டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சட்டமன்றப் பணியை முன்வைத்து ஒரு விவாதம்
கொரோனா என்ற கொள்ளை நோய்க்குத் தீர்வு காண உலகம் முழுவதும் ஆய்வுகள் முழுவீச்சில் நடைபெற்றும் இதுவரை எந்தவொரு நம்பிக்கை தரும் மருந்தும் கண்டறியப் படவில்லை. ஒருவேளை இன்று மருந்து கண்டறியப்பட்டால் கூட அது பலகட்ட சோதனைகளைக் கடந்து மக்களின் பயன்பாட்டுக்கு வர அடுத்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் உணவில் கூட ஃபாஸ்ட் ஃபுட் என்று துரிதத்தை எதிர்நோக்கும் மக்கள் இதனை ஏதோ ஆங்கில மருத்துவத்தின் போதாமை போன்று நம்பிக்கை இல்லாமல் பார்க்கின்றனர். இந்தச் சூழலில்தான் மரபுவழி மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ முறைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த மருத்துவத் துறைகளில் ஆய்வு முறைகளை வெளிப்படையாகவும், உலகத் தரத்துடனும் மேற்கொண்டு கொரோனாவுக்கான மருந்து தயாரிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்புவோர் ஒருபுறம். ஆனால், ஏற்கனவே நமது பாரம்பரிய மருத்துவங்களில் கொரோனாவுக்குத் தீர்வு உள்ளது என்ற ரீதியிலான அற்புதக் கதைகளை அவிழ்த்து விடுவோர் மறுபுறம். இரண்டாம் வகையினர் கொரோனா போன்ற நோய்களே மருந்து மாஃபியாவின் சதி என்ற ரீதியில் பக்கம் பக்கமாக பதிவுகளை எழுதிக் குவிக்கின்றனர். இந்தச் செய்திகளில் உள்ள உண்மையை ஆராயாமல் உயர் நீதிமன்றம் போன்ற நாட்டின் உயர் அமைப்புகளே கூட கருத்து தெரிவித்து வருகின்றன. பிரதான ஊடகங்களும் கொரோனாவை குணமாக்கும் சித்த மருத்துவம் என்ற ரீதியில் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அப்படி என்னதான் நடக்கிறது மருத்துவ உலகில்? இவர்கள் சொல்வதுபோல் பாரம்பரிய மருத்துவத்திலேயே எல்லாமும் உள்ளதா? நாம்தான் ஆங்கில மருத்துவத்திற்கு அடிமைகளாகி மரபுகளையும் வேர்களையும் தொலைத்து விட்டோமா? மீண்டும் மரபுவழி மருத்துவத்துக்குத் திரும்புவதுதான் இதற்கான தீர்வா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்றால் இக்கேள்விகளை நாம் எந்தவித சார்புத் தன்மையும் இல்லாமலும், உணர்ச்சி வசப்படாமலும் அணுக வேண்டும். எல்லாம் நமது பாரம்பரியத்தில் உள்ளது என்று கண்மூடித்தனமாக அதை ஆதரிப்பதும், எதுவுமே இல்லை என்று முற்றிலுமாக ஒதுக்குவதும் சரியான அணுகுமுறை அல்ல. எப்படி இந்த விஷயத்தை எதிர்கொள்வது என்பதை எடுத்துக்காட்டுகிறது 1927 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டப் பேரவையில் நடைபெற்ற இந்த விவாதம்.
அப்போது மன்றத்தில் பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அலோபதி மருத்துவமுறை மிகவும் செலவுபிடிக்கக் கூடியதாக இருப்பதால் வசதியானவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய நிலை உள்ளது. எனவே கிராமப்புறங்களில் மரபுவழி மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உறுப்பினர் ஒருவர் தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்று அறியப்படும் முத்துலட்சுமி அம்மையார் இத்தீர்மானத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். அதற்கு அவர் முன்வைக்கும் வாதங்கள் தர்க்கப்பூர்வமானவை. பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்தவை.
