விரட்டியடிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் . . .

கடந்த 2010ஆம் ஆண்டு இறுதியில் சென்னை ரயில்வே பணிநியமன பிரிவிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வந்தது. (RRC, Chennai, Employment Notification No. 05/2010 dated 15.12.2010) மொத்தப் பணியிடங்கள் 283. இவை அனைத்தும் கடைநிலைப் பணியாளர்கள் (Group D) மிகுந்த சிரமத்திற்கு இடையில் மாற்றுத்திறனாளிகள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர். மாற்றுத்திறனாளி தோழர்களுக்கு குறுஞ் செய்தியாகவும், மின்னஞ்சலாகவும் இந்தத் தேர்வினைப் பற்றி செய்தியனுப்பினோம். விண்ணப்ப நகலை மின்னஞ்சலாக அனுப்பினோம். தமிழ் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பித்தனர். அதன் பின்னர் தொடர்ந்து ஆறு, ஏழு மாதங்களுக்கு அந்த் தேர்வைப் பற்றி தொலைபேசியில் அழைத்து விசாரிக்கும் நண்பர்களுக்கு விரைவில் தேர்வினைப் பற்றிய அறிவிப்பு வெளிவரலாம் என்று பதிலளிப்போம்.

சென்னை ரயில்வே நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் "எப்பொழுது தேர்வு என்பது எங்களுக்குத் தெரியாது" என்ற பதிலையே சொல்லி வந்தனர். கிட்டத்தட்ட அனைவருமே அந்தத் தேர்வைப் பற்றி மறந்து போய்விட்ட 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரயில்வே நிர்வாகம் தேர்வுத் தேதிகளை அறிவித்தது. தேர்வு ஆறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் பெயரின் ஆங்கில முதல் எழுத்தை மையமாக வைத்து தேர்வு நாளும், தேர்வு மையமும் அறிவிக்கப்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ‍ஆறு கோட்டங்களிலும் தேர்வு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்றதும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் என்ன? கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையிலும், பாலக்காட்டிலும், திருவனந்தபுரத்திலும், மதுரையிலும் தேர்வு எழுதச் செல்ல வேண்டும். இதே போல் ஒவ்வொரு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்கு அருகாமையில் உள்ள கோட்டத்தில் (எடுத்துக்காட்டாக கோவையில் இருந்து விண்ணப்பித்த ஒரு மாற்றுத்திறனாளிககு அருகில் உள்ள சேலம் கோட்டத்தில்) தேர்வுகளை நடத்தாமல் தொலை தூர ஊர்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

 நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு கால்களும் செயலிழந்த விஜயலட்சுமி என்ற மாற்றுத்திறனாளி தொலைபேசியில் அழைத்து "எனக்கு 27-5-2012 அன்று திருவனந்தபுரத்தில் தேர்வு என்று ரயில்வே நிர்வாகம் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளது. நான் அவ்வளவு தூரம் சென்று எவ்வாறு தேர்வு எழுதுவது? என்னால் இந்தத் தேர்வை எழுத இயலாது" என்று கூறினார். கடந்த ஆறுமாதமாக அந்தத் தேர்வுக்குப் படித்து வந்த அந்தப் பெண்ணால் தேர்வுக்குச் செல்ல இயலாமல் போனது துயரம். கோவையைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாற்றுத்திறனாளிக்கு சென்னையிலும், மோகன் என்பவருக்கு பாலக்காட்டிலும், ரமேஷ் என்பவருக்கு திருச்சியிலும், மதுரையைச் சேர்ந்த முருகனுக்கு பாலக்காட்டிலும், காரமடையைச் சேர்ந்த லதாவுக்கு திருவன்ந்தபுரத்திலும் என்று மாற்றுத்திறனாளிகளை திசைக்கொருவராக தேர்வு எழுத ஆணையிட்டது தென்னிந்திய ரயில்வே நிர்வாகம்.

