மேற்குறிப்பிட்ட வியப்புக்குரிய கேள்விகளுக்கு ஆழமான விடைகளைத் தருகிறார் ஆய்வாளர் முனைவர் மாலேம் நிங்தோஜா. அவரின் விடையில் - மணிப்பூர் மக்களின் உரிமைகள் பறிப்பு, டெல்லிப் பேரரசின் கொடுங்கோல் அடக்குமுறை ஆட்சி, மக்களாட்சி என்ற பெயரில் நடக்கும் இராணுவ மேலாண்மை, ஒடுக்குமுறை விவரங்கள் எல்லாம் அணி வகுத்து நிற்கின்றன. இக்கருத்துகளைக் காணும் ஒவ்வொருவரும் மனம் கலங்கிவிடுவார்கள்.

டெல்லிப் பல்கலைக்கழகத்தில் தற்போது இராமாயணம் தொடர்பான ஆய்வுப் படைப்பு ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாகச் செய்திகள் ஏடுகளிலும், ஊடகங்களிலும் பல அறிஞர்களால் வாதிடப்படுகின்றன. இப்பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் 300 இராமாயணக் கதைகள் இருந்ததை வெளிப்படுத்திய ஆய்வுக் கட்டுரையை, இந்து மதக் குறுமதியாளர்கள் தடை செய்து வெற்றி கண்டுள் ளார்கள். மதச்சார்பின்மைக் கொள்கையை அரசமைப் புச் சட்டம் ஏற்றுக்கொண்டாலும், ‘இராம் லீலா’ என்ற பெயரில் இராவணனை எரித்து மதச்சார்பின்மையை ஏளனம் செய்யும் நிகழ்வில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் இத்தாலி சோனியா அம்மையாரின் அருந் தொண்டர் மன்மோகன் சிங் உட்பட, இந்துத்துவாவின் தரகர்கள் - தலைவர்கள் களிப்புறும் நாடல்லவா இது.

பல்கலைக்கழகங்களில் ஆய்வுத் துறைகளின் சுயாட்சியைத் தட்டிப்பறிப்பது அறிவுத் துறைக்கு விடப் படும் அறைகூவலாகும். ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பதுதான் ஆய்வு நெறியின் அடிப்படை. டெல்லிப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தளத்தின் தனித்தன்மையைப் போற்றும் வண்ணம் ஆய்வாளர் மாலேம் நிங்தோஜா இந்தியா ஒரு நாடன்று - மணிப்பூர் போன்ற பல நாடுகளைத் துப்பாக்கி முனையில் இணைத்து உருவாக்கியதுதான் இந்தியா என்பதை வரலாற்றுத் துறைக்கு அளிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையின் வழியாக மெய்ப்பித்துள்ளார்.

முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் வெற்றி கண்ட ஆய்வாளர் நிங்தோஜா, ஆய்வாளர்களும், அறிஞர் களும், பொதுமக்களும் மணிப்பூரில் நடக்கும் நிகழ்வு களை அறிந்து கொள்ளும்வண்ணம், டெல்லி அலைக் கற்றைப் பதிப்பகம் வாயிலாக 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். அலைக் கற்றை என்றாலே அலறித் துடிக்கும் இன்றைய மத்திய அமைச்சர்கள் இந்நூலைப் படித்தால் எந்தக் கோயி லுக்குச் செல்வார்களோ, எந்த யாகத்தை மேற்கொள் வார்களோ, யாருக்கும் தெரியாது. ஆனால் அலைக் கற்றை ஊழலில் சிக்கக் கூடாது என்பதற்காக, அக்டோபர் 2ஆம் தேதியான காந்தி பிறந்த நாளில், காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பார் என்று காக்கிகளும், காங்கிரசாரும் காத்திருக்க, மூணாறு ஓய்வு இல்ல அறையைவிட்டு வெளிவராத மத்திய உள்துறை அமைச்சர் மறுநாள் மலை ஏறி சனீசுவர சாமி முன் நின்று, காக்கா பொம்மையை அய்யர் தலைமேல் வைக்க, ‘செய்த பாவம் தீர்ந்துவிட்டதடா சிவகுருநாதா’ என்று நம்பிக்கையோடு டெல்லிக்குத் திரும்பி அரசிய லில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ப. சிதம்பரத்திற்கு நான் என்ன சளைத்தவனா? டெல்லி சதிகளைக் கொல்கத்தா யாகக் குண்டத்தால் முறியடிப்பேன் என்று, இதே நாளில் காளி கோயிலில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சண்டியாகம் நிகழ்த்தி யுள்ளார்.

