கஷ்மீர் தேசம் இந்து தேசத்தின் அங்கமென்று இந்திய அரசாலும், அது உலகுதழுவிய இசுலாமிய பேரரசின் அங்கமென்று மதவாத குழுக்களாலும் அன்றாடம் கொல்லப்படுகிற உண்மையை உலகுக்கு உணர்த்த ஒரு நூல் வந்திருக்கிறது. அதை நமது மதவாத நண்பர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

kashmir bookநான் இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்தும் அது தொடர்பான நமது “தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்” நூல் குறித்தும் ஒரு இசுலாமியத் தோழரோடு உரையாடியபோது அவர் என்னை திகிலடைய வைத்தார். “இசுலாத்தை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் எப்படி எங்கள் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர முடியும்? மத நம்பிக்கையில்லாத உங்கள் எழுத்தை ஆதரவாகக்கொண்டு நாங்கள் செயல்பட்டால் அது அல்லாவுக்கு செய்கிற துரோகமாகும்” என்றார். இதுதான் நமது மௌனத்தின் சாட்சியங்கள் நூலுக்கும் நடந்தது. பிரச்சினைகளுக்கு தீர்வு மதத்தில் இல்லை, மார்க்ஸியத்தில் இருக்கிறது என்று வலியுறுத்திய அந்த நாவலை வாங்க வேண்டாமென பெருவாரியான இசுலாமிய கட்சிகள் தங்கள் அணிகளுக்கு கட்டளையிட்டுள்ளன.

இப்போது நந்திதா ஹக்ஸரின் MANY FACES OF KASMIRI NATIONALISM எனும் நூலை தோழர் செ.நடேசனின் மொழிபெயர்ப்பில் “கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் – பனிப்போர் முதல் இன்றுவரை” என்று தமிழில் எதிர் வெளியீடு கொண்டுவந்திருக்கிறது. கஷ்மீர் தேசம் இந்து தேசத்தின் அங்கமென்று இந்திய அரசாலும், அது உலகுதழுவிய இசுலாமிய பேரரசின் அங்கமென்று மதவாத குழுக்களாலும் அன்றாடம் கொல்லப்படுகிறது என்கிற உண்மையையும்; கஷ்மீரில் செயல்படும் பல்வேறு மதக்குழுக்களுக்குப் பின்னால் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் கைகள் உள்ளன என்கிற உண்மையையும்; இது சோவியத் எதிர்ப்பு பனிப்போரோடும், கம்யூனிச சீன எதிர்ப்போடும் தொடர்புடையது என்கிற உண்மையையும் நூல் அழகாக விவரிக்கிறது.

கஷ்மீர் பண்டிட் சமூகப் பின்புலத்திலிருந்து வந்த சம்பத் என்கிற தொழிற்சங்கப் போராளியின் வரலாற்றோடும், இசுலாமிய மதப் பின்புலத்தையுடைய அஃப்சல் குருவின் வரலாற்றோடும் இணைத்து கஷ்மீரின் வரலாற்றை ஒரு நாவல் போல் சுவராஸ்யத்தோடும் தெளிவோடும் தந்திருக்கிறார் நந்திதா ஹக்ஸர்.

நந்திதா ஹக்ஸர் கஷ்மீர் பண்டிட் சமூக பின்புலத்தவர். வழக்குரைஞர், ஒரு பெண். இசுலாமியரல்லாத, இசுலாமிய ஒழுக்கப்படியான பெண்களைப்போல் நடந்துகொள்ளாத ஒருவரின் நூலை தமிழகத்தின் இசுலாமிய கட்சிகளும் அச்சமுதாயமும் என்ன செய்யப்போகிறது என்கிற கேள்வி சாதாரணமானதல்ல.

பெண்களைப்பற்றிய இசுலாமிய கண்ணோட்டத்தை அஃப்சல் குருவின் வார்த்தைகளில்தான் நாம் கேட்க வேண்டும். “பெண்களின் சுதந்திரம் என்ற பதாகை பெண் குலத்தின் பெண்மைத் தன்மையை குறைக்கிறது. இயல்பாகவும் மதரீதியாகவும் அவள் ஒரு தாயாக, சகோதரியாக, மனைவியாக அறியப்படுபவள். இப்போது அவள் பெண் தோழியாக, விபச்சாரியாக, வரவேற்பாளராக அறியப்படுகிறாள். தனது அந்தரங்கத்தன்மையை விருப்பமின்றி இழந்து, தனக்கு தேவையற்ற, தனக்கு தெரியாத ஆண்களிடம் புன்னகைக்கிறாள். காலணிகள் முதல் டயர்கள் வரை, தண்ணீரிலிருந்து துணி துவைக்கும் எந்திரங்கள் வரையிலானவற்றின் விற்பனையை மேம்படுத்த வேண்டியவளாக இருக்கிறாள். இந்தப்பெண் (தாயாக, சகோதரியாக, மனைவியாக அறியப்பட வேண்டிய) அந்தப் பொருட்களை விற்பதற்காக மின்னணு, கணினி, ஊடகங்கள் வழியாக துகிலுரியப்படுகிறாள். மேற்கின் கலாச்சாரத்தால் கெட்டப்பேயாக ஆக்கப்படுகிறாள்”

