மணிப்பூரில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோம் சர்மிளா தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினார். பத்தாண்டு காலமாக அவருக்கு மூக்குக் குழாய் மூலம் வலுக்கட்டாயமாக உணவுச் சத்து செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கவனிப்பார் யாருமில்லை. . . .

 மணிப்பூர் பள்ளத்தாக்கில், ஒரு இளம் பெண் பத்தாண்டு காலமாக, ஒரு கவளம் சோறோ ஒரு சொட்டுத் தண்ணீரோ கூட அருந்தாமல் தீர்மானகரமாக மறுத்துவருகிறார். காவல்துறையும் மருத்துவர்களும் வலுக்கட்டாயத்துடன் ஒரு நெகிழிக் குழாய் மூலம் உணவைச் செலுத்தி வருவதால் தான் அவர் இன்னும் உயிருடன் இருந்துவருகிறார். கடந்த பத்தாண்டுகளின் மிகப் பெரும்பகுதியை அவர் பலத்த உயர்பாதுப்பு வளையத்துடன் கூடிய ஒரு மருத்துவமனைப் பகுதி ஒன்றில் அடைக்கப்பட்டு தனிமையில் கழித்துவருகிறார். தான் மக்களுடன் எளிமையாக இருப்பதையே இழந்து விட்டதாக ஒரு அபூர்வமான நேர்காணல் ஒன்றில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தப் பத்தாண்டுகளில் ஒருமுறை கூட அவர் தனது தாயைப் பார்க்க முடியவில்லை. அவர் தனது அரசியல் குறிக்கோளை அடைந்த பிறகே தாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வது என்பது அவர் தனது தாயுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒரு எழுதப்படாத உடன்படிக்கையாகும். அவருடைய உடலுறுப்புக்கள் திரும்பச் சீர்செய்ய முடியாத அளவுக்குச் சிதைந்து வருகின்றன, அவருடைய மாத விலக்குகள் நின்றுவிட்டன. அவருக்குக் கட்டாய உணவு செலுத்தப்படும் மூக்குக் குழாய் அவருக்குத் தொடர்ந்து வழியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.

 ஆனால் இந்திய அரசாங்கம் மணிப்பூரிலிருந்து ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறாதவரை உணவருந்தவோ நீர் பருகவோ மாட்டேன் என்று பிடிவாதமாகவும் தீர்மானகரமாகவும் இருந்துவருகிறார்.


 2

 காவல்துறை ஒவ்வொரு ஆண்டும் அவரைக் கைது செய்கிறது, தற்கொலைக்கு முயன்றதாகக் குற்றம் சாட்டுகிறது, அந்தக் குற்றத்திற்கு அதிகபட்சத் தண்டனை ஒரு ஆண்டு சிறை வாசம் மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் அவர் தனிமைச் சிறை தண்டனை முடிந்து விடுவிக்கப்ப்படும் போதும் உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுகிறார். தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டு வன்முறையில்லா முறைமையின் மூலமாக் அரசியல் போராட்டம் நடத்தும் அவரது செயலுக்கு இணையானது உலகில் வேறேங்கிலும் இல்லை.

கொடிய சட்டம்
 
சீருடையணிந்த மனிதர்கள் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கவும் கடத்திச் செல்லவும் குடிமக்களைக் கொல்லவும் அதற்காக அவர்களுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப் படாமல் விட்டுவிடவும் வகை செய்யும் சட்டத்தை திரும்பப் பெற ஐரோம் சர்மிளா கோரிக்கை வைத்திருக்கிறார். இந்தியப் பாதுகாப்புப் படைகள் நாகலாந்தில் ஆயுதந்தாங்கிய கலகத்தை கூடுதல் செயலூக்கத்துடன் அடக்குவதற்கு வழி செய்யும் வகையில் 1958 ல் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. பாதுகாப்புப் படையாட்கள் பிடியாணையின்றிக் கைது செய்யவும் எந்த கட்டிடத்திலும் வீடு புகுந்து தேடவும் குடிமக்களை நோக்கிச் சுடவும் கொல்லவும் இச்சட்டம் அனுமதிக்கிறது. அது 1980 ல் மணிபபூருக்கும் விரிவாக்கப் பட்டது. காக்கி மற்றும் ஆலிவ் நிறச் சீருடையில் உள்ள ஆட்கள் தண்டிக்கப்படும் அச்சமின்றி( இன்றும் கூடத் தொடரும்) சட்டவிரோதக் கொலைகள், வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல், வன்புணர்ச்சியில் ஈடுபடுதல், சித்திரவதை செய்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுவதற்கு இச்சட்டம் வழி ஏற்பப்படுத்தி மணிப்பூர் மக்களை நீங்காத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

