பெரியார் அவர்கள் 1928இல் முதலாவது சுய மரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார். அதன் பின் பெரியார் கொள்கையினர் எண்ணற்றோர் சுய மரியாதைத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணங்கள் பார்ப்பனப் புரோகிதர் இல்லாமல் சமயச் சடங்குகள் இல்லாமல் நடைபெறுவனவாகும்.

இந்த வகை திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று 26.8.1953 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இன்றைய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் மாமனார் இராம. அழ. சிதம்பரம் ­மாமியார் ரெங்கம்மாள் திருமணம். இது சாதி மறுப்பு, புரோகித மறுப்பு மற்றும் விதவை - விதவன் திருமண மாகும். 1934இல் பெரியார் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். சிதம்பரம் அவர்களின் முதல் மனைவியின் மகன் இறந்த நிலையில் அவருடைய மனைவி அதாவது சிதம்பரத்தின் மருமகள் தெய்வ யானை ஆச்சி என்பவர். தன் மாமனாரின் இரண்டாவது திருமணம் சுயமரியாதைத் திருமணம். அது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல; அவர்களுக்குப் பிறந்த பிள்ளைக்கு சொத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்பதே இந்த வழக்கு ஆகும்.

சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கும் வகையில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இயற்றினார்.

பெரியாரின் கருத்தை அறிந்தபின் அண்ணா அவர்கள் 27.11.1967 அன்று சட்டப் பேரவையிலும் மேலவையிலும் நிறைவேற்றினார். 17.1.1968 அன்று குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். 20.01.1968 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு சுயமரியாதைத் திருமணம் சட்டமாகியது.

ஒன்றிய அரசின் 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் (25/1955) 7ஆவது பிரிவுக்குப் பின்னர் 7-A புதியதாகச் சேர்க்கப்பட்டது.

1. உறவினர், நண்பர் அல்லது மற்றோர் முன்னி லையில் கீழ்க்கண்ட வகையில் சுயமரியாதை மணம் அல்லது சீர்திருத்த மணம் என்றோ அல்லது வெறெந்த பெயரிலோ முறையாக நிறைவேறும் திருமணத்திற்கு இப்பிரிவு பொருந்தும்.

(அ) மணமக்கள் அறிந்துள்ள மொழியில் ஒருவர் மற்றொருவரைச் சட்டப்படியான மனைவியாகவோ அல்லது கணவனாகவோ ஏற்றுக்கொள்வதாக உறுதி யளித்தல்; அல்லது

(ஆ) மணமக்கள் இருவரும் ஒருவர் மற்றொரு வருக்கு மாலை அணிவித்தல் அல்லது விரலில் மோதிரம் அணிவித்தல்; அல்லது

(இ) தாலி அணிவித்தல்.

2. இவ்வித திருமணம் இதற்கு முன்பு செய்து கொண்டவர்களுக்கும் பொருந்தும் என்றும் சட்டப் பிரிவில் 6 ஆகச் சேர்க்கப்பட்டது.

திருப்பூரில் 2014இல் வழக்குரைஞர்கள் முன்னி லையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ரவீந்திரபட், அரவிந்த குமார் இருவர் அமர்வு இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசு இயற்றிய சுயமரியாதைத் திருமணச் சட்டம் 7-1 இன்படி வழக்குரைஞர் மணமக்களின் நண்பர் என்ற முறையில் அவருடைய அலுவலகத்தில் நடத்தி வைக்கப்பட்ட திருமணம் சட்டப்படி செல்லத்தக்கதே என்று தீர்ப்பளித்தது. “வயது வந்த இருவர் தாமாக முன்வந்து விருப்பப்பட்டு முடிவெடுக்கும் போது அவர்களுக்கு குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது கடினம் அல்ல; அதனை நீதிமன்றங்கள் பரிசீலிக்காமல் விடுவது அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவு வழங்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகும்” என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தத் தீர்ப்பு தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

Pin It