரமும் கவலையும் சாமியிடம் முறையீடும் அழுகையும் அழுவதற்கு சுயமரியாதை இயக்கம் இவரை என்ன செய்துவிட்டது என்பதை முதலில் யோசிப்போம்.

சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான பிறகு பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதாரமான அரசியல் புரட்டு, மதப் புரட்டு, தெய்வப் புரட்டு முதலிய புரட்டுகள் வெளியாகி இவைகளின் மூலம் பார்ப்பனர்களுக்குள்ள செல்வாக்குகள் சிறிதளவாவது குறையத் தலைப்பட்டதே ஒழிய ஸ்ரீவரதராஜுலுக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.

ஸ்ரீவரதராஜுலுக்கு ஏதாவது குறை ஏற்பட்டிருக்குமானால் அவரது பத்திரிகை வீழ்ச்சி பெற்று சற்று வரும்படி குறைந்திருக்கலாம். அதோடு மின்சார மருந்து வியாபாரமும் சற்று குறைவு பட்டிருக்கலாமேயல்லாமல் அவர் கவலைப்படத்தக்க அளவு குறை ஏற்பட்டிருக்க நியாயமில்லை. மேல்கண்ட இரண்டிற்கும் கூட தனது முட்டாள்தனம் காரணமா அல்லது சுயமரியாதை இயக்கம் காரணமா என்பதை ஸ்ரீவரதராஜுலு நிதானமாக யோசித்துப் பார்த்திருந்திருப்பாரானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அவர் இவ்வளவு பயமும் ஆத்திரமும் பட வேண்டிய காரணம் ஏற்பட்டிருக்காது. ஸ்ரீவரதராஜுலு நினைப்பது போலும், எழுதுவது போலும் பத்திரிகையிலும் மின்சார ரசத்திலும் அவர் பணம் சம்பாதிப்பதைப் பற்றி யாருக்கும் வருத்தமோ பொறாமையோ இருக்க நியாயமே இல்லை. ஏனெனில் ஸ்ரீவரதராஜுலுவைவிட மோசமான வழியில் எத்தனையோ பார்ப்பனர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டும், விட்டுக் கொண்டும் தான் வருகின்றோம். அப்படியும் பாவம் ஸ்ரீவரதராஜுலு மற்றவர்கள் பொறாமைப் படத்தக்கதான பெரும் பணம் ஒன்றும் சம்பாதித்து விடவுமில்லை என்பது நமக்குத் தெரியும். கடைசியாக அவர் குடியிருக்கும் வீடாவது அவருக்கு மிஞ்சுமா என்பது மிகவும் கவலையோடு கவனிக்கத்தக்க விஷயமாகும்.

தினசரி பத்திரிகை ஆரம்பித்த காலம் முதல் கொண்டு வாரப் பதிப்பில் வந்து கொண்டிருந்த சுமார் மாதம் 400 ரூபாயும் உள்ளே இழுத்துக் கொண்டதானது அவரது வரவு சிலவு கணக்கை பார்த்தாலேயே தெரியும்.

மின்சார விற்பனை லாபந்தான் அவரது ஜீவனத்திற்கு வழியாய் இருப்பது. அதுவும் மலாய் நாட்டில் மாத்திரந்தான் தக்கபடி விற்று வந்தது. அதாவது மாதம் 1-க்கு 500 ரூபாய் அல்லது 600 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்படி விற்பனையாகி வந்தது.

இது அவர்கள் செலுத்திவரும் இன்கம்டாக்ஸ் கணக்கு மூலமே தெரியலாம். இந்த 500, 600 ரூபாயும் சரியானபடி மீத்தாமல் தன்னைப் பெரிய பிரபு என்று பிறர் நினைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனமான ஆசையால் அவ்வளவுக்கும் சரியான செலவை வைத்துக் கொண்டார். ஆகவே கொஞ்ச காலமாக வரவும் செலவும் சரியென்று சொல்ல வேண்டுமேயல்லாமல் வேறில்லை. மேல்கொண்டு ஏதாவது சொல்ல வேண்டுமானால் அச்சடிக்கும் ஈயமும் தண்டவாள இரும்புந்தான் மீதி என்று சொல்ல வேண்டும். அதிலும் முற்றும் பலருடைய பங்குத் தொகைகளும் இருக்கின்றன. இந்நிலையில் ஸ்ரீவரதராஜுலுவின் மீது பொறாமைப் படுவதெதற்கு என்பது விளங்கவில்லை.

