கோவை கரும்புக்கடை மெயின் ரோட்டில் பெரும் பதட்டம் நிலவுவதாக கடந்த 7ம் தேதி மாலை நமக்கு தகவல் கிடைத்தது. உடனே கரும் புக்கடை பகுதிக்கு விரைந்தோம்.

கரும்புக் கடை மெயின் ரோட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்களும், பெண்களும் கூடி நின்று காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

“காவல்துறையின் அடக்குமுறை ஒழிக!

தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!!

காவல்துறை அராஜகத்தை

தமிழக அரசே தடுத்து நிறுத்து!''

என்பது போன்ற கோஷங்கள் காதை பிளந்தன. அவர்களிடம் விசாரித்தோம்.

“கோவை திருமலை நகரைச் சேர்ந்த பஷீர் - நஜீப் ஆகிய இரு வரும் முதல் நாள் இரவு (சனிக்கிழமை) கேட்டரிங் வேலை கேட்டு போத்தனூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு திருமணத் திற்கு வந்திருந்தவர்களில் சிலர் மது போதையில் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அவர்களுக்கும், பஷீர், நஜீப் இரு வருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் பஷீருக்கும்,நஜீபுக்கும் காயம் ஏற்பட,அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி வெளியே அனுப்பினர்.இரத்த காயங்களுடன் வந்த பஷீரையும்,நஜீபையும் பார்த்த அவர்களது நண்பர்கள் சிலர் அவர்களை அழைத்துக் கொண்டு நியாயம் கேட்பதற்காக மண்டபத்திற்கு விரைந்தனர்.

மீண்டும் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் சண்டையை விலக்கி விட்டு,காயம்பட்டவர்களை உடனடியாக மருத்துவம னைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.பஷீரும்,நஜீபும் உடனடியாக கோவை ஜி.எச்.க்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விஷயத்தை காவல்துறை இத்துடன் முடித்திருந்தால் எல்லாம் சாதாரணமாக முடிந்திருக்கும்.ஆனால் ஒரு மணி நேரம் கழித்து மண்டபத்திலிருந்து மூன்று பேரை அழைத்து வந்து அரசு பொது மருத்துவமனையில் அட்மிட் செய்த காவல்துறை ஏ.சி. ராமச்சந்திரன், மருத்து வமனை வாசலில் நின்றிருந்த பஷீரின் நண்பர்கள் 13 பேரை அள்ளிச் சென்றுள் ளார்.

மருத்துவமனை வாசலிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களை கோவை மாவட்டத்தில் உள்ள எல்லா ஸ்டேஷன்களிலும் பார்த்து விட்டோம்.எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என் பது தெரியவில்லை. எங்கள் பிள்ளைகளை எங்கள் கண்ணில் காட்டுங்கள் என்றுதான் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்...''என்று நடந்த சம்பவங்களை நம்மிடம் தெரிவித்தனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர்.

இப்போராட்டத்தில் சி.ஜே.எம். (சிறு பான்மை உதவி அறக்கட்டளையினர்) ஐஎன்டிஜேவைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் ரஸ்தா செல்வம், ஜாபர் அலி, மாவட்டப் பொறுப்பாளர் காஜா ஆசிக் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள்,ஜமாஅத்துக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரிகள், அழைத்து சென்றவர்களை பெற்றோர்களிடம் காட்டுவதாகவும்,மற்றவர்களை கலைந்து செல்லுமாறும் கூறினர்.

அதன்படியே பெற்றோர்களை அழைத்துச் சென்ற காவல்துறை கோவை சென்ட்ரல் ஜெயில் வாசலில் வைத்து அவர்களில் 3பேரை மட்டும் இறக்கி காண்பித்துள்ளது.அந்த இளைஞர்கள் நிற்க முடியாத நிலையில் காயங்களுடன் இருந்ததைக் கண்டவர்கள் கொந்தளித்து விட்டனர்.

விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மறுபடியும் மறியலில் ஈடுபட்டனர் முஸ்லிம்கள்.பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரி கள் திங்கள்கிழமை உயரதிகாரிகளிடம் முறையிடுமாறும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

உடனடியாக ஆலோசனை நடத்திய அனைத்து முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இரண்டு பிரிவாக பிரிந்து ஒரு பிரிவினர் மாவட்ட கலெக்டரையும் இன்னொரு பிரிவினர் காவல் துறை கமிஷ்னரையும் சந்திப்பதென்று முடிவெடுத்தனர்.

அதனடியப்படையில் முஸ்லிம் இயக்கப் பிரதிநிதிகள் கலெக்டரையும்,காவல் துறை கமிஷ்னரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த வேளையில் வேறொரு பிரச்சினை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பப்பட்டது.

