மே 14,2015 அன்று தனது 94ஆம் பிறந்தநாள் காணும் நீதிபதி அஜித்சிங் பெய்ன்ஸ் புகழ் ஓங்குக! அஜித் சிங் பெய்ன்ஸ் த/பெ குர்பகிஷ் சிங் பெய்ன்ஸ்

பிறந்த நாள்     :     மே 14, 1922

கல்வி 1950 :     க.மு., (M.A.,) ச.இ., ((L.L.B)., கேன்னிங் கல்லூரி, லக்கனௌ பல்கலைக்கழகம்

1950-53     :     ஜலந்தரிலுள்ள லயல்பூர் கல்சா கல்லூரியில் பொருளியல் துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1953-73     :     தொடக்கத்தில் ஓசியார்ப்பூரில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின்னர் 1961ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு 1974ஆம் ஆண்டு சண்டிகர் உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

1974-84     :     சண்டிகர் உயர்நீதிமன்ற நீதிபதியாக விளங்கினார்.

1984  :     பஞ்சாப் மனித உரிமைகள் அமைப்பை நிறுவி அன்று முதல் அதன் தலைவராக இருந்து வருகிறார்.

1985  :     பஞ்சாப் விசாரணைக் கைதிகளின் வழக்குகள் மறுஆய்வுக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.

1991  :     உண்மையான கூட்டாட்சி அரசமைப்புச் சட்டம் கலந்தாய்வுக் குழுவின் தலைவர் ஆனார்.

1992  :     தனது ஒரு பேச்சிற்காக தடா சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டார். 1996ஆம் ஆண்டு குற்றமற்றவர் என்று அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ரூ.50,000/- இழப்பீடாக வழங்கப்பட்டது.

ஈடுபாடு   : 1. மனித உரிமைகளைப் பாதுகாத்தல்

            2. இந்தியாவை உண்மையான ஒரு மதச்சார்பற்ற கூட்டாட்சியுடைய மக்களாட்சிக் குடியரசு நாடாக மறுகட்டமைத்தல்

முகவரி    : வீட்டு எண்.28, வட்டம் 2, சண்டிகர்

தொலைபேசி :   74086

தொலைநகல் : 743398

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் கூட்டாட்சி என்ற தலைப்பிலான அனைத்திந்திய மாநாடு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக அக்டோபர் 20, 1991 அன்று புதுதில்லியிலுள்ள வித்தல்பாய் படேல் வளாகத்தில் கான்ஸ்டிடியூசன் கிளப்பில், மவ்லங்கர் அரங்கத்தில் நடைபெற்றது. அம்மாநாடு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் சிங்க் பெய்ன்ஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. வே.ஆனைமுத்து அம்மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.

அஜித் சிங் பெயின்ஸ் மே 14,1922 அன்று பிறந்தார். அவர் தந்தை குருபகிஷ் சிங் பெயின்ஸ் ஆவார். அஜித்சிங் பெயின்ஸ் 1950ஆம் ஆண்டு சட்டம் பயின்றார்.

மனித உரிமைகளுக்ககாகப் போராடிய - போராடும் வல்லமைமிக்க போராளி இவர்.

1985ஆம் ஆண்டு பஞ்சாப் மனித உரிமைகள் அமைப்பை உருவாக்கி அன்றிலிருந்து அதன் தலைவராக இருக்கிறார்.

எளிமையும் நேர்மையான வாழ்க்கை நோக்கங்களையும் கொண்ட இவரது உயர் பண்புகளைக் கேள்விப்பட்டுத் தெரிந்து கொண்டதன் விளைவாக, 1991ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற கூட்டாட்சி பற்றிய மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக அவரை அழைத்தோம்.

