இது கதையல்ல நிஜம்

(சமீபத்திய அஸ்ஸாம் கலவரத்தின்போது ஒரு கிராமத்தில் காணாமற்போன குழந்தைகளைத் தேடிய அனுபவத்தைப் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ராகுல் பண்டிதா ‘ஓபன்' இதழில் எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தொகுத்துத் தருகிறார் பேரா. அ. மார்க்ஸ்)

கடந்த ஜூலை 23 அதிகாலை, கொக்ராஜ்ஹர் மாவட்டத்திலுள்ள துரமாரி கிராமத்தவர்களுக்கு மிகவும் கொடூரமாக விடிந்தது. நோன்புக்குத் தயாராகிக் கொண்டிருந்த அந்த முஸ்லிம் மக்களை நோக்கி, திடீரென இராணுவ உடைகளுடன் வந்த சிலர் சரமாரியாகச் சுடத் தொடங்கி னர். அஞ்சி ஓடிய மக்கள் அவ்வூர்ப் பள்ளியில் ஓடுங்கினர். மீண்டும் மதியம் துப்பாக்கிச் சூடுகள் தொடர்ந் தன. மாலையில் அஸ்ஸாம் போலீஸ் படையினர் சிலர் வந்தனர். ஏனினும் பயனில்லை.

இரவு முழுவதும் துப்பாக்கிக் குண்டுகள் சீறிப் பறந்தவண்ணம் இருந்தன. தங்களிடமிருந்த குண்டு கள் தீர்ந்துவிட்டதாகக் கை விரித்த காவல்துறையினர், மக்களை ஓடித் தப்பித்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அகன்றனர்.

விடியும்வரை காத்திருந்த மக் கள் விடிந்த கையோடு கவுரங் ஆற்றைக் கடந்து அக்கரை சென் றனர். அங்கே மாவட்டக் காவல் துறை அதிகாரியும் துணை இராணு வப் படையினரும் நின்றிருந்தனர். இரவே ஆற்றைக் கடந்து வந்து இம்மக்களைக் காப்பாற்றுவதற்கு ஏனோ அவர்களுக்கு மனமிருக்க வில்லை. 

கூடியிருந்த மக்களில் ஒருவர் சொன்ன செய்தி கவலை அளிக் கக் கூடியதாக இருந்தது. நான்கு குழந்தைகள் துர்மாரியிலேயே சிக்கியுள்ளதாகவும், அவர்களைக் காப்பாற்றுவது குறித்துக் கொக்ராஜ் ஹர் காவல்துறைத் தலைவரிடம் கூறியபோது, அவர்கள் அன்று வரவிருந்த பிரதமரின் பாதுகாப்புப் பணியில் மும்முரமாய் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

சற்று நேரத்தில் பிரதமர் ஒரு முகாமுக்கு வருகை தந்து மக்க ளுக்கு ஆறுதல் கூறினார். அருகே பத்திரிக்கையாளர்களுக்காக ஒதுக் கப்பட்ட பகுதியில் ராகுல் பண்டிதா நின்றிருந்தார்.

சற்று நேரத்தில் தனது பரிவாரங் கள் புடை சூழ பிரதமர் அவ்விட த்தை விட்டு அகலத் தொடங்கி னார். பத்திரிக்கையாளர்கள் நின்றி ருந்த பகுதிக்கு அருகில் அவர் வந்த போது, "மிஸ்டர் பிரைம் மினிஸ் டர்!'' என ராகுல் உரக்கக் கூவினார். ஒரு கணம் பிரதமர் திகைத்து நின்ற போது துர்மாரியில் சிக் கியிருந்த அந்த நான்கு குழந்தைகளின் நிலை யைச் சொல்லி அவர்க ளைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார் ராகுல்.

"நான் அதைக் கவ னிக்கிறேன்" எனக் கூறி பிரதமர் அகன்றார். அரு கில் திகைத்து நின்றி ருந்த அஸ்ஸாம் முதல் வர் தாருன் கோகாயின் உதடுகள் "துர்மாரி, துர் மாரி'' என முணுமுணுத் தன.

பிரதமர் அவ்வி டத்தை விட்டு அகன்ற சில நிமிடங்களில் ராகுலை அணுகிய இரா ணுவ பிரிகேடியர் பாஸ்கர் கலிதா, "துர்மாரிதானே அது?" எனக் கேட் டார். அவர் தலைமையில் குழந்தை களைக் காப்பாற்ற ஒரு படைப் பிரிவு செல்ல உள்ளதை அறிந்த ராகுல், தானும் வரலாமா எனக் கேட் டார். ஏறிக் கொள்ளுங்கள் என்றார் கலிதா. அவருக்கு அடுத்த நிலையி லுள்ள அதிகாரி கர்னல் ராஜ்குமாரும் இராணுவ வாகனத்தில் இருந்தார்.

25 கி.மீ தொலைவில் இருந்த துர்மாரி கிராமத்தை அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் அடைந் தனர். கிராமத்தில் ஆளரவமில்லை. ஆங்காங்கு பிணங்கள் குண்டுக் காயங்களுடன் கிடந்தன. சில அரை குறையாய் எரிந்து கிடந்தன.

