(குழந்தை ஒன்றை சில ஆயிரங்களுக்கு தாயொருத்தி விற்ற கொடும் செய்தியை படித்து உருவான கவிதை)

உபதேசங்களால்,
ததும்புகிறது எம் அறிவு.

சமமாய் நிறுத்து
பகிரப்படுகிறது போதனைகள்.

பெண்ணுக்குத் தாலியும்,
பணியாற்றத் தரும் கூலியும்,
அதிகமுனக்கு.

பொங்கி சமைத்துண்ணும்
பாவனைகளுடன்
கூடி விளையாடும் குழந்தைகளும்
தேவையா நின் நிலைக்கு?

சுரக்காத மார்பு
பொங்காத பானை
எரியும் வயிறுடன்
வாழ்வோட்டும் உனக்கு
தாய்மையெதற்கு?

ரத்த நிணம் வற்றிய
கருப்பையிலிருந்து
பிதுக்கியெடுத்த சிசுவை
சில பல ஆயிரங்களென
விலை பேசும் சமூகமே!
ஈரப்பற்றில்லா உதடுகளுடன்
கேள்வி கேட்கிறாய் எம்மை.

தாராளமயத்தின் தயவில்
குழந்தைகள் விற்பனைக்கு...
முதியோர்கள் புழுதியடர்ந்த தெருவுக்கு...

உலகமய மூன்றாம் கண்
முளைத்ததனால்
குழியாகிப் போயின
மனித முகங்களின் இரு கண்களும்.

ஈரம்... மழை... பசுமை...
உயிர்ப்பு.... சிலிர்ப்பு...
வரிகளுக்காக பஞ்சம் - எம்கவிஞர்களுக்கு?

தொட்டிலில் துள்ளி அழுவதும்
பழங்கட்டிலில் சிதைவதும்
நமது நேற்று ... நமது நாளை...
உயிரைப் பணயம் வைத்தாடும்
வாழ்வுச் சூதாட்டத்தில் – இங்கு
சகுனியும்.... தருமனும்... நாம்தான்.

யாரை வெற்றி கொள்ள
வெறும் பணக்காய்களுடன்
தொடர்கிறது நம் சூதாட்டம்?

Pin It