கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஆளும் வர்க்கத்தின் வஞ்சக முகத்திரையைக் கிழித்தெறிவோம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் 22.5.2018 அன்று நடத்திய போராட் டத்தில் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப் பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அ.தி.மு.க. ஆட்சி கட்டவிழ்த்துவிட்ட இந்த அரச பயங்கர வாதம் தமிழகத்தையே உலுக்கியது.

எந்த அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல் மக்கள் தன்னெழுச்சியாகக் கடந்த பிப்பிரவரி 12 முதல் ஆலைக்கு அருகில் உள்ள குமரெட்டியாபுரத்தில் நடத்தி வந்த போராட்டத்தின் 100ஆவது நாளான மே 22 அன்று தங்கள் கோரிக்கையை அரசுக்கு வலிமையாக உணர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவ தென்று “ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்ட மைப்பு” இரண்டு நாள்களுக்கு முன்பே அறிவித்தது.

முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் 144 தடை ஆணையைப் பிறப்பித் தார். ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் பல பகுதிகளிலிருந்து மே 22 அன்று பனிய மாதா கோயில் அருகில் திரண்டனர். 5 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். வழிநெடுகிலும் எந்தவொரு வன்முறையும் நடக்கவில்லை. இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை அடைந்ததும். எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி காவல்துறையினர் திடீரென்று தடியடி நடத்தினர். அந்நிலையில் போராட்டக் காரர்களில் சிலர் காவல் துறையினர் மீது கற்களை வீசினர். ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்தச் சூழலில், காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

sterlite 600ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்து நூறு நாள்கள் நடந்த போராட்டத்தின் போது மக்களைச் சந்தித்துப் பேசாமல் புறக்கணித்த தமிழக அரசு, துப்பாக்கிக் குண்டுகள் மூலம் பதில் சொல்லியிருப்பது கடுங்கண்டனத்துக்கு உரியதாகும். இப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்காகத் திட்டமிட்டு மக்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறது தமிழ்நாட்டு அரசு.சல்லிக்கட்டுப் போராட்டம் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நெடுவாசல், கதிராமங்கலம் என்று பல இடங்களில் மக்கள் அரசுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டங்களை இனி அரசு அனுமதிக்காது என்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி எச்சரித்துள்ளது.

காவல்துறையினர் துப்பாக்கியால் சுடுவதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளைத் தூத்துக் குடியில் பின்பற்றவில்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தண்ணீரைப் பீச்சியடித்து விரட்டி யடிப்பது, இரப்பர் குண்டுகளால் சுடுவது, ஒலிபெருக்கி மூலம் எச்சரிப்பது, வானத்தை நோக்கிச் சுடுவது ஆகிய வற்றைக் காவல்துறை மேற்கொள்ளாமல் நேரடியாகத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. தூத்துக்குடியில் சுட்டது போல் காஷ்மீரில் கூட கண்டபடி துப்பாக்கியால் மக்களைச் சுடுவதில்லை. காவல்துறை ஊர்தியின் மேலிருந்து உயர்வகை துப்பாக்கியால் சுட்டது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

தான் பாதுகாக்க வேண்டிய மக்களைப் பகைவர் போல் கருதி மார்பிலும், முகத்திலும் காவல்துறை குண்டு களைப் பாய்ச்சியது. முழுங்காலுக்குக் கீழே சுடவேண்டும் என்கிற நடைமுறைகூட பின்பற்றப்படவில்லை. பன்னி ரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதியபின் போராட்டத்தில் தொடர்ந்து கலந்துகொண்ட 17 அகவை மாணவி ஸ்னோலினியின் வாயில் குண்டு பாய்ந்து தலைச்சிதறி மாண்டார். புரட்சிகர இளைஞர் முன்னணி யைச் சேர்ந்த தமிழரசன், மக்கள் அதிகாரம் அமைப் பின் செயராமன் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டெர் லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர்.