அஃப்சல் குருவின் இந்த வார்த்தைகள் அவரால் நந்திதா ஹக்ஸருக்கு எழுதப்பட்ட கடிதத்திலேயே இருக்கிறது. அந்த கடிதம் “அஃப்சல் குருவை பாதுகாப்போம்” என்று உலகு முழுவதும் ஆதரவு திரட்டிய நந்திதா ஹக்ஸருக்கு நன்றி தெரிவித்து அஃப்சல் குரு எழுதியது. என்னவொரு வேடிக்கை!

அஃப்சல் குருவின் மத கண்ணோட்டப்படி ஒரு பெண்ணானவள் தனக்கு அறிமுகமில்லாத ஆண்களின் முன் நிற்ககூடாது, புன்னகை புரியக்கூடாது. அது வேசித்தனம். ஆனால் அவருக்காக நந்திதா ஹக்ஸர் தனக்கு அறிமுகமில்லாத உலகிலுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களின் முன் நின்றிருக்கிறார், கை குலுக்கியிருக்கிறார், புன்னகையும் கண்ணீரும் சிந்தியிருக்கிறார். அதை கண்டிக்காமல் அஃப்சல் குரு நன்றி சொல்கிறார். இந்த இரண்டு போக்கும் ஒரே கடிதத்திலிருப்பதுதான் வேடிக்கை.

நந்திதா ஹக்ஸர் இதன்மீது எந்த கருத்தும் சொல்லாமல் அழகாக கடந்துபோகிறார். அஃப்சல் குரு மட்டுமல்ல மார்க்சியத்தை உயிர்நாடியாக ஏற்றுக்கொண்ட சம்பத்தும் கூட பெண்கள் பிரச்சினையில் நிலவுடமை கண்ணோட்டத்தோடும் ஆணாதிக்கத்தோடுமே இருக்கிறார். ஆனால் அதை நந்திதா ஹக்ஸர் அழகாக சுட்டிக்காட்டி நையாண்டியும் செய்கிறார்.

மொஹம்மது அஃப்சல் குருவின் அப்பா மூங்கில் வணிகம் மற்றும் போக்குவரத்து தொழில் செய்தவர். சித்தப்பா மருத்துவர். இவர்தான் அஃப்சல் குருவுக்கு அரசியலிலும் முன்மாதிரி. அஃப்சல் மருத்துவ கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டு இடைநிலையில் கல்லூரியை விட்டு வெளியேறி இயக்கப் பணியில் ஈடுபட தொடங்கியிருக்கிறார். தனது வழிகாட்டியான சித்தப்பாவின் கொலை, போராளி குழுக்களிடையேயான மோதல் போன்றவற்றின் தாக்குதலால் அவர் அரசிடம் சரணடைந்தார்.

சரணடைந்தவரை அரசு நிம்மதியாக விட்டுவைப்பதில்லை என்கிற பொதுவான விதி அங்கேயும் உண்டல்லவா. அவர் அரசுக்கு உளவு சொல்பவராக இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இதுதான் அவரை தூக்கு கயிருக்கு இழுத்து சென்றது.

அஃப்சல் குருவைப் போலவே சாவுக்கு அருகில் நின்றவர் S.A.R கீலானி. நந்திதா ஹக்ஸர் கீலானியின் வழக்குரைஞர். கீலானிக்காக மொழிபெயர்ப்பு சாட்சியாக உதவ நந்திதா ஹக்ஸரால் ஏற்பாடு செய்யப்பட்டவர்தான் சம்பத்.

கீலானியை குற்றபடுத்த அரசுதரப்பில் இரண்டரை நிமிட தொலைபேசி ஒலிப்பதிவு ஒன்று சாட்சியாக்கப்பட்டிருந்தது. அந்த ஒலிப்பதிவை சரியாக மொழிப்பெயர்த்து அது கீலானியை எந்த விதத்திலும் தொடர்பு படுத்தவில்லையென்று உறுதிபடுத்த வேண்டியது சம்பத்தின் கடமை. சம்பத் அதை சரியாக செய்து முடித்தார். கீலானி விடுதலையானார்.

கீலானியின் விடுதலை கஷ்மீரமெங்கும் மகிழ்ச்சியை கொண்டுவந்தது. கீலானி மீண்டும் கதாநாயகனானார். ஆனால் அவருக்கு உதவி செய்த சம்பத்தை அந்த சமூகம் உரிய முறையில் அங்கீகரிக்கவேயில்லை.

