"அரசே என்ன இது? உங்கள் உடல் மூடப்பட்டு முகம் மட்டும் தெரிகிறது. அந்த மல்யுத்த வீரனுடைய முகம் மூடப்பட்டு உடல் மூடப்படாமல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லையே"

"அட மங்குனி அமைச்சரே! உன் மூளைக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தெரியவா போகிறது? இப்படி நோஞ்சானாக ஒரு மன்னன் இருந்தான் என்பதைவிட பராக்கிரமசாலியாக, மாபெரும் வீரனாக இருந்தான் என்று வரலாறு சொல்ல வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!"

இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி போல இருக்கிறது 'நாம் தமிழர்' சீமானின் பேச்சும் போக்கும்.

seeman_2992009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பிறகு தொடங்கிய ஓர் அரசியல் கட்சிதான் 'நாம் தமிழர்'. திரைப்படங்களில் ஒரே பாடலில் பண்ணையாருக்கு எதிராக மக்களைத் திரட்டும் கதாநாயகன் போல செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பியிருக்கிறார்.

தமிழீழத்தை மீட்பதற்காக விடுதலைப் புலிகள் நடத்திய மாபெரும் போர் தற்போதைக்கு முடிவுற்ற சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையும் (பிற்பாடுதான் கொடியில் சிறிது மாற்றம் செய்தனர்) தமிழர் பெருந்தலைவர் சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்த 'நாம் தமிழர்' இயக்கப் பெயரையும் 'எடுத்து'க்கொண்டு தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பி இருக்கிறார் அண்ணன் சீமான் அவர்கள் (சொந்த புத்தி எதுவுமில்லை என்கிற விவாதத்திற்கெல்லாம் போக வேண்டாம்).

மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரையும் விடுதலைப் புலிகளின் பெயரையும் மேடைகளில் அவர் சொல்லும்போது எழும் கைத்தட்டல்களையும், சேரும் கூட்டத்தையும் நாம் தமிழர் கட்சி தவறாக மதிப்பீடு செய்துகொண்டது என்பது அக்கட்சியின் அடுத்தடுத்த செயல்பாடுகளில் அம்பலமாகிக் கொண்டேயிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை எதிர்த்து அதிமுகவுக்கு வாக்கு கேட்டு மேடைதோறும் முழங்கினார் சீமான். கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களைவிட வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா' என்று உச்சரித்தார். 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றார். 'ஈழத்தாய்' என்று ஜெயலலிதாவை வாயாரப் புகழ்ந்தார். 'அம்மா'வைப் புகழ்வது அண்ணன் சீமானின் உரிமை; அதற்குள் நாம் போகவில்லை. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 'அம்மா' அரியணை ஏறிய பின் தமிழீழப் பிரச்சனையில் 'ஈழத் தாய்' போல் செயல்பட்டாரா? 'இலை மலர்ந்தது! ஈழம் மலர்ந்ததா?' என்ற கேள்வியைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது.

பழ.நெடுமாறன் அவர்களுக்கு கருணாநிதி மீது இருப்பது போன்ற பகை சீமானுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஜெயலலிதா மீது இருப்பது போன்ற விசுவாசமும் சீமானுக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக ஒரு போராட்டம்கூட இதுவரை சீமான் நடத்தாதற்குக் காரணம் என்ன? பால் விலை, மின் கட்டணம், பேருந்து கட்டண உயர்வின்போது கூட தமிழக அரசைக் கண்டித்து தமது இடது கையைத் தூக்கிப் போராட்டம் நடத்தவில்லையே! பரமக்குடியில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தோ அல்லது விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் பெண்களை ஜெயலலிதா அரசின் போலீசு பாலியல் வன்முறை செய்த கொடுமையையோ கண்டித்து போராட்டம் நடத்தவில்லை.

இந்த லட்சணத்தில்தான் "இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று - மாற்று அரசியல் புரட்சி",

"நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல - புரட்சிவாதிகள்"

- என்கிற பிரகடனத்தை செய்திருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தைப் படிக்கும்போதே தலை சுற்றுகிறது. தேமுதிகவின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கட்சியின் கொள்கையைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் பேசுவதைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் 'நாம் தமிழர் கட்சி'யின் ஆவணத்தைத்தான் நாம் புரிந்துகொள்ள முடியவில்லை.

