corona migrant workers march 600பொருளாதார ஆய்வறிக்கை

2020-21 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் ஓர் ஆய்வறிக்கைக்கான அறிவியல் நோக்கையோ, பாரபட்சமற்ற உண்மைசார் அணுகுமுறையையோ வெகு அரிதாகவே காண முடிகிறது. பாஜக அரசின் தோல்விகளை மறைப்பதற்கான சாதனமாக ஆய்வறிக்கை அவக்கேடான முறையில் திரிக்கப்பட்டு தற்புகழ்ச்சியையும், பொய்களையும் பரப்புரை செய்கிறது.

இந்திய அரசின் கொள்கை, தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்படும்  பொருளாதாரத்தின் விலையைக் காட்டிலும் மனித வாழ்வின் மதிப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், ”அனைத்தின் விலையையும் அறிந்தும்  எதனுடையை மதிப்பையும் அறியாத ஆஸ்கார் வொயில்டின் சூதனைப் போலல்லாமல்,” ஆபத்திலிருக்கும் ஓருயிரைக் காப்பாற்றுவதே தர்மத்தின் தோற்றமாக மகாபாரதம் குறிப்பிடுவது போல், தொற்றுநோய்த் தடுப்புக்கான இந்தியாவின் கொள்கைமுடிவு மனிதாபிமானக் கொள்கையின் அடிப்படையில் உருவானது.

என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை மீட்க முடியும், இழந்த மனித உயிர்களை மீண்டும் திரும்பப் பெற முடியாது என்பதை அங்கீகரித்ததால், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றுவதில் இந்திய அரசு கவனம் செலுத்தியது என்றும் புகழ்பாடுகிறது பொருளாதார ஆய்வறிக்கை. இவ்வாறு பொய்யையை உண்மையாகத் திரித்துக் கூறுவதால் யார் உண்மையான சூதன் என்பதை மக்கள் மறந்து விடப் போவதில்லை.

பாஜக அரசு கொண்டு வந்த பொதுமுடக்கத்தால் 37 லட்சம்  நபர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப் பட்டதாகவும் 1 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டதாகவும் பாராட்டும் இந்த அறிக்கை, பொருளாதார முடக்கத்தினால் எத்தனை வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து ஒன்றுமே குறிப்பிடவில்லை.

பொருளாதாரத்தில் ‘V’ வடிவ மீட்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வு அறிக்கையில் பல முறை குறிப்பிடப் பட்டுள்ளது. கோவிட் தாக்கத்திற்கு முன்பிருந்த பொருளாதார நிலைக்கு மீண்டு வந்தால்தான் பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளது எனக் குறிப்பிட முடியும்.

அரசு தரப்புப் புள்ளியியல் தரவுகளில் பொருளாதாரச் சரிவு 7.7 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசப் பண நிதியம் 2025இல்தான் இந்தியப் பொருளாதாரம் கோவிட்-19 தாக்கத்திற்கு முந்தைய நிலைக்கு மீண்டு வரும் எனக் குறிப்பிடுகிறது. ஆனால் பொருளாதார ஆய்வறிக்கை 2022ல் இந்தியப் பொருளாதாரம் 11 விழுக்காடு வளர்ச்சி பெறுமெனக் குறிப்பிடுகிறது!

தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் கருவூலக் கடன்களுக்கான தர மதிப்பைப் பொருத்தமில்லாமல் குறைக்கின்றன என்றும், ஆகவே இந்திய அரசு அவற்றிற்கு அச்சப்படாமல் செலவுகள் செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆனால் இதே தர்க்கத்தை உள்நாட்டுக்குள்ளும் பொருத்திப் பார்க்கலாமே! எதற்காக மத்திய அரசு குறைந்த வட்டியில் கடன் வாங்கும் போது மாநிலங்களின் தர மதிப்பீடு குறைக்கப்பட்டு அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு அவற்றை மத்திய அரசு தள்ளியுள்ளது என்பதற்கும், சிறு குறு நிறுவனங்களை ஏன் பெருநிறுவனங்களை விட அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு இந்திய அரசு தள்ளியுள்ளது என்பதற்கும் இதே வாதத்தை பொருத்திப் பார்க்கலாமே! இவற்றை எந்த அடிப்படையில் நியாயப்படுத்த முடியும்?

இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள்வளம் கொண்ட, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் அரசு அதிகம் கடன் பெறுவதால் தனியார் துறை பாதிக்கப்படாது என்றும், மாறாக, அது தனியார்துறையின் நடவடிக்கைகளுக்குத் தூண்டுதலாக அமையும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

பிறகு ஏன் கோவிட்-19 தாக்குதலுக்குப் பிறகும் இந்திய அரசு சிக்கன நடவடிக்கையைக் கையாண்டு வருகிறது என்ற கேள்வி எழுகிறது. வளர்ந்த நாடுகளில் ஆரம்ப காலத்தில் அதிக நிதிச்சலுகைகள் அளிக்கப்பட்டன, இங்கு அப்படி அளிக்க வேண்டியதில்லை, இந்திய அரசு திறமையாக எப்பொழுது அளித்தால் மக்களுக்கு அதிகப் பயன்பாடு கிடைக்கும் என்ற அடிப்படையில் உரிய நேரத்தில் சரியான அளவிற்கு நிதியுதவி அளித்தது எனப் பாராட்டுகிறது இந்த ஆய்வறிக்கை.

ஆயுஷ்மான் திட்டத்தைச் செயல்படுத்தாத மாநிலங்களுடன் ஒப்பிடும் போது ஆயுஷ்மான் திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களில் மருத்துவக் காப்பீடுகள் அதிகரித்துக் குழந்தை இறப்பு விகிதம் குறைந்து, குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகளின் பயன்பாடு மேம்பட்டிருப்பதாகவும், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றி அதிக விழிப்புணர்வு அடைந்திருப்பதாகவும் போற்றுகிறது பொருளாதார ஆய்வறிக்கை..

அரசு சேவைகளால் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் குடிநீர், வீட்டு வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை பெறுவதில் ஏழைக் குடும்பங்களே  பணக்காரக் குடும்பங்களுடன் ஒப்பிடும் போது பெருமளவில் பயனடைந்திருப்பதாக நம்பமுடியாததொரு பொய்யைப் பரப்புரை செய்கிறது பொருளாதார ஆய்வறிக்கை..

இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கடுமையாக அதிகரித்து விட்டதாகவும், பெருஞ்செல்வந்தர்களிடமிருந்தும் வரி விதிக்க வேண்டுமென்றும் ஆக்ஸ்ஃபார்ம் அறிக்கை பரிந்துரை செய்கிறது. பொருளாதார ஆய்வறிக்கை என்ன கூறுகிறது, என்றால், பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவதன் மூலமே பொருளாதார மறுபங்கீட்டை  சாத்தியமாக்க முடியும் என்றும், இப்போதைய நிலையில் பொருளாதார மறுபங்கீடு சாத்தியமில்லை என்றுமே வாதுரைக்கிறது.

பொருளாதார வளர்ச்சியின் மூலம் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியா விட்டாலும், வறுமையைக் குறைக்க முடியும் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. சாதியை ஒழிக்கா விட்டாலும், தீண்டாமையைக் குறைத்தால் போதும் என்பது போன்ற வாதமே இது.

வளர்ந்த நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை (ஜிடிபி) அதிகப்படுத்துவதன் மூலமே சமத்துவமின்மையையும், வறுமையையும் குறைக்க முடியும் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை!.

இந்தியாவில் பொருளாதாரத்தை அதிகமாக ஒழுங்குமுறைப்படுத்துவதே  திறனற்ற செயல்முறைக்கு காரணமாகிறது என்றும், ஒழுங்குமுறைகளைத் தளர்த்தி, எளிதாக்க வேண்டும் என்றும் தாராளமயப் பரிந்துரையை முன்வைக்கிறது

பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) அதிகமாகும் போது கடனின் அளவைக் குறைக்க முடியும். ஆனால் குறைந்த கடனின் மூலம் அதிக வளர்ச்சியை அடைய முடியாது ஆகவே மக்கள் எக்கேடு கெட்டால் என்ன ஜிடிபியை அதிகரிக்கும்  பாதையிலே இந்தியா ஓட வேண்டும் என்ற ஆலோசனையே ஆய்வறிக்கை எங்கும் விரவியுள்ளது.

