மார்ச் 4, 2018. அன்று உலகம் முழுதும் உள்ள பல நாளேடுகளின் வலைத்தளங்கள், "ஆஸ்திரேலியாவில் இன்னும் நாற்பதே ஆண்டுகளில் cervical cancer என்ற கருப்பைவாய்ப் புற்றுநோய் ஒழிக்கப்படும்", என்ற ஒரு அதிமுக்கிய செய்தியினை தாங்கியிருந்தது. "Rome wasn't built in a day" என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த அளப்பரிய சாதனை இன்று நேற்று நிகழ்ந்த ஒரு அதிசயத்தால் உருவானது கிடையாது. 2007ஆம் ஆண்டில் இருந்து நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாகச் சிறார்களுக்கும் சிறுமிகளுக்கும் அளிக்கப்பட்ட கருப்பை வாய்ப் புற்றுநோயினை தடுக்கக்கூடிய தடுப்பூசியின் வழி, இப்புற்றுநோய்க்கு காரணமான நோய்த்தொற்றின் சதவிகிதம், இத் தடுப்பூசி சிகிச்சையினை எடுத்துக்கொண்டவர்களின் மத்தியில், 24%இல் இருந்து வெறும் 1% ஆக குறைந்திருப்பது வெகு சமீபத்தில், ஆய்வின் வழி கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நிகழும் இந்த மாற்றம் குறித்து உலகம் ஏன் இத்தனை கவனம் கொள்ளவேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதினில் எழலாம். அதற்கான பதில், இப்புற்றுநோயினை ஏற்படுத்தும் நோய்த்தொற்றிக்கான காரணியின் வீரியத்தில் இருக்கிறது. இந்நோய்த் தொற்றினை ஏற்படுத்தும் காரணியின் பெயர் Human Papilloma Virus. இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகளில் எண்ணிக்கை அளவில் முதலிடம் பிடிப்பதும், உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பொதுவான புற்றுநோய் வகையாக இருப்பது, இந்த கருப்பை வாய்ப் புற்றுநோய்.

கருப்பை வாய்ப் புற்றுநோயினை தடுப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருப்பினும் தடுப்பூசியின் வழி அதனைத் தடுத்தல் சிறப்பானதொரு வழியாக கண்டறியப்பட்டு, தற்பொழுது 2 வகை தடுப்பூசிகளை ஆய்வின் வழி உருவாக்கியுள்ளனர். கருப்பை வாய்ப் புற்றுநோயின் தீவிரம் எத்தகையதென்றால் உலக அளவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சம் மக்களுக்கு இப்புற்றுநோய் தாக்கி, சுமார் 3 லட்சம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர்.

முன்பு கூறியதைப் போன்று, இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகளில் முதன்மையானது கருப்பை வாய்ப் புற்றுநோய். இவ்வகைப் புற்றுநோயினை உண்டு செய்யும் நோய்த்தொற்றிற்கு ஆளாகக்கூடிய 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் நம் நாட்டில் கிட்டத்தட்ட 36 கோடி பேர் இருக்கின்றனர். தற்போதைய கணக்கெடுப்பின் வழி கண்டறிந்த செய்தி என்னவென்றால், ஒவ்வொரு வருடமும் சுமார் ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இவ்வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, தோராயமாக 75 ஆயிரம் பேர் இப்புற்றுநோயினால் பலியாகிறார்கள் என்பதே. இந்தத் தரவின் படி, உலக அளவில் இப்புற்றுநோயினால் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது. ஆக, ஆஸ்திரேலியாவில் நிகழும் இந்த முன்னேற்றத்தினை மற்ற நாடுகளை விட இந்தியா இன்னும் தீவிரமாய் உற்றுநோக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

தற்பொழுதைய ஆய்வின் படி, பாலுறவில் ஈடுபடும் பெண்களில் 80% பேர், பிறப்புறுப்பில் HPV நோய்த்தொற்றினை தங்களது ஐம்பதாவது வயதிற்குள் பெற்றுவிடுகிறார்கள். இந்த தரவு மாத்திரமே இந்நோய்த்தொற்றின் தீவிரத்தை நமக்கு உணர்த்தக்கூடியதாய் இருக்கிறது. சரி. இந்த நோய்த்தொற்று எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போம்.

