பொதுவாகவே மத்தியில் காங்கிரஸ் ஆண்டா லும் சரி, பாரதிய சனதாக் கட்சி ஆண்டாலும் சரி, ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் ஒரே வண்டியில் பூட்டப் பட்ட இரு காளைகள்போல ஒரே பார்வையில்தான் பயணிக்கிறார்கள். அதுதான் இந்தித் திணிப்பாகும். இந்தி மொழியை வளர்க்க எடுக்கும் முயற்சிகளில், “இவருக்கு அவரே இளைத்தவர் அல்ல” என்றுதான் பாடவேண்டி யது இருக்கிறது. மொழிப் பிரச்சினை என்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாகும். இதில் கை வைப்பது என்பது தேன்கூட்டில் கைவைப்பது போலத்தான்.

அந்த வகையில்தான், இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த ஆன்றோர்களிலேயே இந்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு அணிகள் இருந்தன. ஒருமுத்த முடிவு இல்லாததால்தான், இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க முடியவில்லை. இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தி ஆட்சிமொழியாக அறிவிக்கப் படாது என்ற உறுதிமொழியை பண்டித ஜவஹர்லால் நேருவே பிரதமர் என்ற முறையில் அறிவித்திருக்கிறார்.

ஆனாலும், அவ்வப்போது அதை மீறி இந்தித் திணிப்பு முயற்சிகள் முளைப்பதும், முளையிலேயே கிள்ளி எறியப்படுவதும் உண்டு. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத் தாலேயே, காங்கிரஸ் ஆட்சியை இழந்து, இன்றளவும் 50 ஆண்டுகளை நெருங்குகிற காலக்கட்டத்திலும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

இத்தகைய சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும் போது, இப்போது மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்தி மொழி பற்றிப் பேசிய பேச்சுகள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மனதில் சலனத்தை ஏற்படுத்திவிட்டன. ‘இந்த தினம்’ கொண்டா டப்பட்ட வேளையில், இந்தி மொழியை வளர்க்க விசேஷ முயற்சிகள் எடுத்துக் கொண்டவர்களுக்கும், அரசு அமைப்புகளுக்கும் விருது வழங்கிய மத்திய மந்திரி, அதே விழாவில் பேசிய நேரத்தில், “இந்தி மொழிக்கு அதற்குரிய மதிப்பு இன்னும் கிடைக்க வில்லை.

அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆங்கிலத்தைத்தான் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சமஸ்கிருதத்துக்கு அடுத்து, தமிழ்தான் இந்திய மொழிகளில் பழமையானது என்றாலும், இந்திதான் நாட்டில் பரவலாகப் பரவியிருக்கிறது. அதனால்தான், இந்திய மொழிகளில், இந்தி மூத்த சகோதரியாகக் கருதப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ளப்படு கிறது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் அனை வரும் ஃபைல்களில் இந்தியில் கையெழுத்திட வேண்டும்.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் இந்தியின் பயன்பாடு உயர்த்தப்படுவதற்கான நமது முயற்சிகள் உயர்த்தப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டின் வளர்ச்சியில் கிராமப்புற மக்களின் பங் கையும் உறுதிப்படுத்த முடியும். இந்திதான் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கிறது” என்று பேசியதுதான், இந்தி மொழியைத் திணிக் கும் முயற்சிகள் இப்போது தீவிரப்படுத்தப்பட்டு விட்டதோ? என்று சந்தேகப்பட வைக்கிறது.

சமஸ்கிருதத்துக்கு அடுத்த மூத்த மொழி தமிழ் என்று அவரே சொன்ன பிறகு, இந்தி எப்படி மூத்த சகோதரியாக இருக்கமுடியும்? இந்தியில் எழுதப்பட்டுள்ள ஃபைலில் மட்டும், அதுவும் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் இந்தியில் கையெழுத்துப் போடச் சொன் னால்கூட, அதில் அர்த்தம் இருக்கும். இந்தி தெரியாத மாநிலங்களில் இது எப்படிச் சரியாகும்? மேலும், அனைத்து மொழிகளையும் சகோதரிகள் என்று மதிப்பிடும்போது, அனைத்துச் சகோதரிகளும் ஒன்றாக வளர்ந்தால் தானே குடும்பம் தழைக்கும்.

எனவே, தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக்கும் முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும். அது ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்கும். அதுவரை இணைப்பு மொழியாக ஆங்கிலமே இருக்கலாமே! “அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் போல”ப் பயணிக்கும் நேரத்தில், இப்படி வீணாக இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாமே!

(நன்றி : “தினத்தந்தி”, 23-9-2015)

Pin It