ஐரோம் சர்மிளா!

மனித குலத்தை நேசிக்கின்ற, மனித உரிமையை மதிக்கின்ற, அறவழிப் போராட்டத்தின் மூலமே விடுதலை பெற முடியும் என்று நம்புகின்ற அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய உன்னதமான பெண்மணி. உண்ணாநிலை அறப்போரை உலகிற்கே அறிமுகம் செய்தவர் மகாத்மா காந்தி என்றால், அந்தப் போராட்டத்தின் வலிமையை உலகிற்கே எடுத்துரைத்தவர் ஈழப்போராளி திலீபன். அந்த வழியில் மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த ஐரோம் சர்மிளா என்ற பெண்மணி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாநிலை அறப்போரை மேற்கொண்டிருக்கிறார். என்னது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உண்ணாநிலையா..? என்னங்கப்பா இது..? என்று நீங்கள் வியப்புக் காட்டுவது புரிகிறது. மேலே படியுங்கள்!

sharmila_340அருணாச்சலப்பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவையாகும். இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பாக இப்பகுதிகள் அனைத்தும் சிற்றரசர்களால் ஆளப்பட்டன. கடந்த 1949ஆம் ஆண்டு இந்தியாவுடன் இப்பகுதிகளைச் சேர்ப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் கருத்தறியாமலே இந்திய தேசம் கட்டாயமாக தனது எல்லைக்குட்பட்ட பகுதியாக அறிவித்து, இந்த மாநிலங்களுக்கென சிறப்பு ஆயுதச் சட்டத்தையும் இயற்றியது. இச்சட்டம் இயற்றப்படுவதற்கான காரணம், மேற்குறிப்பிடப்பட்ட மாநிலங்கள் அனைத்திலும் தங்களின் சுதந்திரத்தை வலியுறுத்தி, தனிநாட்டிற்கான கிளர்ச்சிகள் பெருமளவில் நடைபெற்று வந்தன. அதனை முற்றாக ஒடுக்குவதே இதன் நோக்கம்.

நாகாலாந்து மாநிலத்தில் நாகா விடுதலை இயக்கம், இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்னரே பெரும் வீச்சில் நடைபெற்று வந்தது. இக்கிளர்ச்சியே பின்னர் பிற வடகிழக்கு மாநிலங்களிலும் மிக எழுச்சியுடன் பரவியது. தனிநாட்டிற்கான கிளர்ச்சி வடகிழக்கிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறத் தொடங்கிய காலத்தில் தான், இந்தியா அங்கிருந்த தனது இராணுவப் பிரிவிற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கி அதனை அடக்கியொடுக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியது. கடந்த 1958ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாளன்று ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, அந்தந்த மாநில மக்களின் கிளர்ச்சியை அடக்குவதற்கு முனைந்தது.

இந்தியச் சட்டத்திற்குப் புறம்பாக இயங்குகின்ற நபர்கள் எவராக இருந்தாலும், அவர்களின் மீது துப்பாக்கிக் சூடு உள்ளிட்ட ஆயுதப் பிரயோகம் நடத்தலாம்; சந்தேகத்திற்குரிய நபராக இராணுவத்தால் கருதப்படும் எவரையும் கைது செய்யலாம்; முன் அனுமதியோ, அறிவிப்போ இன்றி எவ்விடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தலாம்; இவையனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக, இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களுக்காகவோ, தவறுகளுக்காகவோ எந்தச் சட்ட நடவடிக்கைகளோ, வழக்கோ தொடர முடியாது. இந்திய இராணுவத்தின் ஆயுதப்படைக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தின் விளைவாக, அம்மாநிலங்களில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்களும், மனிதப் படுகொலைகளும் சொற்களால் விவரிக்க முடியாதவை.

இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட கொலை வெறியாட்டங்களைக் கண்ணுற்று, அதனால் மனம் குமைந்து, வருந்தி அழுத மணிப்பூர் மக்களுள் ஒருவரே இந்த ஐரோம் சர்மிளா. கவிதை படைக்கும் திறன் பெற்றவர். சிறந்த படைப்பாளி. போர்க்குணம் மிக்க செயல்வீரர். கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் நாள், மணிப்பூர் மாநிலத்திலுள்ள மாலோம் என்ற இடத்தில் நடைபெற்ற இராணுவத்தின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 62 வயதான பெண்மணி உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் துடிதுடிக்க இறந்து போயினர். இந்த நிகழ்ச்சி சர்மிளாவை மிகவும் பாதிக்கச் செய்தது. இராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்காக எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்திய இராணுவத்தின் அத்துமீறல் நடைபெற்ற பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஆனால் அவை எவையும் உலகின் கவனத்திற்கு கொண்டு வரப்படாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. எவ்வளவோ நியாயமான கோரிக்கைகளுக்குப் பின்னரும் இந்திய நடுவணரசு இதைப் பற்றிக் கண்டு கொள்ளவேயில்லை. இந்நிலையில் அதே ஆண்டு நவம்பர் 4ஆம் நாள், ஐரோம் சர்மிளா உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கினார்.

ஐரோம் சர்மிளாவின் தாயார் மற்றும் சில நண்பர்களின் பேராதரவுடன் தொடங்கிய இந்த அறப்போரின் மூன்றாவது நாள், மணிப்பூர் அரசு இந்திய தண்டனைச் சட்டம் 309ஆவது பிரிவின் கீழ், தற்கொலைக்கு முயன்ற வழக்கில் கைது செய்து, சர்மிளாவை நீதிமன்றக் காவலில் வைத்தது. ஆனாலும் சிறையிலும் அவரது போராட்டம் தொடர்ந்தது. எத்தனையோ விதமான அச்சுறுத்தல்கள், கேலிப்பேச்சுக்களுக்கு மத்தியிலும் ஐரோம் சர்மிளா, தனது கொள்கையிலும், போராட்டத்திலும் மிகவும் உறுதி காட்டினார். காவலில் இருக்கும் போது சர்மிளாவின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது எனக் கருதி, திரவ வடிவிலான உணவை மூக்கு வழியாக உட்செலுத்தியது கைது செய்த அரசு. இவையெல்லாம் சர்மிளாவின் விருப்பத்திற்கு மாறாக நடைபெற்றன. தற்போதும் நடைபெறுகின்றன.

மிகவும் உறுதியான தனது போராட்டத்தால் இன்று உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த இந்தப் பெண், இம்பால் மாநகரின் மிகச் சாதாரணமான மருத்துவமனையில், அழுக்காய்க் கிடக்கின்ற ஓர் அறையில், மனித உரிமையின் மகத்தான வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு (2010) நவம்பர் மாதத்துடன் ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதம் தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தொடங்கும்போது அப்பெண்ணுக்கிருந்த உளத்திடமும், கொள்கை உறுதியும் கொஞ்சமும் குறையாமல், அதிசயக்கத்தக்க வகையில் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். உண்ணாநிலையின் வாயிலாகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நபரை அதிகபட்சமாக ஓராண்டுதான் மருத்துவமனையில் வைத்திருக்க முடியும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்படுவார்; சர்மிளாவும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவுடன் அதன் வாயிலிலேயே தனது உண்ணாநிலையை மறுபடியும் தொடங்குவார்; அரசு மீண்டும் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று வற்புறுத்தி திரவ உணவை வழங்கும். இப்படியாக பத்து ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும், சர்மிளாவின் குரலும், கோரிக்கையும் தற்போதுதான் அய்.நா. அவையை எட்டிப்பார்த்துள்ளது.

இந்திய இராணுவம், இந்திய அரசால் தனக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சட்டத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு வன்முறைகள், பாலியல் கொடூரங்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள் என மனித உரிமைக்குப் புறம்பான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. 'ஒடுக்குமுறையின் சின்னமாக இந்தச் சட்டம் மாறிவிட்டது. மக்களின் வெறுப்பிற்குரிய சட்டமாகவும், எதேச்சாதிகாரம் மற்றும் பாகுபாட்டின் கருவியாகவும் விளங்குகிறது' என்று இந்திய அரசால் கடந்த 2004ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜீவன் ரெட்டி ஆணையமே கருத்துக் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது; அந்த ஆணையம் கூறியிருந்த சில பரிந்துரைகளைக் கூட இந்திய நடுவணரசு இன்னமும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலில் மிகவும் வேடிக்கையாகவும், கேலிக்குரியதாகவும் பார்க்கப்பட்ட சர்மிளாவின் உண்ணாநிலை அறப்போர் நாளடைவில் பெரும் வீச்சைப் பெறத் தொடங்கியது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து சர்மிளாவோடு ஒவ்வொரு நாளும் எட்டுப் பெண்கள் வரை தொடர்ந்து இப்போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்திற்கு மட்டுமே தெரிந்ததாயிருந்த சர்மிளாவின் உரிமைப் போராட்டம், எல்லை கடந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றமே எனினும், அதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? சர்மிளாவின் இளமைக் கனவுகள் கலைந்து போகத்தான் வேண்டுமா? இந்த உலகமும், இந்திய அரசும், அய்.நா.வும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