கோவை குனியமுத்தூர் ரோட்டில் இருந்த கோயில் சேதப்படுத்தப்பட்டதாக கூறி இந்துத்துவாவினர் குனியமுத்தூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலின்போது அந்தப் பகுதி வழி யாக சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முஸ்லிம்கள் ஓட ஓட துரத்தி அடிக்கப்பட்டனர். இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக கே 3 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டான்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் அந்த சிறுவன் காயத்து டன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பது அந்தக் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது.ஆம்புலன்ஸ் ஒன்றும் இந்த வன்முறை யின்போது சேதப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மறியல் செய்தபோது கடுமை காட்டிய கோவை மாவட்ட காவல் துறை இந்துத்துவாவினர் நடத்திய மறியலில் மிகவும் மென்மையான போக்கை கையாண்டது கோவை மாநகர முஸ்லிம்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிழமை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டில் பெட் ரோல் குண்டு வீசப்பட்டதாக ஏற்கெனவே அங்கு பந்த்தில் ஈடுபட்ட இந்துத்துவாவினர் அப்பகுதி தமுமுக தொழிற்சங்கப் பிரமுகரின் மகனை பிளேடால் கிழித்து காயப் படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் களால் கோவை மாநகர முஸ்லிம் மக்களி டையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது சுந்தராபுரம்,செல்வபுரம் பகுதிகளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு மர்மமனி தர்களால் மிரட்டப்படுகிறார்கள்.

காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்லா மல் ஒரு சார்பு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இது தான் அந்தப் பகுதியில் அமைதியை ஏற்படுத்தும். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

என் பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்! --விளக்கம் தந்த எஸ்.பி. எஸ்.ஐ. சாஸ்தா

போத்தனூர் திருமண மண்டபத்தில் இரு தரப்பு இளைஞர்களுக்கிடையே நடந்த பிரச்சினையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் களை எஸ்.பி.எஸ்.ஐ.சாஸ்தா ஆபாசமாக திட்டியும், சதாத் என்ற இளைஞரின் தாடியை பிடித்து இழுத்து தாக்கியதாகவும் கூறப் பட்ட குற்றச்சாட்டு குறித்து எஸ்.ஐ. சாஸ் தாவிடமே கேட்டோம்.

நம்மிடம் பேசிய எஸ்.ஐ. சாஸ்தா, “முதல்ல இது தவறான தகவல் சார். எனக்கு முஸ்லிம் நண்பர்கள்தான் அதிகம்.இந்த சம்பவம் எல்லாமே இரவில் நடந்த நிகழ்வுகள்.அந்த இளைஞர்களை அரெஸ்ட் பண்ணது போத்தனூர் ஸ்டேஷன் லிமிட்ல. நான் குனியமுத்தூர் லிமிட் ஸ்பெஷல் டீம்ல இருக்கேன். சம்பவம் நடக்கும்போது, நான் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் (ஸ்ரீதரின் இந்து மக்கள் கட்சி)சக்திவேல் என்பவர் மேல நடந்த தாக்கு தல் வழக்கு மற்றும் இன்னொரு வழக்கு விஷயமா வெளியூர்ல இருந்தேன்.

இதுல தேவையில்லாம என் பெயரை இழுத்து சாஸ்தாதான் அரஸ்ட் பண்ணாரு... சாஸ்தாதான் அடிச்சாருன்னு கேன்வாஸ் பண்ணியிருக்காங்க.திருமண மண்டப பிரச்சினையில ஸ்பாட்டுக்கு போனது போத்தனூர் இன்ஸ்பெக்டர்தான்.நான் ஸ்பாட்ல இல்ல.

மோஸ்ட்லி அந்தப் பகுதிகள்ல யாரையாவது (கைது செய்து)எடுத்துட்டுப் போனா சாஸ்தாதான் எடுத்துட்டுப் போனா ருன்னு போலிஸ்லேயே நம்மள விரும்பாத சிலரு, நான் நேர் மையான நடவடிக்கை எடுத்ததுல பாதிக்கப்பட்டவங்கள்ல சிலரு சொல்றதுண்டு. இந்த வாய்ப்பை அந்த சிலர் பயன்படுத்தி என் பேரை யூஸ் பண்ணிருக்காங்க.

அன்னைக்கு நைட் 10 மணிக்கு மேல தமுமுக, எஸ்.டி.பி.ஐ., இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் எனக்கு போன் பண்ணி கேட்குறாங்க. நான் வெளி யூர்ல இருக்கேன்.ஏ.சி.ராமச்சந்திரன் சார்கிட்ட கேளுங்கன்னு சொல்றேன். இதையும் தாண்டி என் பேரு தவறா பயன்படுத்தப் பட்டிருக்கு.

நீங்க பத்திரிகை ரிப்போர்ட்டர்.உங்களுக்கு நிறைய சோர்ஸ்கள் இருக்கும்.நீங்க விசாரிச்சாலே உண்மை என்னன்னு தெரியும்.

