இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்றார் வள்ளுவப் பெருந்தகை. அப்படிப்பட்ட அரசுகளாக மக்களுக்கு சேவை புரியும் அரசுகளாக இன்றைய அரசுகள் உள்ளனவா என்றால் சேவை செய்கின்றன. ஆனால் மக்களுக்கு செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இயற்றல் என்றால் இலவசங்களை அறிவிப்பது, ஈட்டல் என்றால் வரி மூலம் வருமானம் ஈட்டல், காத்தல் என்றால் பெரும் முதலாளிகளைக் காத்தல் என்றும் வல்லது அரசு என்றால் போராடும் மக்களை அடக்குவது என்றும் தான் நடப்பு காலங்களில் பொருள்கொள்ள முடிகிறது. புதியதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசின் சமீபத்திய செயல்பாடுகளிலும் இதன் சில அம்சங்களே ஆள்கின்றன.

1) கடந்த அரசின் திட்டங்களை இரத்து செய்வது அல்லது முற்றிலும் மாற்றி அமைப்பது. சமச்சீர் கல்வி, தலைமைச் செயலகம் போன்றவை இரத்து செய்யப்பட்ட வகையிலும், புதிய காப்பீட்டுத் திட்டம்,பசுமை வீடு கட்டும் திட்டம் போன்றவை பெயர் மாற்றப் பட்டியலிலும் இடம் பெறும். இதில் நிதி வருவாயைப் பெருக்கும் திட்டங்களில் மட்டும் அதிமுக அரசு எந்த மாற்றங்களையும் இன்று வரை அறிவிக்கவில்லை. உதாரணத்துக்கு தமிழகப் பேருந்துகளில் பலவித கட்டண முறையை கடந்த அரசு அமல்படுத்தியது. பால் உள்ளிட்ட பல பொருள்களின் விலையை உயர்த்தியது. ஆனால் புதிய அரசு இந்த விலை உயர்வுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

2)     கடந்த அரசு அளித்த இலவசங்களை விட கூடுதல் இலவசங்கள் அளிப்பது. அதே நேரத்தில் இலவச டிவி உள்ளிட்ட கடந்த அரசின் இலவசத் திட்டங்களை இரத்து செய்வது. 3) புதிய வரி வருவாய் மூலம் நிதியை பெருக்குவது.

4)     கடந்த ஆட்சியில் ஆளும் கட்சிக்காரர்களும், அதிகாரிகளும் செய்த தவறுகளின் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பது. குறிப்பாக சில துறைகளை தேர்ந்தெடுத்து தீவிர நடவடிக்கை. இதுவரை அதிமுக அரசு கையாளும் கொள்கைகளை இப்படித்தான் வகைப்படுத்த முடிகிறது. இதைத்தவிர வேறு துறைகளில் குறிப்பாக வேலைவாய்ப்பு, தொழில் துறை போன்றவற்றில் சிறு மாற்றத்தைக் கூட அரசின் செயல்பாடுகளில் இன்று வரை நாம் உணரமுடியவில்லை. ஆனால் இந்நிலை அப்படியே நீடிக்க முடியாது. ஏனெனில் தொழிலாளர் உரிமை பறிப்பு என்பதும். பன்னாட்டு நிறுவங்களுக்கு பணிவிடை செய்வதும் கடந்த திமுக அரசின் கடும் எதிர்ப்புக்குள்ளான நடவடிக்கைகளாகும். ஆளுநர் உரை முடிந்து, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் நிறைவேற்றப்பட உள்ள சூழலில் அரசு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விவாதம் மக்களிடையே எழுந்திருக்க வேண்டும். ஆனால் பட்ஜெட் குறித்த முன் விவாதம் என்பது எப்போதும் முதலாளிகளின் விவாதமாக நடைபெற்று வருகிறதேயொழிய மக்கள் விவாதமாக நடைபெறவில்லை என்பது நமது சமூகத்தின் துயரமாகும். அதனால்தான், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்னதாக, சட்டமன்றத்தில் விவாதமாக்காமல் ரூ.3900 கோடி அளவுக்கு வரி உயர்த்தப்பட்டிருப்பது கடும் எதிர்ப்பை உருவாக்கவில்லை. குறிப்பாக சமையல் எண்ணெய், சிமெண்டு, இரும்புக்கம்பிகள், ஆகிய பொருட்களின் மீது நேரடியாகவும், மதிப்புக்கூட்டு வரி உயர்வின் மூலம் பலவித அத்தியாவசிய பொருட்களின் மீது மறைமுகமாகவும் உயர்த்தப்பட்டுள்ள வரி மக்கள் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும்.