இவ்வகைச் சண்டித்தனங்கள் டெல்லியையே சிரிப்பாய்ச் சிரிக்கும் அரசியல் மயமாக ஆக்கியிருக்கும் நேரத்தில், “இந்தியாவில் இருந்து விடுதலை - மணிப்பூர் தேசியத்தின் வரலாறு 1947-2000” ((Freedom from India - A History of Manipur Nationalism 1947-2000) என்ற நூலினை, மாலேம் நிங்தோஜா பதிப்பித்து வெளியிட்டுள்ளார். ஆய்வுத் தளத்தில் புதுமைகளை இணைத்திருக்கிறார். உண்மைகளைத் தரவுகளுடன் சுட்டினால்கூட “நாட்டுத்துரோகக் குற்றம்” என்று கூறித் தன்மீது வழக்குத் தொடரலாம். இந்திய அரசால் மணிப்பூர் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவ அதி காரிகளால் தேவையற்ற தொல்லைகளுக்கு உட்படுத் தப்படலாம் என்ற முன்னறிவிப்புகளோடு, மாலேம் நிங்தோஜா இந்நூலின் வாயிலாக நம்மை மணிப் பூருக்கே அழைத்துச் செல்கிறார்.

ஒரே தேசியம், ஒரே நாடு என்பதெல்லாம் கற்ப னையாகக் பேராதிக்கச் சக்திகளால் புனையப்பட் டுள்ளன. தேசிய இனச் சிக்கல்களை மறைத்துவிட்டு வரலாற்று ஆய்வு செய்வது முழுமையாகாது என்று சுட்டிக்காட்டி, மணிப்பூர் 1947 வரை ஒரு தனி அரச மைப்புச் சட்டத்தோடு ஒரு தனிநாடாக விளங்கிய தையும், 1947ஆம் ஆண்டின் மணிப்பூர் அரசமைப்புச் சட்டத்தையும் கோடிட்டுக் காட்டி, இதுவரை வெளிவராத தகவல்களை இந்நூலில் அளித்துள்ளார்.

வரலாற்றின் பல காலக்கட்டங்களில் இந்தியத் துணைக் கண்டத்தின் மீது பல்வேறு இன, மதக் குழு வினர் தொடர்ந்து படையெடுத்து வெற்றி கண்டு இந்தியப் பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 18, 19ஆம் நூற்றாண்டுகளில் அய்ரோப் பியக் கிழக்கிந்தியக் குழுமங்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் பகுதிகளில் தடம்பதித்து, வணிகம் செய்து இப்பகுதிகளின் வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றன.

இறுதியாக இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் குழுமம் இந்தியத் துணைக் கண்டத்தையே அடிமைப்படுத் தியது. கிழக்கிந்தியக் குழுமங்களில் பணியாற்றிய இராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ் தொடங்கி, பிரெஞ்சு டுப்ளே வரை தனிப்பட்ட முறையில் இந்தியா வின் செல்வத்தைச் சூறையாடி அய்ரோப்பாவிற்கு எடுத்துச் சென்று சொத்தாக மாற்றியதைக் கண்டு இங்கிலாந்துப் பேரரசு அதிர்ச்சியுற்றது. எழுத்தாளர் எட்மன்ட் பெர்க், இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளே இதற்குச் சான்று பகர்கின்றன.

சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு 1858ஆம் ஆண்டி லிருந்து இந்திய அரசு நிர்வாகத்தை நேரடியாக இங்கி லாந்துப் பேரரசு ஏற்றது. 1947ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தை ஆளுகின்றவர்களுக்கும், ஏற்கெனவே ஆண்ட வெள்ளைக்காரர்களுக்கும் பெருத்த வேறுபாடு சட்டத்திலும் இல்லை; நடைமுறையிலும் இல்லை. ஆதிக்க சக்திகள் மணிப்பூர் மக்களின் இன, மொழி, பண்பாட்டு உரிமைகளை அடக்கி, ஒடுக்கி, ஏற் கெனவே தங்களுடைய சுரண்டலை இந்தியத் துணைக் கண்டத்தில் நிறைவேற்றி வருகின்றன என்பதை 1891ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அரசியல் நிகழ் வுகளைப் பட்டியலிட்டு இந்நூலில் விளக்கியுள்ளார்.

இங்கிலாந்தின் நேரடி ஆட்சி இந்தியத் துணைக் கண்டத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு பர்மா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உட்பட்ட பல நிலப்பகுதிகளை இணைப்பதில் இங்கிலாந்துப் பேரரசு காட்டிய முனைப்பும், அதற்காக நிறைவேற் றப்பட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களும் மணிப்பூரிலும் நிகழ்ந்துள்ளன. 1891ஆம் ஆண்டு மணிப்பூரை ஆட்சி செய்த இளவரசர் கோயரங் இடம் வெள்ளை ஏகாதிபத்திய அரசு தங்களின் உலக ஆளு மையைக் காட்டி, இராணுவத்தின் துணையோடு மணிப்பூரை இந்தியத் துணைக்கண்டப் பகுதியோடு இணைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. அடி பணிய மறுத்த இளவரசருடைய அரண்மனையின் மேல் 1891 மார்ச் 23ஆம் நாள் நள்ளிரவில் வெள் ளையர் இராணுவம் தாக்குதல்களை நடத்தியது. இச்சண்டையில் இங்கிலாந்து நாட்டின் இராணுவம் தோல்வியைத்தான் சந்தித்தது. வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஐந்து இராணுவ உயர் அலுவலர்கள் கொல் லப்பட்டனர். அசாமின் உயர் அலுவலரும், முதன்மை ஆணையருமான குவின்டன், இங்கிலாந்து அரசின் அரசியல் தரகரான கீரிம்வுட் ஆகிய இருவரையும் கைது செய்து போர்க் குற்றவாளிகளாக மணிப்பூர் அரசு அறிவித்தது. வழக்கை ஆய்வு செய்த மணிப்பூர் நீதிமன்றம் அவ் இருவருக்கும் தூக்குத் தண்ட னையை அளித்தது. மணிப்பூர் அரசும் தூக்குத் தண்ட னையை நிறைவேற்றியது. வெகுண்டெழுந்த இங்கி லாந்து இராணுவம் இந்நிகழ்விற்குப்பின் பொம்மை மன்னர்களை மட்டும்தான் ஆட்சி செய்வதற்கு அனு மதித்தது. ஆனால், மக்கள் மனந்தளரவில்லை. அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட முன்வந்தனர். போராடிக் கொண்டே இருக்கின்றனர்.

