ஜிக்னேஷ் மேவானியுடனான நேர்காணல்.

தமிழில்: அருண் நெடுஞ்செழியன்

(உனா தலித் எழுச்சிப் பேரணிக்கு தலைமை தாங்கியவரும், சமகால தலித் அரசியல் எழுச்சி அலைக்கு அடித்தளம் அமைத்துள்ளவருமான தோழர் ஜிக்னேஷ் மேவானி, ஆங்கில இந்துவுக்கு அளித்துள்ள நேர்காணலின் தமிழ் மொழியாக்கம்) 

jignesh mevani

பத்திரிக்கையாளர்: நிலமற்ற தலித்துகள் ஒவ்வொருவருக்கும் முறையே ஐந்து ஏக்கர் நிலம் வழஙப்பட வேண்டும் என்பது நீங்கள் முன்நிற்கும் போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது? இது நடைமுறை சாத்தியமான கோரிக்கையா? நிலம் எங்கிருந்து வரும்?

ஜிக்னேஷ்: ஒவ்வொரு மாவட்டம் மற்றும் வட்டத்திலும் பயன்படுத்தப்படாத தரிசு நிலங்கள் அரசின் வசம் உள்ளன. இந்நிலம் பகிர்ந்தளிக்கப்பட முடியும். குஜராத்தில் நில உச்சவரம்பு சட்டத்தினை அமல்படுத்துவதன் மூலம் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கலாம். மேலும், நிலமற்ற தலித்துகளுக்கும், பழங்குடிகளுக்கும் அரசே நிலங்களை விலைக்கு வாங்கி பகிர்ந்தளிக்க வகை செய்கிற சட்டங்களும் உள்ளனவே. டாட்டாகளுக்கும், அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் நிலம் கிடைக்கப் பெறும்போது தலித்துகளுக்கும், பழங்குடிகளுக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் நிலம் கிடைக்காதா என்ன? உறுதியான அரசியல் நோக்கமிருந்தால் இந்தக் கோரிக்கை சாத்தியம்தான்.

பத்திரிக்கையாளர்: ஆனால் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படுகிற நிலங்களால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது, அனைவருக்கும் சில பலன்கள் கிடைக்கிறது. மாறாக, தலித்துகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்குவதால் என்ன சாதிக்க முடியும்?

ஜிக்னேஷ்: நிலச்சீர்திருத்தம் என்பது முதலாவது ஐந்தாண்டு திட்டத்திலேயே ஒரு பகுதியாக இருந்தது. இந்தியாவை சமத்துவ சமூகமாக மாற்றுவதும் ஏழைகள் மற்றும் நிலமற்றவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதுமே அதன் நோக்கமாக இருந்தது. இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தையே சார்ந்துள்ளனர். நிலச்சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட மாற்று வளர்ச்சி மாதிரியை நாங்கள் முன்வைக்கிறோம். உழுபவனுக்கே நிலம் சொந்தம், அவர்களுக்கே நிலத்தை மறுபங்கீடு செய்து கொடுப்பதன் வழி அங்கே உற்பத்தி திறனும் பொருளாதார பலன்களும் எட்டப்படும்.

பத்திரிக்கையாளர்: சரோதா கிராமத்தின், நில உரிமைக்கான கிளர்ச்சிப் போராட்டம் வெற்றிபெற்றதன் பின்னணி என்ன?

ஜிக்னேஷ்: காகிதத்தில் மட்டுமே நிலச்சீர்திருத்தத்தை மேற்கொள்கிற திட்ட மாதிரிக்கு குஜராத் சிறந்த எடுத்துக்காட்டாகும். நடைமுறையில், நிலத்திற்கான உரிமையை வழங்குவதில்லை.வெறும் காகிதத்தில் விவாசாயி உழுது விதைத்து அறுவடை செய்ய வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்களா என்ன? சரோதா கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அங்குள்ள 115 குடும்பங்களுக்கு மொத்தம் 90 ஏக்கர் நிலம் 2006 ஆம் ஆண்டில் ஒத்துக்கப்பட்டது. சட்டப்படி இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தை அடுத்த 90 நாட்களுக்குள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நாம் 2016 ஆம் ஆண்டில் தற்போது உள்ளோம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த குடும்பங்கள் ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பெறுவதற்காக போராடி வருகிறார்கள். தர்ணா, உண்ணாவிரதம், கோரிக்கை மனு, பேரணி என அனைத்து வகையிலும் அவர்கள் முயற்சித்துவிட்டர்கள். ஆனால் எந்தப் பயனும் இல்லை.