தொலைதூர தேர்வு மையங்களால் வரும் பொருளாதார சிக்கல்கள்

 எனக்கு (சூர்ய.நாகப்பன்) 24-6-12 அன்று மதுரையில் தேர்வு என்று அழைப்பாணைக் கடிதம் கிடைக்கப் பெற்றேன். பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில் ஆறுமாதமாக இந்தத் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருந்தேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசு வேலைக்கான ‍தேர்வுகளை எழுதி வந்த நான் இந்த முறை எப்படியும் அரசு வேலை பெற வேண்டும் என்று படித்துக் கொண்டிருந்தேன். கோவையிலோ, அருகில் உள்ள சேலத்திலோ அல்லது பாலக்காட்டிலோ தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நினைத்தேன். ஆனால் மதுரை இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியே எனது தேர்வு மையம். 24-6-12 அன்று காலை 11 மணிக்கு தேர்வு. கோவையிலிருந்து என்னால் காலையில் புறப்பட்டு தேர்வு எழுதச் செல்ல முடியாது. எனவே 23-6-12 அன்று இரவு மதுரையில் ஏதேனும் ஒரு விடுதியில் தங்கிவிட்டு காலையில் சென்று தேர்வு எழுதலாம் என்று முடிவு செய்து சனிக்கிழமை மாலையே புறப்பட்டேன்.

இரு கால்களும் போலியாவால் பாதிக்கப்பட்ட என்னால் எந்த சுமையையும் தூக்கிச் செல்ல இயலாது, ஐம்பது அடி தூரம் நடக்க இயலாது, எனக்கு துணையாக ரமேஷ் என்ற மாற்றுத்திறனாளியை (விபத்தில் ஒரு கையை இழந்தவர்) அழைத்துக் கொண்டு சென்றேன். இரும்புக் கால்தாங்கியை இடது காலில் பொருத்திக் கொண்டு அது கொடுக்கும் அழுத்தத்தையும், வலியையும் பொருட்படுத்தாது புறப்பட்டேன். வீட்டிலிருந்து சிங்காநல்லூர் 20 கிலோ மீட்டர் தொலைவு எனவே எனது மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில் தோழனுடன் பயணித்தேன். அதிலேயே நான் சோர்வடைந்தேன். ஐந்து மணி நேரப் பேருந்துப் பயணம். மதுரை ஆரப்பாளையத்தில் இறங்கினேன். அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். பெரியார் பேருந்து நிலையம் சென்றேன்.

தங்கும் விடுதிகளுக்குச் சென்று அறை இருக்கிறதா என்று தோழர் தேடினார் எங்கும் அறை எதுவும் கிடைக்கவில்லை. (மறுநாள் சீருடைப் பணியாளர் தேர்வு என்பதால் அந்தத் தேர்வுக்கு வந்தவர்களே அனைத்து விடுதிகளிலும் நிரம்பிக் காணப்பட்டனர்). தானி ஒன்றை வாடகைக்கு எடுத்து அறையைத் தேடினேன். இரண்டு மணி நேரத் தேடலுக்குப் பின் ரூ.1200 வாடகை, மேலும் ரூ.150 வரி ஆக மொத்தம் ரூ.1350 செலுத்த வேண்டும் என்று கூறினார்கள், வேறு வழியின்றி அந்தத் தொகையைக் கொடுத்து அறை எடுத்தேன். மொத்தமாக கையில் ரூ.1500தான் வைத்திருந்தேன். தானி வாடகையாக ரூ.150 கொடுத்தேன். இரவு உணவுக்கு கையில் பணம் எதுவும் இல்லை. தோழர் ரமேஷ் எனக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். இரவு 11 மணிக்கு மேல் உறவினர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து இணையம் மூலமாக எனது வங்கிக் கணக்கிற்கு ரூ.500 அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். காலையில் தோழரிடம் மீண்டும் ரூ.100 கடனாகப் பெற்றுக் கொண்டேன். வாடகைத் தானி ஒன்றில் ஏறி தேர்வு மையத்திற்குச் சென்றேன். தேர்வு மையத்தின் முன்பாக உள்ள குறுக்குச் சாலை புதிதாகப் போடப்பட்டிருந்ததால் போக்குவரத்து தடை‍ செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து சுமார் அரை மைல் தூரம் நடந்து தேர்வு மையத்தை அடைந்தேன்.

திருப்பி அனுப்பப்பட்ட திறமை மிக்கவர்கள் . . .