நிதிநிலை அறிக்கை 2021-22

முற்றிலும் இணைய வடிவில் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டதை மட்டுமே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சமாகக் கருத முடியும்.

சர்வாதிகார பாஜக அரசை உண்மையாகப் புகழ்பாடவோ, பாராட்டவோ மக்களோ, எதிர்க் கட்சிகளோ முன்வர மாட்டார்கள் என்பதால் வழக்கம் போல் தற்புகழ்ச்சிக்கான, பிரசாரத்திற்கான வாய்ப்பாக நிதிநிலையறிக்கையை மீண்டும் ஒரு முறை பயன்படுத்தியுள்ளனர்.

பாஜக அரசு சரியான முறையில் பொதுமுடக்கம் செய்ததால்தான் பொருளாதாரமும், வாழ்வாதாரமும், மக்களின் இன்னுயிரும் ஆபத்து நேரிடாமல் காக்கப்பட்டன, இல்லையென்றால் பெரும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்று நிதியமைச்சர் கூறுகிறார்.

இதனால் இந்தியாவில் கோவிட்19 தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் பத்து லட்சம் பேருக்கு 112 என்ற அளவில் மிகவும் குறைந்துள்ளதாகவும், தொற்றின் தாக்கமும் பத்து லட்சம் பேருக்கு 130 என்ற அளவிற்கு மிக மிகக் குறைந்துள்ளதாகவும் இதன் மூலமே பொருளாதார மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

மக்களும் எதிர்க்கட்சிகளும் எதிர்த்து வரும் வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், கனிமத்துறையை வணிகமயப் படுத்துதல், உற்பத்தி சார்ந்த சலுகை போன்ற உன்னதமான அமைப்புமாற்றச் சீர்திருத்தங்களை பாஜக அரசு விரைவாகச் செயல்படுத்தியதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

பொது விநியோகம் மூலம் உணவு தானியங்கள் வழங்குதல், விவசாய மானியத் திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம், இவை யாவுமே கோவிட்-19 தாக்கத்திற்கு முன்பிருந்தே செயல்படுத்தப்படும் திட்டங்கள். ஆனால், இவற்றைப் புதிதாக அறிவித்த திட்டங்கள் போல் நிதித் தொகுப்பில் சேர்த்துக் காட்டி பெரிய நிதித் தொகுப்பு அளித்து விட்டதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை மீண்டும் குறிப்பிட வேண்டியுள்ளது.

27.1 லட்சம் கோடி ரூபாய்க்கு, அதாவது 13% மொத்த பொருளாக்க மதிப்பிற்கு நிதித் தொகுப்பு அளித்துள்ளதாக நிதியமைச்சர் பெருமிதம் கொள்கிறார்! சமூகத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினரான ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், முதியவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அளிக்கப்பட்ட பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, மூன்று முறை ஆத்மநிர்பர் யோஜனா  என அவர்கள் அளித்த உதவி 5 சிறும நிதி நிலையறிக்கைக்குச் சமம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அரசு 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே நிதித்தொகுப்பு அளித்துள்ளது. அதிலும் பெரும்பாலானவை கடன் திட்டங்களே. விவசாய உதவித் தொகையும் (6000 ரூபாய்) உரிய விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை, வருமான வரி செலுத்துபவர்களான தகுதியற்ற பயனாளிகளுக்கே அளிக்கப்பட்டது என்பதே தகவலுரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆண்டிற்கு 6000 ரூபாய் வழங்கும் பிரதம மந்திரி விவசாய நிதித் திட்டத்திற்கு 2021-22 நிதியாண்டில் 15,000 கோடி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனில் சொல்லளவிற்குக் கூட அக்கறை காட்டாத பாஜக அரசு  சென்ற ஆண்டைக் காட்டிலும் 2021-22 நிதியாண்டிற்கு 7,474 கோடி குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்ற ஆண்டில் 1.11 லட்சம் கோடி அளிக்கப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்திற்கு இந்த ஆண்டு, வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ள நிலையிலும், அதைக் காட்டிலும் குறைவாக 73,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஒரு தளத்தை  உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அவர்களுக்கு ஓரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை.