ஈழத்தமிழருக்காக தீக்குளித்து தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட வீர மறவன் முத்துக்குமாரைப் போன்றே, ஐரோம் சர்மிளாவும் 'என் உடலே என் ஆயுதம்' என்பதை உலகிற்கு உரத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். வல்லரசுக் கனவில் மிதந்து கொண்டிருக்கும் இந்தியாவும், வீரப் பெண்மணி சர்மிளாவின் அறப்போரை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் எங்கு நடைபெற்றாலும், அதற்காகக் குரல் கொடுக்க வேண்டிய இந்தியாவின் பிற மாநில அரசுகளும் நீண்ட துயிலில் வீழ்ந்து கிடக்கின்றன. நூறு கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய தேசமெங்கும் சர்மிளாவின் உரிமைக்குரல் பரவ முடியாமல் முடங்கிக் கிடப்பதற்கு இந்தியாவை ஆளும் காங்கிரசு அரசே காரணம். உரிமைகளோடு வாழ்வதற்காகவே... சாகத் துணிந்த ஒரு பெண்மணியின் அப்பழுக்கற்ற போராட்ட வரலாற்றை, அனைத்து மாணவ அமைப்புகளும் முழு வீச்சுடன் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உலகப் பெண்கள் தினத்தைக் கொண்டாடவிருக்கும் அனைத்துப் பெண்கள் அமைப்புகளும் ஐரோம் சர்மிளாவின் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களின் உரிமைக் குரலுக்கு ஆதரவாக கை கோர்க்க வேண்டும். இந்த ஆண்டு பெண்கள் தினத்தில் இதனையே முழக்கமாகக் கொண்டு பட்டி தொட்டியெங்கும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும்.

'மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற ஒவ்வொருவருமே போராளிகள் தான். ஆனால் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அன்றாடம் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், அந்த மக்களின் அடிப்படை வாழ்வியலுக்கே உலை வைக்கின்றன. நாம் போராட வேண்டாம். போராடுகின்ற மக்களுக்கு நமது உளமார்ந்த ஆதரவை நல்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நாளைய தலைமுறை நம்மை ஒரு போதும் மன்னிக்காது' என்கிறார் மனித உரிமைப் போராளியும், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநருமான ஹென்றி திபேன்.

மனித உரிமை மீறல்களுக்கு நம்மை ஆளுகின்ற அரசுகள் எப்படியெல்லாம் ஆதரவு கொடுக்கின்றன என்பதை வெகுமக்களுக்கு உணர்த்தி, பெரும் கிளர்ச்சிக்கு அணியப்படுத்துவதே அந்த அரசுகளுக்கு நாம் காட்டுகின்ற எதிர்ப்பாக அமையும். மாணவர் மற்றும் பெண்கள் சக்தி ஒருங்கிணையட்டும், உன்னதமான போராட்டத்திற்கு குரலுயர்த்தட்டும்!

'இந்திய இராணுவமே எங்களைக் கற்பழிக்க வா!'

manipur_380

மணிப்பூர் மாநிலத்தின் அரசியல் போராளியாய்த் திகழ்ந்த தங்ஜம் மனோரமா என்ற பெண்மணி, கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் விசாரணைக்கு என்று சொல்லி கடத்திச் செல்லப்பட்டார். ஒரு சில நாட்கள் கழித்து, மணிப்பூர் மாநில இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே குப்பையோடு குப்பையாய் மனோரமா நிர்வாண உடலுடன் பிணமாய்க் கிடந்தார். இந்திய இராணுவத்தினர் அப்பெண்ணைக் கடும் பாலியல் வன்புணர்ச்சி செய்து, கடைசியில் கொலையே செய்துவிட்டனர். அதனைக் கண்ட மணிப்பூர் பெண்கள், இராணுவத் தலைமையகத்திற்கு நிர்வாணமாய்ச் சென்று 'இந்திய இராணுவமே எங்களைக் கற்பழிக்க வா!' என்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். ஒரே ஒரு நீதி விசாரணை அமைத்ததைத் தவிர, உலகத்தின் மனசாட்சியையே உலுக்கிய அந்த நிகழ்விற்குப் பிறகும் இந்திய அரசு மனமிறங்கவில்லை. மணிப்பூர் அவலத்தை இந்தப் போராட்டமே மிகச் சரியாக வெளிக் கொணர்ந்தது. பெண்கள் நினைத்தால், எந்த ஒரு போராட்டத்தையும் நடத்த முடியும் என்பதற்கு ஐரோம் சர்மிளாவும், தங்ஜம் மனோரமாவுமே சீரிய சான்று!