 2000 ம் ஆண்டு நவம்பர் 1 அன்று, மணிப்பூர் பள்ளத்தாக்கில் மேளம நகரில் பேருந்துக்காகக் காத்திருந்த 10 அப்பாவிக் குடிமக்களை அஸ்ஸாம் துப்பாக்கித் துணைப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்களில் ஒரு பதின்ம வயதுப் பையனும் ஒரு மூதாட்டியும் அடங்குவர். குண்டுகள் துளைத்த அவர்களுடைய உடல்களின் அதிர்ச்சியூட்டும் படங்கள் அடுத்த நாள் செய்தித்தாள்களை நிறைத்தன. இவற்றைப் பார்த்தவர்களில் சர்மிளாவும் ஒருவர், அப்போது அவருக்கு வயது 28, அவர் மனித உரிமைப் போராளி, இதழியலாளர் மற்றும் கவிஞரும் கூட.

 3

அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் தங்கள் அணிவகுப்பின் போது தங்கள் மீது குண்டு வீசப் பட்டதாகவும் தாங்கள் தற்காப்புக்காகச் சுட்டபோது இடையில் குடிமக்கள் கொல்லப்பட்டு விட்டதாகவும் கூறினர். பள்ளத்தாக்கில் சீற்றமடைந்திருந்த மக்கள் இதை நம்பவில்லை, அவர்கள் ஒரு குற்றவியல் நடுவரின் சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் என்று கோரினர். இது அனுமதிக்கப் படவில்லை, ஏனென்றால் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அவர்களுக்கு சுடுவதற்கு அதிகாரம் அளித்திருந்தது. இச்சட்டத்தின் ஒடுக்குமுறையிலிருந்து மணிப்பூர் மக்களை விடுவிக்கப் போராடுவது என்று சர்மிளா அப்போதே உறுதியாகத் தீர்மானம் எடுத்துக்கொண்டார். அவர் தனது உடலையே ஒரே ஆயுதமாகப் பயன்படுத்துவது என்று முடிவு செய்தார். அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. அவர் தனது தாயின் வாழ்த்துக்களைப் பெற்று, நவம்பர் 4 அன்று அமைதியாகத் தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவக்கினார். பத்தாண்டுகள் கழிந்தும் அச்சட்டம் இன்னும் நீடிக்கிறது, சர்மிளா தொடர்ந்து உணவையும் தண்ணீரையும் துறந்து வருகிறார்.

 ஒரே நிகழ்வில் மட்டும், சிறைப் படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒரு சிறிய இடைவெளியில் அவர் டெல்லிக்குத் தப்பிச் சென்றார். முதலில் அவர் மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்றார், அவரை தனது “தெய்வமாக”கருதுவதாகவுமம்“அன்புடன் கூடிய அகிம்சையின் ஆற்றலை” கற்பித்தவர் என்றும் தான் நினைப்பதாகக் கூறுகிறார். அதற்குப் பிறகு விரைவிலேயே கைது செய்யப்பட்டு டெல்லியிலேயே ஒரு மருத்துவமனைப் பிரிவில் சில வாரங்கள் சிறை வைக்கப்பட்டார். பின்னர் அவர் இம்பாலில் உள்ள உயர்பாதுகாப்பு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அப்போதிருந்து அங்கேயே தனிமைச் சிறையில் வைக்கப் பட்டுள்ளார்.