மருத்துவ சுகாதாரத் துறைக்கு 2,23,846 கோடி ஒதுக்குவதாகக் கூறி அதனுடன் நகர்ப்புறங்களுக்குக் குடிநீர் அளிக்கும் ஜல் ஜீவன் திட்டத்தையும், தூய்மை இந்தியா-2 எனப்படும் நகர்புறங்களில் சுகாதாரக் கழிப்பிடங்களை உருவாக்குவதற்கான திட்டத்தையும் கோர்த்து அவற்றையும் மருத்துவ சுகாதாரத் திட்டங்களாகக் காட்டியுள்ளது!. கோவிட்-19 தடுப்பு மருந்துக்காக 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் படி 6 விழுக்காடு கல்விக்கு ஒதுக்கப்படும் என அறிவித்து விட்டு உயர் கல்விக்கு வெறும் 65,350 கோடி ஒதுக்கியுள்ளது பாஜக அரசு.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியப் பெருநிறுவனங்களுக்கும் மட்டுமே சலுகை அளிக்கும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான உற்பத்திசார்ந்த உதவித் தொகை 13 துறைகளுக்கு அளிப்பதற்காக 1.97 லட்சம் கோடி ஒதுக்கப்படவுள்ளது. ஆனால் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வெறும் 15,699 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது.

தனியார்மயம்:

பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, இந்தியக் கப்பல் கட்டுமான நிறுவனம், இந்திய கன்டெய்னர் கார்ப்பரேஷன், ஐடிபிஐ வங்கி, பிஇஎம்எல், பவன் ஹான்ஸ், நீலாச்சல் இஸ்பத் நிகாம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் 2021-22இல் தனியார் துறைக்கு விற்கப்படும் என்றும், ஐடிபிஐ வங்கியுடன் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளும், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனமும் 2021-22இல் தனியார் மயமாக்கப்படவுள்ளது என்றும், மேலும் பொதுத் துறைக் காப்பீட்டு வங்கியான எல்ஐசி பொதுப் பங்கு வழங்கல் மூலம் தனியார் மயமாக்கப்படவுள்ளது என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

செயல்படாத சொத்துக்கள் தற்சார்பு இந்தியாவுக்கு (‘ஆத்மநிர்பர் பாரத்திற்கு’) பங்களிக்காது. ஆதலால் முக்கியமற்ற சொத்துக்கள், நிலங்கள் விற்கப்படும் என நிதியமைச்சர் புது விளக்கம் அளித்துள்ளார்.

தற்சார்பு என்ற பெயரில் முக்கியத் துறைகளில் 4 பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே அரசால் நிர்வகிக்கப்படும் என்றும், மற்ற அனைத்து நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும், முக்கியமற்ற துறைகளில் அனைத்து நிறுவனங்களுமே தனியார் மயமாக்கப்படும்.

இதற்கான திட்டத்தை நிதி அயோக் ஏற்படுத்தும் என அறிவித்துள்ளார் i) அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு ii) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு iii) மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி, பிற கனிமங்கள் iv) வங்கி, காப்பீடு மற்றும் நிதி சேவைகள் ஆகியவை மட்டுமே முக்கிய துறைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பாஜக அரசு மாநிலங்களையும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஊக்குவிக்கவுள்ளது. 2021-22 நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதன் மூலம் 1,75,000 கோடி ரூபாய் நிதித் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது உள்கட்டமைப்பு சொத்துக்களை விற்று நிதித் திரட்டி புதிய  நெடுஞ்சாலைத் திட்டங்கள், ரயில்வே திட்டங்களின் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம் என்று அறிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளை எதற்கு விற்கப்படவுள்ளது?

