மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் நிலைமைகளை மேம்படுத்தக் கோருவோம்

தில்லி அரசு மருத்துவமனைகளிலுள்ள பயிற்சி மருத்துவர்கள், சூன்-22, 2015-இலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பின் (FORDA - போர்டா)சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள், அடிப்படை சுகாதார மற்றும் மருத்துவ நல வசதிகளை மேம்படுத்த வேண்டுமெனவும் நோயாளிகளுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகளையும் கோருகிறார்கள். அடுத்த நாளே அரசாங்கம் கடுமையான அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தைத் (ESMA)திணித்து இந்த வேலைநிறுத்தத்தை சட்ட விரோதமானது என்று அறிவித்தது.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து மருத்துவர்கள் வீரத்தோடு தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளிலுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தங்கள் அடிப்படை உரிமைகளுக்கும் பெருவாரியான மக்களுக்கும் மேம்பட்ட மருத்துவ வசதிகளுக்காகவும் வீரமான போராட்டங்களை மேற்கொண்ட நீண்ட வரலாறு உள்ளது.

தில்லி நகரத்தின் 25 அரசு மருத்துவமனைகளிலிருந்து 20,000 மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். சவ்தர்ஜங் மருத்துவமனை, ஆசாத் மருத்துவ கல்லூரி, ஜிபி பந்த் மருத்துவமனை, லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, லேடி ஆர்டிங் மருத்துவமனை, போன்ற பெரிய மருத்துவமனைகளும் இதில் அடங்கும். பயிற்சி மருத்துவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி-மார்ச் 2015 காலகட்டத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டங்களில் பயிற்சி மருத்துவர்கள் எழுப்பிய மருத்துவர்களின் பிரச்சனைகளையும் மருத்துவமனைகளிலுள்ள குறைபாடுகளையும் தீர்ப்பதாக அரசாங்கம் எழுத்து வடிவத்தில் உறுதியளித்துள்ளனர். ஆனால் 3 மாதத்திற்கு மேலாகியும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொழிலாளர் ஒற்றுமை குரலின் நிருபரிடம் பேசிய சவ்தர்ஜங் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் எப்பொழுதும் மருத்துவமனையில் இருப்பதில்லை என்று தெரிவித்தனர். நோய்வாய்பட்ட நோயாளிகளைக் கொண்டு செல்ல தள்ளுவண்டிகள் எதுவும் இல்லை. நோயாளிகளுக்கு அடுத்த சந்திப்பு, வரும் மாதங்களில் தள்ளி வர வேண்டுமென நாள் கொடுத்தால், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து தொலைதூரம் பயணித்து வந்து தங்கள் முறை வருவதற்கு நெடுநேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இது பல நேரங்களில் வெறுப்பை உருவாக்கி, அவர்களுடைய உறவினர்கள் தங்கள் கோபத்தை மருத்துவர்கள் மீது வெளிப்படுத்த நேரிடுகிறது.

மருத்துவ சேவைகள் பற்றாக்குறையாக இருப்பதற்கும் அதை மறுப்பதற்கும் அரசாங்கமே பொறுப்பாளி, மருத்துவர்கள் அல்ல, என்று அவர் கூறினார். செவிலியர்களுக்கு பெருத்த பற்றாக்குறை உள்ளது. எல்லா துறைகளிலும் ஊழியர் பற்றாக்குறை குறைந்தது 40%-ஆக உள்ளது. சில துறைகளில் ஊழியர் பற்றாக்குறை 100% மேலாகவும் உள்ளது.

படுக்கைகள் மிகக் குறைவாகவே உள்ளன. 3-4 நோயாளிகள் ஒரே படுக்கையைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. புற நோயாளிப் பிரிவில் தினசரி 4000-5000 நோயாளிகளைப் பார்த்து மருத்துவம் செய்யப்படுகிறது. இந்தப் பிரிவு தினசரி இரண்டரை மணி நேரமே நடக்கிறது, அதில் பயிற்சி மருத்துவருக்கு ஒரு நோயாளிக்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே கவனிக்க நேரம் கிடைக்கிறது. இப்படிப்பட்ட நிலைமைகளில் நோயாளிகளுக்கு எப்படிப்பட்ட மருத்துவம் பார்க்கப்படும் என்று யூகித்து அறியலாம்.

எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பொதுவான வியாதிகளுக்குத் தேவையான பெரும்பாலான தடுப்பூசிகளும் இருப்பதில்லை என்று மற்றொரு மருத்துவர் கூறினார். யாராவது தன்னுடைய சொந்த ஊரில் நாய் கடி பட்டால், அவர் சவ்தர்ஜங் மருத்துவமனைக்கு தடுப்பூசி போட 5 நாளைக்குத் தொடர்ந்து வர வேண்டும்.

மக்கள் குயிடிருப்புப் பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் தேவைப்படும் மருந்துகளுக்கு பெருத்த பற்றாக்குறை உள்ளது. சமீபத்தில் நோயாளிகள் தில்லி முதலமைச்சர் வீட்டிற்கு ஒரு பேரணியாகச் சென்று அடிப்படை மருத்துவ வசதிகளைக் கோரினர். ஆனால் அரசாங்கம் அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவில்லை, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. பயிற்சி மருத்துவர்களின் நிலைமையைப் பற்றி கூறுகையில், 1000 மருத்துவர்கள் தங்கும் விடுதியில், 80 அறைகள் மட்டுமே உள்ளன.

மருத்துவர்கள் தங்கள் கடமையை ஆற்றுவதற்கு தொலை தூரம் பயணித்து மருத்துவமனைகளுக்கு வரவேண்டியுள்ளது. ஆனால் விதிகளின் படி அவர்களுக்குக் கண்டிப்பாக மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே தங்குமிடம் கொடுக்கப்பட வேண்டும். பல நேரங்களில் அவர்கள் 36 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டியுள்ளது.

மருத்துவர்களின் உண்மையான நிலைமையை பொதுமக்களுக்கு எப்போதும் தெரிவிக்கப்படுவது இல்லை. மருத்துவர்களின் கடமை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாகும். ஆனால், சரியான மருந்துகளும், செவிலியர்களும், உதவிப் பணியாளர்களும், குறைந்தபட்ச மருத்துவ வசதிகளும் இல்லாமல் எப்படி அவர்களால் நோயாளிகளைக் கவனிக்க முடியும்? பொது மக்களை மருத்துவர்களுக்கு எதிராக திருப்பி விடுவதே,அரசாங்கத்தின் முயற்சியாகும். அப்படிச் செய்வதினால், அரசாங்கம் தன்னுடைய கடமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளலாம். அரசாங்கம், பயிற்சி மருத்துவர்களிடம் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர். ஆனால் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில், பயிற்சி மருத்துவர்களுக்கு அரசாங்கம் கூறுவதில் எந்தவித நம்பிக்கையும் இல்லை.

போர்டாவின் பேச்சாளர் கூறுகையில், நாங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்த 24 மணி நேரத்தில் அரசாங்கம் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை - எஸ்மா-வை அறிவித்தது, ஆனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி கொடுத்து பல மாதங்களாகியும், அவற்றை நிறைவேற்றுவதில் இந்த அவசரத்தை அவர்கள் காட்டவில்லை, என்றார்.

தொழிலாளர் ஒற்றுமைக் குரல், பயிற்சி மருத்துவர்களின் நியாயமான போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறது. மேலும் அது, நம்முடைய மருத்துவமனைகள், நோயாளிகள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் கேவலமான நிலைமைகளுக்கு பொறுப்பாளியான, அரசாங்கத்தையும் இந்த அரசையும் அவர்களின் தாக்குதலின் இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறது.

வேலைநிறுத்தம் செய்யும் பயிற்சி மருத்துவர்கள் கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

1) மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே அவர்களுக்குத் தேவைப்படும் தங்கும் வசதிகளும் விடுதிகளும் கொடுக்கப்பட வேண்டும்.

2) ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் அவர்களுக்கு கூடுதல் தொகை அளிக்கப்பட வேண்டும். ஒரு இரவு பணிக்குப் பின் மீண்டும் உடனடியாக வேலை கொடுக்கக் கூடாது.  

3)மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சுத்தமான குடிநீர் கொடுக்கப்பட வேண்டும்.