மக்கள் ஓடிய பின்பு வீடுகள் சூறையாடப்பட்டுத் தீ வைத்துச் சாம்பலாக்கப்பட்டிருந்தன. சாவி பொருத்தப்பட்டு ஒரு மோட்டார் சைக்கிள் அங்கே நின்றிருந்தது. யாரோ அப்போதும் வந்து எஞ்சியி ருந்த வீடுகளைக் கொளுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். இவர்களைப் பார்த்தவுடன் அவர் கள் ஓடியிருக்க வேண்டும்.

"இங்கே யார் இருக்கிறீர்கள்?'' என அஸ்ஸாமி மொழியில் பிரிகே டியர் கலிதா உரக்கக் கூவியது எதிரொலித்துத் திரும்பியதே ஒழிய பதிலில்லை. தேடிச் சலித்து யாரை யும் காணாத கலிதாவின் குழு திரும்பும் வழியில் அஸ்ஸாம் காவல்துறையினரைச் சந்தித்து பிணங்கள் அழுகிக் கிடக்கிற தகவ லைச் சொல்லிவிட்டு விரைந்தது.

பிணங்களை அகற்றுவது இரா ணுவத்தின் முன்னுரிமை அல்ல. அவர்களின் பணி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதே!

அடுத்த நாள் காலை லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த ராகுலுக்கு துப்ரியிலுள்ள பிலாஸ்பாரா முகாமிலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. உஸ்மான் என்பவர் பேசி னார். துரமாரிக்கு அருகில் உள்ள சிம்புல்கேயோன் எனும் கிராமத்தில் வசிக்கும் போடோ இனத்தைச் சேர்ந்த ஓனிர்பாரி என்பவரின் பாதுகாப்பில் 7 வயதும், 10 வயதுமுள்ள இரு முஸ்லிம் குழந்தைகள் உள்ளன என்று அவர் கூறினார்.

லாட்ஜ் பையன் வழியாக ஓனிர் பாரியிடம் செல்போனில் பேசிய போது அவரும் அதையே கூறி னார். ராகுல் உடனே பிரதமர் அலு வலகத்துடனும், பிரிகேடியர் கலி தாவுடனும் தொடர்பு கொண்டார்.

"ஒன்றும் பிரச்சினை இல்லை. அந்தக் கிராமத்திற்குப் போய்த் தேட லாம்" என கலிதா புறப்பட்டார்.

சிம்புல்கேயோன் போடோக் கள் வசிக்கும் ஒரு கிராமம். ஆண் கள் எல்லோரும் போலீஸ் நடவ டிக்கைக்கு அஞ்சி ஓடியிருந்தனர்.

ஓனிர்பாராவின் வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு, "எல்லோ ருமாய்ச் சென்று மக்களைப் பயப்படுத்த வேண்டாம்'' எனக் கூறிய பிரி கேடியர், கர்னல் ராஜ்குமார், ராகுல் ஆகியோர் சகிதம் அந்த வீட்டை நோக்கி நடந்தார்.

ஓனிர்பாராவின் வீட்டில் அவர் மனைவி, அம்மா, மூன்று குழந்தைகள் இருந்தனர். அந்தப் பெண் பாக்கு சீவிக் கொண்டிருந்தார். அஸ்ஸா மியரான பிரிகேடியர் காலித் அமைதியாக ஒனிர் பாரா எங்கே என விசாரித்தார். உதவியாளரிடமி ருந்த சாக்லெட் பாக்கெட்டை குழந்தைகளிடம் கொடுத்துப் புன்முறுவலித்தார்.

ஓனிர்பாராவின் மனைவியிடம் 500 ரூபாய்த் தாளொன்றும் கொடுக்கப்பட்டது. தங்களின் நோக்கம் குழந்தைகளைக் காப்பாற்றுவதுதான் என்பதை விளக்கிச் சொல்லிய பிரிகேடியர் அது குறித்து விசாரித்தார்.

தன்னுடைய கணவன் அப்படி இரு குழந் தைகளைக் பக்கத்து கிராமத்தில் கண்டது உண்மைதான் என்றும், அவர்களை அழைத்து வந்து காப்பாற்றினால் இங்குள்ள போடோக்க ளின் விரோதத்தைச் சம்பாதிக்க வேண்டிவ ருமே என்ற அச்சத்தால் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டதாகவும் ஓனிர் பாராவின் மனைவி கூறினார்.

எனினும் பசியுடனிருந்த குழந் தைகளுக்குத் தன் கணவன் ஒரு பலாப் பழத்தைத் தந்து விட்டு வந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

கிராமம் முழுவதும் தேடிச் சலித்து அவர்கள் திரும்பியபோது கொக்ராஜ்ஹர் தலைமைப் போலீஸ் அதிகாரியிடமிருந்து அழைப்பு வந் தது. குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என அவரும் கூறினார். பக்கத்து கிரா மங்களில் போய்த் தேடலாமா என ராகுல் கேட் டபோது தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

மீண்டும் ராகுல் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் தொலைபேசியை எடுக்கவேயில்லை.

- அ.மார்க்ஸ்

Pin It