பாசிசம் தோற்கடிக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாக் கூட்டத்தை சூன் மாத இறுதியில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் சென்னையில் நடத்தியது. தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அமைப்பாளர், தோழர் கபிலன் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்று, கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். பாசிசம் என்ற பிரச்சனை, தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும் முக்கியமானதென அவர் விளக்கினார். நம்முடைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, வரலாற்றுப் படிப்பினைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மக்களாட்சி இயக்கத்தின் தலைவர் திரு இராகவன், இன்றைய சூழ்நிலையில் பாசிசத்தை வீழ்த்திய வெற்றியின் 70-ஆவது ஆண்டு விழாவின் முக்கியத்துவத்தையும், பாசிசத்திற்கு எதிரான பிற அமைப்புக்களோடு சேர்ந்து மக்களாட்சி இயக்கம், இந்த நிகழ்ச்சியை நாடெங்கிலும் நடத்தி வருவதன் நோக்கத்தையும் விளக்கிக் கூறினார்.

இதைத் தொடர்ந்து "வரலாற்றின் படிப்பினைகளை மறந்துவிடக் கூடாது" என்ற தலைப்பில் மக்களாட்சி இயக்கம் தயாரித்த ஒரு காட்சிவிளக்கம் முன்வைக்கப்பட்டது. இக் காட்சிவிளக்கம், ஐரோப்பாவில் இட்லர் பாசிசத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் விவரித்தது. பாசிசத்திற்கும், செர்மனியின் இராணுவமயமாக்கலுக்கும் பின்னணியில் அமெரிக்காவின் பெரும் நிறுவனங்களும், அமெரிக்க அரசாங்கமுமே இருந்ததையும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அது தெளிவாக வெளிப்படுத்தியிருந்தது. ஐரோப்பாவில் ஒருவர் மீது ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோமென ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ளலாமென அன்று சோவியத் யூனியன் முன்வைத்ததை, பிரித்தன், பிரஞ்ச் அரசாங்கங்கள் புறக்கணித்ததை அது வெட்ட வெளிச்சமாக்கியது. மாறாக இந்த நாடுகள், செர்மனியோடும், இத்தாலியோடும் தனித்தனியாக ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டனர். இவ்வாறு அமெரிக்காவும், பிரித்தனும், பிற ஏகாதிபத்திய சக்திகளும் இட்லரைப் பயன்படுத்தி சோவியத் யூனியனை நசுக்க முயற்சித்தனர். அவர்களுடைய முயற்சி முதலில் வெற்றி பெற்றாலும், இறுதியில் சோவியத் யூனியன் மற்றும் அதனுடைய மக்களுடைய போராட்ட வீரம் உயர்ந்து நின்றது. அவர்கள் இட்லருடைய பாசிச இராணுவ ஆக்கிரமிப்பைத் தோற்கடித்தனர்.

காட்சிவிளக்கம், இன்றைய உலகில் அமெரிக்கா எப்படி நாசி பாசிசத்தைத் தொடர்ந்து வருகிறது என்றும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தையும், தலையீட்டையும் எதிர்க்கும் நாடுகளையும், மக்களையும் அது காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கியும், ஒடுக்கியும் வருகிறது என்பதையும் விளக்கியது. இந்தியப் பெரு முதலாளிகளும், அவர்களுடைய கட்சிகளான பாஜக, காங்கிரசு போன்ற அரசியல் கட்சிகளும் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளி வர்க்கத்தையும், மக்களையும் இதே பாசிச நடவடிக்கைகள் மூலம் தாக்கத் தயங்குவதில்லை. ஐரோப்பாவில் பாசிச அனுபவத்திலிருந்து சரியான படிப்பினைகளை மக்கள் பெற வேண்டுமெனவும், பாசிசத்திற்கு முடிவு கட்ட வேண்டுமானால் மக்கள் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியும் காட்சி விளக்கம் முடிவுற்றது.

இக்கூட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, ஏஐடியுசி, தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் சங்கம்(F.I.T.E.), சிபிஐஎம்எல்-மக்கள் விடுதலை மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

காட்சி விளக்கத்தைத் தொடர்ந்து, துவக்கத்திலிருந்தே இந்திய அரசு எப்படி பாசிசமாக இருந்து வந்திருக்கிறது என்பது குறித்தும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கும், இந்திய அரசின் அணுகுமுறையும் பல்வேறு கொள்கைகளும் இந்திய முதலாளி வர்க்கத்தின் ஏகாதிபத்திய நோக்கங்களை முன்வைத்தே இயங்கி வந்திருக்கின்றன என்பது குறித்தும் ஒரு நல்ல ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. பெரும்பான்மையான மக்களுடைய நலன்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்திய அரசு எப்படி வாக்குச் சீட்டுகளையும், தோட்டாக்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறது என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பலரும் பேசினர். 40 ஆண்டுகளுக்கு முன்னர், இந்திரா காந்தி நெருக்கடி நிலையை நாட்டில் திணித்தபோது இதுதான் நடைபெற்றது. தற்போது அதே போன்ற நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், தொழிலாளர்களும் பெருந்திரளான மக்களும் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்துவதையும், சுவரொட்டிகள் வைப்பதையும், சனநாயக உரிமைகளைச் செயல்படுத்துவதையும், அரசு தடுத்து வருவதைப் பங்கேற்றவர்கள் சுட்டிக் காட்டினர். அதே நேரத்தில், பெரு முதலாளித்துவக் கட்சிகள் இந்த வழிமுறைகள் மீது ஆதிக்கம் செலுத்துவது அனுமதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் பல்வேறு வழிகளில் பாசிசமாக இருக்கிறது. பெரு முதலாளிகள் கட்டுப்படுத்தும் ஊடகங்கள் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்து, நடுத்தட்டு மக்களுடைய கருத்துக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆளும் வர்க்கத்தினுடைய கட்சிகளின் பின்னால் பெரிய ஏகபோகக் குடும்பங்கள் உள்ளனர். அவர்கள் பாசிச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு இக்கட்சிகளுக்குக் கட்டளையிடுகின்றனர். 

எனவே, பிரச்சனையின் அடிவரை சென்று பாசிசத்தை அகற்றுவதற்கு, அரசை தங்களுடைய நலனுக்காக மேலாண்மை செய்வதற்கும் மக்களை முட்டாளாக்குவதற்கும் முதலாளி வர்க்கம் அவ்வப்போது முன்னேற்றும் தனிப்பட்ட முகங்களை மட்டுமே குறிவைக்காமல், மக்களுடைய கோபமானது இந்த அமைப்புக்கு எதிராக செலுத்தப்பட வேண்டும்.

இந்த முன்முயற்சி, உண்மைகளை எடுத்து விளக்குவதாகவும், தற்காலத்திற்கு மிகவும் பொறுத்தமானதாகவும் இருந்ததாக பங்கேற்றோர் பாராட்டினர். இப்படிப்பட்ட கூட்டங்களை இன்னும் பல்வேறு இடங்களில் நடத்த வேண்டுமென அவர்கள் கருத்துக் கூறினர். 

Pin It