தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி நகரில் 22.05.2018 அன்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, காவல்துறையின் வன்முறை ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக மக்கள் உரிமைக் கழகத்தின் உண்மை அறியும் குழுவினர் கடந்த 30.05.2018, 31.05.2018 ஆகிய தேதிகளில் கள ஆய்வு நடத்தினோம். மக்களின் போராட்டம், அரசின் அடக்குமுறை இரண்டின் பின்னணி நோக்கத்தை வெளிக்கொண்டு வருவதை எங்கள் குழுவின் இலக்காகக் கொண்டு கள ஆய்வை மேற்கொண்டோம்.

sterlite fact finding

மக்கள் உரிமைக் கழகம் சார்பில் உண்மை அறியும் குழுவில் பங்கேற்றோர்

1. திரு.வைத்தீசுவரன், வழக்குரைஞர்

2. திரு.இராமநாதன், வழக்குரைஞர்

3. திரு.அமலநாதன், பேராசிரியர்

4. திரு.மலரவன், வழக்குரைஞர்

5. திரு.ஆதி, சட்டப் பட்டதாரி

6. திரு.செயப்பிரகாசம். வழக்குரைஞர்

7. திரு.சரவணக்குமார், வழக்குரைஞர்

8. திரு.கணேசுகுமார், சட்டப் பட்டதாரி

9. திரு.செகன், சட்டப் பட்டதாரி.

10. திரு.முனியசாமி, சட்டக்கல்லூரி் மாணவர். 

நேர்காணல் செய்யப்பட்டவர்கள்

            காவல்துறை வன்முறையால் பலியான தமிழரசன், ஸ்னோலின், ரஞ்சித், கிளாஸ்டன், அந்தோணி செல்வராஜ், ஜான்சி, காளியப்பன், மணிராஜ் ஆகியோரின் குடும்பத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், சமூக முன்னணியாளர்கள், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள், காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கிய குமரெட்டியாபுரம் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள்.

கள ஆய்வு செய்யப்பட்ட இடங்கள்

            தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பகுதி, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்ற இடங்கள், மக்கள் பேரணி தொடங்கிய ஒரு இடமான பனிமயமாதா ஆலயம் முதல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான வழித்தடம், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்கள், மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்திய இடங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டோம். அதனடிப்படையில் இவ்வறிக்கை முன்வைக்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் தமிழகத்தில் காலூன்றிய வரலாறு

            இலண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமே ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ஆகும். ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்குவதற்கு, கடந்த 31.10.1994 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாட்டை தொழில் மயமாக்குவதற்கான கனவுத் திட்டம் என்கிற பெயரில் ரூ.1300 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்படி நிறுவனத்தின் தொடக்கத்திற்காக அரசின் அத்தனை அமைப்புகளும் அவசரக்காலத்தில் அனுமதி அளித்தன. இந்தியாவின் கோவா, குஜராத், மாகாராட்டிரா மாநிலங்களில் இருந்து துரத்தப்பட்ட இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து ஆலை அமைக்க இடம் வழங்கியது.

ஸ்டெர்லைட் ஆலை

            தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் என்பது ஒரு தனிப்பயன் மெருகூட்டல், ஒரு தாமிர சுத்திகரிப்பு, ஒரு பாஸ்போரிக் அமிலம் ஆலை, ஒரு கந்தக அமிலம் ஆலை மற்றும் ஒரு செப்புக் கம்பி ஆலை மற்றும் மூன்று மின் சக்தி ஆலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். 1997, ஜனவரி மாதம் உற்பத்தியைத் தொடங்கிய இவ்வாலை 2017 ஆம் ஆண்டு நிதியாண்டில், 402,000 டன் தாமிரக் கேதோடுகளை உற்பத்தி செய்துள்ளது. இவ்வாலை இந்தியாவின் மிகப்பெரியதும், உலகின் ஏழாவது மிகப்பெரிய தாமிரத் தயாரிப்பு நிறுவனமும். இது தமிழ்நாட்டில் ஐந்தாவது மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.

ஸ்டெர்லைட் ஆலையும் விபத்துகளும்..

               தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 22 ஆண்டுகளில் பல தீவிரமான விபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. பல ஊழியர்கள் ஆலை விபத்தினால் மரணமடைந்துள்ளனர். பல்வேறு விபத்துகளை ஆலை நிர்வாகம் அரசின் துணையோடு மறைத்துள்ளது.

               ஆலைக்குள் நடந்த முதல் பெரிய விபத்து 1997,மே-3 ஆம் தேதி ஏற்பட்டது. கந்தக அமிலம் சுமந்து செல்லும் ஒரு குழாய் வெடித்து அமிலம் கொட்டியதால் ஒரு தொழிலாளி மரணம் அடைந்தார். 1998, ஏப்ரலில், ஆறு தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் இறந்தனர். சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான இரண்டு பெரிய நிகழ்வுகள் 1997 ஆம் ஆண்டில் நடந்தன. அந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய சல்பர் டை ஆக்ஸைடு (SO2) காற்றில் கலந்த நிலையில் ஆலைக்கு அருகில் உள்ள ரமேஷ் உலர்ந்த பூ ஏற்றுமதி நிறுவனத்தில் பணி செய்து வந்த சுமார் 160 பெண் தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். 1997 ஆகஸ்ட் 20 ம் தேதி, ஆலைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தொழிலாளர்கள் பலர் குமட்டல் மற்றும் வாந்தியெடுப்பினால் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுமக்களின் எதிர்ப்பிற்கு அஞ்சி, வாயு கசிவுக்குப் பின்னர் ஆலையை மூடியது. விரைவில் மீண்டும் திறக்கப்பட்டது. மார்ச் 2, 1999 அன்று, அகில இந்திய வானொலி நிலையத்தின் சில பணியாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் குமட்டலினால் பாதிக்கப்பட்டனர்.

                ஸ்டெர்லைட் ஆலையினால் உருவான சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஏற்பட்ட உடல் நலக்கோளாறுகள், சுகாதார அபாயங்கள் பற்றிய மக்களின் பயம் போன்றவை மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க காரணங்களாக அமைந்தன. மூச்சுக்குழாய் மற்றும் பிற சுவாச பிரச்சினைகள், கண் கோளாறுகள், புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இவை அனைத்தும் குறிப்பாக ஆலைக்கு அருகே வாழும் மக்களிடையே பலத்த எதிர்ப்பை உருவாக்கின.                 2013, மார்ச் 23 அதிகாலையில், தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அளவுக்கதிகமான சல்பர் டை ஆக்சைடு வாயுக் கசிவால் தூத்துக்குடி மக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தொண்டை வலி ஆகியவற்றால் மிகவும் பாதிப்படைந்தனர். அதைத் தொடர்ந்து மக்களின் எதிர்ப்பின் காரணமாக மார்ச் 29 அன்று ஆலை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இத்தகைய தொடர் நிகழ்வுகள் மக்கள் மனதில் பயத்தையும், ஸடெர்லைட் ஆலைக்கெதிரான கோபத்தையும் அதிகப்படுத்தியது.  