இவர் பத்திரிகையின் வீழ்ச்சிக்கு காரணம் ‘குடி அரசும்’ நாயக்கர் பிரசாரமுமா? அல்லது ஸ்திர புத்தியும் நிலையும் இல்லாமல் அடிக்கடி பச்சோந்தி போல் மாறி மாறி வந்தது காரணமா? என்பதை யோசித்தால் ஸ்ரீவரதராஜுலுவுக்கே உண்மை விளங்காமல் போகாது. இவர் தினசரிப் பத்திரிக்கை ஆரம்பித்த தினமேதான் சுதேசமித்திரன் அடிச்சுவட்டை பின்பற்றி நடக்கப் போவதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டதால் அது தலை எடுக்க முடியாமல் போனதோடு வாரப் பதிப்பையும் சந்திக்கு கொண்டுவந்து விட்டுவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களை ஏமாற்றி வந்தாலும் வாரப்பதிப்பு லாபத்தாலும் கொஞ்ச காலம் நஷ்டம் இல்லாமல் நடத்திவர முடிந்தது. பத்திரிகை எண்ணிக்கையின் உண்மையை அறிந்த சில விளம்பரக்காரர்கள் விழித்துக் கொண்டதால் இப்போது நஷ்டமேற்பட்டிருக்கலாம். அதற்கு யார் என்ன செய்யக்கூடும்?

 விளம்பரம் கொடுக்கும் வியாபாரிகளையும் ஏமாற்ற சர்க்கார் அறிக்கையில் தனது பத்திரிகை 6000 வெளிப் போவதாக உண்மைக்கு மாறாக குறிக்கும்படி ஏற்பாடு செய்தும் வெற்றி பெற்றார். ஆனாலும் அவ்வெண்ணிக்கை இருந்ததாக குறித்த காலத்தில் இவர் தினசரிப் பத்திரிகையே ஆரம்பிக்கவில்லை என்பது வெளியானவுடன் அவ்வறிக்கையும் உள் நாட்டில் பிரயோஜனப்படாமல் போய்விட்டது. ஆனால் வெளிநாட்டிலும் மேல்நாட்டிலும் சற்று இப்புரட்டு செலாவணியாகிக் கொண்டு வருகிறது என்று சொல்லலாம். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அவ்வறிக்கையில் ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ பத்திரிகைகளைப் பற்றி தாழ்வாக எழுதச் செய்யாமல் இருந்திருக்குமானால், அவ்வறிக்கையின் புரட்டைக் கூட வெளியாக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது.

இந்நிலையில் ஸ்ரீவரதராஜுலு மற்றவர்கள் பேரில் சங்கடப்பட்டு ஆத்திரப்படுவதில் என்ன பலன்? ‘குடி அரசோ’ நாயக்கர் பிரசாரமோ வலுவில் எப்போதாவது ஸ்ரீ வரதராஜுலுவைப் பற்றி ஏதாவது வம்பிழுத்திருக்கிறதா? அல்லது வாழ்வை வெளிப்படுத்த வந்ததா?

ஸ்ரீவரதராஜுலுவின் போக்கை ஸ்ரீநாயக்கர் கண்டித்ததற்காக ஒரு காலத்தில் (10.8.25ல்) ஸ்ரீவரதராஜுலு ஸ்ரீநாயக்கருக்கு எழுதிய கடிதத்தின் ஓர் பாகத்தில் எழுதியிருப்பதாவது:-

...“... என்னை விட தாங்கள் வயதிலும், அனுபவத்திலும், தியாகத்திலும் சிறந்தவர்கள். நான் ஏழை, தங்களைப் போன்றவர்களின் தேச சேவையைப் பார்த்து நானும் தேச ஊழியத்தில் ஈடுபட்டவன்” என்று எழுதிய கடிதத்திற்கு அப்போதே ஸ்ரீநாயக்கர் எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் :