அன்று பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப் பாளரின் வாகனத்தைச் சிலர் இடைமறித்து, தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு குழந்தைகளின் தாயான ஜான்சி கொல்லப்பட்டார். காவல்துறைக்கு இதுபோல் கண்டபடி சுடுவதற்கு யார் அதிகாரம் அளித்தது? தூத்துக் குடியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஆணையிட்டது யார்? என்று தமிழக அரசு சொல்ல மறுத்து வந்தது.

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பழனிச்சாமி, துப்பாக்கிச் சூடு நடந்த மே 22 அன்று மாலை, “துப்பாக்கிச் சூடு நடந்தது என்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்று செய்தியாளர்களிடம் சொன்னார். முதலமைச் சரின் ஒப்புதல் இல்லாமல் காவல்துறை 13 பேரைச் சுட்டுக் கொல்லமுடியுமா? அப்படியே காவல்துறை, தான்தோன்றித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந் தாலும், அடுத்த நொடியே அச்செய்தியை முதலமைச் சருக்குத் தெரிவித்திருக்காதா? அவ்வாறு தனக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை; தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகின்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு நொடியேனும் முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா? நடுவண் அரசு, தமிழக ஆளுநர்-தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மூலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறது என்கிற கூற்றைத் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மெய்ப்பிப்பது போல் இருக் கிறதல்லவா!

துப்பாக்கியால் சுடப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டு ஆறு நாள்கள் கழித்து 28-5-2018 அன்றுதான் துப்பாக்கியால் சுடுவதற்கு ஆணையிட்டது யார் என்கிற விவரம் ஊடகங்கள் வாயிலாக வெளியானது. மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்திலும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புப் பகுதியிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குத் தனித் துணை வட்டாட்சியர் (தேர்தல்) சேகர் ஆணையிட்டார்; அன்று பிற்பகல் திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆணை யிட்டார் என்று இந்நிகழ்வுகள் குறித்து காவல்துறை பதிவு செய்த முதல்தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாகச் செய்தி வெளிவந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிந்திருந்தும் ஆட்சியர், துணை ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏன் இல்லை? துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஆணை யிட்டார்கள் என்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான ஆட்சியும் நிர்வாகமும் எந்த அளவுக்குச் சீர்குலைந்து கிடக்கிறது என்பதையே காட்டுகிறது.

போராட்டத்தின் 100ஆவது நாளான மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் குறித்து இரண்டு நாள்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. 24.3.2018 அன்று தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் 20,000 பேர் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அதன்பின் 9-4-18 அன்று பத்து ஊர்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று ஆட்சி யரிடம் விண்ணப்பம் கொடுத்தனர். எனவே மே 22 அன்று ஆட்சியர் அலுவலக முற்றுகையின்போது அதிக எண்ணிக்கையில் மக்கள் அணிதிரள்வார்கள் என்பதை உளவுத்துறை ஏன் கணிக்கத் தவறியது? 144 தடை ஆணை இருப்பதால் மக்கள் பெரும் எண் ணிக்கையில் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்று காவல்துறை கருதியதா? அப்படியானால் போராடு கின்ற மக்களிடம் கனன்று கொண்டிருந்த உணர்வை நிர்வாகமும் ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. போதிய எண்ணிக்கையில் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்தியிருந் தாலே, துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்க முடியும். 5 கி.மீ. தொலைவு எந்தவொரு வன்முறையிலும் ஈடு படாமல் பேரணியாக வந்தவர்களை ஊருக்கு வெளியே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பிறகு அவர்களைப் பழிதீர்ப்பது என்று காவல்துறை முன்பே திட்டமிட்டிருந்தது என்றே எண்ண வேண்டியுள்ளது.

வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால்தான் துப்பாக்கியால் சுட நேரிட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் மே 22 மாலை அரசின் சார்பில் விளக்கமளித்தார். வாகனங்கள் எரிக்கப்பட்டன; மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தின் முகப்புக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன என்பதற்குமேல் துப்பாக்கியால் கண்டபடி சுடுவதற் கான எந்தக் காரணமும் இல்லை. போராட்டக்காரர் களிடம் எந்த ஆயுதமும் இல்லை. சல்லிக்கட்டுப் போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் காவல் துறையின் ஊர்திக்கு ஒரு பெண் போலீசே தீ வைத்தது போல், தூத்துக்குடியிலும் நிகழ்ந்திருக்குமோ என்கிற அய்யம் ஏற்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டாலும், தடியடியாலும் காயம்பட்டு மருத்துமனையில் இருப்பவர்களைப் பார்ப்பதற்கு மே 23 அன்று வந்த உறவினர்களை விரட்டியடிக்க மீண்டும் காவல்துறை துப்பாக்கியால் சுட்டது. காவல்துறையும் ஆட்சியாளர்களும் எந்த அளவுக்கு இரத்த வெறி பிடித்த வர்களாக இருக்கின்றனர் என்பதையும், மக்களின் உயிரைத் துச்சமென மதிக்கும் மனப்போக்கினராக உள்ளனர் என்பதையும் இது காட்டுகிறது. மே 23 அன்று தூத்துக்குடி நகரில் மின்வழங்கலைத் துண்டித்து விட்டு காவல்துறையினர் வீடுகளுக்குள் புகுந்து நூற்றுக் கணக்கான இளைஞர்களை இழுத்துச் சென்றனர். அவர்களை இரண்டு நாள்கள் கடுமையாக அடித்தனர். இது, ஸ்டெர்லைட் போராட்டத்தில் இனி எவரும் பங் கேற்கக்கூடாது என்று எச்சரிக்கும் நடவடிக்கையாகும். வழக்குரைஞர்களின் முயற்சியால் அவர்களில் பெரும் பாலோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆயினும் கைது நடவடிக்கை தொடர்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை இலண்டனைத் தலைமை யிடமாகக் கொண்டுள்ள வேதாந்தா பன்னாட்டு நிறு வனத்துக்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். உலக அளவில் உலோகத் தாது சுரங்கங்கள், உலோக உற்பத்தியில் வேதாந்தா நிறு வனம் ஈடுபட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க முதலில் கோவா. குசராத் மாநிலங்களை அணுகியது. அதன் ஆபத்துகளைக் கருதி அம்மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. மகாராட்டிர மாநிலத்தில் கடற்கரை மாவட்டமான இரத்தனகிரியில் 500 ஏக்கர் பரப்பில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் ரூ.300 கோடி செலவில் நடந்தன. அப்பகுதி ஏற்றுமதியாகும் அல்போன்சா மாம்பழங்கள் விளையும் தோட்டங்கள் நிறைந்தது. ஆலையின் கழிவுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று உழவர்களும், மக்களும் ஓராண்டு தொடர்ந்து கடுமையாகப் போராடினர். இறுதியில் மகாராட்டிர அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்தது.

செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 1994இல் மற்ற மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியில் அமைக்க அனுமதி அளித்தது. அவரே அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 1996 அக்டோபர் 14 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமம் வழங்கியது. 1997 சனவரி முதல் ஸ்டெர்லைட் ஆலை தாமிர உற்பத்தியைத் தொடங்கியது. ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் நிராகரிக்கப்பட்ட இயந்திரங்களை இறக்குமதி செய்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டது. மற்ற நாடுகளிலிருந்து தாமிரத் தாது இறக்குமதி செய்யப்பட்டு, அதிலிருந்து தாமிரம் தனியாகப் பிரித் தெடுக்கப்பட்டு, தாமிரக் கம்பிகளும், தாமிரத் தகடுகளும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.

இயற்கைச் சமன்பாட்டில் முதன்மையான பங்காற்றும் அரியவகை உயிரினங்களுக்குத் தாயகமான மன் னார்வளைகுடாவில் 21 தீவுகள் உள்ளன. அத்தகைய பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியிலிருந்து 25 கி.மீ. தொலை வுக்குள் வேதியியல் தொழிற்சாலை எதுவும் அமைக்கப் படக்கூடாது என்பது விதி. ஆனால் 14 கி.மீ. தொலை வுக்குள் ஸ்டெர்லைட் ஆலை ஆட்சியாளர்களின் ஆதர வால் அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை அமைந்த போது அதனால் காற்று மண்டலத்தில் ஏற்படும் மாசு அளவைக் கட்டுப் படுத்த 250 மீட்டர் சுற்றளவுக்குப் பசுமை வளையம் (மரங்கள்) அமைக்க வேண்டும் என்கிற விதியை வளைத்து. அதை 25 மீட்டர் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறைத்தது. இவ்வாறாக, தொடக்கம் முதலே பல விதிமீறல்கள் நடந்தன.