1947ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாகிஸ் தான் பிரிந்த பிறகு, நேரு இந்தியாவின் முதல் தலைமை அமைச்சரானார். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. வெள்ளையர் ஆட்சி கடைப்பிடித்த அதே ஏகாதிபத்திய உணர்வைப் பின்பற்றி ‘ஆசிய ஜோதி’ நேருவும், இரும்பு மனிதர் பட்டேலும் மணிப்பூர் மக்களின் மொழி, பண்பாட்டு, வரலாற்று உரிமைகளை மதிக்காமல் இராணுவத் துணையோடு இந்தியப் பகுதிகளோடு மணிப்பூரை 1949ஆம் ஆண்டு இணைத் தனர். அடிபணிந்த மன்னரிடம் வெள்ளையர் ஏகாதிபத்தியம் கையாண்ட முறையிலேயே மணிப்பூரை இந்தியாவோடு இணைத்தது. பொம்மை மன்னரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்கவும் செய்தது. ஆனால், மணிப்பூர் மக்கள் அன்றும் இன்றும் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. மாணவர்கள், அறிஞர்கள் எனப் பல்வேறு அமைப்புகள் தங்களின் உரிமைகளுக் காகத் தனித்தனியே போராடி வருகின்றனர். தனித் தனியாக இயங்கி வந்த 32 போராட்டக் குழுக்கள் இப்போது ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியை ஏற் படுத்தியுள்ளன. எங்கெங்கு மக்கள் போராடுகிறார் களோ அப்பகுதிகள் எல்லாம் கலவரப் பகுதிகள் என்று மத்திய அரசு அறிவித்தது. 1958ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட இராணுவச் சிறப்புச் சட்டத்தின் வழியாக மக்கள் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்கி வருகிறது. இப்போராட்டங்களின் உச்ச நிகழ்வாகத்தான் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் நாள் 12 மணிப்பூர் அப்பாவி மக்கள் மீது இந்தியப் பாதுகாப்புப் படை தாக் குதல் நடத்தியது. பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிகழ்வைக் கண்டித்துத்தான் பெண் போராளி செல்வி. இரொம் ஷர்மிளா காலவரையற்ற உண்ணா நிலையை மேற்கொண்டார். 1958ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்ட இராணுவச் சிறப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்தார். ‘உண்ணாநிலை வழியாகத் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார்’ என்ற குற்றச்சாட்டினைச் சுமத்தி அவருக்கு 11 ஆண்டு களாகக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக உயிர் காக்கும் திரவங்களைச் செலுத்தி வருகின்றனர். இந்த அம்மையாரின் உண்ணாநிலையால்தான் மணிப்பூர் மக்களின் போராட்டம் உலக அளவில் தெரியவந்தது.

ஆய்வாளர் நிங்தோஜா மணிப்பூர் மக்களின் போராட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த பல நிகழ்வுகளை ஆய்வுத் தரவுகளோடு விளக்கி யுள்ளார். 1934இல் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கபோப் பள்ளத்தாக்கைப் பர்மா அரசு இணைத்துக் கொள்ள விரும்பியது. பர்மா தனது வளங்களை இங்கி லாந்து அரசிற்குத் தாரைவார்த்துக் கொடுத்ததால், மணிப்பூருக்குச் சொந்தமான கபோப் பள்ளத்தாக்கை ஒரு கமுக்கமான ஒப்பந்தத்தின் வழியாக வெள்ளை யர்அரசு பர்மாவிற்கு அளித்துவிட்டது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பது போல இந்நிலப்பகுதி யைப் பிரிப்பதால் பள்ளத்தாக்கு மக்கள், மலைவாழ் மக்கள் என்று இருபிரிவினராகப் பிரித்துவிட்டால் வலிமை மிக்க மக்கள் போராட்டத்தை எளிதில் ஒடுக்கிவிடலாம் என்று வெள்ளை அரசு கனவு கண்டது. இந்த ஒப்பந் தத்தை மன்னருக்குத் தெரியாமலேயே நிறைவேற்றி யதால், மன்னர் கம்பிர் அதிர்ச்சியுற்று மாரடைப்பால் இறந்தார். ஆனால் வீரமிக்க மணிப்பூர் மக்கள் தொடர்ந்து போராடினர். இதன் விளைவாகப் பர்மா அரசு ஆண்டுதோறும் கபோப் பகுதிக்கான உரிமத் தொகையை, மணிப்பூருக்கு 1949 வரை செலுத்தி வந்தது.