“தங்கள் சுய நன்மையின் பொருட்டுத் தாங்கள் நடந்து கொள்ளும் எவ்வித காரியத்திலானாலும் என் போன்ற தனிப்பட்ட நபர்கள் விஷயத்தில் கெடுதி உண்டாகும்படியாக தாங்கள் செய்யும் எவ்வித காரியத்தைப் பற்றியானாலும், நான் எவ்வித கவலையும் எடுத்துக் கொண்டதுமில்லை; இனியும் நானாவது என்னைப் போன்ற எனது நண்பர்களாவது எடுத்துக் கொள்வதாக உத்தேசமுமில்லை. தங்கள் நிலையையும் பலக்குறைவையும் நன்றாய் அறிந்தே அதற்காக எவ்வளவோ இடம் விட்டுக் கொண்டுதான் வந்து உள்ளது. ஆனால் சமூகத்தையே அடியோடு காட்டிக் கொடுத்து காலம் தள்ள இனி ஒருக்காலும் ஒருப்படப் போவதில்லை. இதற்காக தாங்கள் வருத்தப்படுவதிலும் பிரயோஜனமில்லை.

தங்கள் தேச சேவையின் உத்தேசம் எதுவானாலும், தங்கள் சுயராஜ்யத்தின் கருத்து எதுவாயிருந்தாலும், எனது தொண்டிற்கும் அதன் கருத்துக்கும் தங்கள் ஒத்துழைப்பும் இருந்தால் நல்லது என்பது எனக்கு தெரியும். ஆனால் முடியாவிட்டால் என்ன செய்வது. ஆன வரையில் ஆகட்டுமென்று செய்ய வேண்டியதுதான். தங்களுக்கு தைரியமிருந்தால் இனியும் ஒத்துழைப்புக்கும் தங்கள் உத்தேசம் நிறைவேறுவதற்கும் இடமிருக்கின்றது. நான் இதை ராஜதந்திரமாக எழுதவில்லை. மனதில் உள்ளதை அப்படியே வைத்திருக்கிறேன் என்று தாங்கள் நம்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.”

என்று ஸ்ரீநாயக்கர் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற சமயங்களிலும் இது போலவே எழுதிய கடிதங்களும் எழுதச் செய்த கடிதங்களும் இருக்கின்றன.

இந்நிலையில் யார் மீது யாருக்கு பொறாமையோ துவேஷமோ இருக்கக் காரணம் ஏது?

நிற்க, ஸ்ரீநாயுடுவின் தேசீயம் என்பதுதான் என்ன என்பதாக இதுவரை யாராவது அறியக்கூடியதாக இருக்கின்றதா? அதற்கு என்ன கொள்கை என்பதாகவாவது தெரிவிக்கக் கூடியவராக அவர் இருக்கிறாரா? அதனால் இதுவரை மக்கள் அடைந்த பலன் இன்னது என்பதாகவாவது எதையாவது அவர் காட்டக்கூடுமா?

தேசீயத்தின் பேரால் பிழைக்கின்ற பார்ப்பனரல்லாதார் யாரைப் பற்றியும் நாம் அதிக கவலை எடுத்துக் கொள்வதே இல்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் எல்லோருக்குமே அதனால் பிழைப்பு நடக்கும்போது பார்ப்பனரல்லாதார் சிலருக்கும் அதனால் பிழைப்பு நடப்பதில் நமக்கு பிரமாதமான கெடுதி ஒன்றும் இல்லை என்பதுதான். அதனால் எந்த பார்ப்பானும் எந்தவித தேசீயத்திற்காகவும் தனது சமூகத்தின் நன்மையை ஒரு சிறிதும் காட்டிக் கொடுத்து பிழைப்பது இல்லை. எந்த “தேசீய”ப் பார்ப்பானாவது வருணாசிரம மகாநாட்டைப் பற்றியாவது, சங்கராச்சாரிகளைப் பற்றியாவது, பார்ப்பனக் கக்ஷி பிரசாரத்தைப் பற்றியாவது, ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுவதைப் பார்க்கின்றோமா?

“தேசீய” பார்ப்பனரல்லாதார்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியை வைவதும் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு விரோதமாகப் பேசுவதுமல்லாமல் வேறு வேலை காங்கிரசிலோ, சுயராஜ்ஜியக் கக்ஷியிலோ, மிதவாதக் கூட்டத்திலோ, தேசீயத்திலோ இருக்கின்றதாக யாராவது காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்.