மரபு வழி மருத்துவத்தையும், ஆங்கில மருத்துவத்தையும் ஒப்பிட விரும்பவில்லை என்று தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தும் முத்துலட்சுமி அம்மையார், “அறுவை சிகிச்சைகளிலும், மகப்பேறு, கண் மருத்துவம் போன்ற சில சிறப்பு சிகிச்சை முறைகளிலும் ஆங்கில மருத்துவம் கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் அதே வேளையில் ஆயுர்வேத மருத்துவத் துறையில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை” என்கிறார்.
பின் தீர்மானம் கொண்டு வந்த உறுப்பினரை நோக்கி, ‘ஒருவேளை உங்களுக்கு குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வந்தால் ஆயுர்வேத மருத்துவரிடம் செல்வீர்களா அல்லது அலோபதி மருத்துவரிடமா' என்று வினவுகிறார்.
அது இந்தியாவை மலேரியா நோய் கடுமையாக பாதித்திருந்த காலகட்டம். முத்துலட்சுமி அம்மையாரின் குழந்தையையும் ஒருகட்டத்தில் இந்த நோய் தாக்குகிறது. இதில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்.
“எனது குழந்தைக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டபோது குயினைன் மருந்தை சாப்பிட மறுத்துவிட்டது. யூனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்கும் சில மருத்துவர்களிடம் நான் இதுகுறித்து ஆலோசித்தபோது அவர்கள் அனைவரும் கூறிய ஒரே பதில், மலேரியா காய்ச்சலுக்கு குயினைன் தவிர வேறு சிறந்த மருந்து ஏதும் இல்லை என்பதே.”
இவ்வாறு ஆங்கில மருத்துவத்தை விதந்தோதினாலும், தான் ஆயுர்வேத மருத்துவ முறையின் மீது அதிக மரியாதையை வைத்துள்ளதாக உறுதிபடக் கூறுகிறார் முத்துலட்சுமி;. இதற்கான காரணங்கள் இரண்டு: முதலாவதாக, பாரம்பரிய மருத்துவம் மிகவும் செலவு குறைந்ததாக இருப்பதால் அதிகமான மக்களுக்குப் பயன்படுகிறது; இரண்டாவதாக, இந்த மண்ணின் மருத்துவமுறையாக, தனது சொந்த மருத்துவ முறையாக இருப்பது.
அதேவேளையில் இந்த மருத்துவமுறை பெரிதும் சொந்த அனுபவங்களைக் கொண்டதாகவும், (அறிவியல்பூர்வமான ஆய்வுகளோ, முன்னேற்றமோ இன்றி) தேங்கிய நிலையிலும் உள்ளது என்று சாடும் அவர், மேலைநாட்டின் மருத்துவமுறைகளைப் போன்று அறிவியல் அடிப்படையில் இதனை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்று முடிக்கிறார்.
“சாதாரணமான மற்றும் பொதுவான சில உடல் உபாதைகளைத் தீர்க்க வல்ல சில மூலிகை மருந்துகளும், மிகச் சிறந்த கஷாயங்களும் ஆயுர்வேதத்தில் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் மனித உடல் சார்ந்த, உடற்கூறியல் சார்ந்த அறிவு போதுமான அளவில் ஆயுர்வேதத்தில் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா அதன் சொந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும் கொண்டிருந்த காலத்தில் நமது மருத்துவக்கலை உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் மிகவும் முன்னேறியதாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த மட்டிலேயே அது நின்றுவிட்டது. அதேவேளையில் மேற்குலகம் உடலியல், உடற்கூறியல், வேதியியல், இயற்பியல் என, சுருக்கமாகச் சொன்னால் மருத்துவக் கலையின் அனைத்துப் பிரிவுகளிலும் மிக வேகமான முன்னேற்றத்தைக் கண்டுவிட்டது”.