அரசுகள் மாறினாலும் ஒடுக்குமுறை தொடரவே, கோபம் கொண்ட மணிப்பூர் மக்கள் அறவழிப் போராட்டத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் தனித்தனியே, ஆனால் இணைந்தே நடத்தினர். 1947ஆம் ஆண்டு கபோப் பள்ளத்தாக்கை மீண்டும் மணிப்பூருடன் இணைக்க வேண்டும் என்று கோரி, மணிப்பூரின் முதல் கம்யூனிஸ்ட் தலைவரான தோழர் இரா பட் (30.9.1896-26.9.1951) துண்டுப் பிரசுரங்களை வெளி யிட்டார். கவிஞர், ஏட்டாளர், ஓவியர், விளையாட்டு வீரர், சமூகச் சீர்திருத்தவாதி, புரட்சியாளர் எனப் பன்முகப் பரிமாணங்களின் அடையாளமாகத் தோழர் இரா பட் விளங்கினார். பெண் போர்ப்படையை 1939 இல் உருவாக்கி 1948லிருந்து 1951 வரை ஆயுதப் போராட்டத்தை நடத்தினார். மக்கள்-மாணவர்-விவ சாயிகள் கூட்டமைப்பை உருவாக்கி மணிப்பூரின் தனி நாட்டுக் கோரிக்கைக்குப் புதிய அணுகுமுறையை மேற்கொண்டார். ஆயுதம் தாங்கிய போரை நடத்தி இறுதியாக அங்கோ மலைக்காட்டுப் பகுதியில் கொல் லப்பட்டார். மார்க்சு, லெனின் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சென்று தேசிய இனச் சிக்கலுக்குப் புதிய விளக்கம் அளித்தார்.

இருப்பினும், இந்தியாவின் முதல் தலைமை அமைச் சரான நேரு, 1953இல் மணிப்பூர் மக்களுடைய உரிமைப் போராட்டத்தைப் புறந்தள்ளி, வெள்ளை ஏகாதிபத்தியம் பின்பற்றிய அதே வழியைக் கடை பிடித்து, கபோப் பள்ளத்தாக்கைப் பர்மாவிடம் ஒரு கமுக்க ஒப்பந்தத்தின் வழியாக ஒப்படைத்துவிட்டார். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது ஒரு செய்தி யாகக் கூட மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

மணிப்பூர் மக்களின் தேசிய இனப் போராட்டத்தில் பல எடுத்துக்காட்டான அரசியல் நிகழ்வுகள் உள்ளன. இந்தி மொழியை அவர்கள் ஒருபோதும் ஏற்றதில்லை. மேலும், இந்தி திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. இதன் காரணமாக மணிப்பூர் மக்களின் பண்பாட்டு உணர்வு மேலோங்கியது. மணிப்பூர் தாய் மொழியிலேயே திரைப்படங்களை உருவாக்கும் நிலை ஏற்பட்டது. புதிய எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், புதிய நடிகர்கள், புதிய கலைஞர்கள் மணிப்பூர் வரலாற்றில் முதன்மை பெற்றனர்.