4) மருந்தகம் எல்லா மருத்துவமனைகளிலும் திறக்கப்பட வேண்டும், அதில் எல்லா பொது மருந்துகளும் கிடைக்கும்படி செய்திட வேண்டும். எல்லா மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் மருந்துகளும், அறுவை சிகிச்சை சாதனங்களும் இருக்க வேண்டும்.

5) மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

6) அறுவை சிகிச்சை அரங்குகள் இரட்டிப்பாக்க வேண்டும். நோயாளிகளுக்குத் தேவைப் படுகின்ற எண்ணிக்கையில் படுக்கைகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

7)சுத்தமும் சுகாதாரமும் எல்லா மருத்துமனைகளிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

8) மருத்துவர்களின் வேலை அறைகள் புதிதாக கட்டப்பட்டு குளிர் சாதனம் பொருத்தப் பட வேண்டும். எல்லா வெளி நோயாளிகள் பிரிவிலும் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.

9) மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பணியார்களை அவ்வப்போது வேலைக்கு எடுப்பதை நிறுத்திவிட்டு முறையாக வேலை நியமனங்கள் செய்ய வேண்டும்.

10) மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

தங்கள் கல்விப் படிப்பை முடித்தவுடன் டாக்டர்கள் முதலில் பயிற்சி மருத்துவர்களாக மூத்த நிபுணர்களின் கீழ் நியமிக்கப்படுவர். அவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர் அல்லது எப்பொழுது கூப்பிட்டாலும் வேலைக்கு வர வேண்டும். பயிற்சி மருத்துவர்களுக்கு வளாகத்திலேயே தங்குமிடம் கொடுப்பது மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

அவசர நேரங்களில், முதலில் பயிற்சி மருத்துவரே நோயாளியைக் கவனிப்பார். பிறகு தான் தேவைப்பட்டால் நிபுணர்கள் அழைக்கப்படுவர். இப்படி பயிற்சி மருத்துவர் முக்கிய பொறுப்பை வகிக்கிறார். மேலும் அவர்கள் தனிப்பட்ட முறையில்  நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய ஊதியம் அரசாங்கத்தாலும் மருத்துவமனை நிர்வாகத்தாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் போராடும் மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருவது போல, அரசாங்கத்திற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்குவதில் ஆர்வம் இல்லை, நோயாளிகளுக்கு சரியான மருத்துவம் கொடுப்பதை உறுதி செய்ய பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படையான தேவைகளை வழங்குவதற்கும் எந்தவொரு அக்கரையும் இல்லை.

அரசாங்க மருத்துவமனைகளின் தரம் திட்டமிட்ட முறையில் சிதைக்கப்பட்டு வருகிறது. இதனால் பெருத்த இலாபத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள , பெரிய முதலாளிகளால் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகமான மக்கள் செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். இதை எதிர்த்து, பயிற்சி மருத்துவர்கள் பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

எப்பொழுதெல்லாம் பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள், “நோயாளிகளின் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாதவர்கள்” என்றும் “சமூக விரோதிகள்” என்றும் பலவகையிலும் அரசாங்கமும் நிர்வாகமும்அவர்கள் மீது முத்திரை குத்துகின்றனர். ஏழை நோயாளிகளின் தரமான மருத்துவ சேவை அளிப்பதில் துளியும் அக்கரை இல்லாத அரசு, திடீரென்று நோயாளிகளின் உடல்நலத்தைப் பற்றி “ஆழ்ந்த அக்கரையை”வெளிக் காண்பிக்கத் தொடங்குகிறது.

பயிற்சி மருத்துவர்களுக்கு அவப் பெயரை உருவாக்கவும், அவர்களைத் தாழ்த்திக் காட்டவும்,அரசு மற்றும் அரசாங்கங்களின் திட்டமிட்ட தந்திரம் இது. அரசாங்கத்தின் மற்றும் அரசின் இந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக, பயிற்சி மருத்துவர்கள் தங்களுடைய போராட்டத்தைப் பற்றியும் கோரிக்கைகளைப் பற்றியும் உண்மைகளை முன்வைத்து எல்லா மக்களுடைய நலன்களையும் பாதுகாப்பதற்காகப் போராடும் தங்களுடைய நியாயமான போராட்டத்திற்கு எல்லா நோயாளிகளிடமும் மக்களிடமும் ஆதரவு தருமாறு கேட்டு வருகின்றனர். 

Pin It