அரச பயங்கரவாதத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு நடைபெற்ற 2018 மே 22-ம் தேதி தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகமோசமான இருண்ட தினம். அன்றய முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இப்படுகொலை பற்றிய செய்தியை தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்து கொண்டதாக ஊடகங்களிடம் சொன்னார். முதலமைச்சருக்கு தெரியாமலேயே இப்படுகொலையை காவல்துறை தன்னிச்சையாக நடத்தியதா எனும் கேள்வி எழுந்தது. உலக அளவில் எழுந்த அதிர்ச்சியும், தமிழ்நாட்டு அளவில் எழுந்த கொந்தளிப்பும் அரசு அதிகாரிகளை கடுமையான நெருக்கடிக்குள்ளாக்கியது.
துப்பாக்கி சூட்டிற்கு உத்திரவிடும் அதிகாரம் கொண்ட மாவட்ட ஆட்சியாளரை நோக்கிய விரல்கள் நீண்டன. அவரிடமிருந்து இப்படியான உத்தரவு வரவில்லை என்பதான செய்தி வெளியாகியது. இதன்பின்னர் இத்தகைய உத்திரவு கொடுக்கும் அதிகாரம் கொண்ட வருவாய் அதிகாரிகளில் எவரும் இப்படியான உத்தரவை தாம் பிறப்பிக்கவில்லை என்றார்கள். அவர்களது சங்கமும் இப்படியான உத்தரவை தாம் பிறப்பிக்கவில்லை என்றார்கள்.
தூத்துக்குடி நகரத்தின் வீதிகளில் காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்தது. அம்மாவட்டம் முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டன. அரசியல் செயற்பாட்டாளர்கள் தூத்துக்குடி நகருக்குள் அனுமதிக்கப் படவில்லை. தூத்துக்குடி நகரின் வீதிதோறும், வீடுகள் தோறும் காவல்துறை அராஜகத்தை கட்டவிழ்த்தது.
துப்பாக்கிக்குண்டுக்கு பலியான அப்பாவிகளின் உடல்களை பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மருத்துவமனைக்குள் காவல்துறை நுழைந்து மிரட்டியது. காவலர்களால் தாக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுக்க முடியாத நிலை உருவானது. பல நூறு பேர் காவல் துறையால் சட்டவிரோதமாக கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு சிறை வைக்கப்பட்டார்கள் எனும் செய்தியை மறைத்தார்கள்.
மாணவி ஸ்னோலினின் படுகொலை காவல்துறையின் வன்முறையின் தீவிரத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியது. தூத்துக்குடி நகரின் இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பாஜக கட்சிக்கு ஆதரவானவர்கள் மட்டுமே நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மக்களை சந்திக்க முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் விமான நிலையத்தில் சிறைப்படுத்தப்பட்டு அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவர் பொய் வழக்கு புனையப்பட்டு சென்னையில் சிறை வைக்கப்பட்டார். அங்கு அவர் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டதால் அவரது உடல்நிலை மோசமானது.
தூத்துக்குடியில் போராட்டத்தில் பங்கெடுத்த இயக்கங்கள், கட்சிகள், செயற்பாட்டாளர்கள் மீது கடுமையான அரச பயங்கரவாத நடவடிக்கை ஏவப்பட்டது. கூட்டங்கள் தடை செய்யப்பட்டன. முன்னாள் நீதியரசரை வைத்து நடத்தப்பட இருந்த கூட்டத்தைக் கூட காவல்துறை தடுத்தது. காவல்துறையின் அடக்குமுறை வெள்ளையர் காலத்தில் நிகழ்ந்ததற்கு ஒப்பானதாக அமைந்தது. துப்பாக்கிச் சூட்டிற்கு பொறுப்பேற்காத அதிகாரவர்க்கம் மக்கள் மீது கடுமையான அடக்குமுறை ஏவியதன் காரணம் என்ன எனும் கேள்வியை எழுப்பியது.
இந்த வன்முறை குறித்து ஐ.நாவின் மனித உரிமை அவையில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அரசவர்க்கத்தின் பொறுப்பேற்காதத் தன்மையை கேள்வியாக முன்வைத்த காரணம் காவல்துறையை சினம் கொள்ள வைத்தது. மேலும் இந்த வன்முறைக்கான நீதிக்காக ஐரோப்பிய மனித உரிமை அமைப்புகளை சந்தித்து ஆதரவினை மே பதினேழு இயக்கம் திரட்டியது. இந்த நிகழ்வுகளால் பதட்டமடைந்த அதிகாரவர்க்கம் நாடு திரும்பிய திருமுருகன் காந்தியை தேசத்துரோக வழக்குகளிலும், பின்னர் யு.ஏ.பி.ஏ வழக்கு உட்பட 27 வழக்குகளில் சிறையில் அடைத்தது.
மக்கள் அதிகாரம் உட்பட பல அரசியல் அமைப்பின் பொறுப்பாளர்கள் மீது தேசத்துரோகச் சட்டத்தை எடப்பாடி அரசு ஏவியது. அவர்களை தனிமைச்சிறையில் அடைத்த அதிமுக அரசு அடிப்படை சிறைவாசி உரிமைகளைக் கூட மறுத்தது.
தூத்துக்குடி படுகொலையின் பொழுது அரசின் கட்டிடங்களில் ஏன் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை, எரிக்கப்பட்டிருந்த வாகனங்கள் எப்படி சந்தேகத்திற்கிடமான நிலையில் எரியூட்டப்பட்டிருந்தது எனும் கேள்விகளை ஆதாரப்பூர்வமாக தோழர்.முகிலன் எழுப்பினார். இதன் பின்னர் இவர் பொதுவெளியில் இருந்து மறைந்து போன நிகழ்வும் தமிழகத்தை பதட்டத்திற்கு கொண்டு சென்றது. இப்படியான கடுமையான அடக்குமுறைகளை அதிகாரிகள் ஏன் ஏவினார்கள்?
இலங்கையில் நடக்கும் அடக்குமுறைக்கு நிகரான ஒடுக்குமுறைகளை அதிகாரவர்க்கம் ஏவியதை எடப்பாடி அரசு கேள்வி எழுப்பாமல் நடைமுறைப் படுத்தியது. மாறாக, ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை வைத்து போராடிய மக்கள் மீது அவதூறுகளை ஏவியது. இத்தனை அடக்குமுறைகளையும் அதிகார வர்க்கமும், அதிமுக அரசும் ஏவியதற்கு காரணம் வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான அவர்களது நிலைப்பாடுகளை அம்பலப்படுத்தியது.
பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் திருமதி.தமிழிசை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்து போராடிய மக்களை கொச்சைப்படுத்தியதால் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.
இப்படியாக தமிழர்களை வதைத்த ஸ்டெர்லைட் படுகொலை குறித்த தனிநபர் ஆணையம் அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது. இந்த குழு நான்கு ஆண்டுகளாக நடத்திய விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் ஊடகங்களில் பகிரப்பட்டதை கண்டித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் பேசுவது, இப்படுகொலையில் அதிமுகவின் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் இந்த அறிக்கை பொதுத்தளத்தில் வைக்கப்படுவது மிக அவசியமாகிறது.
இங்கிலாந்தில் வாழும் மார்வாடி-பனியா முதலாளியின் நலனுக்காக சொந்த மக்களையே படுகொலை செய்பவர்கள் மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இப்படுகொலைக்கு காரணமான அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனைக்கு உட்படுத்தப்படுவதே ஸ்னோலின் உட்பட படுகொலையான போராளிகளுக்கு கிடைக்கும் நீதியாகும்.
- மே பதினேழு இயக்கம்