புதிய நெடுஞ்சாலைகளை ஏற்படுத்துவதற்காக! ரயில்வே சொத்துக்களை எதற்கு விற்க வேண்டும் புதிய ரயில்வே தடங்களை உருவாக்குவதற்காக! இதை எந்த விதத்தில் வளர்ச்சி என்று கருத முடியும்? இப்படிப்பட்ட திட்டங்கள் வேண்டுமென்று யார் அழுதார்கள்? யாருக்காக இத்தகைய திட்டங்கள்? பெருமுதலாளிகளைத் தவிர யார் இதனால் பலனடையப் போகிறார்கள்?

உள்கட்டமைப்பில் வளர்ச்சி ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறைச் சொத்துகளையெல்லாம் விற்று விட்டு, மக்கள் நலன்களுக்கு எந்த விதத்தில் துணை செய்யாத, விளிம்பு நிலை மக்களையும் இயற்கை வளங்களையும் அழிக்கும் நெடுஞ்சாலை திட்டங்களையே செயல்படுத்துகிறார்கள்.

ஏற்கெனவே பாரத்மாலா திட்டத்தில் 13,000 கி.மீ.க்கும் அதிகமான சாலைகள் திட்டம் நடைமுறைபடுத்தப்படுத்தப்பட்டது. தற்பொழுது 2022 மார்ச்சுக்குள் 3,800 கி.மீ தொலைவில் நெடுஞ்சாலைகளை ஏற்படுத்தவும், 11,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளின் மூலம் பொருளாதார வழித்தடத்தை ஏற்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பாஜக அரசு இந்த நான்கு மாநிலங்களின் மீதும் கூடுதல் அக்கறை செலுத்திப் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய அக்கறையுடன் அசாம், மேற்கு வங்கத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1.03 லட்சம் கோடி முதலீட்டில் மதுரை-கொல்லம் வழித் தடம், சித்தூர்-தாச்சூர் வழித்தடம் ஆகியவை உட்பட -3,500 கி.மீ தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சென்னை - சேலம் 277 கி.மீ. அதிவேக நெடுஞ்சாலை 2021-22இல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் சென்னையில் ஒரு கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே தேவைக்கும் அதிகமாகவே நெடுஞ்சாலைகள் உள்ளன. மக்கள் மீது உண்மையிலே அக்கறை இருந்திருந்தால் பொதுப் பேருந்துப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் ஆனால் வெறும் 18,000 கோடி ரூபாய் மட்டுமே பொதுப் போக்குவரத்துத் துறைக்கு ஒதுக்கிடப்பட்டுள்ளது.

சாலைகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் போது பேருந்துகளுக்கு ஆயிரம் கோடிகளிலே ஒதுக்கப்படுகிறது. உண்மையில் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதிக எண்ணிக்கையில் பொதுப் பேருந்துச் சேவையை ஏற்படுத்த வேண்டுமே தவிர பெருமுதலாளிகளுக்கு சுங்கவரி பெற்று தரும் நெடுஞ்சாலைகளை அல்ல.

பொதுத்துறை உள்கட்டமைப்புச் சொத்துக்களை விற்பதன் மூலம் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி திரட்டப்படவுள்ளது. இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5 சாலைகளும், மின் பகிர்மானக் கழகம் (பிஜிசிஐஎல்) 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், உள்நாட்டு, அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்கப்படவுள்ளது.

ரயில்வே துறையில் சரக்கு நடைபாதை, சொத்துக்களை விற்றுப் பணம் திரட்டப்படும் என்றும் விற்காமல் மீதமுள்ள மற்ற விமான நிலையங்களும், அதன் சொத்துக்களும் விற்கப்படும் என ஆரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செயல்பாட்டிலுள்ள சுங்கவரிச் சாலைகள், கெயில், ஐஓசிஎல், ஹெச்பிசிஎல் ஆகியவற்றின் எண்ணெய், எரிவாயுக் குழாய்கள், பிஜிசிஐஎல், ஏ.ஐ.ஐ விமான நிலையங்களின் சொத்துக்கள், பிற ரயில்வே உள்கட்டமைப்புச் சொத்துக்கள், பொதுத்துறை நிறுவனங்களின் கிடங்குகளான மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம், இந்தியத் தேசிய விவசாயக் கூட்டுறவுக் கூட்டமைப்பு ஆகியவையும், விளையாட்டு அரங்கங்களும் விற்கப்படவுள்ளன.

