கஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபாரூக் அப்துல்லாநேர்காணல் 

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் தேசிய அரசியல் எவ்வாறு தனது பிரச்சாரத்தை மாற்றிக்கொள்ள வலியுறுத்தியது என்பது பற்றி ஜம்மு கஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபாரூக் அப்துல்லா கூறுகிறார்.

 ஸ்ரீநகர் பாராளுமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்று தனது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவியபோதும், தேசியமாநாடு கட்சியின் தலைவரும், மூன்றுமுறை ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சராக இருந்தவருமான ஃபாரூக் அப்துல்லா திடீரென தேர்தலில் குதித்தார்.மிகவும் குறைவானவர்களே பங்கேற்ற ஏப்ரல் 9 வாக்களிப்பு நாளுக்கு முன்பும், பின்பும் நடைபெற்ற நேர்காணலில் அப்துல்லா, ஜம்மு-கஷ்மீரின் களநிலைமைகளையும், பாகிஸ்தானுடனான இந்தியாவின் நல்லிணக்கமற்ற உறவையும், மதசார்பின்மைக்கு இப்போது எழுந்துள்ள சவால்களையும் பற்றிப் பேசுகிறார்.

farook abdulla

 # இடைத்தேர்தலின் வாக்களிக்கும் நாளான ஏப்ரல் 9ல் ஸ்ரீநகர் முன்னெப்போதுமில்லாத வன்முறைகளைக் கண்டது. இதில் சாதாரண குடிமக்கள் 8 பேர் இறந்துவிட்டார்கள்: இதுவரை இல்லாத அளவுக்கு மிக்வும் குறைவானவர்களே வாக்களிக்க வந்தார்கள். தெருக்களில் நடைபெற்ற இந்தச் சீற்றத்துக்குக் காரணம் என்ன? 

 மக்கள் ஜனநாயகக்கட்சி (PDP) பா.ஜ.க. (பாரதிய ஜனதா கட்சி) கூட்டணி அதனுடைய மக்கள்விரோத மற்றும் அதிகாரப்பசிகொண்ட அரசியலின் விளைவாக நிகழ்ந்துவிட்ட இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்குப் பொறுப்பேற்றாக வேண்டும். இடைத்தேர்தலினோது அப்பாவிகளின் இரத்தம் கொட்டியதற்கு ஆளும்கூட்டணிதான் பொறுப்பு.. தேர்தல்கள் அமைதியாக நடைபெற்றிருக்கவேண்டும். ஆனால், இந்த அரசு அதை அவ்வாறு நடத்தத் தவறிவிட்டது. கஷ்மீரில் சூழ்நிலைகள் எவ்வாறு படிப்படியாக சீரழிக்கப்பட்டன என்பதையே இந்த இறப்புக்கள் காட்டுகின்றன. 

# 2002ல் இருந்து கஷ்மீரின் மைய நீரோட்டத்தில் இருந்த கட்சிகள் மின்சாரம், சாலைகள், தண்ணீர் போன்ற பிரச்சனைகளையே முன்நிறுத்தித் தேர்தல்க்ளில் போட்டியிட்டன. ஆனால், இந்தமுறை தேர்தலில் உங்கள் பிரச்சாரத்தில் அரசியல்கொள்கையே மையமாக இருந்தது. இந்த மாற்றத்தை எது ஏற்படுத்தியது? 