எங்களுக்கு நிலம் தரவில்லை என்றால், தயவு செய்து இந்த நாட்டை விட்டு வெளியேற்றி விடுங்கள் என அரசிடம் எழுதியும் கொடுத்துவிட்டனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே சட்டத்தை மீறுவதற்கு முடிவு செய்தோம். இந்த மாதத்தின் தொடக்கத்தில் அகமதாபாத்தில் சாலை மறியல் செய்தோம். இந்த போரட்டத்தில் நிறைய நிகழ்ந்தன. ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரிகள் மயக்கம் அடைந்தனர். ஆம்புலன்சை அழைப்பதற்கு மாறாக போலீசால் அவர்கள் தாக்கப்பட்டனர். எந்த நிலையில் இந்த பிரச்சனையை நாங்கள் விடப்போவதில்லை என அரசு ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்டது. இறுதியாக நிலத்தை வழங்க முன்வந்தது. இது ஒரு மிகப்பெரிய வெற்றி.

பத்திரிக்கையாளர்: கடந்த செப் 16 ஆம் தேதி, தில்லியில் இருந்து அகமதாபாத்திற்கு திரும்பியபோது உங்களை எதற்காக கைது செய்தார்கள்?

ஜிக்னேஷ்: குஜராத் வளர்ச்சி மாதிரி மற்றும் அரசின் நிர்வாக மாதிரியை எனது கைது எடுத்துக்காட்டுகிறது. குஜராத்தில் நடைபெற்று வருகிற தலித் எழுச்சி பற்றி எந்தளவிற்கு குஜராத் அரசு பயந்துள்ளது என்பதற்கு என் மீதான கைது நடவடிக்கை சாட்சியாகும்.

பத்திரிக்கையாளர்: தலித் அரசியல் எதிர்கொள்கிற மிகப்பெரிய சவலாக எதைக் கருதுகிறீர்கள்?

ஜிக்னேஷ்: தனது வழியில் எங்கோ மனுவாத முர்தாவாத் (மனுதர்மத்தை வீழ்த்துவோம்) போன்ற முழக்கங்களோடு தலித் அரசியல் தேங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். இதைத் தாண்டி செல்வதற்கு, மாறாக அடையாள அரசியலில் சிக்குண்டு கிடக்கிறது. அடையாள அரசியலும் பொருளாதார அரசியலும் இணைவாக்கம் பெற வேண்டும். சமூக நீதிக்காகவும் போராட வேண்டும், பொருளாதார நீதிக்காகவும் போராட வேண்டும். இதுவே இன்றைய சூழலில் பெரும் சவாலாக உள்ளது

பத்திரிக்கையாளர்: தலித் ஒற்றுமை என்பது மிகப்பெரிய சவால் என சொல்ல வருகிறீர்களா? ஆம் என்றால், அதை எதிர்கொள்ளவதற்கான உங்கள் திட்டம் என்ன?

ஜிக்னேஷ்: நிச்சயமாக. தலித் சாதிகளுக்கு இடையிலும் தீண்டாமை நிலவுகிறது என அண்மையில் ஒரு தொண்டுநிறுவன ஆய்வு கூறுகிறது. ஆகவே, இந்த தலித் உட்சாதி ஏற்றத்தாழ்வுகள் நிச்சயமாக நச்சுப் போக்குகளே, இது எவ்வாறேனும் தீர்க்கப்படவேண்டும். தலித்துகளின் ஒற்றுமைக்கு இது அவசியமும் கூட! வருகிற நாட்களில் சில நிகழ்வுகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக சாதிமறுப்பு திருமணங்கள் போன்ற நிகழ்வை நடத்த உள்ளோம். காதலர் தினத்தை சாதி கடந்த காதலுக்கும் திருமணத்திற்கும் ஊக்கமளிக்கிற நாளாக பயன்படுத்த உள்ளோம். சாதி எதிர்ப்பு அரசியலுக்கு இது ஓர் பௌதீக வடிவத்தை வழங்க துணை செய்யும்.

பத்திரிக்கையாளர்: தனி நபர் முன்னேற்றம் சமூக ஊக்கத்திற்கு வழிசெய்யுமா என்ற விமர்சனம் தலித் அரசியல்மீது வைக்கப்படுகிற விமர்சனமாக உள்ளது. ஒரு தலித்திடம் அதிகாரம் கைவரப்பெறும்பொது, தலித்துகளின் குரலாக, பிரதிநிதியாக அவர் இருப்பார் என மக்கள் மகிழ்கிறார்கள். ஆனால், தனி நபராக ஒரு தலித்திடம் சேரும் ஆதாயங்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கான அரசியல் மற்றும் பொருளாதார வழிப்பட்ட நலன்களாக மாற்றம் பெறுவதில்லை.