சரியாகப் 11 மணிக்குத் தேர்வு தொடங்கியது 11.15க்கு தேர்வு மையத்திற்கு வந்த ஒரு பார்வைக் குறைபாடு உடைய ஒருவரை தேர்வு எழுது அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பினர் தேர்‍வுக் கண்காணிப்பு அதிகாரி. 11.20க்கு செவித்திறன் குறைபாடு உடைய ஒருவர் தேர்வு மையத்திற்கு வர அவர் அவரது துயரமான நிலையை சைகை மொழியில் தேர்வு கண்காணிப்பாளருக்கு விளக்க அதனைப் புரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ள இயலாத கண்காணிப்பாளர் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டி போ என்று துரத்தினார். 11.25க்கு இரண்டு கால்களும் இல்லாத ஒருவர் தவழ்ந்து வந்து தேர்வுக் கூடத்தை அடைந்தார். அவருக்கு குடிக்க ஒரு குவளை நீர் கொடுத்து திருப்பி அனுப்பினர்.

எத்தனை மாதங்கள் கடினமாகப் படித்து, அதற்காகப் பொருள் இழந்து, புத்தகங்கள் வாங்கி, அதனைப் படித்துக் காட்ட ஒருவர் ஏற்பாடு செய்து, ஒரு பார்வைக் குறைபாடு உடையவர் அந்தத் தேர்வுக்குத் பயிற்சி பெற்றிருப்பார். தவழும் மாற்றுத்திறனாளியோ இந்தத் தேர்வின் மூலம் வேலை வாய்ப்பினைப் பெற்று அதன் மூலம் ஒரு சமூக அங்கீகாரம் பெற வேண்டும் தன்னையும் இந்த உலகம் மதிக்க வேண்டும் என ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் அந்தத் தேர்வுக்கு வந்திருப்பார். அவர்களின் கெஞ்சல்களையும், கதறல்களையும் கண்காணிப்பு அதிகாரி எந்த சிரமங்களும் இல்லாமல் எந்த உயரதிகாரியையும் கலந்து பேசாமல் புறந்தள்ளியது கொடூரமானது. அதிக தூரம் நடந்ததினால் கம்பிக் கால்தாங்கி முட்டுப் பகுதியில் உராய்ந்ததால் தோல் கிழிந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது எனக்கு. சக மாற்றுத்திறனாளிகள் படும் துயரம் கண்டு மனம் கொதித்துக் கொண்டிருந்தது. எந்தக் கேள்வியையைம் படித்துப் பார்த்து விடை எழுத என் முழு மனதையும் செலுத்த இயலவில்லை. தேர்வு முடிந்த பின் மீண்டும் நாம் எப்படி நமது வீட்டைச் சென்றடைவது என்ற கவலையை மீறி எத்தனை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறான துன்ப துயரங்களை அனுபவித்தார்களோ என்ற சோகம் ஒரு முள்ளிவாய்க்கால் துயரம் போல் மனதை அலைக்கழித்தது.

மேலும் ஒரு துயரத்தின் அழுகுரல் . . .

 தேர்வுக்கூடத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்ல தானி எதுவும் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். அந்தத் தெருவிற்கு தானி எதுவும் வரவில்லை. அப்பொழுது சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெரியவர் என்னை அணுகி "பெரியாருக்குப் போகணுமா, இருங்க நான் போயி ஆட்டோ கூட்டிட்டு வர்றேன், நாம சேர்ந்து போகலாம்" என்று கூறினார். அவர் தானியை ஏற்பாடு செய்துவிட்டு வரும்வரை அங்கே மரத்தடியில் நின்று கொண்டிருந்த மலையாள மொழி பேசும் மாற்றுத்திறனாளிகளிடம் பேசினேன். அவர்களின் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். (அந்த மூன்று மாற்றுத்திறனாளிகளும் இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் தாங்கு கட்டைகளின் உதவியோடு நடப்பவர்கள்) மலப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த பைஜூ என்பவர் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தேர்வுக் கூடத்திற்கு வந்ததாகக் கூறினார்.