ஒடுக்குபவரை வருத்தாது தன்னைத் தானே வருத்திக்கொண்டு ஒடுக்குமுறையை எதிர்ப்பது தான் காந்தியின் அறப்போரின் வழிமுறையாகும். அன்புடன் கூடிய அகிம்சை ஒடுக்குவோரின் மனசாட்சியை உலுக்கி, இறுதியாக மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று காந்தி நம்பினார், அதையே அவரது இறப்புக்குப் பின் அவரது சீடரான ஐரோம் சர்மிளாவும் நம்பினார். இந்தப் பத்தாண்டுகளில், இந்த இளம் பெண்ணின் அடக்கிவிட முடியாத, அசாதாரண, தன்வறுத்துதல் இந்திய அரசியல் நிறுவனத்தில் எந்த ஒரு இதயத்தையும் சென்று தொட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

 4

அரசாங்கத்திற்கு மனித உரிமைகளின் பால் உள்ள கடப்பாட்டிற்கு ஒத்திசைவான வகையில் இச்சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளவோ, திருத்தவோ அவசியம் உள்ளதா என்று விசாரிப்பதற்கு, இந்திய அரசாங்கம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் 2004 ல் ஒரு ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையம் 2005 ல் அச்சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளப் பரிந்துரை செய்தது(அச்சட்டத்தின் பல பிரிவுகள் ஏற்கனவே பிற சட்டங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் கூட அது தெரிவித்தது). அந்த ஆணையத்தின் பழமைவாதப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்பட இந்திய அரசாங்கம் விரும்பவில்லை.

 சர்மிளா தனது நீண்ட காவியப் போராட்டத்தைத் தொடங்கியதிலிருந்தே இந்த ஆழ்ந்த துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ள மரகதப் பள்ளத்தாக்கின் பெண்கள் பல புதுமையான தனித்துவமிக்க அறவழிப் போராட்டங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அரசியல் போராளியான தங்கியாம் மனோரமா 2004 ல் பாதுகாப்புப் படையினரால் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட, நாட்டின் மனசாட்சியை உலுக்கிய நிகழ்வுக்குப் பிறகு, அப்படி ஒரு போராட்டம் தூண்டுதல் பெற்றது. அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் அப்பெண்மணியின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அவரது கண்களையும் கைகளையும் கட்டிப்போட்டு பல மணிநேரம் கும்பலாக வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர். மிருகத்தனமாக சிதைக்கப்பட்ட அவரது உடலை சாலையோரத்தில் வீசிவிட்டுச் சென்றனர், அவரது பிறப்புறுப்புக்கள் கத்தியால் குத்தப்பட்டு சிதைக்கப்பட்டிருந்தன, உடலெங்கும் குண்டுகள் துளைத்திருந்தன, வழக்கம்போல அச்சட்டம் அவர்களுக்குத் தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கியிருந்தது.

 மனசாட்சியால் வெடித்தெழுந்த கிளர்ச்சி

பள்ளத்தாக்கெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களின் மனஅழுத்தம் மிகுதியானது, பெண்கள் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து வந்து அமைதியாக அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினர் நிலைகொண்டிருந்த காங்களா கோட்டை வாயில் முன்பு திரண்டனர், கடைசி நிமிடம வரை தங்கள் போராட்ட முறைமையை ரகசியமாக வைத்திருந்தனர். கோட்டை வாயிலில் திரண்டிருந்த பெண்கள் திடீரென்று தங்கள் ஆடைகளை அவிழ்த்தெரிந்துவிட்டு ” எங்களைக் கற்பழி, கொல்லு, எங்கள் சதைகளை எடுத்த்க்கொள் ”என்ற கத்தினார்கள்.

 5

அந்தத் தருணம் வரை அவர்களைத் தடுத்துத் தள்ளிவிட்டு துப்பாக்கிகளையும் தடுப்புதட்டிகளையும் கொண்டு அச்சுறுத்திய படையாட்கள் பெண்கள் ஆடையைக் கலைந்ததும் பின்வாங்கி ஓடிப்போய் கோட்டைக்குள் புகுந்து கொண்டு வெட்கிக் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள் என்று இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு பாட்டி துநூரி கூறினார். முழுதாக அரைமணி நேரம் அப்பெண்கள் அப்படி நிர்வாணமாக நின்று போராடினார்கள். அடுத்த நாள் ஒவ்வொரு தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் செய்தித்தாள்களிலும் அப்பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்த்த வெளிப்பகுதி மக்களுக்கு மணிப்பூர் பெண்களின் துயரமும் வதையும் அவமானமும் தெரியவந்தது. வேறெந்தப் போராட்டமும் அவர்களுடைய வேதனையை இந்த அளவுக்கு வெளிக்கொணரவில்லை. இம்பால் நகரின் வரலாற்றுப் புகழ் பெற்ற காங்ளா கூடையிலிருந்து அஸ்ஸாம் துப்பாக்கிப் படையை வெளியேற அரசாங்கம் உத்த்ரவிட்டது அப்படை குடிமக்கள் வாழும் பகுதிக்கு வெளியே நிலையமர்த்தப்பட்டது. மேலும் ஒரு நீதி விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டது.