இதனால் சமையல் எண்ணெய் பொருட்களின் விலைகள் 4 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மொத்த விற்பனையாளர்களிடமே உயர்ந்துள்ளது என்றால் சில்லரை கடைகளுக்கு வரும் போது இதன் விலை இன்னும் அதிகரிக்கும். இப்படி காலையில் தூங்கி எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை நாம் பயன்படுத்தும் சகல விதமான பொருட்களுக்கும் மதிப்புக் கூட்டு வரி உயர்வால் விலை என்பது ஏறிப்போகும். சராசரியாக நாளொன்றுக்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்கள், அன்றாடத் தேவைக்கான அத்தியாவசிய பொருட்களின் விலையில் குடும்பப் பயன்பாட்டிற்கு தகுந்தாற்போல் 20 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரப்பதிவு மீது விதிக்கப்பட்டுள்ள வரி மூலம் ரூ.300 கோடி வருவாய் என்பது கூடுதலாகும். குறிப்பாக, மதுபானங்களுக்கு உயர்த்தப்பட்டது மிக ஆழமாக விவாதிக்கவேண்டியதாகும். இதனால் குடிப்பது குறையுமா அல்லது குடிகாரர்களின் குடும்பம் மேலும் சீரழியுமா என்ற கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம். மதுபானங்களை விற்கும் அரசு கூடிய விரைவில் பார் நடத்தும் வேலையையும் அரசுடமை ஆக்கும் என்றே தோணுகிறது. ஏனெனில் டாஸ்மாக்கில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ 50000 கோடி லாபம் கிடைத்துள்ளது.

1983-84 ஆம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் 15 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்டது. இன்று ரூ.15000 கோடி வருமானம் ஆண்டொன்றுக்கு கிடைக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் 107 சதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 20 சதம் வருமான உயர்வு உள்ளதென்றால் என்ன அர்த்தம்? போதையில் சிக்கி சீரழியும் மக்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம்.இதில் அரசுக்கு என்ன பெருமை இருக்கமுடியும்? சுவரை விற்று சித்திரம் வாங்குவது போல் லட்சக்கணக்கான பெண்களின் கண்ணீரில் இருந்து பெறப்படும் வருவாய் மூலம் அவர்களுக்கே இலவசங்கள் அளிக்கப்படும் நடவடிக்கைளில் அரசு என்ன சாதிக்கப்போகிறது? தேசம் என்பது மண் மட்டுமல்ல,, மக்களும் கூடத்தான் என்றான் ஒரு கவிஞன். டாஸ்மாக் மூலம் வருவாய் என மட்டும் பார்க்காமல் அதன் மூலம் வாழ்விழக்கும் பெண்களையும், கல்வியை இழக்கும் மாணவர்களையும் அரசு எப்போது மனதில் கொள்ளும்?

மத்திய அரசின் தாராளமய, தனியார்மய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக விலைவாசி விண்ணை முட்டும் அளவில் சாதாரண சாமான்யப்பட்ட ஏழை எளிய மக்களை விழி பிதுங்கச் செய்து நடுத்தெரு நாராயணர்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மருமகள் உடைத்தால் பொன்குடம், மாமியார் உடைத்தால் மண்குடம் என்பது போல அதிமுக அரசும் தன் பங்குக்கு விலைவாசி உயர்வை நடத்தியிருப்பது மக்களை மிரட்சியான நிலைக்கே கொண்டு சென்றுள்ளது. எதிர்க்கட்சியாக உள்ளபோது அனைத்து விலை உயர்வையும் மிகக் கடுமையாக எதிர்த்த அதிமுக, தற்போது விலையுயர்வுக்கு சொல்லும் காரணம் நலத்திட்டங்களுக்கு நிதி வேண்டும் என்பதே. இதைத் தான் அனைத்து அரசுகளும் சொல்கின்றன. எனில் புதிய ஆட்சி என்பதன் அர்த்தம் என்ன?

கடந்த 2011-12ஆம் ஆண்டு தமிழகத்தில் மொத்தமாக ரூ 63091.74 கோடி ரூபாய் வருவாய் வருவதாக நிதி நிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றில் கடந்த திமுக ஆட்சியாளர்களால் மக்கள் நலன் மற்றும் இலவசத் திட்டங்களுக்கு 15110.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது அனைத்து வரி உயர்வின் மூலம் பெருகும் நிதியும் இலவசத் திட்டங்களுக்கே அதிகம் செலவழிக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தின் நான்கில் ஒரு பகுதி வருவாய் இலவசத் திட்டங்களுக்கே திருப்பிவிடப்படும் நிலையில், அதனால் மக்கள் வாழ்நிலைத்தரம் உயர்ந்துள்ளதா எனவும் பார்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால், மக்கள் நல அரசு என்றால் மக்களின் சமுக பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்களுக்கும், மனித வள மேம்பாட்டிற்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டும். அப்படி மக்கள் நல அரசாக இன்றைய அரசுகள் உள்ளனவா என்றால் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தை ஆண்ட, ஆளும் திராவிடக் கட்சிகள் இலவசங்களை அறிவித்துவிட்டு மக்களின் நிரந்தர சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிகவும் பின்தங்கியேயுள்ளது.