இவ்வாறாக கிராமப்புறங்களிலும், நன்முறையில் பயிற்சி பெற்ற அலோபதி மருத்துவர்களின் சேவையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் முத்துலட்சுமி அம்மையார், உள்ளுர் மருத்துவ முறைகளை மேம்படுத்தவும், வளர்ச்சிபெறச் செய்யவும் தேவையான உதவிகளையும், உத்வேகத்தையும் அரசு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
“உள்ளுர் மருத்துவமுறைகளில் ஆய்வு செய்ய விரும்பும் நபர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். நமது மருத்துவமுறையை பகுத்தறிவு மற்றும் அறிவியல்பூர்வமான முறையில் வளர்த்தெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இதற்காக உடலியல், உடற்கூறியல், இயற்பியல் மற்றும் வேதியியல் சிறந்து விளங்கும் மாணவர்கள் அல்லது மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்று, மருத்துவராகப் பணியாற்ற முழுத்தகுதியைப் பெற்றுள்ள மருத்துவர்களையே கூட இந்திய மருத்துவ முறைகளில் ஆய்வு மேற்கொள்ளத் தேர்வு செய்யலாம்” என்று தனது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் முன்வைக்கிறார் அவர்.
இவ்வாறு முத்துலட்சுமி அம்மையார் போன்ற எத்தனையோ அறிஞர்களின் சீரிய முயற்சிகளின் விளைவால், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்று முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிடத்தக்க அளவிலாவது அறிவியல் அடிப்படையிலானதாக மாற்றப்பட்டுள்ளன. சித்த மருத்துவப் படிப்பின் பாடத்திட்டத்தை இணையத்தில் தேடிப் பாருங்கள். உடலியல் (physiology), உடற்கூறியல் (anatomy), உயிர் வேதியியல் (bio-chemistry), மருந்தியல் (pharmacology) மற்றும் நுண்ணுயிரியியல் (micro biology) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பல்வேறு துறைகளின் அடிப்படைகள் ஏறக்குறைய எம்.பி.பி.எஸ் மாணவர்கள் பயிலும் அதே பருவங்களில் சித்த மருத்துவ மாணவர்களுக்கும் கற்பிக்கப்படுகின்றன. கூடுதலாக அவர்கள் கற்றுக் கொள்வது சித்த மருத்துவ வரலாறு, தமிழ் இலக்கியங்கள் மற்றும் மூலிகை ஆய்வுகள் செய்யத் தேவையான தாவரவியல் போன்றவையே.
எனவே, ஒருவர் சித்த மருத்துவராகப் பட்டம் பெற அடிப்படை அறிவியல் தேவையாக இருக்கிறது. அதேவேளையில், சித்த மருத்துவர் பட்டம் பெற்ற அனைவரும் அறிவியல் அடிப்படையில் சிந்தித்து செயல்படுகிறார்களா, புதிய ஆய்வுகளை அறிவியல் பூர்வமாக பாரபட்சமின்றி நிகழ்த்துகிறார்களா என்றால் இல்லை என்பதே பதில். அறிவியல் பூர்வமாகச் சிந்திக்காவிட்டால் கூட பரவாயில்லை, பல சித்த மருத்துவர்கள் நவீன அறிவியலையே நிராகரிக்கும் பார்வை கொண்டவர்களாக உள்ளனர்.
போதாக்குறைக்கு சித்த மருத்துவர் என்ற போர்வையில் தங்களது சொந்த அனுபவங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் பல்வேறு நபர்கள் உள்ளனர். கொரோனா புகழ் திருத்தணிகாசலம் இந்த வகையைச் சேர்ந்தவர்தான். அவரே தன்னை ‘சித்தர்’ என்று அழைத்துக் கொள்கிறார். தனது கனவில் சில சித்தர்கள் வந்து தான் முன்னெப்போதும் கேள்விப்பட்டிராத மருந்துகளைக் கூறி சிகிச்சையில் தனக்கு உதவினார்கள் என்று கட்டுக்கதைகளை வேறு அவிழ்த்து விடுகிறார். இதையும் கேள்வி கேப்பாடே இன்றி ஏற்றுக்கொண்டு பக்தர்களின் மனநிலையில் அவரை ஆதரிக்க ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இப்படிப்பட்ட மோசடிக்காரர்கள் மீது பாரபட்சம் ஏதுமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், முத்துலட்சுமி அம்மையார் போன்ற அறிஞர்கள் வழியில் சிந்தித்து நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை நவீன அறிவியல் கூறுகளுடன் இயைந்ததாக மேம்படுத்த அரசு முன்வர வேண்டும். நமக்குத் தேவையானது சித்த மருத்துவமே அன்றி சித்தர் மருத்துவம் அல்ல.
- நந்தகுமார் இராதாகிருஷ்ணன்