மணிப்பூர் மக்களின் உரிமைப் போராட்டத்தில் சமூக நீதியும், சமூக சமத்தவ உணர்வும் மேலோங்கி நின்றன. “சமஸ்கிருதமயமாதல்” என்ற பிற்போக்குக் கொள்கையை மணிப்பூர் மக்கள் வேரோடு வெட்டி வீழ்த்தினர். சமஸ்கிருத மொழி கலந்த பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவது, வாழ்வியலில் சமஸ் கிருத மொழிச்சொற்களைப் பயன்படுத்துவது ஏற்புடை யது அல்ல என்று மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. மணிப்பூர் மக்களின் தாய் மொழியான மெய்தி மொழியை மீண்டும் மீட்டெடுத்துப் புதிய முறையில் வடிவமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. நெடிய மரபு சார்ந்த மணிப்பூரின் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை மறு ஆக்கம் செய்து மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தனர். இதன்வழியாகச் சமஸ்கிருதமய மாதலுக்கு எதிரான கருத்தை (னுநளயளேமசவைளையவiடிn) மணிப்பூர் மக்களின் நெஞ்சங்களில் விதைத்தனர். ஆனால், சமஸ்கிருதமயமாக்கும் கொள்கை இந்தியா வில் உள்ள பெரும்பான்மைச் சாதியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று, பேராசிரியர் எம்.என். சீனிவாஸ் ஆய்வுத் தளங்களில் வலியுறுத்தி வந்தார். இக்கூற்றின்படி ஆரியப் பார்ப்பனர்கள் பின்பற்றிய கருத்துகளும், பழக்கங்களும், வழிபாட்டு முறைகளும் மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களாலும் மலைவாழ் மக்க ளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சமூக நிலையில் உயர் இடத்தை அடைவதற்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.

ஆனால் தமிழ்நாட்டில்தான் தந்தை பெரியார் தலைமையில் தொடங்கிய சமூகப் புரட்சி இக்கருத் தைப் புறந்தள்ளியது. சாதியத்திற்கு எதிராக, மத மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை இடஒதுக்கீடு கொள்கையின் வழியாகக் கல்வி, வேலை வாய்ப்புகளில் சமதளத் திற்கு அழைத்துச் சென்றது. மணிப்பூரிலும் இதே உணர்வை மக்கள் பெற்று சமஸ்கிருதமயமாதல் என்ற கூற்றுக்கு எதிராகச் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளனர் என்பதை ஆய்வாளர் நிங்தோஜா குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு தொடர்ந்து மணிப்பூர் மக்களின் தேசிய இனப் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது என்பதைச் சான்றுகளோடு இந்நூலாசிரியர் நூலின் பல பகுதிகளில் எடுத்துரைத்துள்ளார்.

1971இல் இந்திய அரசு 27வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் வழியாக 371 (சி) என்ற பிரிவை இணைத்தது. இதன் வழியாக மணிப்பூர் மக்களை மலைவாழ் மக்கள் என்றும், பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் என்றும் நிர்வாக வசதிக்காகப் பிரித்தது. மக்களைப் பிரிக்கின்ற இந்தச் சட்டப்பிரிவை மக்களும் இன உரிமைக்காகப் போராடும் தலைவர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்; அதன்பேரில் கருத்துக் கூறுகின்றனர். மேலும் 1960, 1970, 1990 ஆம் ஆண்டுகளில், ‘நாகா தேசியப் பிரிவினைவாதக் குழு’விடம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு செய்து கொண்டதே, மணிப்பூரின் எல்லைப் பகுதி மக்களிடையே இன மோதல்களை ஏற்படுத்துவதற் குத்தான் என்பதையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தி யுள்ளார்.

மேலும், மணிப்பூரை நிரந்தரக் கலவரப் பகுதியாக அறிவித்துவிட்டு இராணுவத்திற்கும், பாதுகாப்புப் படை யினருக்கும் அதிக அதிகாரங்களை அளித்ததன் காரண மாகத்தான் மணிப்பூர் பெண்களின் கற்பு சூறையாடப் பட்டது. மக்களுக்குப் பாதுகாப்பே இல்லை. இதுபோன்ற மனித உரிமை மீறல்களைத் தொகுத்துத்தான், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், இயக்கங்களும் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையத்திடம் எடுத்துரைத்துள்ளன.