முதலில், "இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று" என்று சொல்வதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகளைப் போலத்தான் பேனர்கள் வைக்கிறார்கள், சுவரொட்டி ஒட்டுகிறார்கள், மாநாடு போடுகிறார்கள், கொடி பிடிக்கிறார்கள், 'வாழ்க சீமான்' முழக்கமிடுகிறார்கள். ஆவணத்தின் நடத்தை விதிகள்கூட புதிதாகவோ அல்லது முற்போக்கானதாகவோ இல்லை. அப்புறம் எங்கிருந்து வந்தது மாற்று அரசியல் புரட்சி?

"நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர் - புரட்சிவாதிகள்" என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன் ஏதோ தமிழ்த் தேச அரசை அமைக்கப் படை அமைத்து ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்களோ என்று பார்த்தால்...

"கட்சி பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் கட்சி போட்டியிடும் என்று கட்சி உறுதி அளிக்கிறது" (பிரிவு 5 - பக்கம் 102)

இதுதான் புரட்சிவாதிகளுக்கான இலக்கணமாம்.

'புரட்சி வரப்போகிறது. புரட்சி வருகிறது' என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக உண்டியல் குலுக்கிக்கொண்டே சில தோழர்கள் சொல்வார்கள். அந்தப் புரட்சி இதுதானோ என்ன எழவோ தெரியவில்லை.

அட இதுகூட போகட்டும். தமிழ்நாட்டில் நிலவும் முரண்பாடுகள் என வரிசைப்படுத்துகிறார்கள். தமிழ்த் தேசிய இனத்திற்கும் இந்திய தேசிய இனத்திற்குமான முரண்பாடு, தமிழ்த்தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்கும் முரண்பாடு... என்று பத்து வகை முரண்பாடுகளை வரிசைப்படுத்துகிறார்கள்.

இந்திய தேசிய இனம், திராவிட தேசிய இனம் என்று உண்டா என்பதை விளக்க வேண்டும். தேசிய இனத்திற்கான அடிப்படைக் கூறுகள் என்ன என்பதுகூடத் தெரியாமல் ஆவணம் வரிசைப்படுத்துகிறது.

சரி இதுகூட போகட்டும். "மேல்சாதி - கீழ்ச்சாதி, தீண்டாமைக்குள்ளானோர் - தீண்டாமை புரிவோர் இடையே முரண்பாடு"

"ஆணாளுமை- பெண்ணடிமை முரண்பாடு" - பக்கங்கள் 39, 40)

இந்த முரண்பாடுகள் மேற்கட்டுமான முரண்பாடுகளாம். 'ஆட்டுக்கும் நாலு காலு; மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்றீங்களே' என்று நடிகர் ஜனகராஜைப் பார்த்துச் சொல்வதைப்போல்தான் இருக்கிறது இந்த மேற்கட்டுமானம் கண்டுபிடிப்பு.

தீண்டாமை, காணாமை, அண்டாமை என்கிற சமூகக் கொடுநெறி இருந்ததை நாம் தமிழர்கள் அறிவார்களா? நாடார் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட காணாமைக்கு எதிராகத்தான் குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து அய்யா வைகுண்டர் போராடினார் என்கிற வரலாறு நாம் தமிழர்களுக்குத் தெரியுமா? தொட்டால் தீட்டு என்கிற சமூகக் கொடுமை எப்படியெல்லாம் வடிவம் மாறி இப்போதும் தொடர்வதை நாம் தமிழர்கள் உணர்வார்களா?

