இவ்வருடக் கோடியில் சென்னையில் கூடும் காங்கிரஸ் என்னும் கூட்டத்திற்கு தலைவராக நமது பார்ப்பனர்கள் டாக்டர் அன்சாரி அவர்களை தெரிந்தெடுத்திருக்கிறார்கள் என அறிகிறோம்.
சென்ற வருடக் காங்கிரசுக்கு தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான். சீனிவாசய்யங்கார் அப்பதவி பெறுவதற்கு செலவு செய்தது போல் பணம் கொடுக்காவிட்டாலும் டாக்டர். அன்சாரி அவர்களிடம் அதற்கும் மேற்பட்டதான பெரிய மதிப்புள்ள விலை பெற்றுக் கொண்ட பிறகுதான் நமது பார்ப்பன “தேச பக்தர்கள்” என்போர்கள் டாக்டரை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.
அந்த விலை எது என்றால் அதுதான் “மகமதியர்களுக்கு தனித் தொகுதி வேண்டியதில்லை” என்று சொன்னதாகும். டாக்டர். அன்சாரி அவர்கள் மகமதிய சமூகத்திற்காக ஒப்புக்கொண்டதாக சொல்வதை மற்ற மகமதியர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா இல்லையா என்பதைப் பற்றி நமது பார்ப்பனர்களுக்கு அவசியமில்லை. எப்படியாவது அவர் காரியத்தை சாதித்துக் கொள்ள ஒரு சந்து கிடைத்தால் போதும். இப்போது ஸ்ரீமான்கள் ஒரு கந்தசாமி செட்டியாரையும், ஒரு முத்துரங்க முதலியாரையும், ஒரு குப்புசாமி முதலியாரையும் பிடித்துக் கொண்டு அவர்களையே பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகள் என்பதாக ஊர் ஊராய் கூட்டிக் கொண்டு போய் காட்டி எப்படி தங்கள் காரியத்தை சாதிக்கிறார்களோ அதுபோல் டாக்டர் அன்சாரி அவர்கள் மகமதியர்களுக்கு தனித் தொகுதி வேண்டாம் என்றால் அதுவே மகமதிய சமூக பிரதிநிதித்துவம் என்பதாகச் சொல்லி வரப்போகும் கமிஷனில் சரிபடுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் பேரிலேயே இந்தப் பதவி கொடுத்திருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு விரோதமாய் பேசினதினாலும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தை வைததினாலுமே ஸ்ரீமான் முத்துரங்க முதலியாருக்கு சட்டசபை வேலை சம்பாதித்துக் கொடுத்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உபதலைவராக்கினதும் வரப்போகும் காங்கிரசுக்கு தற்கால வரவேற்புக்கமிட்டி தலைவராக்கினதும் யாவரும் அறிவார்கள்.
டாக்டர் அன்சாரி அவர்களை காங்கிரஸ் தலைமையில் இருந்து கொண்டு மகமதிய சமூகத்திற்கு தனித்தொகுதி வேண்டியதில்லை என்று சொல்லும்படி செய்தாலும்கூட நமது மகமதிய சகோதரர்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என்பதே நமது உறுதி. இப்பொழுதிருந்தே அதற்கு வேண்டிய வேலைகள் செய்துகொண்டு வருவதையும் நாம் அறிவோம். ஆனாலும் இப்பதவிகள் பார்ப்பனர்கள் தங்களுக்கு எப்படி அனுகூலப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதற்கே இதைக் குறிப்பிட்டோம்.
(குடி அரசு - கட்டுரை - 24.07.1927)