புரட்சிக்கவிஞர் பாரதிக்குப் பின்னர் தமிழகத்தில் தனது பாடல்களால் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்குத் தனி இடம் உண்டு. பாமர மக்களும் எளிதில் புரிந்துணரும் வண்ணம் தன் பாடல்களை திரையிசையில் ஒலிக்கச் செய்தவர். மக்கள் கவிஞர், பாட்டுக்கோட்டை என்றெல்லாம் புகழப்பட்ட இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள, செங்கபடுத்தான்காடு என்னும் கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியை கூட நிறைவு செய்யாத கல்யாணசுந்தரம் விவசாயப் பணிகளை செய்து வந்ததோடு, கௌரவம் பாராமல் பல்வேறு தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நாடங்களிலும் நடித்து வந்தார்.

pattukottai kalyanasundaramபாரதிதாசன் மேல் கொண்ட ஈடுபாட்டினால் அவரை வழிகாட்டியாக ஏற்று புதுவை சென்று அவரோடு இலக்கியப் பணியில் பயணிக்கத் தொடங்கினார். ஐம்பது அறுபதுகளில் திரைப்படங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. திரை நட்சத்திரங்கள் திரையில் நடித்துக் காட்டுவதை உண்மை என்று பலர் நம்பும் அளவிற்கு நடிகள் மீது தீரா நம்பிக்கை வைத்திருந்தனர். குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்கள் திரைத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்தார். பின்னர் தமிழக முதல்வராக வருவதற்குக் கூட அவருக்கு திரைப்பயணம் கை கொடுத்தது என்றால் அது மிகையில்லை. எம்.ஜி.ஆரின் புகழுக்கு கவிஞர் கல்யாணசுந்தரத்தின் சமூக சித்தாந்தப் பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு முறை எம்.ஜி.ஆர், நான் அமர்ந்திருக்கும் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினுடையது என்றார்.

ஆரம்ப காலத்தில் சுயமரியாதை கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கவிஞர் பிறகு பொதுவுடைமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றினார். ஏழை எளிய விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிய நிலபிரபுக்களையும் மேட்டுக்குடியினரையும் எதிர்த்து குரல் கொடுக்கலானார். தன்னுடைய பாடல்கள் அனத்தும் சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களின் குரலாகவே ஒலிக்கச் செய்தார். பட்டுக்கோட்டையார் கடைசிவரை தன் கொள்கைகளை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அவர் பாடல்கள் எழுதவில்லை. சமுக அவலங்களை சுட்டிக்காட்டவும் அவற்றைக் களையவுமே எழுதினார்.

 கையிலே வாங்கினேன் பையிலே போடலே

 காசு போன இடம் தெரியலே….

என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் ரசிப்பதற்கு மட்டுமின்றி ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்கவும் செய்தது.

 திருடாதே! பாப்பா திருடாதே !

 வறுமை நிலைக்குப் பயந்து விடாதே!

 திறமை இருக்கு மறந்துவிடாதே!

என்ற பாடல் மூலம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் நேர்மையையும் கற்றுத் தந்தார் கவிஞர்.

பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பான எண்ணங்கள் மக்கள் மனதில் வேரூன்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் சமூகத்தில் வளர்ந்தன. அவற்றைத் தடுக்க கவிஞர்,

 சின்னப்பயலே சின்னப்பயலே

 சேதிகேளடா…

 வேப்பமர உச்சில்நின்னு

 பேயொன்னு ஆடுதுன்னு

 விளையாடப் போகும்போது

 சொல்லி வைப்பாங்க –உன்

 வீரத்தைக் கொழுந்திலேயே

 கிள்ளி வைப்பாங்க

 வேலையற்ற வீண்ர்களின்

 மூளையற்ற வார்த்தைகளை

 வேடிக்கையாக கூட நம்பிவிடாதே-

என்று பாடி அறியாமை நீக்கி அறிவியல் புகுத்தினார். அதே பாடலில் தான்,

 தனியுடைமைக் கொள்கைகள் தீரத்

 தொண்டு செய்யடா-நீ

 தொண்டு செய்யடா!

 தானா எல்லாம் மாறும் என்பது

 பழைய பொய்யடா

என்று குரலெழுப்புகிறார். ஒடுக்கப்பட்ட ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமானால் போராடித்தான் பெற வேண்டும் என்பதை இப்பாடல் மூலம் உணர வைத்தார்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தி ஏராளமான பாடல்களை கவிஞர் தீட்டியிருந்தாலும்,

 ஊருக்கெல்லாம் ஒரே சாமி

 ஒரே சாமி ஒரே நீதி

 ஒரே நீதி ஒரே நீதி

 கேளடி கண்ணாத்தா-

என்ற பாடல் மூலம் அவரின் தொலைநோக்குப் பார்வையை நாம் உணர முடியும்.