ஆனால் சிறிதும் வருந்தாத அஸ்ஸாம் துப்பாக்கிப் படை மனோரமா மக்கள் விடுதலைப் படையைச் சேர்ந்தவர் என்றும் அவரைக் காட்டுமிராண்டித்தனமாக கற்பழித்துப் படுகொலை செய்தது நியாயம் என்பது போலவும் அறிக்கை விட்டது. 2008 லிருந்து ஒவ்வொரு நாளும் 7லிருந்து 10 பெண்கள் வரை ஐரோம் சர்மிளாவுடன் சேர்ந்து சூரியன் தோன்றுவதிலிருந்து மறையும் உண்ணாநிலைப் போரில் கலந்து கொள்கின்றனர். இந்தப் போராட்டத்தை நடத்தும் மூத்த பெண் போராட்டக்காரர்களை இம்பாலில் அவர்களது முகாமில் நான் சந்தித்தேன். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் கூடப் பார்க்கச் செல்லாமல் முகாமிலேயே இரவெல்லாம் தங்கியிருக்கிறார்கள். சங்கிலித் தொடராக இந்தப் போராட்டத்தைக் கொண்டுசென்று, தங்கள் தாயகத்தில் அமைதிக்காகவும் நீதிக்காகவும் போராடும் தங்கள் வீரநாயகி ஐரோம் சர்மிளாவுக்கு ஆதரவு தருவதைத் தங்கள் லட்சியமாகக் கருதுகிறார்கள். அவரது உண்ணாநிலைப் போராட்டம் மற்றும் சிறை வாழ்வின் பத்தாவதாண்டைக் குறிக்கும் வகையில் இந்தியாவெங்கும் உள்ள செயல்வீரர்களும் கலைஞர்களும் இம்பாலில் திரண்டார்கள். கவிதைகள், பாடல்கள், நடனம், ஓவியம் எனப் பலப்பல அழகான ஆனால் வேதனையும் வழியும் தரும் கலைநிகழ்வுகள் அங்கு வரமுடியாத அந்தப் பெண் போராளியின் நினைவோடு நடைபெற்றதை நாங்கள் கண்டோம்.

 6

அறவழிப் போராட்டத்தின் சிறந்த பாரம்பரியத்தில் அந்த ஆர்ப்பாட்டம் நீதி, அமைதி, மற்றும் நம்பிக்கை விழாவாக வர்ணிக்கப்பட்டது. இந்திய அரசாங்கமும் மக்களும் தனது கோரிக்கையை கேட்கும் வரை அல்லது தனது உயிர் வீழும் வரை தனது இணையற்ற தன்னைவருத்திக் கொள்ளும் அறப்போராட்டத்தைத் தொடர்வதென ஐரோம் சர்மிளா முடிவு செய்துள்ளார்.  தனது மருத்துவமனைத் தனிமைப் பிரிவிலிருந்து அவர் எழுதுகிறார்:
 
விலங்குகளிலிருந்து எனது காலகளை விடுவியுங்கள்
முள்ளில் செய்த வளையல்களைப் போல ஒரு குறுகிய அறையில்
நான் சிறைப்பட்டிருக்கிறேன்.
சிறைப் படுத்தப்பட்ட ஒரு பறவையைப்போல
 இருப்பது தான் எனது குறை. . .

சர்மிளா தனது உணவைச் சுவைக்கும், அவரது தொண்டையின் வழியே நீர் இறங்கி, அவரது தாகத்தைத் தணிக்கும் அந்த நாள் விடியட்டும். நீதியின் மீது நிலைநாட்டப்பட்ட அமைதியும் ஜனநாயக உரிமைகளின் கண்ணியமும் மீட்கப்பட்ட வீதிகளில் அவர் சுதந்திரமாக நடைபோடும் அந்தநாள் விரைவில் விடியட்டும்.

- ஹர்ஷ் மந்தர்
 
நன்றி;தி இந்து-26. 12. 2010.

தமிழில் வெண்மணி அரிநரன்

Pin It