தற்போதைய அரசும் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக 4 கிராம் தங்கம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை திருமண உதவித்திட்டம், 20 கிலோ இலவச அரிசி, முதியோர் பென்சன் ரூ 1000மாக உயர்த்தி வழங்குவது, மீனவர்களுக்கு மீன்பிடி தடை கால உதவி நிதி, , புதிய காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு செயல்படுத்தி உத்தரவிட்டது சமையல் எரிவாயு விலையை தமிழ்நாட்டில் 14 ரூபாய் விலை குறைத்தது வரவேற்பைப் பெற்றாலும், இதற்காக நிதி திரட்டும் அறிவிப்பு இந்த திட்டங்களின் பயனாளிகள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியையும், பயத்தையும் உருவாக்கியுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் சேம நலத்திட்டங்களுக்கான பற்றாக்குறைத் தொகையாக ரூ 2556 கோடியும், பொது விநியோகத்திற்கு ரூ 1036 கோடியும், கிராமப்புற மருத்துவ சேவைக்கு ரூ 1800 கோடியும், நகர்ப்புற சுகாதாரத்திற்கு ரூ 20 ஆயிரம் கோடியும், மாவட்ட மருத்துவ மனைகளை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு 2500 கோடியும், மின்திட்டங்களுக்கு ரூ 40 ஆயிரம் கோடியும், மோனோ ரயில் திட்டத்திற்கு ரூ 16650 கோடியும், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ 10500 கோடியும், நகர்ப் புற அடிப்படை கட்டமைப்புக்கு ரூ 20 ஆயிரம் கோடியும், குடிநீருக்கு ரூ 9500 கோடியும், சாலை, பாதாள சாக்கடை வசதிக்கு ரூ6800 கோடியும், பசுமை வீடு திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ 1125 கோடியும், சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் வீடுகளுக்கு வழங்க ரூ 300 கோடியும் உள்ளிட்டு மத்திய திட்ட கமிஷனிடம் ரூ 2.50 லட்சம் கோடி தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டு ரூ 23 ஆயிரம் கோடி வரை பெற்று வந்துள்ளது.

ஆக மத்திய அரசின் நிதியும் இலவசங்களுக்கே பெரும்பாலும் செல்லும். எது சிறந்த அரசு என்பதற்கான இலக்கணமாகவும், அரசின் அடிப்படைக் கடமை என்ன என்பதற்கும் திராவிடக் கட்சிகள் தரும் ஒரே விளக்கம் யார் அதிக இலவசங்களைத் தருகிறார் களோ அவர் களே என்ப தாகும். வீடு கட்டும் திட்டம், அரிசி, பஸ் பாஸ் போன்றவை இலவசத் திட்டங்கள் என்று அரசால் அழைக்கப்பட்டாலும் அது அடிப்படை உரிமையோடு இணைந்தவை என்பதால் இலவசம் என்பதை விட மக்கள் நலத்திட்டங்கள் என்பதே பொருத்தமானதாகும். இலவச கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி போன்ற இலவசங்களால் யாருக்கு என்ன பயன்? இலவசம் என்றால் அனைவரும் வரிசையில் வந்து நின்று மக்கள் வாங்கிச்செல்வதால் மக்கள் இத்திட்டங்களை கொண்டு வருவோர்களை வாழ்த்துவர் என்றோ அல்லது மீண்டும் வாக்களிப்பீர் என்றோ புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், 2011 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அரசியல் ரீதியாகத்தான் வாக்களித்திருக்கிறார்களேயொழிய இலவசங்கள் அடிப்படையில் அல்ல என்பது திண்ணம்.