இவர் உண்மையானக் கூட்டாட்சி அரசமைப்புச்சட்டம் கலந்தாய்வுக் குழுவின் தலைவராக 21.01.1991 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரோட்டைச் சார்ந்த பேராசிரியர் மு.க.சுப்பிரமணியன் அதன் ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேராசிரியர் மு.க.சுப்பிரமணியன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிறந்த அரசியல் தலைவர்களுக்குக் கடிதங்கள் எழுதி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றி உண்மையான கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற மனப்பான்மை கொண்டுள்ளோரின் கருத்துகளைச் சேகரித்தார். இத்தகைய உண்மையான கூட்டாட்சியில் இந்தியாவின் தற்போதைய மொழிவாரி மாநிலங்கள் முழுமையான தன்னாட்சி பெறும். அவைகள் கூட்டாகத் தாமாக பாதுகாப்பு, நீடுழி வாழ வாழ்த்துக்கிறோம். செலவாணி மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய மூன்று ஆற்றல் மிக்க துறைகளை மட்டும் இந்திய கூட்டாட்சி அரசுக்கு வழங்கும்.

சென்னையில் திசம்பர் 23, 1993ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாட்டில் நீதிபதி அஜித்சிங் பெயின்ஸ் கலந்து கொண்டார்.

சென்னையில் திசம்பர் 27,1993 அன்று எஸ்.வி.இராசதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டாட்சி பற்றிய பொதுக்கூட்டத்தின் சிறப்புப் பேச்சாளராக கலந்துக் கொண்டார்.

பேராசிரியர் மு.க.சுப்பிரமணியன் 21.2002 அன்று திடீர் என்று மரணமடைந்ததால் உண்மைக் கூட்டாட்சி அரசமைப்புக் கலந்தாய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வே.ஆனைமுத்து ஏற்றுக் கொண்டார்.

வே.ஆனைமுத்துவும் அவரின் தோழர்களும் 2008, 2009, 2012, 2013ஆம் ஆணடுகளில் நீதிபதி அஜித்சிங் பெய்ன்சைச் சந்தித்து உண்மைக் கூட்டாட்சி அரசமைப்புச்சட்டம் கலந்தாய்வுக் குழுவின் செயல்பாடுகளைக் குறித்து அவரது ஆலோசனைகளைப் பெற்றனர். அவர் சிந்தித்து வழங்கிய ஆலோசனைகள் மிகுந்த மதிப்புமிக்க ஆலோசனைகளாக உள்ளன.

தலைவர் அஜித்சிங் பெய்ன்சும், ஒருங்கிணைப்பாளர் வே.ஆனைமுத்துவும் இணைந்து 16.04.2013 அன்று அப்போதைய தலைமை அமைச்சர் முனைவர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மறுகட்டமைப்புச் செய்யக்கோரிய அறிக்கையை அனுப்பினர்.

மீண்டும் 01.03.2015 - 04.03.2015 நாள்களில் காலக்கட்டத்தில் நீதிபதி அஜித்சிங் பெய்ன்சும் வே.ஆனைமுத்துவும் கூட்டாட்சி பற்றி ஆழமாகக் கலந்தாய்வு செய்து, மார்ச்சு 4, 2015 அன்று சண்டிகரிலிருந்து தற்போதைய தலைமை அமைச்சர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களுக்கு அறிக்கை அனுப்பினர்.

தனது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாது கூட்டாட்சித் தத்துவத்தின் வளர்ச்சிக்கு நீதிபதி அஜித்சிங் பெய்ன்சின் மாபெரும் பங்களிப்புகளைப் பதிவு செய்வதில் உண்மைக் கூட்டாட்சி அரசமைப்புச்சட்டக் கலந்தாய்வுக்குழு மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

உண்மைக்கூட்டாட்சி அரசமைப்புச் சட்டம் கலந்தாய்வுக்குழு உறுப்பினர்களும், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொறுப்பாளர்களும் மே 14, 2015 அன்று 94ஆவது பிறந்த நாள் காணும் மாண்புமிகு நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் அவர்கள் நீண்ட ஆயுளும் வளமான வாழ்வும் பெற்று வாழ வாழ்த்துவதில் பெருமையடைகிறோம். எங்கள் தலைவர் நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் புகழ் ஓங்குக என மனதார வாழ்த்துகிறோம்!

-     வே.ஆனைமுத்து, ஒருங்கிணைப்பாளர், உண்மைக் கூட்டாட்சி அரசமைப்புச் சட்டம் கலந்தாய்வுக்குழு

Pin It