கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

முதலாளித்துவத்தின் தோல்வியும் சோசலிசத்தின் எழுச்சியும்

"உலக மாந்தனாக உருவெடுப்பது என்பது மனித குலத்திற்கு நாம் செலுத்த வேண்டிய கடனை நேர்செய்வதாகும்"

cuban doctors with fidel photoஇன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத ஆனால் அனைவரையும் பாதிக்கக்கூடிய பொது எதிரியோடு நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் கடந்த அரை நூற்றாண்டுகளாக யார் இந்த உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெரும்பான்மையான மக்களை நம்ப வைத்தார்களோ அந்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக முதலாளித்துவ நாடுகளின் அடிவாரமே தற்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. ’எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற நிலையில் இன்று அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் கொரோனா தொற்றிலிருந்து சொந்த மக்களையே காக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.

தங்கள் நாட்டிலிருந்து இந்த கொரோனா வைரஸை எப்படியாவது விரட்டிவிட வேண்டுமென்று பகிரத முயற்சி செய்கிறார்கள். ஆனால் இவர்கள் எதிர்பார்ப்பதை விட கொரோனா வைரஸ் எனும் பொது எதிரி பல மடங்கு பலம் வாய்ந்தவனாக இருக்கிறான். இந்த சமயத்தில் தான் பொது சமூகத்திற்கு மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்களுக்காக இயங்கும் பொது நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமை சமூகம் இருந்திருந்தால் இந்த பிரச்சனையை எளிமையாக கைகொண்டிருக்க முடியுமே என்ற எண்ணம் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட ‘சோசலிச’ எண்ணம் அவர்களுக்கு வருவதற்கு மிகமுக்கிய காரணம் கியூபா.

கியூபா கரீபிய கூட்டமைப்பில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய நாடு. இன்னும் சொல்லப் போனால் கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் சிக்கிய நாடும் கூட. இப்படிப்பட்ட ஒரு சின்ன நாட்டின் மருத்துவ உதவியைத்தான் இன்று உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்களை சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். ஒன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி இங்கிலாந்துக்கு சொந்தமான ’டைமண்ட் பிரின்ஸ்’ என்ற சொகுசு கப்பல் ஒன்றில் இருந்த 3700 பேரில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க உடனடியாக அருகாமையில் இருக்கும் ஒரு நாட்டின் துறைமுகத்தில் கப்பலைத் தரையிறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாமென்று முடிவு எடுக்கப்படுகிறது. அதன்படி அந்த கப்பல் இருக்கும் இடத்திலிருந்து அருகாமையில் இருக்கும் நாடு இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பஹாமாஸ் நாடு. உடனடியாக அந்த நாட்டிடம் நங்கூரமிட அனுமதி கோரப்படுகிறது. அவர்கள் அதற்கான அனுமதியைத் தர மறுத்து விட்டார்கள். அதாவது இங்கிலாந்துக்காரர்கள் அதிகமாக இருக்கும் இங்கிலாந்து சொகுசு கப்பலை இங்கிலாந்து ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு சின்ன நாடு அனுமதிக்க மறுத்து விட்டது.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் பஹாமாஸ் நாடு தொடர்ந்து மறுத்து விட்டது. வேறு வழியில்லாமல் வேறு பல நாடுகளிடம் இங்கிலாந்து அனுமதி கோருகிறது. யாருமே அனுமதியளிக்கவில்லை. இந்த நிலையில் 3700 பயணிகளுடன் என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் கப்பலில் தத்தளித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில்தான் மார்ச் 18ம் தேதி இந்த கப்பலைத் தனது துறைமுகத்தில் நங்கூரமிடவும், பயணிகளைத் தங்கள் நாட்டிற்குள் ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் என்று அனுமதி அளித்தது கியூபா. இதனையடுத்து கப்பல் கியூபா வந்ததும் பயணிகள் அனைவரும் ’நன்றி கியூபா’ ’உங்களை நாங்கள் விரும்புகிறோம்’ என்ற பதாகைகளை ஏந்தி நன்றி பெருக்கோடு வெளியே வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள் செய்த பின்னர் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது கியூபா.

