அனைத்துக் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்கள், மத்தியப் புலனாய்வுத் துறை (CBI), தேசியப் புலனாய்வு முகமை (NIA) அலுவலகங்களில் வருகிற 27.1.2021 க்குள் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பரம்வீர்சிங் சைனி எதிர் பல்ஜித் சிங் மற்றும் பலர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆர்.எப். நாரிமன் தலைமையிலான நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அனிருதா போஸ் அடங்கிய அமர்வு 2.12.2020 அன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன் முழு விவரம் பின்வருமாறு:
1. டி.கே. பாசு எதிர் மேற்கு வங்க அரசு மற்றும் பிற மாநிலங்கள் (2015) 8 SCC 744, வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைக் கருத்திற் கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் காவல் நிலையங்களில் உள்ள சிசி டி.வி கேமரா பதிவுகளைப் பார்வையிட்டுக் கண்டறிந்தவைகளை அவ்வப்போது வெளியிட ஒரு தன்னிச்சையான குழு உருவாக்கப்பெற வேண்டும் என்பதைக் கூடுதலாக அறிவுறுத்த வேண்டிய தேவை இருந்தது. இது தொடர்பாக மத்திய மேற்பார்வைக் குழு (Central Oversight Body -COB) தகுந்த வழிமுறைகளை விரைவாக வழங்குமாறு மேலும் அறிவுறுத்தப்பட்டது.
2. ஒவ்வொரு கட்டத்திலும் காணொளிக் காட்சியின் பயன்பாடு மாறுவதை உறுதி செய்ய, அவ்வப்போது மத்திய மேற்பார்வைக் குழு (Central Oversight Body -COB) பொருத்தமான வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மேலும் அறிவுறுத்தியது, இதன் முதற் கட்டம் 15.07.2018 தேதிக்குள் செயற்படுத்தப்படும்.
குற்ற நடவடிக்கைகளைக் காணொளி மூலம் பதிவு செய்வதற்கு மத்திய மேற்பார்வைக் குழுவால் (Central Oversight Body -COB) தீர்மானிக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமுள்ள முன்னுரிமையுள்ள சில இடங்களில் காணொளிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.
3. மேற்கூறிய வழிமுறைகளுக்கு இணங்க, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / பிற மத்திய முகமைகள் போன்றவை தொடர்புடையக் குற்றச் சம்பவங்களின் புகைப்படம், காணொளிக் காட்சி ஆகியவற்றைப் பதிவு செய்யும் பயன்பாட்டை நடைமுறைப் படுத்துவதை மேற்பார்வையிடவும், காணொளிப் பதிவு முறையைச் செயற்படுத்துவதற்கு ஒரு மத்திய சேவையகத்தை அமைப்பதற்கான சாத்தியத்தை பரிந்துரைப்பதற்கும், காணொளிக் காட்சிப் பதிவு முறையின் பயன்பாடு ஒவ்வொரு கட்டமாக மாறுவதை உறுதி செய்வதற்கும், பொருத்தமான வழிமுறைகளை வெளியிடுவதற்கும், உள்துறை அமைச்சகத்தால் 09.05.2018 அன்று (26.07.2018 தேதியிட்ட பிரமாணப் வாக்குமூலத்தின்படி) ஒரு மத்திய மேற்பார்வைக் குழு Central Oversight Body -COB) அமைக்கப்பட்டது.
அதன்படி, மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன்படி குற்ற நிகழ்வுகளின் புகைப்படம், காணொளிக் காட்சி ஆகியவற்றைப் பதிவு செய்வதைத் திறம்பட செயற்படுத்தவும், அவற்றின் பயன்பாட்டை நடைமுறைப் படுத்துவது குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை வழங்கவும், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பிற மத்திய முகமைகள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
4. இந்த நீதிமன்றம், 16.07.2020 தேதியிட்ட உத்தரவு, பிரிவு 161 (3) விதிமுறைகளால் வழங்கப்பட்ட பிரிவு 161 குற்றவியல் நடைமுறை அறிக்கைகளின் படி ஒலி - ஒளிப் பதிவுகள் குறித்த கேள்வி, பொதுவாகக் காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுவது பற்றிய மையமான விவாதம் ஆகியவற்றிற்கு உடனடி சிறப்பு விடுப்பு மனு மூலம் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை அனுப்பும் போது இந்த நீதிமன்றம் ஷஃபி முகமது வழக்கின் உத்தரவுகளையும் கவனித்திற் கொண்டது.
5. இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, பஞ்சாப், நாகாலாந்து, கர்நாடகா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், அசாம், சிக்கிம், மிசோரம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர்; மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் - அந்தமான் & நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி உள்ளிட்ட 14 மாநிலங்களால் (24.11.2020 வரை) எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகார்தாரரின் பிரமாண வாக்குமூலம், அறிக்கைகள் ஆகியற்றை அளிக்க வேண்டும்.
6. இந்த நீதிமன்றத்தின் 16.9.2020 தேதியிட்ட உத்தரவுப்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்ட நிலை, இத்துடன் இந்த நீதிமன்றத்தின் 3.4.2018 தேதியிட்ட உத்தரவுப்படி மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டது ஆகியவற்றை மாநில அரசுகள் / யூனியன் பிரதேச அரசுகள் கண்டறிய வேண்டும்.
7. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் நிலையை புகார்தாரரின் பிரமாண வாக்குமூலங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்த அறிக்கைகள் தவறிவிட்டன.
அந்தந்த மாநிலம், யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் செயற்படும் மொத்த காவல் நிலையங்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் பிரமாண வாக்குமூலங்கள்; ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நிறுவப்பட்ட மொத்த சி.சி.டி.வி கேமராக்கள், ஏற்கெனவே நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள், சி.சி.டி.வி கேமராக்களின் செயல் நிலை; சி.சி.டி.வி கேமராக்களில் பதிவு செய்யும் வசதி உள்ளதா? ஆம் என்றால், எத்தனை நாட்கள் / மணிநேரம் என்பது வெளியிடப் பெறவில்லை.
மேலும், 03.04.2018 தேதியிட்ட ஆணைக்கு இணங்க நிறுவப்பட்ட மேற்பார்வைக் குழுக்களின் நிலை இத்துடன் அல்லது அந்தந்த மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுக்கள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்படவில்லை.
8. முன்னர் கூறியது போல, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் புகார்தாரரின் பிரமாண வாக்குமூலங்கள் மாநில முதன்மைச் செயலாளர் அல்லது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் உள்துறை செயலாளரால் தாக்கல் செய்யப்பெற வேண்டும்.
இந்த உத்தரவின் 8 ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைக் கூறி, இன்றுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார்தாரரின் பிரமாண வாக்குமூலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதை நிறைவேற்ற வேண்டும். இந்த வாக்குமூலங்கள் இன்றிலிருந்து ஆறு வார காலத்திற்குள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
9. கடந்த 03.04.2018 தேதியிட்ட உத்தரவுப்படி மாநில, மாவட்ட அளவில் மேற்பார்வைக் குழுக்களின் அமைப்பு செயற்படுத்தப்பெற வேண்டும். மாநில அளவிலான மேற்பார்வைக் குழு (இனிமேல் “SLOC” என்று குறிப்பிடப்படுகிறது) பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்:
(i) செயலாளர் / கூடுதல் செயலாளர், உள்துறை
(ii) செயலாளர் / கூடுதல் செயலாளர், நிதித்துறை;
(iii) காவல்துறைத் தலைமை இயக்குநர்(DGP) /காவல்துறைத் தலைவர்(IG) மற்றும்
(iv) மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் / உறுப்பினர்.
10. மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவைப் பொறுத்தவரை (இனிமேல் DLOC என்று குறிப்பிடப்படுகிறது) பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்:
(i) உட்கோட்ட ஆணையாளர் / உட்கோட்டங்களின் ஆணையாளர் / பிராந்திய ஆணையாளர் / மாவட்ட உட்கோட்ட வருவாய் ஆணையாளர் (எந்த பெயரில் அழைத்தாலும்)
(ii) மாவட்ட நிர்வாக நடுவர்
(iii) மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும்
(iv) மாவட்டத்திற்குட்பட்ட ஒரு நகராட்சியின் மேயர் / கிராமப்புறங்களில் உள்ள மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்.
11. இந்த நீதிமன்றம் நிறைவேற்றிய வழிமுறைகள் நடைமுறைப் படுத்துவதைப் பார்வையிட வேண்டியது மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவின் (SLOC) கடமையாகும். மற்றவர்களுடன் , கீழ்க்கண்ட கடமைகளை உள்ளடக்கியதாகும்:
அ) சி.சி.டி.வி கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குதல், விநியோகித்தல், நிறுவுதல்;
ஆ) அதற்கான வரவு-செலவு ஒதுக்கீட்டைப் பெறுதல்
இ) சி.சி.டி.வி கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு,தொடர் பராமரிப்பைக் கண்காணித்தல்
ஈ) ஆய்வுகளை மேற்கொள்ளல், மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவில் (DLOC) இருந்து பெறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்தல்; மற்றும்
உ) மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவில் (DLOC )இருந்து மாதாந்திர அறிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தல், இத்துடன் பழுதான உபகரணங்கள் போன்ற பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்தல்.