ஜிக்னேஷ்: இதில் நான் முழுவதும் உடன்படுகிறேன். ஏழைகள் மற்றும் நிலமற்றவர்களின் அரசியல் என்பது தனிநபர் சார்ந்த அரசியலாக அல்லது ஒரு தலைவரை சார்ந்ததாகவோ என்றுமே இருக்க முடியாது. கூட்டுமுயற்சியின் அடிப்படையிலான அரசியலாகத்தான் நிச்சயம் இருக்கமுடியும். அதிகாரத்திற்கு தேர்வு செய்யப்படும் ஒரு தலித் செயற்பாட்டாளாரோ அல்லது ஒரு தலித் அரசியல்வாதியோ தனது சொந்த நலனைக் காப்பதையே நோக்கமாக கொண்டிருப்பதை பல ஆண்டுகளாக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மக்கள் திரள் அரசியலின் ஊடாகவும் கூட்டு முயற்சியின் அடிப்படையிலும் மட்டுமே இதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை தற்போது தலித்துகள் புரிந்து கொள்ளத் துவங்கியுள்ளனர். அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் தாமாகவே அவர்களின் (மக்களின்) நலன்களை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கமாட்டார்கள்.

பத்திரிக்கையாளர்: இதை அடையாள அரசியலின் வரம்பு என்று கூட கூறலாமா?

அடையாள அரசியலில் முரண்பாடுகள் உள்ளன. நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. நமது அரசியல் பகுப்பாய்விலும் அணிதிரட்டலிலும் இந்த முரண்பாடுகளை தெளிந்து கொள்ள வேண்டும்.

பத்திரிக்கையாளர்: இடதுசாரிகள் மீதான நிலைப்பாடு குறித்த பிரச்சினையில் தலித் அமைப்புகளிடம் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகவே தெரிகிறது. சாதிய முரண்படுகளில் இடதுசாரிகள் அதிகம் கவனம் கொள்ளவில்லை என்றும், எனவே அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் சில அம்பேத்கரிஸ்ட்கள் மத்தியில் நிலவுகின்றன. இந்த கேள்விகளுக்கு உங்களின் நிலைப்பாடு என்ன?

ஜிக்னேஷ்: நிச்சயமாக இடதுசாரிகளை நான் கூட்டணி சக்தியாகவே கருதுகிறேன். இடதுசாரிகள் தலித் அமைப்புகளில் சேர்வது அல்லது, தலித்துகள் இடதுசாரி அமைப்புகளில் சேர்வது என்பதாக அல்ல. மாறாக தலித்துகள் இடதுசாரியாக இருக்க வேண்டும், அதாவது வர்க்கப் போராட்டத்தை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். வர்க்க சுரண்டலற்ற/ வர்க்க முரண்பாடுகள் அற்ற ஒரு சமூகத்தை நம்மால் உருவாக்க இயலாமல் போனாலும் பரவாயில்லை.குறைந்தபட்சம் தற்போதைய ஏற்றத் தாழ்வுகளை விட மேம்பட்ட ஒரு சமூகத்தை கட்டமைப்பதை இலக்காக கொள்ள வேண்டும். தலித் அரசியலில் பொருளாயத கோரிக்கை இதயம் போன்றது. “பசுவின் வாலை நீ வைத்துக் கொள், எங்களின் நிலத்தை கொடு” என்ற முழக்கத்துடன் சாதிய-மத பிளவுவாத சங் பரிவாரங்களின் நோக்கத்தை கண்டித்துக்கொண்டே பொருளாயத கோரிக்கையை உடன் நிகழ்வாக வலியுறுத்துகிறோம். நீங்கள் விரும்பினால், இதை இடதுசாரி கண்ணோட்டம் என்றுகூட அழைக்கலாம்.

வரலாற்று ரீதியாக இந்தியாவின் இடதுசாரிகள் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார்கள். அம்பேத்கரிய அரசியலும் சில பெரிய தவறிழைத்துள்ளது. இடதுசாரிகளை விமர்சிக்கிற அதேவேளையில் எங்களின் இயக்கத்தில் இடதுசாரிகள் இணைந்தால் முகத்தை திருப்பிக் கொள்ளமட்டோம், நிச்சயம் வரவேற்போம். எந்தவொரு அரசியல் இயக்கமும் வெளிப்படையாக இருக்க வேண்டும். நாங்கள் அதைச் செய்கிறோம். எந்தளவிற்கு இடைவிடாதும் தொடர்ச்சியாகவும் இடதுசாரிகள் தலித் பிரச்சனைகளை பேசுகின்றார்களோ அந்தளவிற்கு தலித்துகள் இடதுசாரிகளை நம்பத் தொடங்குவார்கள். நிறைய காலம் எடுக்கின்ற நீடித்த போக்கு இது.

