வல்லரசு நாடாக இந்தியா தன்னை தயார் செய்து வரும் வேளையில் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், பொதுவுடமை சித்தாந்தம் பேசுபவர்களும் இந்தியா வல்லரசு ஆவதை விரும்பாதவர்கள் போல் செயல்படுகின்றனர்.  ஆம்! நம் நாடு பல இனங்களாலும், மொழிகளாலும், பலதரப்பட்ட கலாச்சாரப் பண்பாடுகளாலும் வேறுபட்டு இருந்தாலும் "இந்தியர்கள்' என்று வரும்போது அனைவரும் ஒன்றுபட்டு "வேற்றுமையில் ஒற்றுமை' என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஒன்றிணைந்து விடுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் நமது அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்களது கவனத்தை மக்கள் மீது திருப்பி தாங்கள் ஆட் சிக் கட்டிலில் அமர மக்களின் அறியாமையைப் பயன்படுத்துகின்றனர். ஜனநாயகப் போர்வையில் மக்களின் வாக்கு வங்கியைப் பெற்று தங்கள் எண்ணங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளவும் "முடியாட்சி' தத்துவத்தை நிலை நிறுத்தவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அரசியல் சட்டங்களும், ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும், ஊடகத் துறையினரும் தங்களது பொறுப்பின்மையையும், ஆணவப் போக்கையும் கடைபிடிப்பதே அடிப்படை முதல் காரணமாகும்.

மக்களின் பொருளாதாரம், பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு போன்ற இன்றியமையாத விஷயங்களில் தங்களது பார்வையை செலுத்தி குறைகளை களையாமல் வெறும் ஆடம்பர திட்டங்களை அறிவிப்பது மட் டுமே தீர்வாகாது. தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்ற சுதந்திரப் பார்வையை குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்து மத மோதல்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் தடை செய்வதுடன் விலை மதிப்பற்ற மனித உயிர்களையும் பலிவாங்கும் காட்டுமிராண்டித்தனமான செயல்களும் நம் கண் முன்னே நடைபெற்று வருவது வெட்கப்படவும், வேதனைப்படவும் உரிய விஷயமாகும்.

ஒரு பயங்கரவாதச் செயல் நடைபெற்று விட்டால் அதன் பின்னணி என்ன? அதன் ஆணி வேர் எது? மூலகர்த்தாக்கள் யார்? என்ற பல விஷயங்களை முறையாக ஆராயாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்றரீதியில் முடிவு கள் எடுக்கப்படுவதும், அறிவிப்பதும் வளர்ந்து வரும் இளைஞர்களை கொச்சைப்படுத்தி, ஊடகப்படுத்தியும் திசை திருப்பியும் விடுவதே முழு முதற் காரணமாகும்.

இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப்படுவதே அவர்களை தீவிர எண்ணங்களை கையாள துளிர் விடச் செய்கிறது. அடக்குமுறைகளும், தாமதிக்கப்பட்ட நீதியும், சிறைக் கொடுமைகளும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்ற போலியான வாதங்களும், ஊழல் பெருச்சாளிகளின் உருட் டல் மிரட்டல்களும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தட்டிக் கேட்கும் மனப்பான்மை இல்லாததும் தான் ஒருவனை தீவிரவாத எண்ணங்களுக்கு தள்ளி விடுகின்ற காரணிகளாகும்.

பாதிக்கப்பட்டவனின் மனநிலையில் இருந்து நீதி வழங்காமல் சம்பிரதாய சடங்கு சட்டங்களைக் கொண்டு நீதி வழங்குவது, பாதிக்கப்பட்டவனின் எண்ணங்களும், செயல்களும் திசை திருப்பி தானே அந்த நீதியை கையில் எடுக்கும் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கி விடுகின்றன. மறுக்கப்படும் நீதியும், தாமதமாக வழங்கப்படும் நீதியும் நீதியாகாது; தீர்வும் ஆகாது!

நம் நாட்டின் சட்ட திட்டங்களும், உளவுத் துறை, காவல்துறையின் தவறான நடவடிக்கைகளும் ஊடகத்துறையின் தவறான அவதூறு பிரச்சாரங்களும் இழுத்தடிக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளும் குற்றவாளிகளை தப்ப விட்டு நிரபராதிகளை தண்டிப்பதும், கேள்வி கூட கேட்க முடியாத சூழ்நிலையை உருவாக்குவதும் "தீவிரவாதம்' மென்மேலும் வளர வழி வகுத்து விடும் செயல்களாகும்.

மது, மாது, சூது இம்மூன்றும் மனித இனத்திற்கே சவால் விடும் மிகப் பெரிய ஆபத்துகளாகும். அரசாங்கமும், நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு இவைகளை சட்டப்பூர்வமாக ஆக்கி வியாபார நன்மையை உருவாக்குவது நாட்டின் இறையான்மையை கேலிக் கூத்தாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். இவை இளைய சமுதாயம் மிகவும் பாதிக்கப்பட்டு தங்களது வழித் தடங்களை மாற்றி அமைக்கும் மிகப் பெரிய தூண்டுகோளாகும்.

குறிப்பாக நம் நாட்டில் ஒரு சமுதாயத்தை மட்டும் குறி வைத்து, வன்முறையைத் தூண்டி பாதிக்கப்பட்டவர்களாக ஆக்கும் செயல்கள் கண் முன்னே தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் "காவி' எண்ணங்களை கண்டறிந்து களை எடுத்தாலே தீவிரவாத செயல்கள் குறைந்து விடும். ஏனெனில் பாதிக்கப்பட்ட சமுதாய மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், எதிர்ப்புகளை சமாளிக்கவும் தங்களது உடமைகளைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலை நாட்டவும் எதிர்த்துப் போராடினால் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தி வந்த வரலாற்றுப் பிழையே இன்று உலகளாவிய பயங்கரவாதம் என்று கருத்து குருடங்களால் பரப்பப்பட்டு வருகிறது.

மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் நிகழ்த்தும் சம்பவங்களும், கருப்பு சிந்தனையுடைய காவி பயங்கரவாதிகள் நிகழ்த்தும் சம்பவங்களும் மதத்தோடு இணைத்து பேசப்படுவது இல்லை. முஸ்லிம்கள் என்றால் மட்டும் ஏன் இந்த அளவுகோல்?

பாம்பின் நிழலில் இளைப்பாறும் தவளையைப் போன்றல்லவா இஸ்லாமிய சமுதாயம் உள்ளது. நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்! அமைதியைப் போதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களா தீவிரவாதிகள்? சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பும் முஸ்லிம்களா தீவிரவாதிகள்? சமத்துவத்தை விரும்பும் சமுதாயத்தை குறி வைத்து தாக்கும் வெறியர்கள் அல்லவா தீவிரவாதிகள்.

அறிவுப் புரட்சியை விரும்பும் சமுதாயத்தை ஆயுதப் புரட்சி நோக்கிக் கொண்டு செல்லும் நிலை உள்ளதற்கு யார் காரணம்? கறுப்பு சட்டங்களும், கருப்பு ஆடுகளும், காவிச் சிந்தனை உடையவர்களும் இருக்கின்ற வரையில் தீவிரவாதம் வளரும். இவை அனைத்தும் களையப்பட்டால் தீவிரவாதத்திற்கு தீர்வு கிடைக்கும் நாளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்போம்!

- காரைக்குடி ரஸ்தா செல்வம்

Pin It