அதேபோன்று, மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவிற்குக் (DLOC) கீழ்க்கண்ட கடமைகள் உள்ளன:
அ) சி.சி.டி.வி கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவற்றின் மேற்பார்வை, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியன.
ஆ) சி.சி.டி.வி கேமரா, அதன் உபகரணங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு, தொடர் கண்காணிப்பு ஆகியன.
இ) சி.சி.டி.வி கேமரா மற்றும் அதன் உபகரணங்களின் செயல்பாடு, பராமரிப்பு ஆகியவைக் குறித்துக் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியுடன் (இனி “SHO” என குறிப்பிடப்படுகிறது) இணைந்து செயலாற்ற, இத்துடன்
உ) சி.சி.டி.வி கேமராஅதன் உபகரணங்கள் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு (SLOC ) மாதாந்திர அறிக்கை அனுப்புதல்.
ஊ) மனித உரிமை மீறல்கள் நடந்து அவை தெரிவிக்கப்படாமல் இருப்பதை அறிய, பல்வேறு காவல்நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தல்.
12. இவை யாவற்றுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமல் நடைமுறைப்படுத்த முடியாது என்பது வெளிப்படை. எனவே இது மாநிலங்களின் / யூனியன் பிரதேசங்களின் நிதித் துறைகளால் மிக விரைவாக செயற்படுத்தப்பெற வேண்டும்.
13. சி.சி.டி.வி.கேமராக்களின் இயக்கம், பராமரிப்பு, பதிவாகுதல் ஆகியவை சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரியின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
சி.சி.டி.வி. கேமராக்களின் உபகரணங்கள் அல்லது செயற்படுவதில் ஏதேனும் பழுது இருந்தால் உடனடியாக மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு (DLOC ) புகாரளிக்க வேண்டியது காவல் நிலைய பொறுப்பு அதிகாரியின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தில் சி.சி.டி.வி கேமரா செயற்படவில்லை என்றால், அக்காலகட்டத்தில் அந்த காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கைது / விசாரணைகள் குறித்து மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு (DLOC ) சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்து, அதன் பதிவையும் மாவட்ட அளவிலான மேற்பார்வைக் குழுவுக்கு (DLOC ) அனுப்ப வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தின் சி.சி.டி.வி. கேமராவின் செயலிழப்பு அல்லது செயற்படவில்லை என்று புகாரளித்திருந்தால், டி.எல்.ஓ.சி உடனடியாக மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவிடம் (SLOC ) பழுது நீக்கவும், புதிய சி.சி.டி.வி. கேமரா வாங்கவும் வேண்டுகோள் விடுக்க வேண்டும், அதை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும்.
14. ஒவ்வொரு மாநிலத்தின், யூனியன் பிரதேசத்தின் காவல்துறைத் தலைமை இயக்குநர் / காவல்துறைத் தலைவர் ஆகியோர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி. கேமராவின் இயக்கம், பழுதானவற்றை சரி செய்தல் ஆகியன குறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
காவல் நிலையத்தில் செயற்படாத அனைத்து சி.சி.டி.வி கேமராக்களின் செயற்பாட்டை மீட்டெடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவும். சி.சி.டி.வி கேமராக்களின் பராமரிப்பு, பதிவுகளின் விவரம், பழுது நீக்குதல் ஆகியவற்றிற்குக் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியையே பொறுப்பேற்க வைக்க வேண்டும்.
15. அந்தந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் ஆகியவற்றிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப் பட்டுள்ளதை மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஒரு காவல் நிலையத்தின் எந்தப் பகுதியும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, காவல் நிலையத்தில் நுழைவாயில், புறவாயில் ஆகிய இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்;
காவல் நிலையத்தின் பிரதான நுழைவாயில், கைதி அறை, அனைத்து நடைபாதைகள், காத்திருக்கும் பகுதி / வரவேற்புப் பகுதி, அனைத்துத் தாழ்வாரங்கள் / காவல்நிலைய வளாகத்திற்குள் இருக்கும் பிற கட்டிடம், காவல் ஆய்வாளர் அறை, சார்பு - ஆய்வாளர் அறை, கைதி அறைக்கு வெளியே உள்ள பகுதிகள், நிலைய கூடம், காவல் நிலைய வளாகத்தின் முன் பகுதி, வெளிப்பகுதி இத்துடன் கழிப்பறை / குளியலறை (உட்புறம் நீங்கலாக) பணியிலிருக்கும் அதிகாரியின் அறை; காவல் நிலையத்தின் புற வாயில் போன்றவை.