ஸ்ரீவரதராஜுலுவுக்கும், நாயக்கருக்கும் பொறாமையோ துவேஷமோ இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அது போலவே ஸ்ரீமான்கள் குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, இரத்தினசபாபதி முதலியார், கந்தசாமிச் செட்டியார், ஆதிநாராயண செட்டியார் முதலிய “தேசீய” திருக் கூட்டத்தார்களைப் பற்றியும் தான் எழுதி வருகின்றோம். இதனால் அவர்களுடன் நாயக்கருக்கோ “குடி அரசு”க்கோ ஏதாவது பொறாமையோ துவேஷமோ உண்டா என்று கேட்கின்றோம்.

மற்றும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார், ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், வெங்கிட்டரமணய்யங்கார் முதலிய “காங்கிரஸ் தலைவர்களை”ப் பற்றி எழுதி வருகின்றோமே, அவர்களுடன் ஏதாவது நமக்கு பொறாமையோ துவேஷமோ உண்டா என்று கேட்கின்றோம்.

திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரைப் பற்றியும் காஞ்சீபுரம் முதல் அவர் காங்கிரசில் ராஜீனாமா கொடுக்கும் வரை கண்டித்து எழுதி வந்தோமே, அவருக்கும் நமக்கும் பொறாமையோ துவேஷமோ உண்டா என்று கேட்கின்றோம்.

மற்ற பார்ப்பனரல்லாதார்களையும், அதாவது பனக்கால் ராஜாவின் முட்டாள்தனமென்றும், ஸ்ரீபாத்ரோ கக்ஷியை விட்டு மரியாதையாய் விலகிக் கொள்ள வேண்டும் என்றும், ஸ்ரீதணிகாசலம் செட்டியாரால் கக்ஷிக்கும் மானக்கேடு என்றும் எழுதினோமே அவர்கள் பேரில் பொறாமையும் துவேஷமுமா என்று கேட்கின்றோம்.

டாக்டர். சுப்பராயன் அவர்களை மந்திரியானது முதல் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு திரும்பு மட்டும் வெளுத்துக் கொண்டு வந்தோமே, அவர் மீது நமக்கு பொறாமையும் துவேஷமுமா என்று கேட்கின்றோம்.

திரு. ராமலிங்கம் செட்டியாரையும் திரு. ஷண்முகம் செட்டியாரையும் கண்டித்து எழுதி வந்தோமே. அப்பொழுது அவர்களுக்கும் நமக்கும் துவேஷமும் பொறாமையுமா என்று கேட்கின்றோம்.

கோயம்புத்தூர் மகாநாட்டில், கவர்னர் துரையை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து அவரை கண்டித்தோமே அப்பொழுது கவர்னரிடம் நாயக்கருக்கு பொறாமையும் துவேஷமுமா என்று கேட்கின்றோம்.

ஸ்ரீவரதராஜுலு அதே வேலையாய் இருப்பதால் நாம் அதே வேலையாய் கண்டிக்கின்றோம். அவர் அதை விட்டு விட்டவுடன் நாமும் அவரை போற்றி இருக்கின்றோம். மறுபடியும் அவர் மாறினால் மறுபடியும் அவரை வெளியாக்குகிறோம்.

எனவே தாங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தையும் அதனால் ஒரு பெரிய சமூகத்திற்கே ஏற்படும் தீங்கையும் ஒரு சிறிதும் யோசித்துப் பாராமல், அதை வெளிப்படுத்துபவர்களை மாத்திரம் பொறாமை என்றும், துவேஷம் என்றும், சர்க்கார் பிரசாரம் என்றும் எழுதிவிட்டால் சரியாய் போய்விடுமா என்று கேட்கின்றோம் அல்லது நாயக்கர் பணம் திருடிக் கொண்டார் என்று சொல்லிவிட்டால் தாங்கள் செய்யும் அயோக்கியதனமெல்லாம் மறைந்து போகுமா என்றும் கேட்கின்றோம்.

நாயக்கர் பணம் திருடியிருப்பது வாஸ்தவமானால் எந்த யோக்கியனாவது பொறுப்புடன் முறையுடன் நாயக்கரைக் கேட்டால் அது ஆண் தன்மையாகும். அஃதில்லாமல் ‘நாயக்கர் பணம் திருடி விட்டார். கணக்கு கொடுக்கவில்லை’ என்று இழிபிறப்பு போலவும் கலப்புப் பிறப்புப் போலவும் காணாத இடங்களிலும் பொறுப்பற்ற முறையிலும் நாய் போல் குலைப்பதால் பயன் என்ன? நாயக்கர் பணம் திருடிக் கொண்ட விஷயமாய் விசாரிக்க மாயவரம் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட கமிட்டியாரின் வாயும் கையும் இதுவரை என்ன வேலையில் ஈடுபட்டிருக்கின்றது என்று கேட்கின்றோம்.