HPV என்ற Human papilloma virus தொடுதல் மூலம் பரவும் ஒருவகைத் தொற்று. பிறப்புறுப்பில் பாலுறவு கொண்டாலோ, வாய் வழி பாலுணர்வைத் தூண்டும் oral sex கொண்டாலோ, இயற்கைக்கு மாறான குதம் வழி பாலுறவு கொண்டாலோ அல்லது கைகளினால் பிறப்புறுப்பினைத் தொடுவதன் வாயிலாகவும் இந்நோய்த் தொற்று ஏற்படலாம். இதில் கவனம் கொள்ளவேண்டியது என்னவென்றால், காண்டம் பயன்படுத்துவதன் வழி இந்நோய்த் தொற்றினை தடுக்கமுடியாது என்பதே. காரணம், காண்டம் பிறப்புறுப்பினை முழுமையாக மூடக்கூடியதாக இல்லாதிருப்பதால். அதே நேரம், இந்நோய்த் தொற்று, பொருட்களைத் தொடுவதன் வழி ஏற்படுவதில்லை, எடுத்துக்காட்டு: கழிவறை சீட். 15 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலரில் பெரும்பான்மையானவர்கள் இந்நோய்த் தொற்று ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் இந்நோய்த் தொற்று ஏற்பட்டவரில், பெரும்பான்மையானவர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான எந்த வித அறிகுறிகளும் தென்படாது, அதனால் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது.

அவர்களில் 10 முதல் 20 சதவிகிதப் பெண்களுக்கு இந்நோய்த்தொற்று நிலைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது. ஆக, இதுவே பின்னாளில் புற்றுநோயினை உண்டு செய்யும் முக்கிய காரணியாக மாறுகிறது. பின்னாளில் என்றால், சுமார் 20 முதல் 25 வருடங்கள். ஆக வழக்கமான சோதனைகளின் வழி மாத்திரமே கருப்பை வாயினில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்களைச் சரியாக நாம் கண்டறிந்து, இப்புற்றுநோயினை அது முழுமையாக ஏற்படுவதற்கு முன்னமே கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சையினை மேற்கொள்ள முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இப்புற்றுநோய்க்கு HPV நோய்த்தொற்றே முதன்மையான காரணம் என்று நாம் சொல்லும் அதேவேளையில் அது மாத்திரமே இத்தொற்றினை புற்றுநோய்க்கு இட்டுச்செல்வதில்லை என்பதையும் நாம் அறிதல் வேண்டும். வெகு காலம் ஹார்மோன் சார்ந்த கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, இளம் வயதில் இருந்தே பாலுறவில் ஈடுபடுவது, பலருடன் உடலுறவில் ஈடுபடுவது, புகையிலை உட்கொள்வது, புகைப்பது, மற்றும் HIV நோய்த்தொற்று போன்றவை HPV நோய்த்தொற்றை புற்றுநோயாக உருமாறுவதற்கு வழி வகுக்கும் உப காரணிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதோடு HPV நோய்த்தொற்றோடு இணைந்த கிளாமிடியா (Chlamydia) நோய்த்தொற்று, herpes வைரஸ் நோய்த்தொற்று, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, சத்தில்லாத ஆகாரம், வறுமை, சுத்தமின்றி இருத்தல், ஆகாரத்தில் மிகக் குறைந்த antioxidants ஆகியவையும் உப காரணிகளாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

தற்பொழுது வரை சுமார் 100 வகையான HPV நோய்க்கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் நாற்பதுக்கும் மேலான வகைகள் கருப்பை வாயினில் நோய்த்தொற்று ஏற்படுத்தக்கூடியதென்றும், அதில் சுமார் 15 வகைகள் கருப்பை வாய்ப்புற்றுநோயினை ஏற்படுத்தும் சாத்தியத்தை பெற்றிருப்பதாக அறியப்பட்டுள்ளது.

எனவே இதில் இருந்து காத்துக்கொள்ள, உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி, இது குறித்த மேற்கொண்ட தகவல்களையும், கருப்பை வாய்ப் புற்றுநோயினில் இருந்து காத்துக்கொள்ள இருக்கும் வழிவகையான தடுப்பூசி பற்றியும் அவசியம் கேளுங்கள். முக்கியமாக பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள், உங்கள் மருத்துவரிடம் இது குறித்து விசாரித்து காலத்தே அவர்களுக்கு இந்நோய்த் தடுப்புச் சிகிச்சையினை அளிக்க முயலுங்கள்.

வரும் முன் காப்பதே என்றும் நலம். 

Pin It