16. நிறுவப்பட வேண்டிய சி.சி.டி.வி கேமரா இரவிலும் இயங்கக் கூடியதாகவும், காட்சிகளைத் தெளிவாகப் பதிவு செய்வதாகவும் இருக்க வேண்டும். இத்துடன் கண்டிப்பாக ஒலி - ஒளிப்பதிவுகளை உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம் ஆகும்.
மின்சார வசதி / அல்லது இணைய வசதி இல்லாத பகுதிகளில், சூரிய சக்தி / காற்றாலை மூலம் மின்சாரம் வழங்கும் ஏதாவதொரு முறையைப் பயன்படுத்தி, முடிந்தவரை விரைவாக வழங்குவது மாநிலங்களின் / யூனியன் பிரதேசங்களின் கடமையாகும்.
வழங்கப்பட்ட இணையவழி முறை தெளிவான ஒலிப் பதிவுகளையும், ஒளிக்காட்சிகளையும் வழங்குபவைகளாக இருத்தல் அவசியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் மொத்த இருப்பை டிஜிட்டல் ஒளிக்காட்சிகளாக / அல்லது வலைத்தள ஒளிக்காட்சிகளாகப் பதிவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
சி.சி.டி.வி கேமராக்கள் அத்தகைய பதிவு வசதிகளுடன் நிறுவப்பட வேண்டும், அவை 18 மாதங்கள் பாதுகாக்கக் கூடியவையாக இருக்க வேண்டும். இதனால் அதில் சேமிக்கப்படும் தரவு குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாக்கப்படும்.
இன்றைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும், பதிவு செய்யும் உபகரணங்கள், 18 மாதங்களுக்குப் பதிவை வைத்திருக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை, எனவே அவ்வாறு இருப்பின், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவை அனுமதிக்கும் ஒன்றை வாங்குவது கட்டாயமாகும், அவை சாத்தியமான, அதிகபட்ச காலத்திற்கு அல்லது குறைந்தபட்சம் ஓராண்டிற்குக் குறையாமல் பதிவுகளை இருப்பில் வைத்துப் பாதுகாக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
18. மாதங்களுக்குப் பதிவை வைத்திருக்கும் திறனுள்ள சிசிடிவி கேமரா சந்தையில் வணிக ரீதியாகக் கிடைக்கும்போது அவற்றை வாங்குவதற்கு அனைத்து மாநிலங்களாலும் அவை மதிப்பாய்வு செய்யப்படும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவை சந்தையில் கிடைக்கும் சிறந்த உபகரணங்கள் வாங்கப்பட்டிருப்பதைத் தேதியுடன் இணக்க வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
17. காவல் நிலையங்களில் நடத்தப்படும் தாக்குதல் காரணமாக ஏற்படும் பலத்த காயம் / அல்லது காவல் மரணங்கள் தொடர்பாகப் பாதிப்புற்றோர் நிவாரணம் பெறச் சுதந்திரமாகப் புகார் அளிப்பது அவசியம் ஆகும்.
இத்தகைய புகார்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு மட்டுமல்லாமல், அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தும், குறிப்பாக மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 இன் பிரிவு 17 & 18 களின் கீழ், இதுபோன்ற புகார்களுக்குத் தீர்வு காணப் பயன்படுத்தப்படலாம், மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 30 இன் கீழ் ஒவ்வொரு மாநிலத்தின் / யூனியன் பிரதேசத்தின், ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித உரிமைகளுக்கும் நீதிமன்றங்கள் அமைக்கப் பெற வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையம் / நீதிமன்றம் ஆகியவை நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி கேமரா காட்சிப் பதிவுகளை அவற்றின் பாதுகாப்புக் கருதி, உடனடியாக வரவழைத்துப் பெற முடியும், மேலும் பெறப்பட்டப் புகார் மீது விசாரணை நடத்தும் விசாரணை நிறுவனத்திற்கு இதை அளிப்பதன் மூலம் விசாரணையை மேலும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.
18. இந்திய அரசு, இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பிரமாண வாக்குமூலத்தில் மத்திய மேற்பார்வைக் குழுவின் அமைப்பு, செயற்பாடு ஆகியவை புதுப்பிக்கப்பட்ட முழு விவரத்தை அளிக்கும்.