ஏன் இதைப்பற்றி ஸ்ரீநாயக்கரை ஒரு வார்த்தையாவது இவர்கள் கேட்கக் கூடாது? கேட்பதற்கு தைரியமும் யோக்கியதையும் இல்லாத ஆட்கள் ஏன் அக்கமிட்டியில் அங்கம் பெற சம்மதிக்க வேண்டும்? நாயக்கர் பிரசாரத்தின் எதிர் பிரசாரத்திற்கு இதுவரை நாயக்கர் மீது யார் என்ன குற்றம் கண்டு பிடித்தார்கள்? அல்லது நாயக்கரின் சொந்த நடவடிக்கைகளில் இதுவரை யார் என்ன குற்றம் சொல்ல முடிந்தது?

காஞ்சீபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் நாயக்கர் அங்குள்ள சில காங்கிரஸ்வாதிகளையும் பார்ப்பனர்களையும் பார்த்து “நீங்கள் அயோக்கியர்கள், வயிற்றுக்கு சோறு சாப்பிடுபவர்களல்ல” என்று உரத்துச் சொன்ன காலத்தில் ஸ்ரீமான்கள் ஏ.ரங்கசாமி அய்யங்காரும், சி.வி. வெங்கிட்டரமண அய்யங்காரும் “நாயக்கர் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்” என்றும், ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும், கல்யாணசுந்தர முதலியாரும் “நாயக்கர் இவ்வார்த்தைகளை திருப்பி வாங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் சொல்லி பார்ப்பனர்களுக்காக சிபார்சு பேசவந்தார்கள். நாயக்கர் ஒரே அடியாய் அது ஒன்றும் முடியாது என்றும், தன்னைத் தூக்கு மேடையின் மீது நிறுத்தினாலும் இதைச் சொல்ல தயாராயிருப்பதாகவும் சொன்னார்.

அதற்கு பிறகுதான் அதே நிமிஷத்தில் நாயக்கரையும் நிர்வாகக் கமிட்டியில் நியமித்தும் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு தலைவர் தேர்தல் ஆகியும் ஸ்ரீநாயக்கர் சம்மதிக்காவிட்டால் தான் அப்பதவியை ஏற்றுக் கொள்ள முடியாதென்று நாயக்கரை சம்மதம் கொடுக்கும்படி கேட்டதும், ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும் கல்யாணசுந்தர முதலியாரும் நாயக்கரை ஒப்புக் கொண்டதாக சொல்லும்படி வேண்டினதுமான காரியங்கள் நடந்தன. இவற்றின் குறிப்பு அப்போதே ‘குடி அரசிலும்’ ‘இந்து’ பத்திரிகைகளிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. எனவே நாயக்கருக்கு காங்கிரசில் மதிப்பிருக்கவில்லையா அல்லது அவர் காங்கிரசையும் ‘தலைவர்’களையும் வைத பிறகும் அவருக்கு காங்கிரசில் இடமளிக்கப் படவில்லையா என்பவைகளை யோசித்தால். நாயக்கரின் சுயநலமும், நாயக்கர் பணம் அடித்ததும், நாயக்கரின் சர்க்கார் பிரசாரமும் விளங்காமல் போகாது என்று சொல்லுகின்றோம்.

தவிர, ஸ்ரீவரதராஜுலு சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்தான் என்ன என்பதை எடுத்து எழுதியாவது அதை தொலைக்கக் காரணம் சொல்லுகின்றாரா என்றால் அதுவும் இல்லை. எனவே சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் பிரசாரத்தைப் பற்றியும் எந்த பார்ப்பனரும் பார்ப்பனப் பத்திரிகையும் படாத அவ்வளவு ஆத்திரமும் வேதனையும் நமது வரதராஜுலுக்கு மாத்திரம் உண்டாகக் காரணம் என்ன என்பதை பொது ஜனங்களே கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் அடுத்த வியாசத்தில் தேசீயக் கொள்கை என்ன என்பதையும் சுயமரியாதைக் கொள்கை என்ன என்பதையும் விரிவாய் எழுதுவோம்.

(குடி அரசு - கட்டுரை - 20.05.1928)

Pin It