 இந்தியாவிலுள்ள மதவெறிசக்திகள் சூழ்நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்திய அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்ட பன்முகத்தன்மை என்ற சிந்தனைகூட அழிக்கப்பட்டுவருகிறது. இது இந்த மாநிலத்தின் அரசியலை மாற்றியிருக்கிறது. 2002ல் ஒற்றுமையும், பன்முகத்தன்மையும் மிகவும் வலுவான அம்சங்களாக இருந்தன. அப்போது மதசார்பின்மையின் வலிமைமிக்க மரபில்வந்த காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தது. அப்போது கண்ணுக்குத்தெரிந்த எந்த அச்சுறுத்தலும் இருக்க வில்லை. இன்று, சூழ்நிலை 360டிகிரி என தலைகீழாக மாறிவிட்டது. இந்தியாவை ஒருமுழுமையான ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆக்குவதற்கு டெல்லி யிலிருந்து கட்டளைகள் வருகின்றன. இது, இந்த நாடு உருவானபோது எங்கும் காணப்படாத ஒன்றாகும். இந்தியா ஒரு பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை நான் காண்கிறேன். மக்களைப் பிரித்தாளும் இந்தக்கொள்கையும், ஒரு மதத்தின் ஆட்சியை நடைமுறையாக்க ஆணையிடுவதும் தொடர்ந்தால் ஒரு இருண்ட எதிர்காலத்தைத்தவிர வேறு எதையும் என்னால் காணமுடியவில்லை. அமைதியின்மை இங்கே இருக்குமானால், எந்த ஒரு வளர்ச்சியும் இங்கே நடைபெறப்போவதில்லை. தொல்லைகள் அதிகமாகும்போது உள்நாட்டு உற்பத்தியும் (GDP) இங்கே வீழ்ச்சி அடையப்போகிறது.

# 1996ல் நிலைமைகள் மிகவும் கடினமாக இருந்தபோது நீங்கள் தேர்தலில் போட்டியிட்டீர்கள். 2017ல் சூழ்நிலை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ எவ்வாறு உள்ளது? 

 நாங்கள் இப்போதும்கூட குறைந்த அளவுக்கான துயரங்களை எதிர்கொள்ளவில்லை. (அதிகமாகவே சந்தித்துவருகிறோம்) துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் அன்று இருந்ததுபோல இன்று இல்லாமலிருக்கலாம். இருந்தபோதிலும் குறைந்தபட்சமாக மக்கள் முன்பு சிந்தனைகளை வைக்க முடிகிறது. ஆனால், இங்கு மிகப்பெருமளவிலான அமைதியின்மை நிலவுகிறது. இளைஞர்கள் கற்களை வீசுகிறார்கள். மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.... மேலும் ஒரு இணக்கமான சூழல் இங்கு இல்லை. தேர்தல் நடைபெறுவதில் நான் ஆச்சரியப்படவில்லை. துயர நிகழ்வுகளின் ஈர்ப்பு மிகப்பெரிதாக இருக்கும்போது இப்போது தேர்தல்கள் எதற்காக?ஆனால், ஒருகட்சி என்ற முறையில் இதில் ஈடுபடுவதைத்தவிர எங்களுக்கு வேறுவழி இல்லை. 

# கள நிலைமைகள் பற்றிய உங்கள் உணர்வு என்னவாக இருக்கிறது? 

 மிகப்பெருமளவுக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதை நான் காண்கிறேன். இளைஞர்கள் தோள்களை உயர்த்தி நிற்கிறார்கள். இவர்கள் தங்கள் உயிர்களுக்காக அஞ்சவில்லை. இந்தப்பள்ளத்தாக்கில் ஒவ்வொருநாளும் நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அழிவுக்கான ஒரு சிந்தனைச்சூழல் இங்கே உள்ளது. பல்வேறுமுனைகளிலும், அது மின்திட்டங்களாக இருந்தாலும் மக்கள் ஜனநாயக கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே ஏற்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி ஹுரியத் தலைவர்களோடு பேசுவதாக இருந்தாலும், இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் நடைபெற ஒருபொருத்தமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருந்தாலும் எதிலும் ஒரு முன்னேற்றம் என்பதே இல்லை. 

# உங்களுடைய பேரணிகளில் இந்த இடைத்தேர்தல் கொடுங்கோன்மைக்கும், பாசிசத்துக்கும் எதிரானதுஎன்று நீங்கள் விவரித்தீர்கள். கஷ்மீர் இன்று சந்திக்கும் அச்சுறுத்தல் எத்தகையது? 