நெல்லை மாவட்டம் குறிஞ்சான்குளத்தில் கோவில் வழிபாட்டு உரிமை கோரியதால் 5 தலித்துகள் கதறக் கதற கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். கடலூர் மாவட்டம் புளியங்குடியில் 3 தலித்துகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். மதுரை மாவட்டம் மேலவளவில் தேர்தலில் நிற்க முயன்றதற்காக பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 7 தலித்துகளை வெட்டிக் கொன்றார்கள். மாவீரன் இமானுவேல் சேகரன் சமூக உரிமை கோரியதற்காகக் கொல்லப்பட்டார். எப்போதெல்லாம் தலித்துகள் தலைநிமிர முயல்கிறார்களோ அப்போதெல்லாம் பெரும் வன்முறை தலித்துகள் மீது திணிக்கப்பட்டது. தேனி, போடி கலவரமாகட்டும் மற்ற தென்மாவட்டங்களில் நடைபெற்ற கலவரமாகட்டும் எல்லாமே இப்படித்தான் வெடித்தன.

இதுவெல்லாம் மேற்கட்டுமானமாம்.

"இந்திய தேசியத்திற்கு அடிப்படை இந்துத்துவம். இந்துத்துவத்திற்கு அடிப்படை சாதியம். சாதியம்தான் இந்துத்துவத்தையும் இந்திய தேசியத்தையும் காப்பாற்றுகிறது"

புரட்சியாளர் அம்பேத்கர் மிக ஆழமாக ஆய்வு செய்து சாதி ஒழிப்புக்கான களத்தைத் தேர்வு செய்து களமாடினார். தந்தை பெரியார் அதற்காகத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையையும் இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கைகளையும் முன்வைத்து சாகும் வரை போராடினார். வடக்கே ஜோதிராவ் பூலே முதல் தெற்கே அய்யா வைகுண்டர் வரை வாழ்நாள் முழுக்க சாதி ஒழிப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.

சாதிவெறியில் சேரிக் குடிசைகள் தீக்கிரையாயின. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. பொதுப்பாதையில் நடக்க முடியாது. கோவிலுக்குள் நுழைய முடியாது. பொது நீரோட்டத்தில் கலக்க முடியாது. சேரித் தமிழர்களின் வலியும் வேதனையும் 'நாம் தமிழர்' என்று சொல்லுபவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் பன்னெடுங்காலமாக தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் 'சாதியம்' மேற்கட்டுமானம் என்று சொல்ல முடிகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இன்னமும் 'நாடு கட்டமைப்பு' என்கிற சாதியக் கட்டமைப்பு இருப்பதை அம்மாவட்டத்தில் பிறந்த அண்ணன் சீமான் அறிவாரா என்பது தெரியவில்லை. கரியமாணிக்கம் அம்பலமும் அவருக்குப் பின் வந்த அவரது மகன் ராமசாமி அம்பலமும் சிவகங்கை மாவட்டத்தையே தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொடுமையை 'நாம் தமிழர்'கள் அறிவார்களா? அங்கு தலித்துகளின் நிலை என்ன என்பதற்கு கண்டதேவி கோவிலே சாட்சி. இன்னமும் வடம்பிடிக்கவே முடியாத கொடுமையைச் செய்வதும் தமிழர்கள்தான். இதைத்தான் 'மேற்கட்டுமானம்' என்று சொல்கிறார்கள் போலும்.

இந்தியக் கட்டமைப்பு குறித்தும் இந்துத்துவ பாசிசம் குறித்தும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையான சாதியம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பல தொகுப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் தயவுகூர்ந்து 'நாம் தமிழர்கள்' படிப்பதுதான் அறிவுடைமை. குறைந்தபட்சம் பாவலர் தணிகைச்செல்வன் அவர்களின் 'தேசியமும் மார்க்சியமும்' என்கிற நூலையாவது வாசிப்பது நல்லது.

இந்துத்துவத்தை உடைத்தால்தான் சாதியத்தை வேரறுக்க முடியும் என்பதை ஆய்வு செய்த பின்புதான் புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறினார். இந்துத்துவம் சக மனிதர்களை இழிவுபடுத்துகிறது; மனிதர்களாக அங்கீகரிக்க மறுக்கிறது என்பதால்தான் தமிழகத்திலும் கிறித்தவர்களாக, இசுலாமியர்களாக மதம் மாறினார்கள். கிறித்தவம் வந்த பிறகுதான் தலித்துகள் படிக்கவே ஆரம்பித்தார்கள். நல்ல உடை உடுத்த ஆரம்பித்தார்கள். நல்ல உணவு உண்ண ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு வரை தலித்துகள் படிப்பதே மனுதர்மத்திற்கு எதிரானது என்ற நிலை இருந்தது. அந்த மனுதர்மத்தின் சட்ட வடிவம்தான் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம்.