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்

               ஸ்டெர்லைட் ஆலை அமைய இருந்த போதே, அதற்கான எதிர்ப்பானது தூத்துக்குடி நகரம் மட்டுமல்லாது சுற்று வட்டார மக்களின் எதிர்ப்பையும் சந்தித்தது. உற்பத்தியைத் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே ஆலையில் தொடர்ந்து நடைபெற்ற விபத்துகள், மக்கள் நேரடியாகப் பார்த்த நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மக்களிடம் பீதியை உருவாக்கியது. இது போன்ற அதி தீவிர மாசு செயல்பாட்டினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து போராடத் தொடங்கினர்.  

            ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. ஆலைக்குள் ஏற்பட்ட தொடர் விபத்துகள், ஆலையினால் ஏற்பட்ட சூழல் பிரச்சினைகள் காரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது பரந்துபட்ட மக்களின் போராட்டமாக விரிவடைந்தது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்பது 1994 முதல் 1999 வரை முதற்கட்ட இயக்கமாகவும், 2013,மார்ச் 23-ல் ஏற்பட்ட ஒரு வாயு கசிவு, நகரத்தைத் தாக்கியபோது இரண்டாம்கட்ட இயக்கமாக வெளிப்பட்டது. ​ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தில் சுற்றுச்சூழல் வல்லுநர்கள், கல்வியாளர்கள், வர்த்தகர்கள், மீனவர்கள், அரசியல் தலைவர்கள், விவசாயிகள், வணிகர்கள் இணைந்தனர். முற்போக்கு இயக்கங்கள், சனநாயக இயக்கங்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகள் 1994 ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றன.

               சூழலியல் சிக்கல் காரணமாகத் தூத்துக்குடி மக்களின் எதிர்ப்புக்குள்ளானது ஸ்டெர்லைட் நிறுவனம். கடலுக்குள் திரவக் கழிவுகளை வெளியேற்றுவதன் பொருட்டு எட்டு கிலோமீட்டர் நீளமுள்ள குழாய்த்திட்டத்தைச் செயல்படுத்த முனைந்த போது மீனவ மக்களின் பாரிய எதிர்ப்பைச் சந்தித்தது ஸ்டெர்லைட் நிறுவனம். ஸ்டெர்லைட் கழிவுகள், மன்னார் வளைகுடா பகுதியில் வெளியேற்றப்படுவது என்பது மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிப்பதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால் மீனவ மக்கள் பெருமளவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் இணைந்தனர்.                              எனவே, மீனவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் மைய வலுவாக இருந்தனர். 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஸ்டெர்லைட் ஆலைக்கு செப்புத் தாதுப் பொருளைக் கொண்ட கப்பல் ஒன்று வந்தது. அதனை எதிர்த்து மீனவர்கள் கடல் முற்றுகையை நடத்தினர். கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், கொச்சி துறைமுகத்தில் இருந்து சாலை வழியாக அந்த தாதுப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன. 1996 அக்டோபரில் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த துறைமுகத் தொழிலாளர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு கப்பலில் கொண்டு வரப்பட்ட சரக்குகளைக் கையாள மறுத்து, கப்பலைக் கடலுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினர்.                இவ்வளவு மக்கள் எதிர்ப்புக்கிடையிலும் 1995, பிப்ரவரி 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, (2.50 மில்லியன் கேலன்கள் ஒரு நாளைக்கு) குடிநீர் வழங்கல் திட்டம் மூலம், 20 டி.எம்.சி. தண்ணீர் வழங்க மாநில அரசு முடிவு செய்தது. இதையடுத்து கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களில் இணைந்தனர்.  

            இப்படியாக தூத்துக்குடியில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் எதிர்ப்பையும் ஸ்டெர்லைட் நிறுவனம் சந்தித்தது. மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்த பரப்புரைகள், போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சிகள், சனநாயக அமைப்புகள், ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கத்தில் தொடர்ந்து முன்னணியில் நின்றன. 

நீதிமன்ற வழக்குகள்

               ஸ்டெர்லைட் நிறுவனத்தினால் விபத்துகள் ஏற்படும் காலங்களில் பலமுறை மாவட்ட நிர்வாகத்தால் ஆலை மூடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்சிகள், சூழலியல் ஆர்வலர்களால் பல்வேறு நீதிமன்றங்களிலும், தேசியப் பசுமை தீர்ப்பாயத்திலும் (NGT) பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 1998, நவம்பர் 23 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில அரசு அளித்த சுற்றுச்சூழல் அனுமதியை, “சட்டமீறல்” என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.                1998,டிசம்பர் 1 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் ஆலையைத் தொடர அனுமதித்தது. இந்நிலையில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI)-ன் அறிக்கையின் அடிப்படையில், 2010,செப்டம்பர் 28 அன்று ஆலையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.                 ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதால் 2013,ஏப்ரல் 2 அன்று 100 கோடி ரூபாயை தண்டமாக செலுத்து உத்தரவிட்டு, அதனை வைப்புத்தொகையில் செலுத்த வேண்டும் என்று கூறியது. அதில் இருந்து பெறப்படும் வட்டியானது ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட மாசுபாடு, ஏற்படும், சுற்றுச்சூழல், நீர் மற்றும் மண் பாதிப்புகளை மேம்படுத்துவதற்கு செலவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு ஆலையைச் செயல்பட அனுமதித்தது உச்சநீதிமன்றம்.               

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கம்

               ஸ்டெர்லைட் ஆலையினால் கடுமையான பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. சுமார் 400 ஏக்கர் (160 ஹெக்டேர்) நிலப்பரப்பில் ரூ.3,500 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த விரிவாக்கம் ஒரு தாமிர உருக்காலை, மின் உற்பத்தி நிலையம் மற்றும் கடல்நீரை நன்னீராக்கும் ஆலை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இது ஆண்டுக்கு 8,00,000 டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.               