 இந்ததேசத்தில் வளர்ந்துவரும் மதவெறிசக்திகளால் கஷ்மீர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. அந்த சக்திகளோடுதான் நாங்கள் போராடிக்கொண்டி ருக்கிறோம். இன்று வளர்ச்சியைப்பற்றியோ அல்லது சுரங்கவழிப்பாதைகள் கட்டப்படுவது பற்றியோ சிந்திக்க ஒன்றுமில்லை. ஆனால் அந்த சக்திகள் மற்ற எல்லா மதங்களையும் முடித்துக்கட்டவும், ஒற்றைமதத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் முயற்சிக்கின்றன. 

# 2014 பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தீர்கள். இந்தமுறை நீங்கள் எத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்கிறீர்கள்? 

 இந்தத்தேர்தல் எனக்கோ அல்லது எனது கட்சிக்கோ முக்கியமானதல்ல. ஆனால்,’கஷ்மீரியத்’ என்ற உணர்வு மீண்டும் நிலைபெற இது முக்கியமானது. முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக நாங்கள் தனித்துவத்தோடு மீள்வோமா என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ஆல் முன்னிறுத் தப்பட்டுள்ள ‘முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச்’ ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை முஸ்லீம் இளஞர்களிடையே புகுத்த ஆட்களைச் சேர்க்கத்துவங்கியுள்ளது: சேர்த்துக் கொண்டிருக்கிறது. 

# தெற்கு கஷ்மீரில் தேசியமாநாடு- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு ஜமாத் இலாமியின் ஆதரவு எந்த அளவுக்கு முக்கியமானது? அவர்களுடைய ஆதரவை நீங்கள் ஏன் எதிர்பார்த்தீர்கள்? 

 ஜமாத்-இ-இஸ்லாமி 2002ல் தெற்குகஷ்மீரில் இருந்து முஃப்தி மொஹம்மது சயீத்தை( PDP) ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது. இன்று PDP கட்சி ஆர்.எஸ்.எஸ்.ஐ தனது தோள்களில் சுமந்துகொண்டு நிற்கிறது. ஜமாத்-இ-இஸ்லாமி PDP கட்சியை ஆதரித்த்து தவறு என்று உணரந்துகொண்டிருக்கிறது. ஜமாத்-இ-இஸ்லாமியும்கூட ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்த ஆபத்தைக் காண்கிறது. மதவெறி அரசியலை எதிர்க்கும் கட்சிகளை ஆதரிக்கவேண்டிய தருணம் ஜமாத்-இ-இஸ்லாமிக்கும் வந்துவிட்ட்து. 

# நீங்கள், இஸ்லாத்தின் இஸ்லாத்தின் நலன்களுக்கான உறுதியான நிலைபாட்டை எடுத்தால் மட்டுமே உங்களை ஆதரிக்க முடியும்என்று ஜமாத்-- இஸ்லாமி உங்கள் அறிக்கைக்கு பதிலளித்துள்ளதே? 

 ஆம். ஆனால், நான் இஸ்லாத்துக்காக மட்டும் போராடவில்லை. இந்த நாடுமுழுவதுமுள்ள மக்களின் நிலைத்த தன்மைக்காகப் போராடுகிறேன். மதவெறி சக்திகளின் கரங்களில் சிக்கி மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.இரண்டு இளைஞர்கள் தங்கள் ஆடுமாடுகளை ஜார்கண்ட் சந்தைக்கு கொண்டுவந்தார்கள். குண்டர்கள் அவர்களை மரத்தில்கட்டி தொங்கவிட்டார்கள். மசூதிகளில் தங்கள் கடவுள்களின் படங்களை வைக்கப்போவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தங்களது நடைமுறைகளை எங்கள்மீது திணிக்க விரும்புகிறார்கள். இந்திய அரசியல் சாசனம் எங்கே? கஷ்மீர் முஸ்லீம்கள் ஒருபோதும் மதவெறி கொண்டவர்கள் அல்ல. மதவெறியை இஸ்லாம் எங்களுக்கு போதிக்கவில்லை. அது எங்களுக்கு சகோதரத்துவத்தையும், மற்ற மதங்களுக்கு மரியாதை செலுத்துவதையும் தான் கற்பித்தது. 