'சர்மிளா இறந்தால் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே!'

அகிம்சை வழியிலான சர்மிளாவின் அறப்போராட்டத்திற்கு மரியாதை அளிக்கும் விதமாக 'திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்' இரவீந்திரநாத் தாகூர் நினைவுப் பரிசாக ரூ.51 இலட்சத்தை வழங்கியது. அப்பணத்தையும் ஐரோம் சர்மிளா தனக்கென்று ஒரு பைசாவைக் கூட எடுத்துக் கொள்ளாமல் ஆதரவற்றோரைப் பேணிப் பாதுகாக்கும் அமைப்புகளுக்கு வழங்கிவிட்டார். மேலும் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற இரானிய வழக்கறிஞர் சிரின் எபடி, 'ஒரு வேளை இந்தப் போராட்டத்தில் சர்மிளா இறந்து போனால், அதற்கு இந்திய நாடாளுமன்றமே பொறுப்பு, அதற்கு இந்திய நீதிமன்றங்களும், இராணுவமும் பொறுப்பு, நிர்வாகம், பிரதமர், குடியரசுத்தலைவர் அனைவரும் அதற்குப் பொறுப்பு, உங்கள் கடமையை செய்யத் தவறியதால், செய்தியாளர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் அதற்குப் பொறுப்பு' என்றார். ஆனால் உண்மையிலேயே இவர்களுக்கெல்லாம் மேலாக, சர்மிளாவின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கத் தயங்கும் பட்சத்தில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளாவோம்!

ஓ... ஓஜஸ்!

ojas_560

பூனாவைச் சேர்ந்த புகழ் பெற்ற நாடகக் கலைஞர் ஓஜஸ் என்ற பெண்மணி, ஐரோம் சர்மிளாவின் வாழ்க்கை வரலாற்றை, கண் முன்னே வரைந்து காட்டும் படமாக நடித்துக் காட்டுகிறார். அண்மையில் மதுரையிலுள்ள மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகம் ஏற்பாட்டின் பேரில் பெரும் திரளான பார்வையாளர்கள், மாணவ-மாணவியர், செய்தியாளர்கள் மத்தியில் மிகச் சிறப்பாக நடித்துக் காட்டினார். வெறும் நாற்பத்தைந்தே நிமிடங்களில் ஐரோம் சர்மிளாவின் வாழ்க்கைப் போராட்டத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக நடித்தபோதும், தங்ஜம் மனோரமா இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு, கதறக் கதற இறந்து போகின்ற காட்சியில் பார்வையாளர்கள் மத்தியில் கண்ணீரையே வரவழைத்துவிடுகிறார். மணிப்பூர் மாநிலத்தில் தற்போதும் நிகழும் மனித உரிமை மீறலைக் கண்டு தன்னார்வத்துடன் இந்தப் பணியில் இணைத்துக் கொண்டு நாடு முழுவதும், சர்மிளாவின் போராட்டத்திலுள்ள நியாயத்தை எடுத்துக் கூறி மக்களிடம் ஆதரவினை திரட்டி வருகிறார் ஓஜஸ். பாதிக்கப்பட்ட இரண்டு போராளிப் பெண்களைப் பற்றி, ஒரு போராளிப் பெண் கலைஞர் நாடகமாக நடித்துக் காட்டி மக்களிடம் ஆதரவு திரட்டுவதைப் பார்க்கும்போது, நமது பெண்கள் அமைப்புகள் இம்முயற்சிக்கு என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வியும் மேலோங்குவதைத் தவிர்க்க இயலவில்லை..!

Pin It