நான் குனியமுத்தூர் லிமிட்.கேஸ் போத்தனூர்ல நடக்குது.ஏ.சி.ஒரு டைரக்ஷன் கொடுத்திருந்தாலும் நான் போயிருந்திருப்பேன். இன்னொரு விஷயம்... ஒரு கேஸ்ல எஃப்.ஐ.ஆர். போட்டு அக்கியூஸ்டை அரஸ்ட் பண்ணாம இருக்குற கேஸ் தான். ஸ்பெஷல் டீம்கிட்ட வரும். ஆனா அந்த சமயத்துல இந்த கேஸ் எஃப்.ஐ.ஆர். கூட ஆகல. சம்மந்தப்பட்ட ரெண்டு தரப்பும் சின்னப்பசங்கதான் (மண்டபத்தில் தகராறு செய்து கொண்ட வர்கள்) இதுல வெளியே இருந்து வந்த பசங்கதான் ரவுடிப் பசங்கங்கிற தகவல் வந்தது.

அங்க போத்தனூர் இன்ஸ்பெக்டர் போறாரு. சிலரை அரஸ்ட் பண்றாரு. அடுத்த நாள் மீதி உள்ளவங்களையும் அரஸ்ட் பண்ணி அன்னைக்கு சாய்ங்காலத்துக்குள்ளேயே எல்லா அரஸ்டும் முடிஞ்சிடுது.

பெரிய ஹாஸ்பிட்டல்ல முஸ்லிம் இளை ஞர்கள் சிலரும் ரெண்டு இந்து இளைஞர்களும் கூட அட்மிட் ஆகியிருக்காங்க.அங்க முஸ்லிம் இளைஞர்களை பார்க்கப் போனா முஸ்லிம் அமைப்புகளோட நிர்வாகிங்க என்னை தொடர்பு கொண்டு,“சார் நீங்கதான் முஸ்லிம் இளைஞர்களை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போனீங்களா''ன்னு கேட்குறாங்க. அப்பத்தான், “நான் இல்ல. நைட்டே போலிஸ் டீம்தான் அரஸ்ட் பண்ணியிருக்கு. நான் வெளியில இருக்கேன். செக் பண்ணி சொல்றேன். நீங்க ஏ.சி. கிட்ட கேளுங்க...''ன்னு சொன்னேன்.

இன்னொரு விஷயம் சார்....... ஸ்பெஷல் டீம் அரஸ்ட் பண்ணு வோம். எங்களை அடிக்க அனுமதிக்க மாட்டாங்க அந்த ஸ்டே ஷன் இன்ஸ்பெக்டருங்க. பிரச்சினை வந்துச்சுன்னா கையெ ழுத்து போடுறது அவங்கதான்.ஏன்னா ரெஸ்பான்டன்ட் அவங்க ஆயிடுவாங்க இல்லையா? அதனால இன்னொரு ஸ்டேஷன் கேஸ்ல, மற்றொரு ஸ்டேஷன் அதிகாரிகள அடிக்க விட மாட் டாங்க.என் கேஸ்ல நான் அடிச்சேன்னா...நான் கையெழுத்து போடுவேன். நான் ரெஸ்பான்டன்ட் ஆயிடுவேன்.இன்னொரு இன்ஸ்பெக்டர் அவரு கையெழுத்து போடுற கேஸ்ல என்ன அடிக்க விடுவாரா?இத லாஜிக்கா யோசிச்சாங்கன்னாலே போதும். இதை எனக்குத் தெரிஞ்ச (முஸ்லிம்) நட்பு வட்டாரத் துல சொல்னேன்... இப்படி லாஜிக்கா யோசிக்கச் சொல்லுங்க.ஏன் பேரை ஏன் இழுக்கறீங்கன்னு.அதனால,இதுல தேவை யில்லாம என் பேரை மிஸ்யூஸ் பண்ணியிருக்காங்க சார்...''என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

சாஸ்தா நேர்மையான அதிகாரி என்று கோவை முஸ்லிம்க ளிலேயே ஒரு பகுதியினர் சொல்கிறார்கள்.ஆனால் "இவரது பெயர் உண்மையில் மிஸ்யூஸ் பண்ணப்பட்டிருந்தால் அதுக்கு,அவரை விரும்பாத காவல்துறையில் இருக்குற சில பேருதான் காரணம்' என்கிறார்கள் கோவை உளவுத்துறை போலீஸார் சிலரே நம்மிடம்.

சாஸ்தாவின் சாகசம்!

போத்தனூர் திருமண மண்டப பிரச்சினையால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை,மனு போட்டுப் பார்த்தவர்களிடம் மருத்துவ மனை வாசலில் இருந்து தங்களை புளிகுளம் (பி7)போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள் ளனர்.

அங்கு சப் இன்ஸ்பெக்டர் சாஸ்தா முஸ்லிம் இளைஞர்களை வேசி மகன்கள் என்று கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் மத துவேஷமாகவும் பேசியுள்ளார்.

சதாக் என்ற இளைஞனின் முகத்தில் ஒரு பக்க தாடியை பிடித்து இழுத்து கையாலேயே பிடுங்கியதாகவும்.சதாக் பசியினால் துடித்தபோது நான் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவன் என்னை எவனும் ஒண்ணும் செய்ய முடியாது என்று வீர வசனம் பேசியதாகவும் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.

Pin It