இப்படியாக இந்துத்துவ பாசிச அடக்குமுறைக்கு எதிராகத்தான் தமிழகத்தில் தலித்துகள் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். இந்த வரலாற்றுப் பின்னணி தெரியாமல் கிறித்தவ முரண்பாடு, இசுலாமிய முரண்பாடு என்று உளறுவதெல்லாம் இந்துத்துவத்திற்கு, மனுதர்மத்திற்கு, பார்ப்பனியத்திற்கு சாமரம் வீசுவதாகத்தான் அமையும். வரலாற்று அறிஞர்களும் சமூக அறிஞர்களும் இன்னும் சமூகத்தைச் சீர்திருத்த வந்த அறிஞர் பெருமக்கள் எல்லாம் இந்துத்துவத்தையும், அதற்கு அடிப்படையாக இருக்கிற சாதியத்தையும் வேரறுக்க வேண்டும் என்று பரப்புரை செய்துவிட்ட‌ பிறகு, அந்த இந்துத்துவ பாசிசம் குறித்து 'நாம் தமிழர்கள்' வாய் திறக்காததை திட்டமிட்ட சதியாகவே கருத முடிகிறது. கிறித்தவர்களும், இசுலாமியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்பதை ஒருபோதும் ராமகோபாலன்களும் அத்வானிகளும் மோடிகளும் ஏற்றுக்கொண்டதில்லை. இவர்கள் வழியில் சீமான்களும் ஏற்கவில்லை என்பதைத்தான் நாம் தமிழர் ஆவணம் பிரகடனப்படுத்துகிறது. குஜராத்தில் மோடி செய்த சிறுபான்மை இன அழித்தொழிப்பை இங்குள்ள 'சோ' கும்பலும் இந்துத்துவக் கும்பலும் 'புரட்சி' என்று சொல்வதைப் போலத்தான் நாம் தமிழரின் 'புரட்சிவாதிகள்' அறிவிப்பா?

இந்த ஆவணத்தின் உச்சக்கட்ட காமெடியாக அமைந்திருப்பது சமுதாய வழிகாட்டிகள், போற்றுதலுக்குரிய பெருமக்கள் (பக்கம் 43, 44) என்கிற பகுதிதான்.

மனுதர்மத்தைக் கட்டிக் காக்கவும், இந்துத்துவத்தைக் கட்டிக் காக்கவும், சாதியத்தைக் கட்டிக் காக்கவும் வாழ்நாள் முழுக்க செயல்பட்ட முத்துராமலிங்கத் தேவர், 'நாங்கள் இந்துக்கள் இல்லை' என்று கலகம் செய்த தலித்துகளுக்கெதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார். இத்தகைய அடக்குமுறைக்கெதிராகக் களமாடியவர்தான் மாவீரன் இமானுவேல் சேகரன்.

இன்றைக்கே சாதியம் தலித்துகள் வாயில் மலம் திணிக்கிறது என்றால் 1960களில் சாதியம் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இப்படித்தான் மாவீரன் இமானுவேல் சேகரன் சாதிய அடக்குமுறைக்கெதிராகக் களமிறங்கினார். இதைப் பொறுக்க முடியாமல்தான் இமானுவேல் சேகரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையின் முதல் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவர்தான். (அரசியல் - சமூகப் பின்புலத்தால் பின்னர் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) தலித்துகள் இன்றளவும் அக்கொடூரத்தை மறக்கவில்லை. ஆனால் 'நாம் தமிழர்'கள் படுகொலையானவரையும் போற்றுவார்களாம்; கொலைகாரனையும் போற்றுவார்களாம். இதுதான் நாம் தமிழர்களின் புரட்சியா?