# உங்கள் கட்சியும்கூட பா... தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த காலத்தில் கூட்டணி வைத்திருந்த்து. பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை அடல் பிஹாரி வாஜ்பேயியைவிட எவ்வாறு வேறுபட்டிருக்கிறது? 

 வாஜ்பேயி ஆர்.எஸ்.எஸ்.ல் இருந்து வந்தவர்தான். ஆனால் அவர் இந்தியா உயிர்ப்போடு வாழவேண்டுமானால், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் வாழ்ந்தாகவேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அவரது சிந்தனை முற்றிலும் மாறுபட்டது. அவர் எல்லா மதங்களோடும் இந்தியா முன்னோக்கிச் செல்வதைக் காணவிரும்பினார். தற்போதைய நடைமுறை முற்றிலும் மாறுபட்டது. 

# மோடியும்கூட கஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வுகாண வாஜ்பேயியின் ஜம்பூரியத், இன்சானியத், கஷ்மீரியத்ஆகிய வார்த்தைகளைக் குறிப்பிடுகிறாரே?

 மோடிக்கு அவற்றில் நம்பிக்கை இல்லை. அவை வெற்றுவார்த்தைகளே. மோடி அதைநோக்கி நகர்கிறார் என்பதை நிரூபிப்பதற்கான எந்த ஒன்றையும் இந்த ஆண்டுகளில் என்னால் காணமுடியவில்லை. அவர் சர்வமத ஒற்றுமை (ஜம்பூரியத்), மனிதத்தன்மை (இன்சானியத்), கஷ்மீரியத்தன்மை (கஷ்மீரியத்) ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருப்பார் என்றால் அவர் ஏன் ஹுரியத்திடம் பேசவில்லை? கஷ்மீர் அரசியலில் அவர்களும் ஒருபகுதி யினர்தானே? ஹுரியத்தின் நூற்றுக்கணக்கான விஷயங்களில் நீங்கள் ஒத்துப்போகாமல் இருக்கலாம்: ஆனால், குறைந்தபட்சமாக ஒருசிலவற்றோடு நீங்கள் ஒத்துப்போகலாம். அது இந்தத்துயர நிகழ்வுகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும். பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தைகளைத் துவக்க ஏதாவது உறுதியான நடவடிக்கை உள்ளதா? பாகிஸ்தான் பிரதமரின் பிறந்த நாளன்று ஒருமுறை சென்றுவருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. கஷ்மீரில் உள்ள சூழ்நிலைக்கு மத்திய அரசு ஒத்துவர வேண்டும். மேலும், பாகிஸ்தானும் அதில் ஒருபகுதியாகும். பாகிஸ்தானை நாம் பேச்சு வார்த்தைக்குக் கொண்டுவராமல் இங்கு அமைதியை நீங்கள் கொண்டுவர முடியாது. 

# இந்தியாவும் பாகிஸ்தானும் நெருங்கிவருவதற்கான வரைபடம் ஏதாவது உங்களிடம் உள்ளதா? 

 நான் வெற்றிபெறுவேன் என்று நாம் நம்புவோம். ஒருபொது செயல்திட்டத்துக்கு இந்தப்பள்ளத்தாக்கில் உள்ள அனைவரையும் ஒருகட்டுக்குள் கொண்டுவர எனது பங்கு இருக்கும். அந்தப் பொதுசெயல் திட்டம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் என இருதரப்புக்கும் அளிக்கப்படும். இரண்டாவதாக, மதவெறி அச்சுறுத்தலைச் சந்திக்க இந்தியாவிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் நான் ஒருங்கிணைப்பேன். 

# சமீபகாலத்தில் அமெரிக்காவும்கூட கஷ்மீர் பற்றிய சமரசத்தில் ஈடுபட விரும்புகிறது. இந்த நடவடிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? 

 இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்மூலம் மட்டுமே கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்று இந்தியா நம்புகிறது. நாமும்கூட அதை ஒத்துக்கொண்டோம். பற்பல ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இந்தியா- பாகிஸ்தானால் எதையுமே சாதிக்க முடியவில்லையே. இந்தப்பிரச்சனைக்குத் தீர்வுகாண இந்தியா, பாகிஸ்தானோடு எந்த ஒரு சாதகமான நடவடிக்கை யையும் மேற்கொள்ள இயலாவிட்டால், ஒரு அமெரிக்கர் இந்திய கஷ்மீர் எல்லையில் நதிநீர் பிரச்சனைக்கு ஒரு முடிவுகண்ட்துபோல்,கஷ்மீர் பிரச்சனையிலும் அமெரிக்காவின் சமரச முயற்சி தேவை என நாங்கள் உணர்கிறோம். இந்தப்பிரச்சனைக்கும் ஒரு தீர்வுகாண அமெரிக்காவால் முடியும் என்பதற்கான நேரம் வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. 

# உங்கள் கட்சி சுயாட்சியைஒரு அரசியல் தீர்வாகக் கொண்டுள்ளது. மேலும், கடந்த காலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை(Line of Control) ஒரு அனைத்துலக எல்லையாக்க வேண்டும்என்றும் கோரியது. இப்போது தேசியமாநாடு எந்த நிலைபாட்டை மேற்கொண்டிருக்கிறது? 

 ‘சுயாட்சி’யைப்பற்றி கடந்த காலத்தில் எடுத்த அதே நிலைபாட்டில்தான் நாங்கள் இருந்துவருகிறோம். அதுதான் ஆரம்பம் முதலே எங்கள் நிலைபாடாக இருந்துவருகிறது. மத்திய அரசு 370ஆவது சட்டப்பிரிவை மெல்லமெல்ல நீர்த்துப்போக வைத்துவிட்டது. இந்தப்ப்ள்ளத்தாக்கில் நீங்கள் அமைதியை விரும்புவீர்களானால், நீங்கள் 1953ல் இருந்த நிலைமைகளுக்கு திரும்பிச் செல்லவேண்டும். 2000ல் எனது தாயாரின் உடல் இந்த்த்தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமர் வாஜ்பேயியும், உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வாணியும் இங்கு வந்தார்கள். நாங்கள் கூட்டணியைவிட்டு விலகிக்கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள் விலகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். சுயாட்சி பற்றி விவாதிப்ப தாகவும் உறுதியளித்தார்கள். அப்போதைய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் கே.சி.பந்த்-ஐ அவர்கள் நியமித்தார்கள். அவரும் ஒருகூட்டத்தை நட்த்தினார்: ஆனால், எந்த முடிவுக்கும் வரவில்லை. பின்னர் பா.ஜ.க.வின் தலைவர் அருண்ஜெட்லி அந்த இடத்துக்கு வந்தார். அதன்பிறகு ஆட்சி கவிழ்ந்தது. எங்களுடைய அறிக்கை இன்னும் பா.ஜ.க.விடம் இருக்கிறது. அவர்கள் என்றாவது ஒருநாள் அதற்கு ஏற்பளித்தாக வேண்டும். 

 எல்லையைப் பொருத்தவரை நாம் ‘எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை’ வழிவிடும் எல்லையாக ஆக்கவேண்டும். அப்படிச்செய்தால் மக்களுக்கு வர்த்தகச்செயல்பாடுகளை மேற்கொள்ளவும், உறவினர்களைச் ச்சந்திக்கவும் எளிதானதாகிவிடும்.இது காயத்தை சிறிதளவு ஆற்றும். 

# உங்களுடைய அரசியல் வாழ்வு 40 ஆண்டுகளாக நிலவிவருகிறது. இந்த எல்லா ஆண்டுகளிலும் நீங்கள் எப்போதாவது கஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வு நெருங்கிவருவதாக உணர்ந்தீர்களா?அமைதி தவழும் கஷ்மீரை நீங்கள் எப்போதாவது கண்டீர்களா? 

 முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் பர்வீஸ் முஷாரப் உடனான கலந்துரையாடல் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது நான்கு அம்ச செயல்திட்ட்த்தின்மூலம் ஒரு தீர்வு சாத்தியம் என நாங்கள் எண்ணினோம். பாகிஸ்தானின் முன்னாள் அயலுறவுத்துறை அமைச்சர் ஒருவர் டெல்லியில் என்னிடம் ஒரு செயல்திட்டம் கையில் உள்ளது என்று கூறினார். அவர்களை நான் வெளிநாட்டிலும்கூட சந்தித்தேன். அந்த நேரத்தில் ஒரு நல்ல தீர்வு வரும் என அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். 

# வரலாற்றை நீங்கள் பின்னோக்கிப் பார்க்கும்போது, எந்த நிகழ்வு உங்களை மிகவும் வருத்தியது? 1953ல் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டதா? அல்லது, 1975ல் ஷேக் அப்துல்லாவுக்கும், இந்திரா காந்திக்கும் இடையே கையொப்பமானதா? அல்லது, 1984ல் உங்கள் அரசு கவிழ்க்கப்பட்டபோதா? 

 1953ல் நான் மிகவும் இளஞனாக இருந்தேன். இருந்தபோதிலும், நான் கூட்டங்களில் பேசினேன்: ஒருமாதம் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டேன். மிகவும் மோசமான நிகழ்வு 1984ல் தான். மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட சட்டபூர்வமான எங்கள் அரசு, எங்களில் சிலரையே விலைக்குவாங்கி கவிழ்க்கப்பட்டது. அது இன்றும்கூட வலிக்கிறது. மத்திய அரசு எப்போதும் எனது தந்தையையும், என்னையும் சந்தேகத்துக்குரியவர்களாகவே நட்த்தியது. அவர்கள் எங்களுக்கு என்ன செய்தார்களோ, அதற்கான விலையை இப்போது கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

# உங்களுடைய தந்தை ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமத்துவம் ஆகிய மதிப்பியல்களுக்காக நின்றவர். அவர் கஷ்மீர் இந்தியாவோடு இணைவதை ஆதரித்தவர்.

 இல்லை. எனது தந்தை இந்தியாவோடு இணைவது என்ற நிலையோடு எதையும் செய்யவில்லை. அது மஹாராஜா ஹரிசிங்-ஆல் கையொப்பமிடப்பட்டது. எனது தந்தை 370ஆம் அரசியல் சட்டப்பிரிவை இணைத்தார். அதன் துவக்கம் மிகநன்றாக இருந்தது. ஆனால், இந்த ஜனநாயகத்தின் கீழே உள்ளதளம் ஆட்டம் காண்பதை எனது தந்தை மிக விரைவில் உணர்ந்துகொண்டார். 

# உங்களது அரசியல் வாழ்வின் துவக்கத்திலிருந்து இன்றுவரை எந்த அரசியல் முடிவை எடுத்த்தற்காக நீங்கள் மிகவும் வருத்தப்பட்டீர்கள்? 

 அத்தகைய எந்த ஒரு அரசியல் முடிவையும் எடுத்ததாக நான் கருதவில்லை. நான் எப்போதும் போராடிக்கொண்டிருக்கிறேன். எனது கொள்கைகளுக்காக உறுதியாக நின்று அதனால் ஆட்சி அதிகாரத்தை இழந்திருக்கிறேன். 1983ல் நாங்கள் கொண்டுவந்த மறுகுடியமர்த்தும் மசோதாவை டெல்லியில் உள்ளவர்களால் ஏற்கமுடியவில்லை. எனவே, அதற்கான விலையை 1984ல் நான் தந்தேன். 

     நன்றி: திஹிந்து 12.4.2017 நாளிதழ்

     www.thehindu com வலைத்தளம்

தமிழாக்கம் - செ.நடேசன்

Pin It