T.குமரரெட்டியாபுரத்தில் தொடங்கிய போராட்டம்

            ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சிக்கல்களால் நிலம், நீர், காற்று ஆகியவற்றில் நச்சு கலந்து கொடிய நோய்களுக்கு மக்கள் ஆட்பட்டனர். இது மக்களிடைய மிகப்பெரும் கொந்தளிப்பை எற்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு முதலில் ஆதரவு தெரிவித்த குமரரெட்டியாபுரம் மக்கள், தங்கள் ஊரில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசடைந்ததையும், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இரவில் வெளியேற்றப்படும் விச வாயுவின் நெடி தாங்க முடியாமையையும், கண் பாதிப்புகள், தோல் ஒவ்வாமை, மலட்டுதன்மை, வறட்சி, புற்று நோய் உட்பட்ட கொடிய நோய் பாதிப்புகளையும் நேரடியாக எதிர்கொண்டதால், ஸ்டெர்லைட் ஆலை ஒரு உயிர்க்கொல்லி ஆலை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர். இந்நிலையில் தங்களது ஊரின் மிக அருகில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து போராட்டத்தைத் தொடங்கினர்.

நூறு நாட்களைத் தொட்ட போராட்டம்

            கடந்த பிப்ரவரி,13 அன்று தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய குமரரெட்டியாபுரம் மக்கள் காவல்துறை அனுமதித்த நேரம் முடிந்தும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். கலைந்து செல்ல மறுத்தனர். இரவு அருகில் இருந்த பூங்காவிலேயே தங்கி மறுநாளும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மக்களின் போராட்டம் தொடர்ந்த நிலையில் தூத்துக்குடி பாளை சாலை MGR பூங்கா முன்பாக போராடிய மக்களைக் கைது செய்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மக்கள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வரும்படி குமரரெட்டியாபுரம் ஊரைச் சேர்ந்த மகேஷ்பிரபு, பேரா.பாத்திமா பாபு, விமல்ராஜேஷ், வேல்ராஜ், ஆல்பர்ட் சாமுவேல், சுஜித், துரை N. பாண்டியன், முருகன் - குமரரெட்டியபுரம், ஜெபஸ்டின் ஆகியோரை அழைத்துச் சென்று அவர்கள் அனைவரையும் நயவஞ்சகமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அனைத்து மக்களின் போராட்டமாக..

            ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடியதற்காகக் கைது செய்யப்பட்டதால், ஸ்டெர்லைட் எதிர்ப்பும், கைது செய்யப்பட்டவர்களுக்கான ஆதரவும் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் பரவியது. வணிகர் சங்கங்கள், மீனவ சங்கங்கள் உட்பட்ட பல்வேறு அமைப்புகள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்குத் தயாராகின. பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. வணிகர் சங்கத்தின் முடிவின்படி மார்ச்,24 அன்று கடையடைப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களையும் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்க செய்தது.

மார்ச்,24 கடையடைப்பு மற்றும் பொதுக்கூட்டம்

            ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிரான குமரரெட்டியாபுரம் மக்களின் போராட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்த சமூக முன்னணியாளர்களின் கைதும் மார்ச்,24 அன்று கடையடைப்பு, பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவது என்பதை நோக்கி நகர்த்தியது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடையடைப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எந்த கட்சித் தலைவரும், நட்சத்திரப் பேச்சாளரும் பங்கேற்காத நிலையிலும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது அனைத்து மக்களின் உணர்வாக மாறியது.

கிராம - நகர்ப்புறப் போராட்ட மையங்கள்                மார்ச், 24 பொதுக்கூட்டத்தை பல ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த போதிலும், சமூக ஊடகங்கள் வாயிலாக அந்த எழுச்சி பரவியது. குமரரெட்டியாபுரத்தில் மக்கள் தொடங்கிய நிலையான போராட்ட மைய வடிவம் பல்வேறு கிராமங்களுக்கும் பரவியது. பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர், தெ.வீரபாண்டியாபுரம், சில்வர்புரம், முருகேசன் நகர், தேவர் காலனி, தபால்தந்தி காலனி, 3ம் மைல், பாத்திமா நகர், தெற்குப்புதுத்தெரு, பனிமயமாதா ஆலய வளாகம் என 15-ற்கும் மேற்பட்ட இடங்களில் நிலையான போராட்ட மையங்கள் உருவாகின. மாலை வேளைகளில் மக்கள் போராட்ட மையங்களில் திரளாகக் கூடுவது, ஸ்டெர்லைட்டிற்கு எதிராக முழக்கமிடுவது, உரையாற்றுவது என பல்வேறு வடிவங்களில் தங்களின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி வந்தனர். மே,22 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் தொடர்பாக.. 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில்,

போபால் போல சாகப் போறோமா….?

போராடி வாழப் போறோமா…?

மே,22ல் அணி திரள்வோம்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

BAN STERLITE SAVE THOOTHUKUDI

ஸ்டெர்லைட் மரண வாசல்

மூடும் வரை வீடு வாசல் திரும்ப மாட்டோம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு

என்கிற  வாக்கியங்கள் அடங்கிய சுவரொட்டிகளும், 

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில்,

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள்

கூட்டமைப்பின் போராட்டம் வெல்லட்டும்!

வீழட்டும் ஸ்டெர்லைட்!

மீளட்டும் தமிழ்மண்!

புரட்சிகர இளைஞர் முன்னணி

என்கிற வாக்கியங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் தூத்துக்குடி நகரம் மற்றும் கிராமப்புற போராட்ட மையங்களில் பரவலாக ஒட்டப்பட்டன.

மே,22, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மக்கள் பேரணியும், கொலைத் தாண்டவமாடிய அரச பயங்கரவாதமும்..

            ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் 100 ஆவது நாளான மே,22, 2018 அன்று ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடி வருகிற சுற்று வட்டார கிராம மக்கள் சாத்தியமான வழிகளில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னால் திரள்வது என்றும், நகர்ப்புறத்தில் போராடி வந்த மக்கள் தூத்துக்குடி, பனிமயமாதா ஆலயம் முன்பாக ஒன்று திரண்டு சுமார் 8 கி.மீ பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடைவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

            22.05.2018 காலை 9.00 மணியளவில் திரேசுபுரம், குருசுபுரம், புதுத்தெரு, பூபால்ராயர்புரம், இனிகோ நகர், பாத்திமா நகர், காந்தி நகர் பகுதி, மாதா மறக்குடி, சிலுவைக் கோயில், மணல்தெரு உள்ளிட்ட கடற்கரைப் பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக படிப்படியாக பனிமய மாதா ஆலய மைதானத்தில் திரண்டனர். பெண்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். மக்களின் திரட்சி தொடர்ந்து அதிகரித்த நிலையில், கடற்கரைச் சாலை - அஞ்சல் அலுவலகச் சாலை சந்திப்பில் காவல்துறை தடுப்புகள் அமைத்து, மக்கள் பேரணியாக செல்லும்பட்சத்தி்ல் தடுப்பதற்குத் தயாராக இருந்துள்ளது.