இந்நிகழ்வு குறித்து அந்த கப்பலில் இருந்த பயணி ஒருவர் "எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. கையறு நிலையில் உச்சத்தை நாங்கள் உணர்ந்தோம். இங்கேயே நோய்த் தொற்றுக்கு ஆளாகி இறந்து விடுவோமோ என்று கூட அஞ்சினோம். கியூபா நீட்டிய உதவிக்கரமே எங்களை இன்று உயிருடன் வைத்துள்ளது. கியூப மக்கள் வெறுப்புடன் எங்களை எதிர் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். மாறாக அன்புடன் எங்களை வரவேற்றனர். ஒரே சின்ன சிறிய நாடு தங்கள் இதயத்தை எங்களுக்காக திறந்ததை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறுகிறோம்." எனத் தெரிவித்தார்.

corona ship at cubaஅடுத்து இந்த கொரோனா தொற்றால் சீனாவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. இந்த தொற்று நோய் இத்தாலியில் பரவ ஆரம்பித்தவுடனேயே அந்நாட்டு அரசு அமெரிக்கா உள்ளிட்ட எனைய ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கோரியது. ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை. இதனால் இத்தாலியில் உயிரழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கிறது. இத்தோடு தற்சமயம் இத்தாலியில் கொரோனாவுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் தொற்று வந்து அங்கு மருத்துவம் பார்க்க ஆளில்லாத மிகவும் இக்கட்டான ஒரு சூழல் நிலவியது. இத்தாலியின் இந்த நிலையில் அவர்களுக்கு யாருமே உதவ முன்வராத நிலையில் கியுபா முன்வந்து அங்கு சுமார் 52பேர் கொண்ட தனது மருத்துவக்குழுவை இத்தாலியில் அதிகம் பாதிக்கப்பட்ட நகரான லொம்பாடிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இது கொரோனா தொற்றை மட்டும் எதிர்த்து போராட உலகமெங்கும் கியூபா அனுப்பி வைத்த ஆறாவது மருத்துவக்குழு. ஏற்கனவே வெனிசுவேலா, நிக்கரகுவா, ஜமைக்கா சுரினாம் கிரனடா ஆகிய நாடுகளுக்கும் கியூப மருத்துவக் குழுக்களை அனுப்பியிருக்கிறது. சீனாவுக்கு தனது வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை அனுப்பிவைத்ததை போல உலகமெங்கும் சுமார் 28,628 கியூப மருத்துவர்கள் இந்த கொரோனா தொற்றை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தாலி கியூபாவின் உதவியை நாடியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் முதலாளித்துவ கொள்கைகொண்ட ஒரு நாடு பொதுவுடைமை கொள்கையை கொண்ட சின்னஞ்சிறிய நாட்டிடம் உதவிகேட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கியூபா மருத்துவர்களின் இத்தாலி வருகை குறித்து கருத்து தெரிவித்த இத்தாலி அரசு ‘விரைவில் இத்தாலி இந்த தொற்றிலிருந்து மீளும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’ என்கிறது. அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை என்பது தான் கடந்த சிலநாட்களாக இத்தாலியிலிருந்து வரும் செய்திகள் நமக்கு உணர்த்துகிறது. அங்கு தொற்றின் வேகம் குறைந்து வருகிறது என்பது தான் அந்த செய்தி.

மேற்சொன்ன இரண்டு செய்திகளும் உலக அளவில் இன்று நடைபெற்றிருக்கிற மிகமுக்கியமான நிகழ்வுகள். ஏனென்றால் இத்தனை நாட்கள் நம்ப வைக்கப்பட்டிருந்த முதலாளித்துவக் கொள்கைகள் மக்களுக்கு ஆபத்து என்கிற போது காக்கவில்லை என்பதையும், எதன்மீது இத்தனை காலமும் முதலாளித்துவம் கற்களை வீசிக் கொண்டு இருந்ததோ அந்த சோசலிசம் தான் மக்களைக் காத்தது என்பதையும் உலக மக்கள் கண்முன்னே பார்த்திருக்கிறார்கள்.

கியுபாவின் இந்த வளர்ச்சி ஏதோ ஓர் இரவில் ஏற்பட்டதல்ல அங்கு கடந்த 60 ஆண்டுகளாக சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, ராயல் காஸ்ட்ரோ போன்றவர்களின் மக்கள் நலக்கொள்கைகளினால் இன்று இது சாத்தியமாகி இருக்கிறது. புரடசிக்குப் பின் கீயூபாவில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சேகுவேரா “இந்த நாட்டின் கடந்தகாலத்தை பற்றி இனி யாரும் பேசவேண்டாம்; எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று யோசியுங்கள்; நம்மைப் போல் இனி உலகில் யாரும் துன்பப்படக் கூடாது என்ற இலட்சியத்தை மனதில்கொண்டு நடை போடுங்கள், அதில் தவறுகள் வரலாம் அதை வெளிப்படையாக சொல்லி திருத்திக் கொள்வோம். நமக்கு என்று ஒருகாலம் வரும் அப்போது இந்த மொத்த உலகமும் நம்மை பார்த்து பெருமிதம் கொள்வார்கள். அப்படிப்பட்ட நிலையை அடைவதற்கான கொள்கைகளைதான் இனி நாங்கள் நடைமுறைப்படுத்தப் போகிறோம்" என்று அறிவித்தார்.

