மகராஷ்ட்ர மாநிலத்தின் தொழில் அமைச்சர் திரு.நாராயண் ராணே, மும்பை நகரில் 23-2-2011 அன்று நடந்த மகளிர் உரிமைக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது, பெண்கள் வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அது தான் அவர்களுடைய முதன்மையான "பண்பாட்டுக் கடமை" என்றும், எப்பொழுதும் கணவன்மார்கள் தங்கள் சதந்திரத்திற்குக் குறுக்கே நிற்பதாகப் புகார் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.
 
          எடுத்த எடுப்பில் பார்த்தால் இது ஒட்டு மொத்தப் பெண்ணினத்திற்கு எதிரான தாக்குதல் தான். ஆனால் இக்கருத்து மேலும் வலுப்பெறும் பொழுது முதற்பலியாகப் போவது உயர்சாதிப் பெண்டிர் தான்
 
          பெரியார், அம்பேத்கர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுடைய தலைவர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு முன்னால் அரசதிகாரம் அனைத்தும் உயர்சாதிக் கும்பலிடம் தான் இருந்தது. பழைய மன்னராட்சி காலத்திலும் சரி; இடையில் வந்த முஸ்லீம்களின் ஆட்சியிலும் சரி; அதன் பின்பு வந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் சரி; தலைமைப் பீடம் மட்டும் தான் மன்னர்களிடமும், முஸ்லீம் அரசர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் இருந்ததே ஒழிய, அரசதிகாரத்தைக் கையாண்டவர்கள் உயர்சாதிக் கும்பலினரே. அப்பொழுதெல்லாம் பெண்களின் நிலை (உயர்சாதிப் பெண்களின் நிலையும் கூடத் தான்) மிகவும் மோசமாக இருந்தது.
 
          பெரியார், அம்பேத்கரின் பணிக்குப் பின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையில் சிறிது உயர்வு ஏற்பட்டது. பெரியாரும் அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டும் போராடவில்லை; ஒட்டு மொத்தப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் போராடினார்கள். *  ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது போல் பெண்களின் வாழ்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இம்முன்னேற்றத்தில் பயன் அடைந்திருப்பவர்கள் மிகப் பெரும்பாலோர் உயர்சாதிப் பெண்டிரே. பெரியார், அம்பேத்கர் காலத்திற்கு முன்னால் இருந்த அவர்களுடைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
 
          ஆனால், உயர்சாதிப் பெண்களிடம் எற்பட்டிருக்கும் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்து இருக்கும் முன்னேற்றங்களைக் காவு கொடுத்து விட்டு, அதன் பின் ஒட்டு மொத்தப் பெண்களை அடிமைப்படுத்தவும் உயர்சாதிக் கும்பலினர் திட்டமிடுகின்றனர்.
 
          தமிழ்நாட்டைத் தொடர்ந்து, பீகார், உத்தரப்பிரதேசம் முதலிய வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் வளர்ந்து வலுப் பெற்ற உடன், பெண்களுக்கு இட  ஒதுக்கீடு வேண்டும் என்ற ஞானோதயம் உயர்சாதிக் கும்பலினருக்குத் திடீரென்று வெடித்துக் கிளம்பிவிட்டது. சூட்சுமம் இது தான். ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஆண்களிடம் ஏற்பட்ட அளவிற்குப் பெண்களிடம் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெண்கள் முன்னேற்றம் பெரிதும் உயர் சாதியிலேயே நிகழ்ந்துள்ளது. இது ஒடுக்கப்பட்ட வகுப்புப் பெண்களை அடைய சிறிது காலம் ஆகலாம். ஆனால் அதற்குள் பெண்கள் ஒதுக்கீட்டை அமல்படுத்தினால், 33 சதவிகிதம் முழுவதையும் உயர்சாதிக் கும்பலே சுருட்டிக் கொள்ளலாம். மீதம் 67 சதவிகிதத்தில் உயர்சாதி ஆண்கள் தாராளமாக 17 சதவிகிதத்திற்கு மேல் பெறலாம். மொத்தத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல், ஏன் 75 சதவிகிதத்திற்கு மேல் கூடப் பெறலாம். அந்நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, கடைசியில் குழி தோண்டிப் புதைத்து விட்டு, பழைய வர்ணாசிரம தர்மத்திற்குப் பக்கத்தில் போய்விடலாம் என்ற பேராசையுடன் திட்டமிடுகிறார்கள். ஆகவே தான் பெண்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கூடாது என்று முழு மூச்சுடன் எதிர்க்கிறார்கள். **
 
          அது சரி! இதில் உயர்சாதிப் பெண்கள் அச்சப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? நின்று நிதானித்து யோசித்தால், உயர் சாதிப் பெண்கள் முதற்பலியாவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரியும்.
 