2004 சூலை 15ஆம் நாள் இம்பால் நகரில் பெண்கள் நிர்வாணமாக நின்று இந்திய இராணுவம் எங்களைக் கற்பழிக்கிறது என்று கண்டனம் தெரி வித்துப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று மணிப்பூர் மாணவர் கள், “மணிப்பூர் முற்றுகை இடப்பட்டுள்ளது, எங்க ளுக்கு விடுதலை தேவை” ((Manipur under siege, we want freedom) என்ற முழக்கத்தோடு டெல்லியில் ஒரு பெரும் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதுபோன்ற தேசிய இனப் போராட்டத்திற்கான அடை யாளங்களை எடுத்துரைத்து, மணிப்பூர் மக்களின் போராட்டம் நீதிக்கான போராட்டமாக அமைந்துள்ளது; மாநிலங்கள் டெல்லியினுடைய பேராதிக்கத்திலிருந்து விடுபட்டு, உண்மையான கூட்டாட்சியும், மாநிலத் தன்னுரிமையும் பெறுவதற்கு வழிசெய்ய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதை இந்நூலாசிரியரின் கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன.

மத்திய அரசு காஷ்மீர், நாகாலாந்து, திரிபுரா, அசாம் போன்ற பல பகுதிகளில் நடக்கும் இன உரிமைக்கான மக்கள் போராட்டத்தைத் தனித்தனியே அறிஞர்கள் குழு அமைத்தும், உயர் அலுவலர்கள் குழு அமைத் தும் மக்கள் போராட்டங்களை முனை மழுங்கச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகப் பலர் அய்யுறுகின்றனர். எனவே, இந்த அய்யங்களைப் போக்கி மாநிலங்களுக்கிடையேயான மன்றத்தை (Inter-State Council) எல்லா மாநிலங்களுக்கும் பொருந்துகிற ஓர் அரசியல் தீர்வை மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான வல்லுநர் குழுக்களின் அறிக்கைகளும், ஆவணங்களும் மத்திய அரசின் உள்துறையிடம் ஏற்கெனவே உள்ளன.

முதல் கட்டமாகப் பிரிவினை கோரும் மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொண்டு, முழுமையான கூட்டாட்சியியலைப் பின்பற்றி அரசியல் தீர்வு கண்டால்தான், இந்தியாவின் ஒற்றுமை உறுதி செய்யப்படும். ஏற்கெனவேயுள்ள கூட்டாட்சித் தீர்வை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது, மாநில சுயாட்சிக் கோரிக்கை இந்திய நாட்டிற்குள் காலனி ஆதிக்கத்தை ஒப்புக்கொள்வதற்கு நிகரானது என்று மணிப்பூர் மக்கள் குறிப்பிடுகின்றனர் என்று இந்நூலாசிரியர் சுட்டியுள்ளார்.

“இன்றைய சூழலில் இந்திய நாடு என்பது நிரந்தரமாக இருக்குமா என்று நான் அய்யுறுகிறேன். காலப்போக்கில் அதனுடைய உட்கூறுகள் பிரிந்து நாட்டினுடைய அமைப்புத்தன்மை படிப்படியாக அழிந்து விடும்” என்றும் எச்சரிக்கிறார். இந்தியா ஒரு போராடும் களமாக இருக்கிறது. பலர் நினைப்பது போன்றோ, இந்திய அரசு உரிமை கொண்டாடுகிற தன்மையிலோ இந்தியா ஒரு நாடன்று. காரணம், நாடு என்கிற அமைப்பு உருவா வதற்கான இயற்கையான காரணங்கள் இங்கு இல்லை. இந்தியா என்ற ஒரு புவி அமைப்பு. இந்தியா, கருத்தொற்றுமையிலும், படை பலத்தாலும் அரசால் உருவாக்கப்பட்டது. நாடு உருவாக்குவதற் காக இந்திய அரசு கடைப்பிடித்த முறை மக்களாட்சி நெறிகளுக்குப் புறம்பானது. காலனியப் பண்புக் கூறுகளைக் கொண்டது. மேலும், “கல்வி, பொருளாதார, பண்பாட்டு அமைப்புகளில் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், நாட்டை உருவாக்குவதற்கும் ஆயுதப்படைதான் பெரும்பங் கினை வகிக்கிறது. மக்கள் அன்பால் இணையாமல் மாக்கியவல்லியின் கூற்றின்வழிப் பயத்தை ஏற்படுத்தி அதிகாரத்தை மக்கள் மதிக்கின்ற தன்மையை ஆளும் வர்க்கம் ஏற்படுத்தி வருகிறது.