            காவல்துறை, மக்களின் நகர்வைத் தடுப்பதற்கு தயாராக இருந்த நிலையில், கடற்கரைச்சாலையில் இருந்து அஞ்சல் அலுவலகம் வழியான ஒருவழிச் சாலையில் பேரணி செல்வதைத் தவிர்த்த மக்கள், பனிமயமாதா கோவில் பின்புற வழியில் செல்ல முடிவு செய்தனர். பனிமய மாதா கோவில் மைதானத்தில் தொடங்கி சிலுவைக் கோயில் பின்புறமாகச் சென்று, பெரியகடைத் தெரு மெயினில் தீயணைப்புச் சாலை மேற்குப் புறமாக முழக்கங்கள் இட்டுக் கொண்டும், முழக்க அட்டைகள் பிடித்துக் கொண்டும் சென்றனர். பேரணி சென்ற வழித்தடத்தில் ஆங்காங்கே இருந்த மக்கள் படிப்படியாகப் பேரணியில் இணையத் தொடங்கினர். தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சுமார் 30 நிமிடங்களில் சுமார் 2.5 கீ.மீ கடந்த மக்கள் பேரணி அம்பேத்தகர் சிலை அருகில் பாளையங்கோட்டை முதன்மைச் சாலையை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மக்களின் உணர்ச்சிப் பூர்வமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு முழக்கங்கள் பார்வையாளர்களாக இருந்த மக்களையும் ஈர்த்தது. மக்கள் சாரை சாரையாக மையப் பேரணியில் இணையத் தொடங்கினர். பேருந்து நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டைச் சாலையில் மேற்கு திசை நோக்கி வந்த மக்களும் இப்பேரணியில் இணைந்தனர்.

            பனிமய மாதா கோவிலில் தொடங்கிய மக்கள் பேரணி சுமார் 3 கீ.மீ தூரம் கடந்து பாளைங்கோட்டைச் சாலையில் சென்ற போது தூத்துக்குடி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள வி.வி.டி சிக்னலுக்கு முன்பாக காவல்துறையினர் தடுப்புகளை வைத்து மக்களைத் தடுத்துள்ளனர். மக்கள் பேரணி தேங்கி நின்ற நிலையில் பின்னர் வந்த மக்கள் தொடர்ந்து இணைந்ததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டை முதன்மைச் சாலையில் எங்கும் மனிதத் தலைகள் நிரம்பியிருந்தன. தங்களைத் தடுத்த காவல்துறையினரிடம் பெண்கள் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர். பேரணியைத் தடுத்த காவல்துறை அதிகாரிகள் திடீரென்று தங்களுக்குத் தென்புறம் இருந்த மருத்துவக் கல்லூரி செல்லும் சந்தை நோக்கி கையசைத்தனர். உடனே குவியலான கற்கள் காவல்துறையினர் மீதும், மக்கள் மீதும் விழுந்தன. மக்கள் சலசலத்த நிலையில் காவல்துறையினர் மக்களைத் தடிகளைக் கொண்டு தாக்கத் தொடங்கினர். தடியடியினால் கூட்டம் சிதறி ஓடியது. பலர் கீழே விழுந்தனர். சிலர் காயமடைந்தனர். இரத்தம் ஒழுக பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மக்கள் சிதறி ஓடிய நிலையில் போராட்டத்தின் முன்னணி சக்திகள் பேரணியில் இணைந்து முன்னேறும்படி மக்களை ஒழுங்குபடுத்தினர். சிதறிய மக்கள் ஒருங்கிணைந்த நிலையில் பேரணி பாளையங்கோட்டைச் சாலையில் மீண்டும் முன்னேறத் தொடங்கியது. இந்நிலையில் தடியடியால் ஆத்திரமடைந்த சிலர் காவல்துறையை விரட்டினர்.

            கல்லெறி, தடியடி ஆகியவைகளைக் கடந்து ஒருங்கிணைந்த மக்கள், வி.வி.டி சிக்னலைத் தாண்டும்போது மக்கள் கூட்டத்தின் நடுவே மாடுகள் திட்டமிட்டு விரட்டப்பட்டுள்ளன. கூட்டத்திற்குள் நுழைந்த மாடுகள் முட்டியதாலும், தள்ளியதாலும் பலர் காயமடைந்தனர். காவல்துறையினரின் தடியடி, மாடுகளை விரட்டி குழப்பம் ஏற்படுத்திய நிகழ்வால் உணர்வுவயப்பட்ட மக்கள் கூட்டம் வேகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறத் தொடங்கியது. சாலையை அடைத்த வண்ணம் பேரணியில் சென்றவர்கள் சாலையின் இருமருங்கிலும் வேடிக்கை பார்த்தவர்களைப் போராட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தவண்ணம் சென்றனர். இதனால் பல்வேறு மக்களும் பேரணியில் இணைந்தனர். 3வது மைல் பாலம் ஏறுமிடத்தில் இருந்த காவல்துறையினர் மக்களைப் பார்த்ததும் கலைந்து ஓடினர். அதனைப் பொருட்படுத்தாத மக்கள் பெருந்திரளாக 3வது மைல் பாலத்தை ஏறிக் கடந்து இறங்கிய நிலையில் மக்கள் மீது காவல்துறையினர் வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசினர்.

            சுமார் 4 கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் வஜ்ரா வாகனம் பின் வாங்கியது. கண்ணீர் புகைக்குண்டினால் புகை பரவிய நிலையில், கண்ணெரிச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் பேரணி ஒரு சில நிமிடங்கள் தேங்கி பின்பு மீண்டும் உத்வேகம் பெற்று முன்னேறியது. பேரணியை மக்கள் தொடர்ந்த நிலையில் மதுரை-தூத்துக்குடி துறைமுகம் புறவழிச்சாலை பாலத்தின் கீழ், இரு சக்கர வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் எரிந்த நிலையில் சுற்றிலும் புகை மூட்டம் பரவியது. புறவழிச்சாலை பாலத்தை மக்கள் நெருங்கும் போது மீண்டும் மக்களை நோக்கி கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசிய வஜ்ரா வாகனம் பின்வாங்கிய நிலையில் மக்கள் அதனைப் பொருட்டாகக் கருதாமல் பேரணியைத் தொடர்ந்தனர். தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையின் இடது புறச் சாலையில் சென்ற பேரணி பாலத்தைக் கடந்ததும் வலப்புறச் சாலைக்கு மாறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறியது.