இதற்குள் தானியை அழைத்து வந்த பெரியவர், அவருடன் அவரது மனைவி மற்றும் மாற்றுத்திறனாளியான மகள் மூவரும் தானியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். நான் ஓட்டுநர் அருகில் ஒண்டிக் கொண்டேன். தலையைப் பின்புறம் திருப்பி அந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணைப் பார்த்தேன். சாயம் போன ஒரு தாவணி, கழுத்திலே ஒரு பாசி மாலை. எண்ணையற்ற தலையும், எளிமையான உடையும் அவரது வறுமையையும், கிராமப்புறத்தையும் சொல்லாமல் சொல்லியது. திருச்சி அருகில் உள்ள ஒரு சின்ன கிராமத்திலிருந்து நள்ளிரவில் புறப்பட்டு மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மதுரைப் பேருந்தில் ஏறி அமர்ந்ததைக் கூறினார். (அவரால் பேருந்தினுள் ஏற இயலவில்லை. அவரது தாயாரும், தந்தையும் தூக்கி, பேருந்தின் உள்ளே இருக்கையில் வைத்ததைக் கண்ணீருடன் கூறினார்) "பேருந்து இடையில் உணவுக்காக நின்ற பொழுதுகூட இறங்கி எனது இயற்கை உபாதைகளைத் தணித்துக் கொள்ள முடியவில்லை. இறங்கவோ, மீண்டும் ஏறவோ என்னால் இயலாது என்ன செய்ய முடியும்?" என்று ஆற்றாமையுடன் கூறினார். தேர்வுக் கூடத்திற்கு வந்து சேர்ந்த பின்னர் அவரது தாயாரும் தந்தையும் சேர்ந்து அவரைக் கழிவறைக்குத் தூக்கிச் சென்றதைக் கூறி தாங்கொண்ணாத் துயரத்தில் அந்தப் பெண் வாய்விட்டுக் கதறி அழுதார்.

தீர்வு என்ன? . . .

விண்ணப்பித்த ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அவர்களின் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியில் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தலாம். அல்லது விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அருகில் இருக்கும் கோட்டத்தில் (Division) தேர்வு நடத்தியிருக்கலாம். அல்லது பெரு நகரங்களில் அனைத்திலும் தேர்வு மையங்களை அமைத்து தேர்வுகளை நடத்தியிருக்கலாம். இதைப் பற்றியெல்லாம் இரயில்வே நிர்வாகம் யோசித்திருக்குமா? ஆனால் நாங்கள் இறுதியாகப் பயணித்த தானியின் ஓட்டுநர் நாங்கள் படும் துயரங்களைக் கண்டு "இப்படி எக்சாம் எழுதிதான் ஒங்களுக்கெல்லாம் வேலை கொடுப்பாங்கன்னா, எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சு எதுக்கு வச்சிருக்காங்க. அந்த வேலை வாய்ப்புத் துறையையே மூடிரலாமே" என்று மிகுந்த கோபத்துடன் தெரிவித்தார்.

தீர்ப்பு என்ன?. . . 

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தேர்வு என்று அறிவித்து விட்டு (SRD PWD - Special Recruitment Drive for Persons With Disabilities) அவர்களால் தேர்வு எழுத இயலாத நிலையை அவர்களுக்கு ஏற்படுத்துவது அவர்களைக் கொலை செய்வதற்குச் சமம். சரியான வேலை வாய்ப்புகள் இல்லாமலும், சுயமாகத் தொழில் செய்து பிழைக்க வசதியற்றும், தனியார் நிறுவனங்களின் சுரண்டல்களினால் குறைந்த வருமானத்திலும், உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாது உழைத்து தன்மானத்துடன் வாழ முற்படும் ஒரு இனத்தை தொடர்ச்சியாக ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் இழிவுபடுத்துவது, புறக்கணிப்பது, அனைத்து உரிமைகளையும் சட்டத்தின் துணை கொண்டு மறுப்பது அவர்களைக் கொல்வதற்கு சமமே.

மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களே புரட்சியை முன்னெடுக்கின்றனர் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். விளிம்பு நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் புரட்சியில் பங்கெடுப்பார்கள். புரட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள். புரட்சிக்காக தங்கள் இன்னுயிரைத் தருவார்கள். இதை எதிர்கால வரலாறு பதிவு செய்யும்.

- சூர்ய.நாகப்பன், கோவை.

Pin It