எனவே, இந்தியாவில் பின்பற்றப்படுகிற ‘இந்திய ஒருமைப்பாடு’, ‘தேசியம்’ என்பதெல்லாம் அதிகார வர்க்கம் மக்களை ஒடுக்கித் திணிக்கப்பட்ட தேசியம்” என்றும் நூலாசிரியர் குறிப்பிடு கிறார். மக்கள் தங்கள் உரிமைகளை வெளிப்படுத்தித் தெரிவு செய்யும் உரிமை இல்லை. இதை மக்கள் இயக்கங்கள் எடுத்துக்காட்டுகிற போது, மேலும் இராணுவப் படை மணிப்பூரில் குவிக்கப்படுகிறது. எதிர்ப்பும், அடக்கு முறையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. இதற்கு ஒரே தீர்வு, இராணுவப் படை இல்லாமல் சுதந்திரமான முறையில் இந்தியாவோடு இணைந்திருப்பதா, வேண்டாமா என்ற மக்கள் வாக் கெடுப்புதான். அதுதான் இப்பகுதியில் நிரந்தர அமைதி யை ஏற்படுத்தும் என்று கூறி, ஆய்வாளர் நூலை முடிக்கிறார். ஆய்வாளர் நிங்தோஜா குறிப்பிடுகிற ஆய்வுக் கருத்துகள் இந்திய ஆட்சியா ளர்களின் காதில் ஒலிக்குமா? அல்லது பிரதமர் மன் மோகன் சிங், காஷ்மீர் உட்பட வடகிழக்கு மாநிலங் களின் அறிஞர்களின் வழியாகவும், ஓய்வுபெற்ற உயர் அலுவலர்கள் வழியாகவும் பிரிவினை கோரும் இயக்கங்களோடு நடத்திவரும் உரையாடல்கள் நாடகமா? கண்துடைப்பா? என்ற கேள்விகள் எழுகின்றன.

அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சாகும். அளவுக்கு மீறிய அதிகாரங்களை டெல்லி குவித்ததால் இன்று இந்தியாவின் ஒற்றுமைக்குப் பெரிய அறைகூவல்கள் விடப்படுகின்றன. மத்திய-மாநில உறவுகளை ஆய்வ தற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சர்க்காரி யா குழுவின் பரிந்துரையில், “இந்த அறிக்கையில் பல பகுதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு இந்தியாவில் பொதுவாகப் பெருமளவு அதிகாரக் குவிப்பு நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்குப் பயனுள்ள வகையி லும், மனச்சாட்சியுடனும் எல்லா நேரங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் மத்திய அரசிற்கு இரத்தக் கொதிப்பும், மாநில அரசு களுக்கு இரத்தச்சோகையும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையாகும். இதன் விளைவு என்னவெனில், திறமையின்மையும், நோயும்தான் இதன் வெளிப்பாடு களாக உள்ளன. உண்மையில் அதிகாரக் குவியல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீமைகளைப் பெருக்கியுள்ளது” என்று குறிப்பிடப்பட் டுள்ளது.

மணிப்பூர் இதற்கு ஒரு அடையாளம். மத்திய அரசு மக்களின் இன, மொழி, பண்பாட்டு உரிமைகளை ஏற்று அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்குமா? அல்லது நீதிபதி சர்க்காரியா குழு குறிப்பிட்டது போன்று அளவுக்கு மீறிய அதிகாரக் குவிப்பால் அதாவது இரத்தக் கொதிப்பால் மூளை செயலிழந்து கைகால்கள் செயலிழந்துவிடுமா?

Pin It