1994இல் 1200 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் தமிழ்நாட்டு அரசு அமைத்த சிப்காட் வளாகத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. ஆண்டிற்கு 70,000 டன் தாமிர உற்பத்தியுடன் தொடங்கியது. இப்போது 4 இலட்சம் டன் உற்பத்தியாகிறது. இதற்கு ஏற்ற வகையில் புகைப்போக்கியின் உயரத்தை உயர்த்தவில்லை. திடக்கழிவுகளின் சேமிப்பு முறையை மேம்படுத்த வில்லை. இதனால் காற்றில் நச்சுத்தன்மை மிகுந்தது. மழைக் காலங்களில் திடக்கழிவுகளின் நச்சுகள் நிலத் தடி நீரில் கலந்தன. 1997 சூலை 5 அன்று சிப்காட் வளாகத்தில் இருந்த செயற்கை மலர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய 160 பெண்கள் நச்சுக் காற்றால் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்த துணை மின் நிலையத்தின் ஊழியர்கள் 20-8-97 அன்று இருமல், தலைவலி, வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப் பட்டனர்.

இதுபோன்ற பாதிப்புகள் மக்களுக்குத் தொடர்ந்து ஏற்பட்டதால் 1998 நவம்பர் 23 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆயினும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தன் பணவலிமையைக் கொண்டு அதே உயர்நீதி மன்றத்தில் 1998 திசம்பர் 1 முதல் ஆலை இயங்குவ தற்கான ஆணையைப் பெற்றது. அதேசமயம் சென்னை உயர்நீதிமன்றம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (சூநுநுசுஐ) ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் ஏற்படும் நச்சுகள் குறித்து ஆராய வேண்டும் என்று கூறியது. இந்த ஆய்வு நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள நிலத்திலும், நிலத்தடி நீரிலும், காற்றிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சுப்பொருள்கள் அதிகமாக இருப்பதாக அறிக்கை அளித்தது. அந்த ஆய்வு நிறுவனத்தின் ஆட்களையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் விலைக்கு வாங்கி, ஆய்வறிக் கையை அதற்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் மாற்றிய மைக்கச் செய்தது. ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எல்லாத் தொழிற்சாலைகளும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கையூட்டுக் கொடுத்து அவற்றால் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படும் கேடுகளை மூடிமறைத்து வருகின்றன.

நீதிமன்றத்தால் அய்ந்து தடவைகள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஒவ்வொரு முறையும் தனக்குள்ள பணவலிமை, ஆட்சியாளர்களின் ஆதரவு ஆகியவற்றின் துணையுடன் மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் தவிர, கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம் ஆகியவையும் தயாரிக் கப்படுகின்றன. இதனால் காற்றின் நச்சுத்தன்மை அதிகமாகிறது.

தூத்துக்குடியைச் சுற்றியுள்ள மக்கள் நச்சுத்தன்மை மிகுந்த காற்றினாலும் நீரினாலும் புற்றுநோய், தோல் நோய், ஆஸ்துமா, கருச்சிதைவுகள், பெண்களின் மாதவிடாய் சிக்கல்கள், இருமல், குழந்தைகள் ஊனமுடன் பிறத்தல் போன்ற பல கொடிய நோய்களால் பல ஆண்டுகளாக பெருந்துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

2005 முதல் 2010 இடையிலான காலத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளின் போது, மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், 342 ஏக்கர் நிலம் மற்றொரு ஆலை அமைப்பதற்காக ஸ்டெர்லைட்க்கு அளிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிருவாகம் மேலும் 4 இலட்சம் டன் தாமிரம் உற்பத்திச் செய்வதற்கான ஆலையை ‘விரிவாக்கம்’ செய்வது என்ற பெயரில் பொய்யான தரவுகளை அளித்து நடுவண் அரசிடம் அனுமதி பெற்று, அதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்டது. எனவே தூத்துக்குடி மக்களின் அச்சம் பன்மடங்காக மேலோங்கியது. தங்கள் மண்ணையும், தங்கள் உயிரையும், தங்கள் எதிர்காலத் தலைமுறை யினரின் வாழ்வையும் காக்க வேண்டும் என்ற உறுதிப் பாட்டுடன் தூத்துக்குடி வட்டார மக்கள் தீவிரமான போராட்டங்களை மேற்கொண்டனர்.