துறைமுகங்களின் நிர்வாகப் பொறுப்புகள் தனியார்மயமாக்கப் படவுள்ளது. முக்கியத் துறைமுகங்களில்  2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 7 திட்டங்கள், பொது-தனியார்க் கூட்டாண்மை (PPP) முறையில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த கடப்பாடுள்ள நிறுவனங்களின் (LLP) செயல்பாடுகள் குற்ற நடவடிக்கை விதிமுறைகளிலிருந்து நீக்குவதற்கான செயல்முறை தொடங்கப்படும் என்றும், ஒரு நபர் நிறுவனங்களும் எந்த வரம்புக்குட்படாமல் வளர்வதற்கும் அனுமதிக்கப்படும் என அறிக்கப்பட்டுள்ளது. தொடக்க நிறுவனங்களில் முதலீடுகளுக்கு மூலதன ஆதாய வரிவிலக்கை இன்னும் ஒரு வருடம் நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆழ்கடல் கணக்கெடுப்பு ஆய்வுக்காகவும், ஆழ்கடல் உயிர் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே பன்முகப் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட திட்டமா? சந்தேகம்தான், புதிய ஆழ்கடல் வளங்களைத் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிப்பதற்கான முன்னோட்டமாகத்தான் தோன்றுகிறது.

2021-2022 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டுத் தொகை 34.83 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டிற்கான மத்திய அரசின் வரிவருவாயும், நிதி ஒதுக்கீடுகளும் நம்பகத் தன்மையில்லாதவாறு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, இதே நிலை தான் 2021-22லும் தொடர உள்ளது.

இதில் உண்மையில் எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறார்கள் என்பதற்கே காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 2020-21 ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த பொருளாக்க மதிப்பில் 9.5% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22ல் நிதிப் பற்றாக்குறை 6.8 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆண்டிற்கான மூலதனச் செலவினங்களுக்கு 5.54 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் இது 2020-2021இல் ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் 34.5 விழுக்காடு அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகத்திற்கு நிதிநிலை அறிக்கைக்கு வெளியே சிறு சேமிப்பு நிதியின் மூலம் கடன் அளிக்கும் செயல்முறையைக் கைவிடுவதாகவும், நேரடியாக நிதிநிலை அறிக்கையின் மூலமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிச் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் மத்திய அரசு இன்னும் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இந்திய உணவுக் கழகத்திற்கு நிதியளிக்க முன்வரும் என்பதும், இல்லை, பொது வினியோக முறையை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

கூட்டுறவுக் கூட்டாண்மை:

2025-2026க்குள் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 4.5 விழுக்காடாக்க் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலங்களை மட்டும் நிதிப் பற்றாக்குறையை 2023-24க்குள்ளேயே 3 விழுக்காடாக குறைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது.

பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, மத்திய அரசு நிதியளிக்கக் கூடிய  திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது. பதினைந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு வரி வருவாயில் 41 விழுக்காட்டை மாநிலங்களுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இது வரை 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி 42 விழுக்காடு வரி வருவாய் மாநிலங்களுக்கு  அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப் படி, 2021-2022இல் மாநிலங்கள் மொத்தப் பொருளாக்க மதிப்பில் 4 விழுக்காடு நிகரக் கடன் பெற அனுமதிக்கப்படும் என்றும்  0.5 விழுக்காடு கூடுதல் கடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு:

பொருளாதார மந்த நிலையிலும் பெருநிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. வருமான ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ள நிலையில், பெருஞ்செல்வந்தர்களின் நேரடி வரியை அதிகரிப்பதன் மூலமும், சொத்து வரி விதிப்பதன் மூலமும், நேரடி வரி வருவாயை அதிகரித்து மக்களுக்குப் பயனுள்ள முறையில் ஒதுக்கீடு செய்ய முடியும்.