சி.சி.டி.வி கேமராக்கள், பதிவு செய்யும் கருவிகள் ஆகியவற்றை கீழ்க்கண்ட அலுவலகங்களில் நிறுவுமாறு இந்திய அரசை இந்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது:
(i) மத்திய புலனாய்வுத் துறை (CBI)
(ii) தேசிய புலனாய்வு முகமை (NIA)
(iii) அமலாக்க இயக்குநரகம் (ED)
(iv) போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB)
(v) வருவாய் புலனாய்வுத் துறை (DRI)
(vi) தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO)
மேற்கண்ட அரசு நிறுவனங்களில் பெரும்பாலானவை தங்கள் அலுவலகத்தில் விசாரணைகளை மேற்கொள்வதால், சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்து அலுவலகங்களிலும் கட்டாயமாக நிறுவப்பட வேண்டும், இங்கு நடைபெறும் விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களை அங்கேயே வைத்திருத்தல் போன்றவை ஒரு காவல் நிலையத்தில் நடப்பது போன்றே நடைபெறும்.
இந்த அலுவலகங்கள் டெல்லி மற்றும் டெல்லிக்கு வெளியே எங்கிருந்தாலும் மேலே குறிப்பிட்டுள்ள புலனாய்வு / அமலாக்க முகமைகளின் அலுவலகங்களுக்கான மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவின் (SLOC ) அதே செயற்பாட்டை மத்திய மேற்பார்வைக் குழு (COB) செய்யும்.
19. சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதைத் தெரிவிக்கும் விளம்பரத்தை காவல் நிலையங்கள், புலனாய்வு / அமலாக்க நிறுவனங்கள் ஆகியவற்றின் நுழைவாயில், உட்பகுதி போன்ற இடங்களில் (பொருந்தக் கூடிய இடங்களில்) வைக்க வேண்டும் என்று அனைத்துக் காவல் நிலையங்கள், புலனாய்வு / அமலாக்க நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மாநில அளவிலான மேற்பார்வைக் குழு (SLOC ) மற்றும் மத்திய மேற்பார்வைக் குழு (COB) அறிவுறுத்த வேண்டும். ஆங்கிலம், இந்தி இத்துடன் மாநில தாய் மொழிகளில் பெரிய சுவரொட்டிகளில் இவ்விளம்பரம் செய்யப்படும்.
மேற்கூறியவற்றைத் தவிர, விசாரணை மேற்கொள்ளும் பிற நிறுவனங்கள், அவற்றின் கைது செய்யும் அதிகாரம் போன்றவைத் தெளிவாகக் குறிப்பிடப்பெற வேண்டும். மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய / மாநில மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகள் நீதிமன்றம் அல்லது காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது ஒரு குற்றத்தை விசாரணை செய்யும் அதிகாரம் பெற்ற பிற அதிகார அமைப்பு ஆகியவற்றிடம் புகார் அளிக்க ஒருவருக்கு உரிமை உண்டு என்பதை அதில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
சி.சி.டி.வி காட்சிகள் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச கால அளவிற்குப் பாதுகாக்கப்படுகின்றன, அவை ஆறு மாதங்களுக்குக் குறைவாக இருக்காது, மேலும் பாதிக்கப்பட்டவரின் தனி மனித உரிமைகள் மீறப்பட்டால் அதைப் பாதுகாக்க அவருக்கும் உரிமை உண்டு.
20. இந்திய அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவின் கீழ் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் தொடர்ச்சியாய் இந்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் உள்ளன. ஆனால் இது தொடர்பாக முதல் உத்தரவு 03.04.2018 அன்று பிறப்பித்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இது தொடர்பாக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.
எனவே செயலாக்க / நிர்வாக / காவல்துறை அதிகாரிகள் இதைக் கூடிய விரைவில் கடிதம் வாயிலாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் முதன்மைச் செயலாளர் / அமைச்சரவைச் செயலாளர் / உள்துறைச் செயலாளர் ஆகியோரால் தாக்கல் செய்யப்படும் பிரமாண வாக்குமூலத்தில் இந்த நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவுக்கு இணங்கக் குறிப்பிட்டக் காலக் கெடுவுடன் உறுதியான செயற் திட்டத்தை வழங்க வேண்டும். இன்றிலிருந்து ஆறு வார காலத்திற்குள் இது செயற்படுத்தப்பெற வேண்டும்.
21. இந்த உத்தரவின் நகலை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் அனைத்து தலைமை / முதன்மைச் செயலாளர்களுக்கும் இந்நீதிமன்றம் அனுப்புகிறது.
- ச.மோகன்