இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானமும், நாகரீகமும் வளர்ந்து விட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் மனிதர்களிடம் உயர்வு, தாழ்வு காணும் போக்கு பல நாடுகளில் தொடர்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

மொழியை வைத்தும், இனத்தை வைத்தும் நில ஆதிக் கத்தை வைத்தும் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு கடை பிடிக்கப்படுவது உலக நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இந்தியாவில் வித்தியாசமாக ஒரே மொழியை பேசுகிறவர்களும், ஒரே நிறத்தில் இருப்பவர்களும் தங்களை சமமாக கருதாமல் பிறப்பின் அடிப்படையில் ஒரு சிலரை தாழ்ந்த சாதியாக கருதும் போக்கு கோலோச்சி வருவது வேத னையான ஒன்று. இரண்டுமே தடுக்கப்பட வேண்டியவை கள்தான்.

சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றுவரை சாதீய அடக்குமுறைகள் அடங்கிய பாடில்லை. தீண்டாமைக் கொடுமைகள் தலை விரித்தாடுவதை தடுக்க முடியவில்லை.

பெரியாரும், திராவிட இயக்கங்களும் தொடர்ந்து சாதீயத் திற்கு எதிராக போர்ப் பரணியைப் பாடிய போதும் தமிழகத்தில் சாதீயம் வேர் விட்டு வளர்ந்து கொண்டுதான் உள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருக்கும் ஆலய நுழைவு மறுப்பும், இரட்டைக் குவளை முறை யும் சாதீயம் இன்னும் வீழவில்லை என்பதையும் வலிமை பெற்றிருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் ஒரு பாதையிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னொரு பாதையிலும் போராட்டத்தை தொடர்ந்து கொண்டுதான் உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தீண்டா மைக் கொடுமைகளை எப்படித்  தடுக்கலாம் என்று மத்திய மாநில அரசுகள் நடத்திய ஆய்வில், 2000 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. அதனால் கல்வி தாழ்த்தப்பட்டவர்கள் பின்தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் கல்வியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களிடம் விளை நிலங்கள் சொந்தமாக இல்லாத காரணத்தால் நிலவுடமையா ளர்களான ஆதிக்கச் சாதியினரிடம் கூலியாட்களாக வேலை செய்கின்றனர். இதனால் ஆதிக்கச் சாதியினருக்கு தாழ்த்தப் பட்ட மக்கள் அடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு வேலைகளிலும், சட்டம் இயற்றும் சபைகளிலும் உயர் சாதியினரின் ஆதிக்கம் உள்ளதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படுவதில்லை.

மேற்கண்ட காரணங்களால் கல்வி, அரசு வேலை, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் தாழ்த் தப்பட்ட மக்கள் அடிமட்ட நிலையில் இருப்பதால் உயர் சாதியி னர் அவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துகின்றனர்.

ஆகவே, தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் அவர்க ளின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும். அப் போதுதான் தீண்டாமை ஒழியும் என்று மத்திய மாநில அரசுகள் முடிவுக்கு வந்தன.

அதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கான மேம்பாட் டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. அரசின் துரிதமான செயல்பாடுகளினால் தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் கல்வியில் முன்னேற்றம் கண்டனர். இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு உயர்ப் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் அமர வைக்கப்பட்டனர்.

சட்டம் இயற்றும் சபைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தது மட்டுமல்லாது, அமைச்சர்களாக, மாநில முதல்வர் களாக, ஏன் நாட்டின் முதல் குடிமகன் எனப்படும் ஜனாதிபதி பதவி வகிக்கும் வகையில் உயர்வு பெற்றனர்.

இந்த வளர்ச்சிகளின் காரணமாக பொருளாதார ரீதியாக, பதவி ரீதியாக உயர்வு பெற்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதீய ரீதியாக தீண்டத் தகாத நிலையிலிருந்து எந்த வித உயர்வும் ஏற்படவில்லை.

நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற உயர் பதவி வகித்த ஜெகஜீவன் ராம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவர் திறந்து வைத்த காந்தி சிலை கங்கை நீரால் கழுவப்பட்டது.

பீகார் மாநிலம் பாட்னா நகரில் நீதி வழங்கும் பொறுப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீதிபதி வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் அமர்ந்த நாற்காலி யில் உயர்சாதி நீதிபதி அமர்ந்தால் தீட்டு ஏற்படும் என்று கூறி நாற்காலி கழுவப்பட்டது. நீதிமன்றம் முழுவதும் தண்ணீரால் சுத்தப்படுத்தும் சடங்கு நடைபெற்றது.

தனித் தொகுதிகளில் வெற்றி பெற்றதாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்களில் சிலர், ஆதிக்கச் சாதியினரான துணைத் தலைவர்களால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் சோக நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் இப்படி என்றால் தாழ்த் தப்பட்ட மக்கள் எடுத்த உரிமைப் போராட்ட முடிவுகளும் பெரிய அளவில் எந்த வித பிரயோஜனத்தையும் ஏற்படுத்த வில்லை.

பிறப்பினால் உயர்வு - தாழ்வு கற்பித்த இந்து மதத்தில் இனி மேலும் நீடிக்கக் கூடாது என்று வேறு மதத்திற்கு மாற வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்த முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டது.

புத்த மதத்திற்கு செல்வோம் என்று முடிவெடுத்தார்கள். அங்கும் சாதீய ரீதியான ஏற்றத் தாழ்வு! தொடர்ந்து சீக்கிய மதத்திற்கு மாறிய போதும் சாதீய தாழ்வு அவர்களை விட்டு விலகவில்லை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய போதும் சாதீயம் அங்கேயும் விடாமல் துரத்திச் சென்று தாக்கியது.

ஆக மதங்கள் மாறின. கடவுள் சிலைகள் மாறின. ஆனால் சாதீயத்தின் ஆதிக்கம் மட்டும் மாறவில்லை. தீண்டாமை தீ அணையவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு சிலருக்கு இந்த சாதீய அவமானத்திலிருந்து விடுதலை கிடைத்ததை மறுக்க முடியாது. அவர்கள் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று முஸ்லிம்களாக மாறியதால் ஏற்றம் பெற்றார்கள்.

மற்ற மதங்கள் சாதீயத்தை அசைத்துப் பார்க்க முயற்சித் துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் - தந்தையருக்குப் பிறந்தவர்கள்; பிறப்பினால் யாருக் கும் எந்த வித உயர்வு - தாழ்வும் இல்லை என்ற பிரகடனத்தை அறிவித்து சாதீய மடமைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் - பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களா கவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 49:13)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.

(அல்குர்ஆன் 4:1)

மேற்கண்ட இறை வசனங்கள் சாதீயத்தின் ஆணி வேரையே அறுத்தெறிந்து விட்டது. இதன் காரணமாகத்தான் இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து என பெரியார் அறிவித்தார். சாதீய ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டும், மனி தர்கள் சமமாக நடத்தப்பட வேண்டுமென்றால் மனிதர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், பிறப்பினால் உயர்வு - தாழ்வு இல்லை, மக்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் இஸ்லாத்தை நோக்கி அணி வகுப்பதே சிறந்த வழி!

Pin It