பத்திரிக்கையாளர்: கோட்பாட்டு ரீதியாக எல்லாம் சரியாகத்தான் உள்ளன. ஆனால் நடைமுறையில் எல்லாம் சிக்கலாக மாறுகின்றன. குறிப்பாக தலைமை மீது சிக்கல். தங்கள் கைகள் மேலோங்கியில்லாவிட்டால் இடதுசாரிகள் எப்போதும் சௌகரியமாக உணர்வதில்லை என்றே வரலாறே கூறுகிறது.

ஜிக்னேஷ்: எங்களை எடுத்துக் கொள்ளுங்கள். உணா தலித் எழுச்சி பேரணி ஒருங்கிணைப்புக் குழுவில், நாங்கள், தலித்துகள் மேல்கையாக இருக்கிறோம். இடதுசாரிகள் பேரணியில் கலந்துகொண்டு ஆதரவளித்தார்கள். சுயமதிப்பிற்கும் சமூக நீதிக்குமான உறுதிமிக்க போராட்டங்களை முன்னெடுத்தால், மக்கள் அணிதிரள்வார்கள் என்பதில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தோம். எல்லாம் உங்களின் புரிதலில்தான் உள்ளது. உங்களின் அரசியல் தேர்வில்தான் உள்ளது. தலித் இயக்கத்தை எவ்வாறு வடிவமைக்கப் போகிறோம் என்பதில்தான் உள்ளது.

பத்திரிக்கையாளர்: தலித்-இஸ்லாமியர்களின் இணைவுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கிறீர்கள். இது சாதாரண காரியம் அல்லவே!

ஜிக்னேஷ்: உண்மைதான். அரசியல்ரீதியாக இது கடினமான பணி என்று உணர்ந்தே உள்ளேன். ஆனால் இதை ஒரு கருத்தோட்டமாக முன்னெடுத்தால் ஒரு கட்டத்தில் வடிவம் பெறும். ஆம் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் தலித்துகளும் பங்குகொண்டனர். பெரியளவில் அல்ல, சொற்பமானவர்கள் பங்கேற்றனர். இதற்காக தலித் என்ற வகையில் நான் அவமானவுணர்வுடன் தலை குனிகிறேன்.. தலித்துகள் காவிமையமாக்கப்படுவதற்கும் எதிர்வினையாற்ற வேண்டும். இதை தடுப்பதற்கு, தலித்-இஸ்லாமியர்கள் இணைவு என்ற அரசியல் திட்டம் பயன்படும். எனக்கு இரு சகோதரிகள் இருந்தால் ஒருவரை வால்மீகிக்கும் இன்னொருவரை இஸ்லாமியருக்கும் கட்டிக் கொடுப்பேன். இப்போது இது வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம், ஆனால் ஒருநாள் இது சாத்தியமாகும்.

பத்திரிக்கையாளர்: சங்க்பரிவாரில் தலித்துகள் இணைவது குறித்து என்ன விளக்கம் சொல்வீர்கள்?

ஜிக்னேஷ்: எனக்கு அச்சமாக உள்ளது. இந்த முட்டாள்தனத்தை என்னால் விளக்க இயலாது.

பத்திரிக்கையாளர்: உங்களின் எதிர்க்கால திட்டம்?

ஜிக்னேஷ்: குஜராத்திலும் சரி, குஜராத்துக்கு வெளியிலும் சரி, ஆர் எஸ் எஸ் அரசியலுக்கு எதிரான போரட்டத்தை வலுப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் தெளிவாக உள்ளோம். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம். வருகிற செப் 27 அன்று குஜராத்தில் மிகப்பெரிய ஒன்றுகூடலை திடமிட்டுவருகிறோம். சங்க்பரிவார்கள் பாஜகவிற்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், இஸ்லாமியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தலித்துகளுடன் இணைந்து மிகப்பெரிய கூட்டணியாக அணிதிரள வேண்டும். குஜராத் மாதிரியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்த, பண்பாட்டுப் பிரச்சனையோடு பொருளாதாரப் பிரச்சனையையும் உயர்த்தி பிடிக்க வேண்டும்.நிலமற்ற தலித்துகள், பழங்குடிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும் என்கிற எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற அக்டோபர் 1 ஆம் தேதியன்று நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான மணிநகரில் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

Pin It