ஆனால், இலவசங்களுக்காக செலவிடப்படும் நிதியைக்கொண்டு அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்கலாம். அரசு மூலம் சிமெண்டு, சமையல் எண்ணெய் போன்ற தொழில் துவங்கி உற்பத்தியை பெருக்கி மக்களுக்கு வேலைவாய்ப்பை தருவது மட்டுமல்ல பொதுவிநியோக முறையின் கீழ் புதிய பொருள்களைக் கொண்டு வரலாம். அரசின் நிர்வாகக் கட்டமைப்பை விரிவாக்கி புதிய அரசுப் பணிகளை உருவாக்குவதன் மூலம் அரசின் சேவைகளை மக்கள் விரைவாக பெற வைக்கலாம். விவசாயத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் உணவு உற்பத்தியை பெருக்குவது மட்டுமல்ல கிராம மக்கள் இடம் பெயர்வை ஒழித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். அனைத்து வீடுகளுக்கும் கழிவறை மற்றும் சுத்தமான குடிநீர் வசதி, அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி என அடிப்படை வசதிகளைப் பெருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் நிதி இல்லை என்ற ஒற்றைப்பதிலைக் கூறிவிட்டு இலவசங்களுக்காக நிதி திரட்டுவது என அரசு ஈடுபடுவது சமூக வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது என்பது மட்டுமல்ல மக்கள் வாழ்நிலையை மிக மோசமான நிலைக்கே இட்டுச்செல்லும். வரலாறும் இதைத்தான் கூறுகிறது.

தமிழகத்தில் 1646 முதல் 1907கள் வரை மெட்ராஸ் மாகாணம் உருவாகிய பின் அதன் வரலாறு நெடுக பஞ்சங்களை பார்க்க முடியும். கிட்டத்தட்ட உணவுப் பஞ்சங்களே 17 முறை ஏற்பட்டது. இது லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பலிகொண்டது. காரணம் அன்று பிரிட்டிஷ் அரசின் வரி விதிப்புக் கொள்கையும், ஏழை மக்களின் உழைப்பை சுரண்ட பயன்படுத்திய முறைகளுமே காரணமாகும். இது கிராமங்களில் வாழ வழியற்ற நிலையை உருவாக்கி நகரங்களை நோக்கி புலம் பெயர வழிவகுத்தது. புலம் பெயர்ந்து வந்த மக்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டார்கள். பக்கிம்ஹாம் கால்வாய் முதல் சாலைகள், கோட்டைகள், கொத்தளங்கள் என்று நகரின் அனைத்து துரித வளர்ச்சிக்கும் இவர்களின் உழைப்பை பஞ்சத்தின் பெயரால் பயன்படுத்தினார்கள். மனித உழைப்பு மதிப்பீட்டின் வீழ்ச்சியை முன்னிறுத்தி அவர்களை ஒட்டச் சுரண்டியதே வரலாறு நமக்கு கூறும் செய்தியாகும். தற்போதும் இந்தியாவில் மட்டும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர். ஆட்சியாளர்கள் மக்களின் மீது மறைமுக மற்றும் நேரடி வரி விதிப்புகளின் மூலம் வருவாயை பெருக்குகிறார்கள். அதே நேரத்தில் வசதி படைத்தவர்கள் மேலே போடப்படும் நேரடி வரி விதிப்பு என்பது தளர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத் தான் தமிழக ஆட்சியாளர்களும் அமலாக்கி வருகிறார்கள். அன்று கோட்iடகளைக் கட்டினர். இன்று பன்னாட்டு நிறுவனங்களில் கட்டுமானப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆகஸ்டு முதல் வாரத்தில் கூடவிருக்கும் தமிழக சட்டமன்றம் வருவாயை பெருக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டு இவைகளின் மீதான நேரடி வரி விதிப்பை அதிகப்படுத்துவதும், இவர்கள் பதுக்கும் கறுப்பு பணத்தை அரசுடமையாக்குவதுமே ஏழை, எளிய சாமான்யப்பட்ட மக்களை மறைமுக வரி விதிப்பில் இருந்து பாதுகாக்க உதவி செய்யும். அப்படிப்பட்ட நடவடிக்கையை ஆட்சியாளர்கள் மேற்கொள்ள சட்டமன்ற விவாதங்கள் பயன்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா தனியுடைமை கொடுமைகள் தீர நீ தொண்டு செய்யடா என பட்டுக்கோட்டை பாடலை எம்ஜிஆர் மக்களிடம் கொண்டு சேர்த்தார். அவர் துவக்கிய அரசியல் இயக்கமான அதிமுக தொடர்ந்து ஏழை மக்களின் வெகுமக்கள் கட்சியாக இருந்து வந்துள்ளது. அது மக்களுக்காக மேற்படி திட்டங்களை உரிய முறையில் முறைகேடு இல்லாமல் கொண்டு சேர்க்குமா? சேர்க்க வேண்டுமானால் உள்ளாட்சி முதல் கோட்டை வரை உரிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஊழலற்ற ஏற்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும். வெளிப்படையான நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும். அதிகாரப் பரவலை செய்திட வேண்டும். திட்டங்கள் அனைத்தும் உள்ளாட்சி மூலம் மக்கள் பங்கேற்போடு நடைபெற வேண்டும்.

Pin It