2013ஆம் ஆண்டு மார்ச்சு 23 அன்று ஆலையின் நச்சுப் புகையால் பலரும் பாதிக்கப்பட்டனர். அன்று காலை தூத்துக்குடி நகரமே நச்சுப் புகையால் சூழ்ந் திருந்தது. கண் எரிச்சல், இருமல், மூச்சுத் திணற லுடன் மக்கள் விழித்தெழுந்தனர். அதனால் முதல மைச்சர் செயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு ஆணையிட்டார். உச்சநீதிமன்றத்தை ஆலை நிர்வாகம் நாடியது. ஆலையின் தவறுக்காக ரூ.100 கோடி தண்டம் விதித்த உச்சநீதிமன்றம் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என்று கூறியது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதைக் காரணமாகக் காட்டி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி, ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது என்று கூறி வந்தது.

தமிழ்நாட்டில் கூடங்குளம், ஹைட்ரோ கார்பன் - மீதேன் எடுத்தல், கெயில் குழாய் புதைத்தல், ஸ்டெர் லைட், நியூட்டிரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக எந்தவொரு அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல் மக்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து தொடர்ந்து ஊக்கமுடன் வலிமையாகப் போராடி வருகிறார்கள். இப்போராட்டங்களின் ஊடாக தற்போது இருக்கின்ற அரசமைப்பும், ஆட்சி நிர்வாகமும் வளர்ச்சி என்ற பெயரால் பெருமுதலாளிகள் கொள்ளை இலாபம் ஈட்டு வதற்காக மக்களின் நலனை, எதிர்கால வாழ்வை பலியிடுகின்றன என்கிற அரசியல் புரிதல் மக்களிடம் வேகமாக ஏற்பட்டு வருகிறது. அத்துடன் பார்ப்பனிய-பனியா ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய அரசை எல்லாத் தளங்களிலும் தமிழ்த்தேசியம் என்கிற ஆயுதத்தைக் கொண்டு எதிர்ப்பதன் மூலமே தமிழர்களுக்கான உரி மைகளை வென்றெடுக்க முடியும் என்கிற கருத்தும் கூர்மையடைந்து வருகிறது. இதை ஆளும் வர்க்கம் பேராபத்தாகக் கருதுகிறது. எனவேதான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி, மே 22 அன்று முற்றுகைப் போராட் டத்தின்போது, சமூக விரோத சக்திகளும், தீவிரவாத அமைப்புகளும் ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டது என்று கூறி வருகிறது. மக்களின் உரிமைக்களுக்காகவும், சன நாயகத்தின் உயிர் நாடியான கருத்துரிமைக்காகவும் போராடி வருகிறவர்களையும், அமைப்புகளையும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்குவது ஆளும் வர்க்கத்தின் உத்தியாகும்.

மக்களின் போராட்டங்களை முறியடிப்பதற்காகவே இந்திய ஆளும் வர்க்கமும், பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகக் குற்றேவல் செய்து கொண்டிருக்கும் பழனிச்சாமி ஆட்சியும் சேர்ந்து தீட்டிய கூட்டுச்சதியே தூத்துக்குடியின் துப்பாக்கிச் சூடு. மக்கள் அதிகாரமே உண்மையான சனநாயகம். மக்கள் அதிகாரத்தின் ஒப்பற்ற வலிமையைக் கொண்டு ஸ்டெர்லைட்டை விரட்டி அடிப்போம். எடுபிடி எடப்பாடி ஆட்சியையும், இந்துத்துவ மோடி ஆட்சியையும் தூக்கியெறிவோம்.