"நமது (சமூகத்தினது) பொறுப்பற்றதனத்தால், கவனக்குறைவால், அக்கறை இன்மையால் இயற்கைக்கு முரணாக ஒரு குழந்தை மரணம் அடைந்தால் அது படுகொலையே ஆகும்."

கடந்த புதன் கிழமை அன்று (25.07.12) சென்னையில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவி சுருதியின் மரணமும் கூட ஒரு படுகொலையே ஆகும். அந்தப் படுகொலைக்கு பள்ளி வாகன ஓட்டுநரின் பொறுப்பற்றதனமும் காசை மட்டுமே குறியாகக் கொண்ட நிர்வாகமும் மட்டும் காரணம் கிடையாது. ஒருவிதத்தில் இந்த சமூகமும் தான் காரணம். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பல கிலோமீட்டர் பயணம் செய்து படிக்க வைக்க வேண்டிய சூழலும் மனநிலையும் எங்கிருந்து உருவானது என்பதை இப்போதாவது கவனிக்க வேண்டும்.

தமிழர்களின் தன்னெழுச்சியான இந்தி எதிர்ப்புப் போராட்டமானது பின்பு தமிழ் ஆதரவு என்பதற்குப் பதிலாக ஆங்கில ஆதரவு என்பதாக மடைமாற்றம் செய்யப்பட்டது. இந்தியப் பெரு நிலத்தில் வேறு எங்கும் இல்லாதபடி தமிழகத்தில் தான் 4 பாடத்திட்டங்கள் அமுலுக்கு வந்தது. அதிலும் METRICULATION என்னும் பாடத்திட்டமானது, ஆங்கில வழி( இங்கிலீஷ் மீடியம்) என்பதற்கும் மேலாகக் கூடுதல் திறன் வளர்க்கும் புதிய பாடத்திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. பல மாநிலங்களில் அந்த மாநிலத்தின் தாய்மொழி வழிப் பாடத்திட்டக் கல்வி, ஆங்கில வழிப் பாடத்திட்டக்கல்வி என்னும் இருவகைமைகளே உண்டு. சில இடங்களில் கூடுதலாக மத்திய பாடத்திட்டக்குழுவின் (CBSE) பிரிவும் உண்டு. இங்குதான் அதிசயமாக METRICULATION என்னும் வகை.

கடந்த அரை நூற்றாண்டுகளாக ஆங்கில வழிக்கல்வி, அதுவும் METRICULATION வழியிலான ஆங்கில வழிக் கல்வி குறித்த வெறி தொடர்ந்து ஊட்டப்பட்டுக் கொண்டே வந்துள்ளதை கவனிக்க முடியும். இந்தி எதிர்ப்பு, ஆங்கில ஆதரவு, தமிழ் வேடம் போன்றவை தமிழ்ச் சமூகத்தை தெனாலிராமனது பூனையின் மனதை ஒத்ததாக மாற்றிவிட்டது. அதிலும் தங்களது வீட்டின் அருகாமையில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் கூட குழந்தைகளைப் படிக்க வைப்பது கிடையாது. தினமும் பல கிலோமீட்டர் பயணம் செய்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன் என்ற பெயரில் நடக்கும் இந்த வன்முறைகளை நாம் எவ்வாறு ஏற்கிறோம்? ஏன் சகித்துக் கொள்கிறோம்? அந்த குறிப்பிட்ட பள்ளியில் படித்தால் எளிதில் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்ளலாம், விரைவில் வேலை கிடைக்கும் என்பன போன்ற 3D கனவுகள் தான் காரணம்.

குறைந்த பட்சம் இந்த பிஞ்சுப் பிராயத்தில் இப்படி பல கிலோமீட்டர் பயணம் செய்வது அந்தக் குழந்தையின் உடலை, முதுகு எலும்பை பலவீனப்படுத்தும் என்பது கூட கவனிக்கப்படுவது இல்லை. வெறி வெறி வெறி, தனது குழந்தை மட்டும் முதலில் வந்தால் போதும், தங்களது ரத்த வழி உறவுகளின் குழந்தைகள் கூட அந்தப் பந்தயத்தில் இடம் பெற்று விடக்கூடாது என்று என்னும் வக்கிரமான மனநிலையே ஆகும். சரி, அப்படி எந்த விதத்தில் இவர்கள் அடுத்த தலைமுறையினை முன்னேற்றி இருக்கிறார்கள் என்று பார்த்தால் கொஞ்சம் கூடுதலாக சம்பளம் வாங்கும் அடிமைகளை உற்பத்தி செய்கிற‌தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

மேலும் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயண வசதியை செய்து தரும் பொறுப்பு அரசாங்கத்தின் அனுமதிக்கு உட்பட்டது. தினசரி அல்லது எப்போதாவது என எந்த வகையில் இருந்தாலும் அது அரசாங்கத்தின் அனுமதியின் பெயரிலேயே நடக்க முடியும். ஆனால், இந்தப் பள்ளி, கல்லூரிகளின் போக்குவரத்து நிறுவனங்கள் எந்த வகையில் இதனை நடத்துகின்றன என்பது புரியவில்லை. இது சமூகக் கலத்தலைத் தவிர்க்கும் ( ANTI SOCIAL -MINGLING ) மனிதகுல எதிர்வு நடவடிக்கையே ஆகும்.

ஒரு குழந்தையினை அதன் அம்மா 'பொறுப்பாக' வீட்டில் இருந்து கொண்டு வந்து காத்திருந்து (வேறு குழந்தைகளிடம் கலந்து விடாமல் கவனமாகப் பார்த்து) பள்ளியின் தனித்த பேருந்தில் ஏற்றி விட்டுப் பின் மாலையும் அதே போல் வந்து தனது குழந்தையினை தனித்து தந்திரமாக அழைத்துச் சென்று மீளவும் வீட்டில் அடைத்து விடுவார். நமக்குத் தெரியும், நாம் எப்படி பக்கத்து வீட்டு/தெரு குழந்தைகளுடன் பள்ளிக்கு இணைந்து சென்றோம், எவ்வளவு உற்சாகமாக மகிழ்ந்து சிரித்து திரும்பி வந்தோம் என்னும் வரலாறு எல்லாம். இது எப்படி மறந்து போனது அல்லது ஏன் இதைச் செய்கிறோம்?

உலகமயமாக்கலுக்குப்பின் நாம் புதிய பொருள் வெறி கொண்ட வேட்டை சமூகமாக உருமாறி நிற்கிறோம். வேஷம் என்னவோ புதியதுதான். ஆனால், உள்ளுக்குள் அதே அடிமைகள் தான். ஒவ்வொரு நிறுவனமும் (பள்ளி,கல்லுரி) நூற்றுக்கணக்கான வாகனங்களை பயண ஊர்திகளாக வைத்திருக்கின்றன. இவை, இன்னும் கொஞ்ச காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை விட கூடுதலான பேருந்துகளை இயக்கும் மையங்களாக மாறினால் ஆச்சர்யம் இல்லை. குழந்தை சுருதியின் அகால மரணத்தைக் கண்டு, கேட்டு, அதிர்ச்சியுற்று / பதட்டமடைந்த நாமும்கூட ஒரு விதத்தில் நமது செல்லக் குழந்தையினைக் கொன்றவர்கள் ஆவோம். இது, இந்த மயக்குறு நிலை குறிதது காத்திரமான உரையாடலை உருவாக்க வேண்டிய தருணம் ஆகும். சுருதி நமக்குப் பாடமாக/ படிப்பினை ஊட்டும் குறியீடாக‌ மாறி நினைவில் என்றும் தங்கட்டும்.

Pin It