 தூங்காதே தம்பி

 தூங்காதே…

பாடலில் ஒவ்வொரு வரிகளும் சமூகச் சீர்கேடுகளை சாட்டை கொண்டு அடிப்பது போல் இருக்கும். குறிப்பாக,

 பொறுப்புள்ள மனிதரின்

 தூக்கத்தினால்-பல

 பொன்னான வேலையெல்லாம்

 தூங்குதப்பா!

என்ற பாடல்வரிகள் எத்தனை பொருள் பொதிந்தவை..

விவசாமும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் சுரண்டப்படும் ஆதங்கத்தை உணர்ந்தவரான கவிஞர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்..

 காடு வெளெஞ்சென்னு மச்சான் !- நமக்கு

 கையுங் காலுந்தானே மிச்சம்

 இப்போ

 காடு வெளைட்டும் பொண்ணே ! நமக்குக்

 காலமிருக்குது பின்னே!

 தேனாறு பாயுது வயலில்

 செங்கதிரும் சாயுது ஆனாலும்

 மக்கள் வயிறு காயுது அதிசயந்தான் இது…

பொதுச் சொத்துக்களை அபகரித்தும் இயற்கை வளங்களைத் திருடியும் பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகளைக் கண்டு மனம் நொந்து,

 குட்டி ஆடு தப்பி வந்தால்

 குள்ளநரிக்குச் சொந்தம்!

 குள்ளநரி மாட்டிகிட்டா

 கொறவனுக்குச் சொந்தம்

 தட்டுகெட்ட மனிதர் கண்ணில்

 பட்டதெல்லாம் சொந்தம் ------

என்று பாடுகிறார்.

பெண்கள் காலம் தொட்டு அடிமைகளாக வாழ்ந்து வருவதைக் கண்ட பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் உணச்சியூட்டும் பெண்விடுதலை பாடல்களைப் பாடி, பெண்களை விழித்தெழச் செய்தனர்.

அதே போல் மக்கள் கவிஞரும் ஆணுக்குப் பெண் அடிமை என்பதை ஏற்காது,

 ஆணுக்கு பெண்கள் அடிமை என்று

 யாரோ எழுதி வைச்சாங்க –அன்று

 யரோ எழுதிவைச்சாங்க—அன்று—அதை

 அமுக்கிப் பிடிச்சிகிட்டு விடமாட்டேன்னு

 ஆண்கள் ஒசந்துகிட்டாங்க---பெண்கள்

 ஆமைபோல் ஒடுங்கிப் போனாங்க

என அவருக்கே உரியநடையில், பெண்ணடிமைத்தனத்தை தோலுரித்தார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் இயற்கையான அன்பைக் கூட ஆரவாரமின்றி, ஆபாசமின்றி எளிய நடையில் தேன்சொட்டும் ரசனை மிக்கதாக மாற்றிக் காட்டியவர் நம் பட்டுக்கோட்டையார்,

 ஆடைகட்டி வந்த நிலவோ?---கண்ணில்

 மேடைகட்டி ஆடும் எழிலோ?.. .. .

 காடுவிட்டு வந்த மயிலோ?----நெஞ்சில்

 கூடுகட்டி வாழும் குயிலோ?

மேலும்,

 என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே---நீ

 இளைவளா மூத்தவளா வெண்ணிலாவே?

போன்ற பாடல்கள் எக்காலமும் ரசிக்கத்தக்கவையே!

நிகழ்கால சமூகத்தையும் கடந்தகால நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதும், சமூகத்தில் நடைபெறும் நெறிபிறழ்வு நிகழ்வுகளை சுட்டிக் காட்டுவதும், அவற்றை வெளிஉலகிற்கு கொணர்வதும் தான் எழுத்தாளர்களின் முக்கிய கடமையாகும். அக்கடமையை தான் வாழ்ந்த குறுகிய காலத்திலே நிறைவு செய்தவர் நம் மக்கள் கவிஞர். தன் பாட்டுத்திறத்தால் கலை உலகை ஆட்சி செய்த கவிஞருக்கு மூக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் தொடர்ந்து அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். தமிழ்ச் சமூகத்திற்கு ஈடு செய்ய இயலா இழப்பைத் தந்தது கவிஞரின் மறைவு. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தனது அஞ்சலியில்,

கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார்-ஒளிதெரிகிறது!

கண்களைத் திறக்கிறேன்; கல்யாணம் இல்லை—

கலையுலகு இருட்டாயிருக்கிறது

எனத் தெரிவித்தார். பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. உள்ளே அவரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளதோடு, அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை, புகைப்படங்களாகவும் செய்திகளாகவும் வைத்துள்ளனர். மண்டபத்தைச் சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் அனைத்தும் தமிழக அரசால் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழுகிறார் மக்கள் கவிஞர்..

- கா.இரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பேட்டை முத்துப்பேட்டை, திருவாரூர்-மாவட்டம்