சூலை 2-ஆம் தேதி 8 மணிக்கு 3000-க்கும் மேலான பயிற்சி மருத்துவர்கள், தங்கள் சங்கமான (MARDமார்ட்)-இன் தலைமையில்,மராட்டிய மாநிலமெங்கும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய நியாயமான பிரச்சனைகளுக்கு நலத்துறை அதிகாரிகள் தீர்வு காண தொடர்ந்து தவறி வருவதால் வெறுப்படைந்து இந்த போராட்டத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டியதாகியது.

போராடும் மருத்துவர்களின் முக்கிய கோரிக்கைகள் -

1) காச நோயாளிகளைக் குணப்படுத்தும் போது நோய் தொற்றி அவதிப்படும் மருத்துவர்களுக்கு 2 மாதம் ஊதியத்துடன் விடுமுறை கொடுக்கப்பட வேண்டும். இப்பொழுது அப்படிப்பட்ட வசதி இல்லை. இந்த நோய்க்கு ஆளாகும் மருத்துவர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் விடுப்பு இல்லை என்றால் சம்பளம் இன்றிப் போக வேண்டியுள்ளது.

2) பெண் மருத்துவர்களுக்கு 2 மாதம் பிரசவ விடுப்பு ஊதியத்துடன் கொடுக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட வசதி இன்று இல்லை.

3) ஒரு நிபுணத் துறையில் 3 வருடம் தங்கள் உயர் பட்டப் படிப்பை முடித்தவுடன், அவர்கள் ஒரு வருடம் ஒரு பொது மருத்துவமனையில் சேவை செய்வதாக ஒரு பத்திரம் மூலம் இப்பொழுது உத்திரவாதம் கொடுக்க வேண்டும். ஆனால் அப்போது அவர்கள் எந்த துறையிலும் வேலையமர்த்தப் படலாம்.  உதாரணமாக, ஒரு மனநோய் மருத்துவர் பிரசவ துறையிலும், ஒரு குழந்தை மருத்துவரை எலும்பு நோய்த் துறையிலும், இன்னும் பல விதத்திலும் வேலை அமர்த்தப்படுகிறார்கள். நோயாளிகளின் உடல் நலத்திற்கு இது பாதிப்பது மட்டுமின்றி,  அப்படிப்பட்ட வழக்கம் அவர்கள் படித்து பயிற்சி பெறும் 3 வருட நிபுணத்துவ பயிற்சியை கேலி செய்வதாகிறது.

4) மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதனால், அவசர சிகிச்சை, தீவிர மருத்துவ துறை, பிரசவ துறை போன்ற எல்லா முக்கிய துறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் தங்கள் கடமையை செய்யும் பொழுது தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். ஒட்டு மொத்த வசதிகள் இல்லாததாலும், மருத்துவர்களின் அதிகப்படியான பளுவாலும் கடைசியில் நோயாளிகளே அவதிப்படுகிறார்கள். ஆனால் இந்த நோயாளிகளும் அவர்களுடைய குடும்பங்களும் அவர்களுடைய கோபத்தை அப்பாவி மருத்துவர்கள் மீதே காட்டுகிறார்கள்.

5) வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றாற் போல மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மூன்றாண்டுக்கு ஒரு முறை திருத்தப்படும் என்று மார்ட்-க்கும் அரசாங்கத்திற்கும் 2009-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதைச் செயல் படுத்து. கடைசி திருத்தம் 2012-இல் செய்யப்பட்டது. இந்த வருடம் ஊதியத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

போராடும் மருத்துவர்களிடத்தில் வழக்கமாக செய்யும் ஏமாற்று முறைகளைக் கொண்டு அதிகாரிகள் ஏமாற்றப் பார்த்தனர். வழக்கமாக சொல்வது போல, உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மருத்துவர்களிடத்தில் அவர்கள் உறுதி கொடுத்தனர். ஆனால் மருத்துவர்கள் அதிகாரிகளிடத்தில் அந்த உறுதிமொழியை எழுத்தில் தருமாறு கேட்டனர். அதற்கு அவர்கள் மருத்துவர்களைத் தண்டிப்போம் என மிரட்டினர். ஆனால் போர்குணம் மிகுந்த மருத்துவர்கள் கூண்டோடு சிறை செல்வதற்கும் தயாராக இருந்தனர். வழக்கம் போல இணையதளங்களிலும் செய்திகளிலும் போராடும் மருத்துவர்களைத் தவறான முறையில் சித்தரித்தனர். மருத்துவர்களின் போராட்டத்தால், குணப்படுத்த இயலாமல் உள்ள, நோயாளிகளின் அறிக்கைகளையும் படங்களையும் அவை வெளியிட்டன.

ஆனால் போராடும் மருத்துவர்களின் போர்குணம் மிகுந்த ஒற்றுமையை கண்டு போராட்டம் ஆரம்பித்து ஒன்றரை நாளுக்குப் பின் அதிகாரிகள் அடிபணிந்தனர். மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்து மூலம் உத்திரவாதம் அளித்துள்ளனர்.

மராட்டிய மாநில பயிற்சி மருத்துவர்களின் போர்குணம் மிக்க ஒற்றுமையினால் தங்களுடைய முழுமையான நியாயமான கோரிக்கைகளை வென்றதற்கு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் பாராட்டுகிறது.