ஒருமுறை அண்ணன் சுபவீ, தோழர் தியாகு ஆகியோர் முல்லைப் பெரியாறு நீர்ச்சிக்கல் குறித்து உசிலம்பட்டி வழியாக நடைபயணம் சென்றார்கள். வழியில் செக்கானூரணியில் நடைபயண விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் தமிழ் தமிழர் இயக்கத் தோழர்கள். "பொதுக்கூட்ட மேடைக்குப் போகும்முன் தேவர் அய்யா சிலைக்கு மாலை போட்டுவிட்டுத்தான் போக வேண்டும். இது இந்த ஊர் வழக்கம்" என்று ஊர் பெருசுகள் சொன்னார்கள். ஆனால் அண்ணன் சுபவீயும், தோழர் தியாகுவும் சிலைக்கு மாலை போட மறுத்து பொதுக்கூட்டத்தையும் ரத்து செய்துவிட்டுத் திரும்பினார்கள். பின்னர் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுபவீ அவர்களும், தியாகு அவர்களும் பேசும்போது, "முத்துராமலிங்கத் தேவர் ஓர் ஆதிக்கத்தின் குறியீடு. ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். ஆகவே அந்த சிலைக்கு மாலை அணிவிக்க விரும்பவில்லை" என்று கூறினார்கள். சமூகத்தைத் தலைகீழாக மாற்ற விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் இந்தத் துணிச்சலாவது இருக்க வேண்டும். கொலைகாரனுக்கும் வீரவணக்கம்; கொலையுண்ட மாவீரனுக்கும் வீரவணக்கம் என்பது ஏமாற்று வேலையல்லாமல் வேறென்ன?

அடுத்தபடியாக, செயற்பாட்டுக் கொள்கைகள் என்கிற தலைப்பில் சொல்லப்பட்டுள்ள 11வது செயற்பாட்டைப் பாருங்கள். "சாதிய, சமய மேலாளுமையை ஒழிப்போம். சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம். பிறப்புவழி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உதவிகளையும் தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் பெயரளவில் திட்டமிட்டுச் செய்வோம். சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். தமிழர் திருமண மண்டபங்கள், தமிழர் சுடுகாடு, தமிழர் இடுகாடு அமைப்போம்".

இப்படி, மொத்தம் 36 செயற்பாட்டுப் பணிகளைச் செய்யப்போவதாக அறிவித்திருப்பதில் இந்த 11வது செயற்பாட்டுக் கொள்கையை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்; தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியை 'நாம் தமிழர்கள்' எப்படிப் புரிந்திருக்கிறார்கள் என்பது புரியும்.

சாதிய, சமய மேலாளுமையை ஒழிப்பார்களாம். சாதியும் சமயமும் இருக்க, ஆளுமையை மட்டும் ஒழிப்பார்களாம். எப்படி என்றுதான் புரியவில்லை. நாமோ, "வீடு நாறுகிறது. வீட்டிலிருக்கிற மலத்தை, (சாதி-சமயம்) அப்புறப்படுத்த வேண்டும் என்கிறோம். 'நாம் தமிழர்'களோ ஆளுமை செய்கிற அந்த நாற்றத்தை மட்டும் ஒழிக்கப் போகிறார்களாம்.

பிறப்புவழி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உதவிகளையும், தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்கள். அது என்ன பிறப்பு வழி ஒடுக்கப்பட்டவர்கள் என்று தெரியவில்லை. செருப்புத் தைக்கும் சக்கலியருக்கும் பிணம் எரிக்கும் வெட்டியானுக்கும் சவரம் செய்யும் நாவிதனுக்கும், துணி வெளுக்கும் வண்ணாருக்கும் கல்விக்கான உதவி செய்து மீண்டும் இதே தொழிலைச் செய்ய உதவி செய்யப் போகிறார்களா? இவர்கள்தான் பிறப்புவழி ஒடுக்கப்பட்டவர்கள் என்று 'நாம் தமிழர்' அடையாளம் காட்டுகிறதா? இதுதான் அந்த அடையாளம் என்றால் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்கும் 'நாம் தமிழரின்' இச்செயற்பாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அத்தோடு இல்லாமல் தமிழர் சுடுகாடு, தமிழர் இடுகாடுகளை அமைப்பார்களாம். இன்னமும் நாமக்கல் மாவட்டம் மொஞ்சனூரில் தலித்துகளின் பிணத்தை எடுத்துப் போகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இந்தக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் 'நாம் தமிழர்கள்' கவலைப்படாமல் தமிழர் சுடுகாடு அமைக்கப் பாடுபடுவார்களாம். தமிழர்களிலேயே எந்தத் தமிழன்? என்ன சாதி? சாதியில் என்ன பிரிவு? பிரிவில் என்ன வகையறா? என்றெல்லாம் தமிழன் கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறான். இதனை ஒழிக்க முன்வராமல் தமிழர் சுடுகாடாம், தமிழர் இடுகாடாம். 23ஆம் புலிகேசி மன்னன் சாதிச் சண்டை போடுமிடம் என்று அமைத்ததுபோலத்தான் நாம் தமிழரின் இந்தச் செயற்பாடு.

