2005ல் இஸ்லாமியர்களின் கல்வி, சமூகப் பொருளாதார நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டி, அதன் அறிக்கையை 2006ல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விஷயங்கள் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டு தேசிய அளவில் விவாதப் பொருளாகவும் மாறிப் போனது. இஸ்லாமிய அமைப்புகளும், சச்சார் கமிட்டி இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை செய்தவற்றை மட்டுமே பேசியும், மீடியாக்களுக்கு பேட்டியும் கொடுத்து வந்தன.

இஸ்லாமியர்களின் சமூக வாழ்நிலை பல இடங்களில் தலித் மக்களின் வாழ்நிலையை விட மிக மோசமாக இருப்பதாக சச்சார் கமிட்டி சுட்டிக் காட்டியதை மட்டுமே பொதுக் கூட்டங்களிலும், மேடைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் இஸ்லாமியப் பிரமுகர்கள் பேசி வந்தனர்.

ஆனால் இட ஒதுக்கீட்டைத் தவிர சச்சார் கமிட்டி கூறிய வேறு விஷயங்கள் குறித்து முஸ்லிம் அமைப்புகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால், இஸ்லாமியர்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்களின் கல்வியறிவு, முஸ்லிம் பட்டதாரிகளின் சதவிகிதம், பள்ளிப் படிப்பை கூட நுகராத முஸ்லிம்களின் நிலை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் வாழும் முஸ்லிம்களின் சதவிகிதம், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம்கள் உணவு, உடை, இருப்பிடம் இல்லாத வாழத் தகுதியற்ற நிலையில் இருக்கும் நிலை, குடிநீர், கழிப்பிட வசதியின்றி வாழும் முஸ்லிம்கள், 88 லட்சம் மத்திய அரசு ஊழி யர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எத்தனை என்பது உள்ளிட்ட முஸ்லிம்களின் சமூக வாழ்வை யதார்த்தமாக பிரதிபலித்த சச்சார் கமிட்டி, மதக் கலவரங்கள் ஏற்படும்போது முஸ்லிம் சமுதாயம் அதிகளவில், பொருளாதார சூறைக்கும், உயிர் பலிக்கும் ஆளாவதையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பரிந்துரை செய்திருந்தது.

பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம் பிரதிநிதித்தவம் வெறும் 3 சதவீதம்தான் என்கிறது சச்சார்  அறிக்கை. இதன்படி, பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் போராடாத நிலையிலும் சச்சார் கமிட்டி பரிந்துரையை ஏற்று, இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இருக்கின்ற காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்தக் கோரிக்கை சில மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. பல மாநில அரசுகள் சரியாக அமுல்படுத்தவில்லை. ஆக, மத்திய அரசின் உத்தரவை குப்பைக் கூடையில் தூக்கி வீசியெறிந்தன மாநில அரசுகள்.

இந்நிலையில், கடந்த வாரம் மாநில அரசுகளுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதங்களை எழுதியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அரசின் உத்தரவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்த மாத இறுதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு இடும் உத்தரவுகள் மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் மூலம் மாநில அரசுகளின் உள்துறைச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை மாநில முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்வது மாநில அரசுச் செயலாளர்களின் வேலை.  இந்த யதார்த்த நடைமுறைகளில் பெரும்பாலும் உள்துறைச் செயலாளர்களின் முடிவுகள்தான் செயல்படுத்தப்படுகின்றன.

ஒரு அரசாங்கத்தை இயக்குகின்ற வலிமை படைத்த இயந்திரங்களாக செயல்படும் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெரும்பாலும் மற்ற துறைகளில் இருக்கும் அதிகாரிகளைப் போன்றே மதச் சார்பு சிந்தனை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தான் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் அவர்களுக்குக் கிடைக்காமலே மேல் மட்டத்தில் தடுக்கப்படுகின்றன.

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் கிடைக்கவிடாமல் அல்லது அது கிடைப்பதில் சிக்கல்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்கள்தான் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். பயிற்சி காலத்தில் இவர்கள் இது போன்றவற்றைத்தான் கற்றுக் கொண்டு வருகிறார்களோ என்னவோ!

தமிழக அரசு முஸ்லிம்களுக்கு அறிவித்த 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் பயன்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் செய்ய ரோஸ்டர் முறையை உருவாக்கி அதில் சிக்கல்களை ஏற்படுத்தியவர்கள் அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருக்கும் இந்த அதிகாரிகள்தான்.