            மக்கள் பேரணியில் சென்று கொண்டிருக்கும் போதே சில கைலி கட்டிய நபர்கள், குடிபோதையில் ஆங்காங்கே வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மக்களில் சிலர் அவர்களைத் தடுக்க முயற்சித்தனர். இந்நிலையில் மக்கள் வருவதைக் கண்டதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இருந்த சில நூற்றுக்கணக்கான காவலர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஓட்டம் பிடித்தனர். மக்களில் சிலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காவல்துறையின் பின்னால் ஓடினர். மக்கள் காவல்துறையைத் துரத்துவது போல் ஒரு காட்சி உருவாக்கப்பட்டது. மக்கள் உள்ளே நுழைந்து இடப்புறமாகத் திரும்பும் போது அங்கே ஒரு கும்பல் அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் முன்னேறத் தயங்கி தடுமாறினர். பயந்தது போன்று ஓடிச் சென்ற காவல்துறையினர் திரும்ப வந்து மக்களைத் தாக்கத் தொடங்கினர்.

            காவல்துறை தாக்கியதும் மக்கள் பின்வாங்கிய நிலையில், துப்பாக்கிச் சூடு நிகழத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தின் கீழ்புறம் உள்ள ஆவின் பூத் அருகே குண்டடி பட்டு இருவருக்கு காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் காயம்பட்டவர்களை பேரணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கிக்கொண்டு எதிரில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர்.

            துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு சிலர் மரணமடைந்ததைத் தெரிந்து கொண்ட மக்கள் கூட்டம் மேலும், ஆத்திரமடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே மெயின் ரோடு ஆர்ச் அருகில் முதன்மைச் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் எங்கிருந்தோ வந்து தாக்கிய துப்பாக்கிக் குண்டால் சுருண்டு விழுந்த நிலையில் கூட்டம் சிதறி ஓடத் தொடங்கியது. அவரைத் தொடர்ந்து மற்றொருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். வெள்ளை வேனில் இருந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட நிலையில் மக்கள் தொடர்ந்து உயிருக்குப் பயந்து அஞ்சி ஓடினர். இறந்தவர்களைத் தூக்கவோ, காயம் பட்டவர்களை காப்பாற்றவோ காவல்துறையினர் முன்வராத நிலையில் துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவிலும் மக்கள் தங்களுடைய சொந்த முயற்சியில் காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

            மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து காயமடைந்த போராட்டக்காரர் ஒருவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற போது, அங்கு புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர்.தமிழரசன் உடல் ஸ்ட்ரக்சரில் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தமிழரசனின் உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

            மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்த நிலையில் உயிருக்குப் பயந்து மக்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அப்பொழுது மக்களை துரத்திதுரத்தி காவலர்கள் தொடர்ந்து தடியால் அடித்து நொறுக்கினர். பாளையங்கோட்டைச் சாலையில் கருப்புச் சட்டை அணிந்தவர்களையும், கண்ணில் பட்ட பொதுமக்களையும் துரத்தித் துரத்தி காவல்துறையினர் சுட்டனர். காவல்துறையின் இத்தகைய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியினால் போராட்டத்தில் பங்கேற்காத அப்பாவி பொதுமக்கள் பலியானதோடு, காயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தாக்குதல்

            இறந்தவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள பிணவறையின் முன்பு பரிதவித்துக் குவிந்தனர். சிலரின் உடல்கள் மட்டும் உறவினர்களுக்குக் காட்டப்பட்டன. மக்கள் அழுது கொண்டும், ஆத்திரத்திலும் குவிந்தனர். அங்கு வந்த காவல்துறை கொலைவெறியுடன் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியது. மக்களை அவ்விடத்தில் இருந்து விரட்டி அடித்தது. பேரிழப்பில் பரிதவித்து நின்ற உறவினர்கள், தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி மருத்துவமனைக்கு வெளியில் ஓடி, ஆங்காங்கே இருந்த கடைகளிலும், வீடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். அப்படியும் வெறியடங்காத காவல்துறையினர் மருத்துவ மனைக்குப் பின்புறம் இருந்த வீதிகளில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். உயிரிழந்தவர்களின் நெருங்கிய இரத்த உறவினர்களுக்சுகு காவல்துறையின் தாக்குதலினால் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடலையோ, முகத்தையோக் கூட உடலை வாங்கும் வரை அவர்களால் பார்க்க இயலவில்லை.

குடியிருப்புப் பகுதியில் தாக்குதல்

            காவல்தறையின் கொலை வெறித் தாக்குதலினால் உயிருக்குப் பயந்த மக்கள் ஆங்காங்கே உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த காவல்துறையினர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட மக்களை எல்லாம் அடித்தனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு காவல்துறையின் தாக்குதல் நடைபெற்றது. போராட்டத்தில் கணிசமான மக்கள் கலந்து கொண்ட திரேஸ்புரம் பகுதிக்குள் 22.05.2018 பிற்பகலில் நுழைந்த காவல்தறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தினர். வாகனங்களில் வந்த காவல்துறையினரைப் பார்த்த ஒதுங்கி நின்ற ஜான்சி என்ற பெண்ணின் மீது வேண்டுமென்றே வலிந்து துப்பாக்கியால் சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்து மூளை வெளியே விழுந்த நிலையில் அருகில் இருந்த விளம்பர பிளெக்சைக் கிழித்து அப்பெண்மணியின் உடலின் மீது போர்த்திச் சுருட்டி வண்டிக்குள் எறிந்தனர்.

மறுநாளும் தொடர்ந்த காவல்துறை வன்முறை

            காவல்துறையின் வன்முறையால் இறந்தவர்களின், காயம்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் பெருமளவில் 23.05.2018 அன்று அரசு மருத்துவமனையில் கூடியிருந்தனர். அதுசமயம் மக்கள் மீது தாக்குதல் நிகழ்த்த குவிக்கப்பட்ட காவல்படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தினர். மக்கள் சிதறி ஓடிய நிலையிலும் ஆண், பெண் பேதமின்றி காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். காவல்துறையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அண்ணா நகர் பகுதிக்குள் மக்கள் ஓடிய நிலையில் ஏற்கனவே அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அண்ணா நகர் 6வது வீதியில் காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்கிற இளைஞர் வயிற்றில் குண்டடிப்பட்டு மரணமடைந்தார். இறந்த காளியப்பனின் உடலை பொதுமக்கள் முன்னி்லையில் மிதித்து காவல்துறை அவமரியாதை செய்தது. குடியிருப்பு பகுதியில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கியது.