          பெண்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வட நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் வலுவாக இருந்த வரையில், நாராயண் ராணே போன்றோர் பெண்களின் "பண்பாட்டுக் கடமை" பற்றிப் பேசவில்லை. இன்று அரசியல் அரங்கில் அவர்களை ஓரளவிற்கு ஓரங்கட்டி இருக்கிறார்கள். தமிழ் நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்களை உள் ஒதுக்கீடடை வற்புறுத்தாதபடி மிரட்டியோ சோரம் போக வைத்தோ பணிய வைத்து இருக்கிறார்கள். உள் ஒதுக்கீடு இல்லாமல் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது. அப்படி நடந்து விட்டால், ஒடுக்கப்பட்ட மக்களைப் பழைய வர்ணாசிரம நிலைமைக்குப் பக்கத்தில் கொண்டு செல்லும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். அதிலும் வெற்றி பெற்று விட்டால் ........, அதற்கடுத்த திட்டத்திற்கான சிந்தனையைத் தான் நாராயண் ராணே விதைக்க முற்பட்டு இருக்கிறார்.
 
          பெண்கள் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் பெண்கள், தங்கள் எதிர்காலத் தலைமுறைப் பெண்களை முடமாக்கும் செயலைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல; உயர் சாதிப் பெண்களின் முன்னேற்றமே ஒடுக்கப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்தில் வேர் கொண்டுள்ள பக்க விளைவு தான். ஆகவே உயர் சாதிப் பெண்கள் தங்களுடைய மகள்களுக்கும், பேத்திகளுக்கும், அதற்குப் பிந்தைய தலைமுறைப் பெண்களுக்கும், தாங்கள் அடைந்திருக்கும் முன்னேற்றம் போய்ச் சேர வேண்டும் என நினைத்தால், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்; முன்னெடுத்தும் செல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு உடனடி இறக்கம் இருக்கவே செய்யும். இருந்தாலும் நீண்ட காலப் பயனை மனதில கொண்டு, அப்படிச் செய்யத் தான் வேண்டும். அப்படியின்றி, உயர் சாதியின் ஆதிக்கம் தான் முக்கியம்; பெண் விடுதலை அல்ல என நினைத்தால் இக்கட்டுரையைப் புறக்கணித்து விடலாம்.
 
*(உயர் சாதித் தலைவர்களிலும் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவர்கள் இருக்கவே செய்தனர். அவர்களின் எண்ணம் எல்லாம் சீர்திருத்தமாக இருந்ததேயொழிய பெண்களின் முழுவிடுதலையை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பெண்கள் வேலைக்குப் போய், பொருளாதார சுதந்திரம் அடைவதை பாரதியார் விரும்பவில்லை. இராஜாஜியோ பெண்களுக்கெனத் தனிப்பட்ட ஒரு சிக்கல் இல்லை என்று கூறிவிட்டார். காந்தியாரோ ஆணோடு பெண் போட்டியிட்டால் உலக வளர்ச்சிக்காக ஒன்றுமே செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தார்.)
 
**(காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் மூன்று கட்சியினரும் ஒரு திட்டத்தை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ ஓரணியில் இருக்கிறார்கள் என்றால், உயர் சாதிக் கும்பல் பெரும் நெருக்கடியில் இருக்கிறது என்றும் அதிலிருந்து மீள, கூச்சத்தை விட்டு ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்றும் பொருள். மண்டல் குழு பரிந்துரை அமலாக்கத்தை எதிர்த்து ஒன்று சேர்ந்தார்கள்; இப்பொழுது உள் ஒதுக்கீடு இல்லாத மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.)

Pin It