cuban doctors fighting coronaஇப்படியாகத்தான் கியூபா தன்னை தகவமைத்துக்கொண்டு மக்கள் நலன் என்பதை முதன்மைபடுத்தியது. எவ்வளவோ இன்னல் வந்தாலும் மக்கள் அனைவருக்கும் இலவசக்கல்வி என்பதிலோ, இலவச மருத்துவம் என்பதிலோ அல்லது மக்கள் நலத்திட்டத்திலோ ஒருநாளும் அது சமரசம் செய்து கொள்ளவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய போது, கீயூபா மக்களின் அடிப்படை தேவைகளுக்கு அதிக நிதியை ஒதுக்கியது. அதன்விளைவு தான் இன்று மற்ற நாடுகளை ஒப்பிடும் போது கியூபா அனைத்து நிலையிலும் உயர்ந்திருக்கிறது. இதை கீழே உள்ள 2018-2019 புள்ளிவிபரங்கள் உணர்த்தும்.

நாடு

வாழ்நாள் விகிதம்

சிசு மரணம்

மருத்துவ விகிதம்

கற்றோர் விகிதம்

வேலை இன்மை

வறுமை விகிதம்

கியூபா

79%

1.37%

1-111

99.89%

2.25%

0.9%

அமெரிக்கா

78%

1.15%

1-391

99%

3.6%

11.8%

இங்கிலாந்து

80.7%

4.18%

1-357

99%

3.8%

14.8%

இந்தியா

67.5%

3.36%

1-1612

79.5%

3.9%

17%

இப்படி ஒரு நிலையைக் கியூபா அடைந்ததால் தான் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான கியூப மருத்துவர்கள் 104 நாடுகளில் பாதிக்கப்படும் ஏழை எளியோர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகின்றனர். 2004இல் கியுபாவால் தொடங்கப்பட்ட ’ஆப்ரேசன் மிராக்கிள்’ எனும் பார்வை குறைபாடு உடையோருக்கான திட்டம் வாயிலாக 2011 ஆண்டு வரையில் 25 நாடுகளிலுள்ள 8 லடசத்திற்கும் மேலான மக்களுக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்கள். அதில் சிறப்பு என்னவென்றால் கியூபாவின் விடுதலைக்கு வழிவகுத்த போராளி சேகுவேராவை 1967இல் சுட்டுக் கொன்ற மரியோ தெரோன் என்பவருக்கு 2007ஆம் ஆண்டு பொலியாவியாவில் தங்களது கண் சிகிச்சை முகாமில் மருத்துவம் பார்த்து மீண்டும் கண்பார்வை அளித்தார்கள் கியூப மருத்துவர்கள். இதுமட்டுமில்லாமல் உலகிலேயே குழந்தைகளுக்கு 16 வகையான நோய்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கும் ஒரே நாடு கியூபா தான். அதில் 15 மருந்துகளை கியூபா தானே உற்பத்தி செய்கிறது. நீரிழிவு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு அதிகம் இருக்கும் நோய்களுக்கான மருந்து கியூபாவிடம் இருக்கிறது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடையால் இது உலகமெங்கும் போய்ச் சேராமல் அமெரிக்கா தடுத்து விட்டது. இப்படிப்பட்ட மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சோசலிச நாடு தான் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத பொதுஎதிரியை எதிர்த்து பலநாடுகளில் இன்று போரிட்டுக்கொண்டிருக்கிறது.

கியூபாவைப் போன்றே ’ஈழம்’ என்ற ஒரு சோசலிச சமதர்மக் குடியரசை உருவாக்கி எல்லா வகையிலும் மக்கள் நலனை முன்னுறுத்தி திட்டம் வகுத்து செயல்பட்ட விடுதலைப் புலிகளைத் தான் ஈழத்தில் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள் தனது பொருளாதார நலனுக்காக இராணுவத்தை வைத்து 2009இல் இந்தியா மற்றும் இலங்கையோடு கூட்டுச்சேர்ந்து இனப்படுகொலை செய்தது. ஈழம் என்ற நாடு அமைந்திருக்குமேயானால் அங்கும் கியூபாவை போல மக்கள் நலன் சார்ந்த அரசு உருவாகி அது இந்நேரம் மக்களை காக்கும் போரில் முன்னனியில் இருந்திருக்கும். இது ஆரூடமல்ல தமிழர் அறம் அப்படியானது தான். ஆகவே இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த சோசலிச எண்ணம் போராளி பிடல் காஸ்ட்ரோ சொல்வதைபோல ”நேற்றைய கனவுகள் நனவாகத் துவங்கியுள்ளன” என்பதைத்தான் காட்டுகிறது.

- மே 17 இயக்கக் குரல்