தனது ஆட்சிக் காலத்தில் புதிதாக ஒரு பொதுத்துறையைக் கூட உருவாக்காத பிரதமர் என்றால் அது இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான் என்று காங்கிரஸ் எம்.பி.ரிபுன் போரா, கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியிருந்தார். அதுமட்டு மல்லாமல், தனது 8 ஆண்டு ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்றுத் தீர்த்துவிட்டது என்றும் அதிர்ச்சி கரமான புள்ளிவிவரங்களை வெளி யிட்டிருந்தார். அவரின் அந்த புள்ளிவிவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் திடீரென டிரெண்ட் ஆகி வருகின்றன. நாட்டின் 75-ஆவது சுதந்திர தின நிறைவை யொட்டி, பாஜக, சங்-பரிவாரக் கூட்டத் தினர் மட்டுமே தேசபக்தர்கள் என்பது போலவும், நாட்டின் 8 ஆண்டுகளில் பல மடங்கு முன்னேற்றி இருப்பதாகவும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங் களில் இளைஞர்கள் கடும் விமர்சனத்தை முன்னெடுத் துள்ளனர். பிப்ரவரி மாதம் ரிபுன் போரா பேசிய தகவல்களுடன், கூடுதல் புள்ளி விவரங்களை இணைத்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

indian prime ministers and PSUசுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது 16 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மொத்தம் 33 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். நேருவுக்கு அடுத்து பிரதமராகப் பதவியேற்ற லால் பகதூர் சாஸ்திரி ஒரே ஆண்டிற்குள் 5 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். நாட்டின் மூன்றாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 1966 முதல் 1977 வரையும், பின்னர் 1980 முதல் 1984 வரையும் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சாதனையின் உச்சமாக 66 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். ராஜீவ் காந்தி 1984 முதல் 1989ஆம் ஆண்டுகளை வரையிலான காலத்தில் 16 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். 1989 முதல் 1990 வரை வெறும் ஓராண்டு மட்டும் பிரதமராக இருந்த ஜனதா தளம் கட்சித் தலைவர் வி.பி.சிங் 2 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். இவர்கள் யாருமே ஒரு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கவில்லை.

இந்தியாவில் புதிய தனியார்மய - தாராளமய உலகமயக் கொள்கையை அறிமுகப்படுத்திய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் கூட, 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் 14 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினாரே தவிர, விற்பனையில் இறங்கவில்லை. ஐக்கிய முன்னணி கூட்டணி சார்பில் பிரதமரான ஐ.கே.குஜ்ரால் காலத்தில் 1997 முதல் 1998 வரை 3 பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்றும் தனியாருக்கு விற்கப்படவில்லை. ஆனால், பாஜக சார்பில் முதன்முதலாக பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய், 1998 முதல் 2004-க்குள் 7 பொதுத் துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்றார். பொதுத் துறைகளை விற்பதற்கென்றே தனி அமைச்சரை (அருண் ஷோரி) நியமித்த பெருமையும் வாஜ்பாயையே சாரும். எனினும்கூட அவரது ஆட்சியில், 17 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியதாக ஒரு கணக்கு கூறுகிறது.

நிதியமைச்சராக இருந்து தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கையை நரசிம்மராவ் அமல்படுத்துவதற்கு காரணமாக இருந்தவரும், 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த வருமான மன்மோகன் சிங், தனது பதவிக் காலத்தில் 3 பொதுத் துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரை வார்த்தார். மறுபுறத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்களைஉருவாக்கினார். ஆனால், 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 8 ஆண்டு களுக்கும் மேலாக பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி இதுவரையில் ஒரு பொதுத் துறை நிறுவனத்தைக் கூட புதிதாக உருவாக்க வில்லை. ஆனால் 23 நிறுவனங்களை தனியாருக்கு விற்று முடித்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் புள்ளி விவரங்களை வெளியிட்டு பாஜக அரசின் லட்சணத்தை அம்பலப்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பாஜக ஆட்சியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுள்ளதாக கடுமையாகச் சாடி வருகின்றனர்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It