முதலில் 'நாம் தமிழர்' என்று முழங்குபவர்களுக்கு தமிழகச் சூழலில் தமிழர்களுக்கு எது முதன்மையான பிரச்சனை, தமிழர்களை ஒன்றுசேர விடாமல் தடுப்பது எது என்கிற வரலாற்று, சமூக, அரசியல் அறிவு அவசியம். பன்னெடுங்காலமாக கூறுபோடுவது சாதியும், மதமும்தான். இவைதான் தமிழரின் வீழ்ச்சிக்கு மூலம். ஊர் என்றும், சேரி என்றும் இரண்டு குடியிருப்புகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இதைவிட வேறு என்ன அவமானம் இருக்கிறது? தமிழர்களே ஊர்த்தெரு தமிழர்களாகவும், சேரித்தெரு தமிழர்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். சக மனிதன் சாதியின் பெயரால் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்படும் நிலைகண்டு கொதிக்காதவன் என்ன புரட்சி பேசி என்ன ஆகப்போகிறது?

விரட்டி விரட்டிக் கொல்லப்படுகிறார்கள்; சேரிப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள்; சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாய் சொந்தக்காரர்களின் வீடுகளில் சென்று தங்குகிறார்கள்; நாயைப் போல் காவல்துறையால் நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்... சாதியின் பெயரால் தலித்துகள் மீது இத்தகைய அடக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தலித்துகளின் விடுதலைத் தாகம் மட்டும் இன்னும் குறையவில்லை.

அனைத்து வகை ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற தலித்துகள் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிங்களவனின் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழனின் விடுதலைப் போராட்டமும், சாதிவெறித் தமிழர்களுக்கெதிரான சேரித் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான். அங்கு சிங்களவன் தமிழனை சுட்டுக் கொல்கிறான். இங்கு தமிழனே இன்னொரு தமிழனை வெட்டிக் கொல்கிறான். பெயர்தான் மாற்றம்; ஆதிக்கம் ஒன்றுதான். விடுதலைப் போராட்டம் என்பதை சொந்த மண்ணிலிருந்துதான் தொடங்க வேண்டும். தலித்துகள் அனைத்து வகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற்றால்தான் தமிழர் விடுதலை சாத்தியமாகும். பிற மனிதனின் இழிவை, ஒடுக்குமுறையை ஒழிக்காமல் தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலைதான். இது 'நாம் தமிழர்'களுக்கு மட்டுமல்ல; தமிழ்த் தேசியவாதிகள் அனைவருக்கும் பொருந்தும்.

முதலில் சாதி, மதம் குறித்த வரலாற்றைப் படிக்க வேண்டும். அப்புறம் அது புரிய வேண்டும். அப்புறம்தான் புரட்சி செய்ய மக்களைத் திரட்ட வேண்டும். அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்றார். 'நாம் தமிழர்கள்' முதலில் கற்க வேண்டும். அப்புறம்தான் மற்றவை.

மீண்டும் வடிவேலு காமெடியோடவே இவ்விவாதத்தை முடிப்போம் -

"அய்யோ... இப்பவே கண்ணைக் கட்டுதே...!"

- வன்னிஅரசு

Pin It