2007 மே 20-இல் தொடங்கிய சஃபர் – இ – ஆசாதி எனும் விடுதலைக்கானப் பயணத்தில் சம்பத் யாசின் மாலிக்கோடு கஷ்மீரின் 8600 கிராமங்களை சுற்றிவந்தார். இந்த பயணம் குறித்து டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட கண்காட்சியில் ஜே.கே.எல்.எஃப் ஒரு CD வெளியிட்டது. அதிலும் சம்பத் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தார்.

சம்பத் ஏமாற்றங்களை சொந்தப்பிரச்சினையாக எடுத்துக்கொள்ள இடமளிக்காத மார்க்சிய – லெனினியவாதி. அவரது மகனுக்கு லெனின் என பெயரிட்டு மகிழ்ந்தவர்.

அவர் ஷேக் முகமது அப்துல்லாவின் “அனைத்து ஜம்மு – கஷ்மீர் முஸ்லீம் மாநாடு” என்ற கட்சியின் பெயர் “அனைத்து ஜம்மு – கஷ்மீர் தேசிய மாநாடு” என்று மாற்றப்பட்டு மக்கள் ஒற்றுமைக்கு வித்திட்ட காலத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒருங்கிணைந்த கஷ்மீரை ஆதரிக்கும் தேசியவாதி.

சம்பத் ஒருங்கிணைந்த கஷ்மீருக்கான அரசியலால் கம்யூனிஸ்ட்டானார். துப்புரவுத்தொழிலாளர் தொடங்கி படகோட்டிகள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் சமூகத்தின் உழைக்கும் பிரிவினரின் அனைத்து மட்டங்களிலும் தொழிற்சங்கங்களை கட்டியமைத்து மக்கள் ஒற்றுமைக்கு வித்திட்டவர். சி.பி.ஐ-லிருந்து சி.பி.ஐ (எம்)-க்கும் பின்னர் நக்சல்பாரி பாதைக்கும் நகர்ந்தவர்.

கம்யூனிஸ்டுகளால் கஷ்மீரில் ஆழ காலூன்ற முடியாத நிலையுணர்ந்து மக்களின் நலன் கருதி ஜார்ஜ் பெர்னாண்டசோடும் இறுதியில் ஜே.கே.எல்.எஃப்-போடும் இணைந்து செயல்படுகிறவர்.

இந்நூலின் முடிவில் கஷ்மீரின் சிக்கலுக்கு தீர்வாக சம்பத் கூறுகிறார் “அது கஷ்மீரியத் (ஒருங்கிணைந்த சுதந்திர கஷ்மீர்) ஒன்று மட்டும்தான்.

நந்திதா ஹக்ஸர் கூறுகிறார் “மனிதத்தன்மை (இசுலாமியர் மற்றும் பிற சமூகத்தினரின் ஒற்றுமையும் அன்பும்) மட்டும்தான்.

இவர்கள் இருவரின் பதிலும் மிக விரிந்த தேடலுக்கு நம்மில் வித்திடுகிறது. அது கஷ்மீர் இந்தியா என்னும் இந்து தேசத்தின் ஒரு அங்கமா? உலகுதழுவிய இசுலாமிய பேரரசின் அங்கமா? என்ற கேள்விக்கு விடைகாண சொல்கிறது. இதுவரை பெற்றிருக்கும் சின்னச்சின்ன வெற்றிகளுக்கும் அடிப்படையாக இருப்பது மதவாதமல்ல, மக்களின் ஒற்றுமைதான் என்பதை நிறுவுகிறது. மதவாதம் எல்லா வகையிலும் அலும்வர்க்கத்திற்கே சேவை செய்கிறது என்பதை உணர்த்துகிறது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவும் குளிர்காய்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்தப் பிரச்சினை கஷ்மீரோடு சுருங்கிவிட்டதல்ல, அது இந்து மற்றும் இசுலாம் மத அடிப்படைவாதங்கள் செல்வாக்கு பெற்றுவரும் போக்கை எதிர்கொள்கிற எல்லா தேசிய இனங்களுக்கும் பொதுவானது என்பதை நமக்கு நெற்றிப்பொட்டி உரைக்கச்செய்து எச்சரிக்கிறது.

பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி இந்நூலை கொண்டுவந்திருக்கிற “எதிர் வெளியீட்டிற்கும்” அதன் முக்கியத்துவம் உணர்ந்து மொழிபெயர்த்து கடமையாற்றியுள்ள நமது தோழர் செ.நடேசன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

விலை ரூ.380

பக்கங்கள் 456

வெளியிட்டவர் எதிர் வெளியீடு

தொடர்புக்கு 04259 226012, 99425 11302 

- திருப்பூர் குணா

Pin It