தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மகளிரின் பங்கேற்பு ஒரு முரணானக் காட்சியைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஒரு பெண் கல்வி கற்பதற்கும், பணிசெய்வதற்கும் பொருளாதார நவீன துறைகளில் வேலையில் அமர்வதற்கும் வாய்ப் புள்ளது. ஆனால் ஆண்களும் பெண்களும் பணியாற்று கின்ற ஒரே இடத்தில் ஆண்கள் செய்யும் அதே பணியைச் செய்திடும் பெண்ணுக்கு செயலீடுபாடு பிரிவினைச் செய்து, ஆண்களுக்கு அளிப்பதைவிட மிகவும் குறைந்த ஊதியம் அளித்திடும் நிலை உள்ளது.

மகளிர் நலனுக்கான அரசின் கொள்கையினால் பேருந்தில் மகளிருக்கு இலவயப் பயணம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பில் மகளிருக்கு உள்ள இடர்பாடுகள் களையப்பட்டுள்ளன. பெண் தொழிலாளர் தேவைப்பாட்டில் (demand) நல்ல வருவாய்த் தரும் பணிகளில் மகளிரின் பங்கு கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு வீழ்ச்சி நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மேற்கூறிய சரிவை ஈடுசெய்வதற்கு தமிழ்நாட்டரசின் திட்டங்கள் மூலம் வளர்ந்துவரும் தொழில்களுக்கு ஏற்ப மகளிருக்குத் தக்க திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது தேவையாகும்.

நூறாண்டாக அரசின் கொள்கைகளாலும் சமூக அணிதிரட்டல் காரணமாகவும் தமிழ்நாட்டில் தொழிலாளர் வளத்தில் மகளிரின் பங்கு அனைத்திந்திய சராசரியை விடவும் மற்ற பல மாநிலங்களை விடவும் அதிகம் ஆகும், தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிடும் காலமுறைத் தொழிலாளர்வளக் கணக்கெடுப்பு (NSSO-PLFS) 2020-21 ஆண்டிற்கான புள்ளிவிவரம் :salary gap between man and womanதமிழ்நாட்டில் மகளிர் பங்கு -43%

அனைத்திந்திய சராசரி மகளிர் பங்கு -32.5%

ஆயினும் பன்னாட்டு நிலைகளுடன் ஒப்பிடுகையில் தொழிலாளர்களுள் மகளிரின் பங்கு குறைவாக உள்ளது. தமிழ்நாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கையில் (அ) தொகையில் மகளிரின் பங்கு 1993-94இல் அதன் உச்சத்தில் 54 விழுக்காடாக இருந்தது. 2004-2005இல் 51 விழுக் காடாகக் குறைந்துவிட்டது. அதுமுதல் இறங்குமுகமாகவே உள்ளது. இந்நிலை 2017-18-இல் 34 விழுக்காடு என மிகக் குறைந்த நிலையை அடைந்தது. இது 2020-21இல் 43 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால் இந்த உயர்வை உண்மையான, நேர்மறை வளர்ச்சியாகக் காணக்கூடாது.

ஏனெனில் இந்த உயர்வு முக்கியமாக வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டதால் ஏற்பட்டதாகும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட இடர்பாட்டினால் குடும்ப வருமானத்தை ஈடுசெய்வதற்காக அதிகப்படியான மகளிரை வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கலாம்.

புதிய துறைகளில் மற்ற பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கணிசமான மகளிர் பணியாளர்களாக அமர்த்தப் பெற்றுள்ளனர். சேவைத் துறைகளிலும் உற்பத் தித் துறைகளிலும் 58 விழுக்காடு மகளிர் பங்கேற்றுள்ளனர். மகளிர் பங்கேற்பு குசராத்திலும் மராட்டியத்திலும் 39 விழுக் காடாகவும் அனைத்திந்திய சராசரி 37 விழுக்காடாகவும் உள்ளது. இந்திய அளவில் வேளாண்மை வேலைகள் மகளிர்மயமாகிக் கொண்டுள்ள போக்கு நிலவுகின்ற போது தமிழ்நாட்டில் வேளாண் துறையிலிருந்து மகளிர் தொழி லாளர் கணிசமாகப் பிற துறைகளுக்கு மாறியுள்ளது தனிச்சிறப்புடையதாகும்.

அனைத்திந்திய அளவில் ஒட்டுமொத்த உற்பத்தித் தொழில் துறையில் நிலையானப் பணியாளர்களாக உள்ள மகளிருள் 28 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தொழில் வளர்ந்த மாநிலங்களான மராட்டியத்தில் 13 விழுக்காடாகவும் குசராத்தில் 11 விழுக் காடாகவும் உள்ளன என்பதை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் உயர்வான நிலையை அறியலாம். ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் மட்டுமே தமிழ்நாட்டு மகளிர் தொழிலாளர் பங்கு 43 விழுக்காடாக உள்ளது. இதையே வேறு வகையில் சொல்வதானால் உற்பத்தித் துறையில் பணியாற்றும் மகளிருள் பாதியளவுக்குத் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் அரசு ஊழியர்களுள் மகளிர் பங்கு அனைத் திந்திய அளவில் சராசரியாக 36 விழுக்காடு என உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 52 விழுக்காடாக உள்ளது.