இந்நிலையில், மத்திய அரசின் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு இன்ஸ்பெக்டர் அல்லது ஒரு சப் இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்கிற உத்தரவு மாநில உள்துறை செயலாளர்களின் கைங்கர்யத்தால்தான் அமல்படுத்தப்படாமல் உள்ளது என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

பாதுகாப்பு பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்கிற உத்தரவை அமுல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். இஸ்லாமிய அமைப்புகளும் கண்டு கொள்ளாமல் இருந்த இந்த விஷயம் மத்திய அரசால் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால், இதை தேசிய விவாதமாக ஆக்க இஸ்லாமிய அமைப்புகள் குரலெழுப்ப வேண்டும்.

மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாட நினைப்பது பா.ஜ.க.வா? காங்கிரஸ?

முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடங்களில் இருக்கும் காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்கிற சச்சார் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையிலான மத்திய அரசின் உத்தரவை கண்டித்திருக்கும் பா.ஜ.க., தனது கட்சியின் செய்தித் தொடர்பாளரும் பெயர் தாங்கி முஸ்லிமுமான ஷான வாஸ் ஹுசைன் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“காவல்துறையை மதத்தைக் கொண்டு காங்கிரஸ் பிரிக்கிறது. இது துரதிருஷ்டவசமானது. இது மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாடும் முயற்சி...” என்றெல்லாம் ஷானவாஸ் ஹுûஸனை விட்டுப் பேச வைத்திருக்கிறது பா.ஜ.க.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்றாலும், முஸ்லிம்களுக்கு இதர சலுகைகள் அளிக்கப்பட்டாலும் உடனடியாக மதத்தை முன் நிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றன பா.ஜ.க.வும், அதன் கிளை அமைப்புகளான இந்துத்துவா இயக்கங்களும்!

இட ஒதுக்கீடு விஷயத்திலும் இன்று வரை மத அடிப்படையில் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது என்கிற பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகின்றன இந்துத்துவா அமைப்புகள்.

இதே பாணியில்தான் காவல் நிலையங்களில் முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்கும் மத்திய அரசின் உத்தரவை 'மத அடிப்படையில்' என்று கொச்சைப்படுத்தி அநாகரீகமான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க.

காவல் நிலையங்களில் முஸ்லிம் அதிகாரிகள் இல்லாத நிலையில் என்ன நடக்கிறது என்பதை முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு கலவரத்தின்போதும் இந்த நாடு கண்டு வருகிறது. குஜராத் கலவரம் இதற்கு சரியான சான்றளித்துக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களின் புகாரை பதிவு செய்யக் கூட எந்த காவல் நிலையமும் முன் வரவில்லை. முஸ்லிம்கள் குண்டர்களால் தாக்கப்படும்போது காவல்துறை அவர்களுக்கு ஊக்கம் அளித்ததோடு இந்துத்துவா சக்திகளுக்கு துணை நின்றது.

இந்த இடத்தில் ஒரு முஸ்லிம் அதிகாரி இருந்திருந்தால் குறைந்தபட்சம் அவர் தடுப்பு நடவடிக்கையிலாவது ஈடுபட்டிருப்பார். இதுபோல் நடக்கக் கூடாது என்பது தான் பா.ஜ.க.வின் எண்ணம். அதனால் தான் அது மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கிறது.

வட இந்திய மாநிலங்களில் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பிடித்துச் செல்லப்படுவதும், தமிழகத்திலும் இதே பாணியில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் தொல்லைபடுத்தப்படுவதும் தொடரும் நிலையில், காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் அதிகாரியாவது நியமிக்கப்பட வேண்டும் என்கிற மத்திய அரசின் உத்தரவு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தரும். இதனை விரும்பாத பா.ஜ.க. புலம்பத் தொடங்கியுள்ளது.

ராமரின் பெயரால் - பாபரி மஸ்ஜிதை இடித்து தேசிய ஒற்றுமைக்கு வேட்டு வைத்ததோடு, மதத்தின் பெயரால் தேசத்தை துண்டாட இன்றுவரை மத அரசியலை செய்து வரும் பா.ஜ.க. காங்கிரஸைப் பார்த்து மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாடும் முயற்சி என்று கூறுவது நகைப்பிற்குரியது.

காவல்துறையில் மத மற்றும் சாதி உணர்வுகள் மேலோங்கி இருக்கின்றன என்பதை ஒவ்வொரு கலவரத்திற்குப் பிறகும் உண்மை அறியும் குழுக்களாக செயல்பட்டு அறிக்கை வெளியிடும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு தனது உத்தரவை அமுல்படுத்த தயங்கக் கூடாது.

மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட நினைப்பது யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அதனால் பா.ஜ.க. போன்ற கட்சிகளின் புலம்பல்களை புறந்தள்ளி விட்டு தனது முடிவில் உறுதி காட்ட மத்திய அரசு தயாராக வேண்டும்.

Pin It