அதை பாஜக அரசு எப்படிச் செய்யும்? பாஜக அரசு பெருநிறுவன வரியைக் குறைப்பதன் மூலம் பெருமுதலாளிகளுக்கு 1,45,000 கோடி ரூபாய் சலுகை அளித்தது. நேரடி வரிவருவாயைக் குறைத்ததன் மூலம் 23,200 கோடி சலுகை அளித்தது. ரியல் எஸ்டேட் துறைக்கு 20,000 கோடியும், ஏற்றுமதித் துறைக்கு 50,000 கோடியும் நிதிச் சலுகை அளித்தது.

இவ்வாறு 2.5 லட்சம் கோடி அரசு வருவாய் குறையக் காரணமான பாஜக அரசால் எவ்வாறு செல்வந்தர்களின் மீதான வரியை அதிகப்படுத்த முடியும்? நேரடி வரியில் எந்தப் புதிய மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் இரட்டை வரிவிதிப்புக்கு ஆளாகமல் இருக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஊக்குவிக்கப்படும் நிதிமயமாக்கம்:

உண்மையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்காத பாஜக அரசு ஏற்கெனவே ஊதிப் பெருத்திருக்கும் நிதித் துறையையும், பங்குச் சந்தையையும் மேலும் பெருக்க வைக்கவே மேலும் மேலும் சலுகைகளை வழங்கி வருகிறது. குஜராத் காந்திநகர் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம்,  (கிஃப்ட்) எனப்படும் சர்வதேச நிதிச் சேவை மையத்தில் புதிய நிதித் தொழில்நுட்ப மையத்தை (‘ஃபின் - டெக் மையம்’) ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெருமுதலாளிகள் கடன் பத்திரங்களின் மூலம் நிதிபெறுவதை எளிமைப்படுத்தும் விதமாகக் கடன்பத்திரச் சந்தையும், நிதித் தொடக்க நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படும். குஜராத்தின் சர்வதேச நிதிச் சேவை மையத்தில் முதலீடு செய்யப்படும் வெளிநாட்டு நிதிகளுக்கு  வரிச் சலுகையும்; அதில் அமைந்துள்ள வெளிநாட்டு வங்கிகளின் முதலீட்டுப் பிரிவுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதில் நிதிச் சேவை பெறுவதற்கான எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கான முதலீட்டு நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட்டு முதலீட்டுக்கான நிதி நிறுவனம் ஆகியவற்றுக்குக் கடன் அளிக்க வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக சட்ட மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செபி சட்டம், 1992, வைப்புத் தொகைச் சட்டம், 1996, பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956 மற்றும் அரசாங்கப் பத்திரங்கள் சட்டம், 2007 ஆகியவற்றின் நெறிகளை ஒருங்கிணைத்து ஒற்றை நெறியாக மாற்றி நிதிமூலதனச் சந்தையை ஊக்கப்படுத்தவும், நிதி வர்த்தகத்தை மேலும் எளிமைப்படுத்தவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டில் பங்குச் சந்தை முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ஈவுத் தொகை விநியோக வரி விலக்கப்பட்டது. இந்த ஆண்டில் உள்கட்டமைப்பு நிதி முதலீட்டுப் பங்குகள், ரியல் எஸ்டேட் நிதி முதலீட்டுப் பங்குகளில் முதலீடுகளை ஊக்குவிக்க முதலீட்டாளர்களுக்கு நேரடிப் பிடித்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பங்குகளுக்கு அளிக்கப்படும் ஈவுத் தொகை வருவாயை வரி செலுத்துவதற்காக முன்கூட்டியே மதிப்பிட முடியாது என்பதால், ஈவுத் தொகை அறிவிக்கப்பட்ட பிறகே வரி செலுத்துவதற்கான கடப்பாடு, ஏற்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஈவுத் தொகை வருவாய் மீது மிகக் குறைந்த வரியே விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். உள்கட்டமைப்புத் துறையில் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு இறையாண்மைக் கருவூல நிதிகள், ஓய்வூதிய நிதிகளுக்கு முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருவாயில் 100% வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீடுகளை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக முதலீடுகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் - தனியார் நிதி மீதான தடை, வணிக நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு, உள்கட்டமைப்பில் நேரடி முதலீடு தொடர்பான நிபந்தனைகள் - முதலீட்டாளர்களுக்கு சிரமம் அளிப்பதால் அவை தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். அந்நிய முதலீடுகளுக்கு பூஜ்ஜிய வரிக் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதிக் கடனைத் திரட்ட அனுமதித்துள்ளார்.