சிறைக்கைதியின் கொலை

            22.05.2018 நிகழ்வினையொட்டி வீடு வீடாகத் தேடுதல் வேட்டையை நடத்திய காவல்துறை 23.05.2018 அன்று பாளையங்கோட்டை சிறையில் இருந்து பரோலில் வந்த தண்டனைக் கைதி பரத்ராஜா என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்று சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது. அவரைக் கடுமையாகத் தாக்கி பின்னர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் சிறையிலடைத்தது. காவல்துறையின் தாக்குதலினால் படுகாயமடைந்த பரத்ராஜாவிற்கு உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் அவர் கடந்த 30.05.2018 அன்று சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக சிறை நிர்வாகம் அறிவித்தது. காவல்துறையின் கடும் தாக்குதலால் காயமடைந்திருந்த பரத்ராஜாவிற்கு உரிய சிகிச்சை அளிக்காததாலேயே இறந்துள்ளார். இதனை மறைப்பதற்காகவே சிறை நிர்வாகம் தற்கொலை நாடகம் உருவாக்கியுள்ளது.

காயமடைந்தவர்கள்

            காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியினால் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்த நிலையில் சிலர் மட்டுமே சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் காயம்பட்ட நிலையில் காவல்துறைக்கு அஞ்சி ஒரு சிலர் மட்டுமே சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். சுமார் 70 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். குண்டு காயமடைந்தவர்கள், தடியடியினால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் கடுமையான காயத்திற்குள்ளாகியுள்ளனர். தூத்துக்குடி, மில்லர்புரம் பகுதியைச் சார்ந்த பிரின்ஸ்டன் என்பவரது வலது காலில் குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவரது கால் அகற்றப்பட்டள்ளது.  

பலியானவர்களின் குடும்பங்களுக்கு நெருக்கடி..

            துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், உடலைக் கூராய்வு செய்வதற்கும், பெறுவதற்கும் 1.ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும், 2. துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதி்த்த நிலையில், மக்களின் உணர்வுகளையோ, மேற்படி கோரிக்கைகளையோ சிறிதும் பொருட்படுத்தாத அரசு இயந்திரம் அதனை முறியடிப்பதற்குச் சாத்தியமான அத்தனைக் கீழ்த்தரமான வேலைகளிலும் இறங்கியது. பலியானவர்களின் குடும்பத்தினரை மனமாற்றம் செய்யும் வேலையிலும் ஈடுபட்டது.

            கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என வருவாய்த்துறை ஒருபுறம், பலியானவர் எந்த காவல்நிலைய எல்லையில் குடியிருந்தாரோ அந்த காவல்நிலையத்தின் சாதாரண காவலர் முதல் ஆய்வாளர் வரை, சிறப்புக் காவல்பிரிவினர், நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர், ஒவ்வொரு உடலுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்ட வெளிமாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள், காவல்துறைக்கு வேண்டப்பட்ட உள்ளுர் கட்சிப் பிரமுகர்கள் என அனைத்து நபர்களும் அரச பயங்கரவாதத்தை மறைத்து, இறந்தவர்களின் உடலைச் சடலக் கூராய்வு செய்வதன் பொருட்டு அடையாளம் காட்டவும், உடலை வாங்க வைப்பதற்கும் மக்களை மிரட்டியும், நயவஞ்சகமாகப் பேசியும், உடலை அரசே எரித்து விடும் என்பது போன்ற கதைகளைக் கட்டியும், குடும்ப உறவினர்களிடையே தொடர்ந்து பிளவுகளை ஏற்படுத்தியும் வந்தனர். அரசின் இந்த அணுகுமுறையால் பலியானவர்களின் குடும்பங்கள் மிகுந்த பாதிப்படைந்தன. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குறித்து முறையான சட்டப்பூர்வமான தகவல் எதையும் அரசு தரப்பில் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவில்லை.

            துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழரசனின் மூன்றாவது அண்ணன் முனியசாமி என்பவரை 22.05.2018 அன்று இரவு அவரது வீட்டில் இருந்து அடித்து இழுத்துச் சென்ற காவல்துறை, ஒரு நாள் முழுவதும் அவரை அரை நிர்வாணமாகச் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது. சடலக்கூராய்விற்குச் சம்மதிக்காத பட்சத்தில் அவரைக் கொன்று விடுவதாக மிரட்டியது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதன் மூலமாக குடும்ப உறுப்பினர்களை பீதிக்குள்ளாக்கியது. துப்பாக்கிச் சூட்டில் பலியான தூத்துக்குடி, தாளமுத்துநகர் காளியப்பன் குடும்பத்தினரிடம், தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளரான ஹரிகரனின் மனைவியும், தாளமுத்து நகர் காவல் ஆய்வாளருமான வனிதாமணி என்பவர் முறைகேடாகப் பேசி சடலக்கூராய்விற்கு ஒப்புதல் பெற்றார். ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் காவல்துறை இத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றியிருப்பதைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கூற்றுகளில் இருந்து அறிய முடிந்தது.

சட்ட விரோதக் காவல், கைதுகள்..

            22.05.2018 அன்று கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி கருப்புச் சட்டை அணிந்தவர்கள், கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எத்தகைய தகவலும் தெரிவிக்காமல் தூத்துக்குடித் தெற்கு காவல்நிலையம், புதுக்கோட்டை காவல்நிலையம், வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் போன்ற இடங்களில் அடைத்து வைத்து பல்வேறு சித்திரவதைகள் செய்து கடுமையாகத் தாக்கினர். கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து எரித்தது மட்டுமல்ல அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் பறித்தும் கொண்டனர்.

            எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல், சட்ட விரோதக் காவலில் வைத்து சித்திரவதை செய்ததால் தூத்துக்குடி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கம் குற்றவியல் நீதித்துறை நடுவர்களிடம் முறையிட்டும், தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களிடம் கு.வி.மு.ச.பிரிவு.97-ன் கீழ் மனுத்தாக்கல் செய்தும் நீதித்துறை நடுவர்கள் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களை நேரில் ஆய்வு செய்தும், சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்தனர். நீதித்துறை நடுவர்களின் எச்சரிக்கையின் பேரி்ல் சிலர் வழக்குப் பதிவு செய்யப்படாமலும், பெரும்பான்மையோர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ரிமாண்டும் செய்யப்பட்டனர். தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்கம் அதி வேகமாகப் பணியாற்றி கைது செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் பிணை மனுத் தாக்கல் செய்து, பிணையில் விடுவித்தது.