மகளிர் வேலை வாய்ப்புப் பெறுவதில் அடைந்துள்ள வெற்றியானது அவர்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு காட்டப் படுவதால் பெண்களை உள்ளடக்கிய வளர்ச்சி என்பது எப்போதும் உறுதி செய்யப்பட்டதாக இருப்பதில்லை. கல்வி நிலையங்களில் பெண்கள் சேர்க்கை உயர்ந்து வருவதற்கு இணையான அளவில் வேலைவாய்ப்புப் பெறுவது உயரவில்லை. ஆடவரும் மகளிரும் வேலை நாடிச் செல்லும் நிலையிலேயே வாய்ப்புகள் பெரும்பாலும் சமமாக இருப்பதில்லை. வேலை பெற்றுவிட்டாலும் வேலையில் பாகுபாடு அல்லது ஊதியத்தில் பாகுபாடு காட்டுதல் காரண மாக மகளிர் பாதிக்கப்படுகின்றனர். ஆடவர்-மகளிர் வருமான இடைவெளி அதாவது ஆடவர் வருமானத்திற்கும் மகளிர் வருமானத்திற்கும் உள்ள இடைவெளி விகிதம் இந்தியா விலேயே தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் ஆகும்.

சான்றாக 2020-2021-இல் நிலையானப் பணிகளில் உள்ள மகளிரின் மாத வருமானம் உரு.12,969/-ஆகவும் ஆடவரின் மாத வருமானம் உரு.17,476/-ஆகவும் இருந்தது. 2018-2021 ஆகிய 4 ஆண்டுகளின் சராசரியைக் கணக்கிட்டால், தமிழ்நாட்டில் நிலையான பணிபுரியும் மகளிர் சம்பளம் அதே தகுதி நிலையில் பணிபுரியும் ஆடவர் ஈட்டும் வருமானம் ஒரு உருபாய்க்கு 74 காசுகளாக உள்ளது. இது மராட்டியத்தில் 81 காசாகவும் குசராத்தில் 85 காசாகவும் உள்ளது. இதுவே அனைத்திந்திய சராசரியில் ஆடவர் ஈட்டும் ஒரு உருபாய்க்கு மகளிரின் வருமானம் 77 காசுகள் ஆகும்.

இந்த வருமான இடைவெளி விளக்குவது என்னவென்றால் பிற மாநிலங்கள் பலவற்றைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கல்வியறிவில் ஆண்-பெண் இடைவெளி மிகவும் குறைவு. ஆதலால் மனித வள முதலீட்டில் இந்த வேறுபாடுகள் வழக்கமான ஒன்று எனக் கருதிவிட முடியாது. இது தொழில் வகைப்படுத்துதலின் வெளிப்பாடு என்பது ஒரு பகுதி காரணமாக இருக்கலாம். உடலுழைப்பற்ற (அலுவலகப்) பணிகளில் மகளிர் 12 விழுக்காட்டினர் உள்ளனர். ஓரளவு செயல்திறன் தேவைப்படுகின்ற (Semi-unskilled) அல்லது செயல்திறன் தேவைப்படாத உடலுழைப்புச் சார்ந்த பணிகளிலேயே பெரும்பாலான மகளிர் பணி செய்கின்றனர் என்பது மகளிர் ஊதியக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.

தமிழ்நாடு மேம்பட்ட திறன்சார் அணுகுமுறையை மேற்கொண்டு தமது உத்திகளை மாற்றியமைத்திடல் வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது மட்டுமே நீடித்துக் கொண்டிருக்கின்ற ஆண்-பெண் சமத்துவமற்ற நிலையை வெற்றி கொள்ள உதவாது.

தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரு.1000/-உதவித் தொகை அளிப்பது முறைசாராத் துறைகளில் நிச்சயமற்ற வேலைகளைச் செய்து வருபவர்களின் குடும்பங்களைக் கட்டாயம் மேம்படுத்திடும். கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல், சேவைத் துறைப் பணிகளில் பங்கேற்பதற்கு தகுதிப்படுத்திட மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்தல் ஆகியவற்றோடு உற்பத்தித் துறைகளை வலுவூட்டுவதற்கு உரிய வழிவகைகளைக் காண்பதும் நீண்டகால உத்திகளாக இருக்க வேண்டும்.

31.07.2023, The Hindu நாளேட்டில் வெளியான கட்டுரை; தமிழில் : சா. குப்பன்

(இக்கட்டுரையாளர் முனைவர் ஆ. கலையரசன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தில் இணைந்துள்ள ஆய்வாளர்)

Pin It