வீட்டுக் கடன் பெறுவதில் 1.5 லட்சம் ரூபாய்க்கு வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்தை விலையை விட 10 விழுக்காடு குறைந்த விலைக்கு வீடுகளை வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டது, இப்பொழுது இச்சலுகை 10-20 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.

மலிவு வீடுகள் கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிக்க ஒரு வருடம் வரிவிலக்கு அளித்துள்ளார். இதன் மூலம் லாபமடையப் போவது ரியல் எஸ்டேட் நிறுவனங்களே தவிர எளிய மக்களுக்கு இதனால் மலிவு விலையில் வீடுகள் கிடைக்கப் போவதில்லை.

விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாயங்களுக்கான வரிவிலக்கும், வெளிநாட்டுக் குத்தகைதாரர்களுக்குச் செலுத்தப்படும் விமானக் குத்தகை வாடகைகளுக்கான வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாளர்கள் கார்டெல் போல் செயல்பட்டு உலோக மூலப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளதால் அதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என சிறு குறு நிறுவனங்கள் போராடி வருகின்றன. பாஜக ஆரசு உரிய முறையில் அதை ஒழுங்குமுறைக்கு உட்படுத்தாமல் இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில் உலோக மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை இப்போது குறைத்துள்ளது.

இது ஒரு நீடித்த தீர்வாக அமையாது. இரும்பு, எஃகு, தாமிரக் கழிவுகள் ஆகியவற்றின் இறக்குமதி வரியைக் குறைத்துள்ளது. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மீதான சுங்க வரியையும் குறைத்துள்ளது இதன் மூலம் இறக்குமதிக் கட்டணத்தின் மதிப்பு கடுமையாக அதிகரிக்கவுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மின்னணு உபகரணங்கள், உதிரிப் பாகங்கள், சூரிய ஒளி மின்தகடுகள் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட புதிய கூடுதல் வரி (செஸ்) விதிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி இறக்குமதி மீது 2.5% வரியும், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரி குறைக்கப்பட்டு அதற்குப் பதில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 2.5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் மீது 4 ரூபாயும் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

மதுபானங்கள் (100%), பாமாயில் (17.5%), சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் (20%), ஆப்பிள் (35%) நிலக்கரி, லிக்னைட் மற்றும் கரி (1.5%), உரம் (யூரியா) (5%), பட்டாணி (40%)  போன்ற பல பொருட்களின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு, குறைக்கப்பட்ட அளவிற்கு விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியும் சேர்க்கப்பட்டுள்ளதால் இறக்குமதி விலையில் மாற்றம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மூலம் திரட்டப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. விவசாயத் துறையை பெருநிறுவனங்களின் ஏகபோகமாக்கவே அரசு மூன்று விவசாயச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.

டெல்லியிலும், இந்தியா முழுவதும் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து விட்டு விவசாயத் துறையை மேம்படுத்தப் போவது போல் ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தவே இந்த விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரியைக் கொண்டுவந்துள்ளது.

மொத்தத்தில் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நூறு நாள் வேலை திட்டத்திற்கே குறைவாகத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகளின் துயர் துடைக்க எந்த திட்டமும் இல்லை. மக்களின் நுகர்வை ஊக்குவிக்கவும் எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

பெரு முதலாளிகளுக்குச் சாதகமான பங்குச் சந்தைகளை மையப்படுத்திய நிதிமயமாக்க அறிக்கையால் நாம் மீண்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளோம்.

- சமந்தா