காவல்துறையின் தேடுதல் வேட்டை, அச்சுறுத்தல்கள்..

            தேடுதல் வேட்டை என்கிற பெயரில் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் செல்கின்ற காவல்துறையினர் தேடுதல் என்கிற பெயரில் வீட்டினுள் அத்துமீறி நுழைவது, குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்துவது, அக்கம்பக்கத்தினரை மிரட்டுவது, குடும்ப உறுப்பினர்களைக் கைது செய்து விடுவதாக மிரட்டுவது எனத் தொடர்ந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகின்றனர். வரிசை வரிசையாக பலரையும் கைது செய்துள்ளனர்.

உண்மை அறியும் குழுவின் மீதான அடக்குமுறை

            மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் கடந்த 30.05.2018, 31.05.2018 ஆகிய நாட்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அரச பயங்கராவாதம் குறி்த்து, மக்கள் உரிமைக் கழகத்தின் வழக்குரைஞர்கள், சட்டப் பட்டதாரிகள், சட்ட மாணவர், பேராசிரியர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டோம். காவல்துறை வன்முறையால் பலியாக்கப்பட்ட குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், சம்பவத்தைப் பார்த்தவர்கள் ஆகியோரிடம் நேர்காணல் செய்ததோடு, மக்கள் பேரணி தொடங்கிய இடம், காவல்துறை வன்முறை நிகழ்த்திய இடங்கள், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம், மக்கள் சென்ற வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். இந்நிலையில் கடந்த 31.05.2018 அன்று இரவு துப்பாக்கிச் சூட்டில் பலியான குறுக்குச்சாலை, ராமச்சந்திரபுரம், தமிழரசன் குடும்பத்தினரைச் சந்தித்தித்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் 01.06.2018 அன்று அதிகாலை 1.00 மணியளவில் தமிழரசன் வீட்டிற்கு வந்த ஓட்டப்பிடாரம் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் வந்த காவல்துறையினர், சீருடை அணியாத சிறப்புக் காவல்துறையினர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து மக்கள் உரிமைக் கழக உண்மை அறியும் குழுவினர் மூன்று பேர், புரட்சிகர இளைஞர் முன்னணியின் ஐந்து பேர் ஆகியோரைக் கைது செய்தனர். சட்ட மாணவர் முனியசாமி செருப்பணிந்து வருகிறேன் என்ற சொன்ன போது அனுமதிக்காத காவல்துறையினர் அவரது கன்னத்தில் மாறி மாறி அறைந்தனர். கைது செய்யப்பட்டவர்களது உறவினர்களுக்கு உரிய தகவல் ஏதும் தெரிவிக்காத நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே பிற்பகல் 1.00 மணியளவில் தூத்துக்குடி, சிப்காட் காவல்நிலையத்தில் அவர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

            வழக்குரைஞர்கள் குழு சிப்காட் காவல் நிலையம சென்று விசாரித்த போது, மேற்படியார் மீது வழக்கேதும் பதிவு செய்யப்படவில்லை. உண்மை அறியும் குழுவினர் என்பதை எடுத்துக் கூறிய பிறகும் கைது செய்யப்பட்டவர்களை சிப்காட் காவல்நிலையத்தின் கொட்டியில் அடைத்து வைத்து ஒவ்வொருவரையும் சீருடை அணியாத சிறப்புக் காவல் பிரிவினர் தொடர்ந்து கெட்ட வார்த்தைகளால் திட்டி, கடுமையாகத் தாக்கினர். கைது செய்யப்பட்டதிலிருந்து நிதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தும் வரையில் சுமார் 35 சீருடை அணியாத காவல் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.

            வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையி்ல், விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்ததால், மாலை சுமார் 5.00 மணியளவில் தூத்துக்குடி 3 வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கு.வி.ந.மு.சட்டம் பிரிவு.97-ன் கீழ் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவின் பேரில் சம்பந்தப்பட்ட சிப்காட் காவல்நிலையத்தாரை நீதித்துறை நடுவர் எச்சரித்தார்.அதையடுத்தே 8 பேர் மீதும் கு.வி.ந.மு.சட்டம் பிரிவு 151, Criminal Law Amendment Act பிரிவு 7(1)A-ன் கீழ் ஓட்டப்பிடார காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இரவு சுமார் 12.30 மணியளவில் விளாத்திக்குளம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கண்டறிந்தவை:

  1. போராட்டத்தில் ஆண் பெண் பாகுபாடின்றி, சிறியவர் பெரியவர் பாகுபாடின்றி குழந்தைகளோடு குடும்பமாக கலந்து கொண்டுள்ளனர். பெண்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். மேலும், முற்றுகைப் போராட்டம் முழுநாளும் நீடிக்கும் என அனுமானித்து உணவு, தண்ணீர் போன்ற முன் தயாரிப்புகளுடன் மக்கள் வந்துள்ளனர்.
  1. பனிமயமாதா கோவிலில் இருந்து கிளம்பிய மக்கள் பேரணி வி.வி.டி சிக்னல் வரையிலும் ஸ்டெர்லைட்டை மூடு என்கிற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து நடைபெற்று வந்துள்ளது. அந்த நேரத்தி்ல் எத்தகைய வன்முறை சம்பவமும் நடைபெறவில்லை.
  1. பேரணி வந்த மக்களை வி.வி.டி சிக்னல் அருகில் மறித்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை. மாறாக அவ்விடத்தில் நிகழ்த்தப்பட்ட கல்வீச்சும், தடியடியும் மக்களை ஆத்திரமடைய வைக்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையினரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவம் என்பதை உணர்த்துகிறது.
  1. பாளையங்கோட்டை சாலையில் மூனாம் மைல் பாலம் தாண்டியதும் இருமுறை மட்டும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது. மக்கள் எத்தகைய வன்முறையிலும் ஈடுபடாத நிலையில் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட வேண்டிய அவசியமே இல்லை. கண்ணீர்ப் புகைக்குண்டு மக்களிடம் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் பெருந்திரளாக வருவதற்கு முன்னரே புறவழிச்சாலை பாலத்திற்குக் கீழ் வண்டிகள் எரிந்து கொண்டிருந்தன.
  1. பெருந்திரளான மக்கள் வந்து கொண்டிருந்த பாதையி்ல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன என்பதும், மக்கள் வருவதற்கு முன்னரே அவைகள் எரிந்து கொண்டிருந்தன என்பதும் காவல்துறையின் திட்டமிட்ட சதித்தனம்.
  1. மக்கள் மாவ்ட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வந்த போது அவர்களை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர், காவல்கண்காணிப்பாளர் உட்பட எத்தகைய உயர் அதிகாரிகளும் இல்லை.
  1. ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் நெருங்கியதும், அவர்களைப் பார்த்து காவல்துறை பயந்து ஓடியது விலங்குகளைப் போல மக்களை வேட்டையாடுவதற்கு காவல்துறை ஏற்படுத்திய நாடகம்.
  1. மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைகின்ற போதே போராட்டத்திற்குத் தொடர்பில்லாதவர்களால் கார்கள், பைக்குகள் ஒரே விதமாக அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் மேற்படி சம்பவங்கள் ஏதும் பதிவாகாத வண்ணம் தரையை நோக்கி திருப்பப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கை வன்முறையை நிகழத்திய உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக காவல்துறை செய்த திட்டமிட்ட முன்னேற்பாடாகவே பார்க்க முடியும்.
  1. குடிப்பதற்குத் தண்ணீரும், உண்ண உணவும், குடும்பத்தினரோடு வந்த மக்களுக்கு எத்தகைய வன்முறை எண்ணமும் இல்லை. அரசு, காவல்துறை, ஸ்டெர்லைட் நிறுவனம் ஆகிய மூன்றும் திட்டமிட்டு தங்களது கூலிப்படையின் மூலம் வன்முறையை ஏவியுள்ளது.
  1. பேரணியில் கலந்து கொண்ட மக்களிடமோ, கொல்லப்பட்டவர்களிடமோ எத்தகைய ஆயுதங்கள், வெடிபொருட்கள், தீப்பற்றக் கூடிய பொருட்கள் இல்லை. காவல்துறையால் கொல்லப்பட்டவர்கள் யாரும் கொல்லப்படும் போது எத்தகைய வன்முறையையும் நிகழ்த்தவில்லை.
  1. கார்கள், வண்டிகள் ஆகியவற்றுக்கும், ஸ்டெர்லைட் குடியிருப்பு பகுதிக்கும் சேதமேற்படுத்தியதும், தீ வைப்பதும் முன்தயாரிப்பின் மூலமே சாத்தியமாகும். மக்கள் யாரும் அதற்கான ஏற்பாடுகளோடு வரவில்லை. எனவே மேற்படி சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்ட சதியாகும்.
  1. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் Public Address System மூலமாக யாதொரு எச்சரிக்கையும் மக்களுக்கு விடப்படவில்லை. கூட்டத்தைக் கலைப்பதற்கான எத்தகைய நெறிகளையும் படிப்படியாகப் பின்பற்றாமல் நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
  1. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் துல்லியமாக குண்டு பாய்ந்தவுடன் உயிர் போகும் வண்ணம் தலை, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சுடப்பட்டள்ளனர். மூன்று பேர் உயிர் போகுமளவிற்கு காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டள்ளனர். .
  1. மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையினர் கைத்துப்பாக்கிளையும், எஸ்.எல்.ஆர் இரக துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளனர். நீண்ட தொலைவில் இருப்பவர்களை குறி் தவறாமல் சுடுவதன் பொருட்டு துப்பாக்கியில் ஸ்னைப்பர் கருவியை பொருத்தி துல்லியமாக சுட்டுள்ளனர்.
  1. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததும், எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லாததும் வன்முறை வெடிக்கும் என்பதை மாவட்ட ஆட்சியர் உட்பட்ட அதிகாரிகள் அனைவரும் முன்னரே தெரிந்திருந்தனர் என்பதை ஊகிக்கும் வாய்ப்பை அளிக்கிறது.
  1. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு துணை நிலை வட்டாட்சியர்கள் உத்தரவு கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், துணை நிலை வட்டாட்சியர்கள் அதனை மறுத்துள்ள நிகழ்வு உண்மையில் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டவர்களை பாதுகாக்கின்ற நடவடிக்கையாகவே பார்க்க முடியும்.
  1. குடியிருப்பு பகுதியில் காவல்துறை நடத்திய தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியவை மக்களை நிரந்தர அச்சத்திற்குள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
  2. அமைதி வழியில் போராடியவர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்தவர்கள் மீதும், வழிப்போக்கர்கள் மீதும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும், வன்முறையும், பொருட்சேதங்களும், உயிர்ப்பலிகளும் அரசு, காவல்துறை, ஸ்டெர்லைட் நிறுவனம் ஆகியன கூட்டாக இணைந்து நடத்தியவையே ஆகும். முற்று முழுக்காக இந்தப் போராட்டத்தை ஒடுக்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று தரப்பும் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளது தெரியவருகிறது.                                                                  
  1. பெருங்குழும, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பெருந்திரளாக மக்கள் போராடுவது என்பது இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது. எனவே, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிற போராட்டங்களுக்கும், அதில் பங்கேற்று வருகின்ற மக்களுக்கும் எச்சரிக்கை செய்வது, அச்சுறுத்துவதாக இந்நிகழ்வு அமைகிறது. போராடினால் உயிரிழப்பும், அடக்குமுறையும் உறுதி என்கிற உளவியல் யுத்தமாக அரசின் இந்த கொலைநடவடிக்கை அமைந்துள்ளது.
  1. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற 22.05.2018 அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் அனைவருக்கும் தூத்துக்குடியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாயிரம் காவலர்களும் பாதுகாப்புப் பணியி்ல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை உயரதிகாரிகள் அனைவரும் களத்தில் இருந்துள்ளனர். இதிலிருந்து ஆகப்பெருவாரியான மக்கள், போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதை அரசு நிர்வாகம் முன்கூட்டியே அறிந்திருக்கிறது. மக்கள் மீது வன்முறை நிகழ்த்த வேண்டும் என்று முன் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து உறுதிப்படுத்த முடிகிறது.
  1. காவல்துறைக்குப் பயந்து பல்வேறு நபர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரவில்லை. மருத்துமனை வளாகத்தில் காவல்துறை நடத்திய தொடர் தாக்குதல் இந்த பயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
  1. மே.22,2018-ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்ட 14 பேரின் மரணத்திற்கு ஸ்டெர்லைட் நிறுவனம், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட்ட தமிழ்நாட்டரசின் எந்திரங்களும், அரசுமே முழு காரணமாக அமைகிறது.
  1. பெருங்குழும, பன்னாட்டு, இந்திய முதலாளிகளின் நிறுவனங்கள் நாட்டின் இயற்கையைச் சீரழி்த்து, வளங்களைக் கொள்ளையடித்து, மக்களை நோயாளிகளாக்கி சுரண்டிக் கொழுப்பதற்கு இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையே காரணம் என்கிற வகையில், ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களைப் பாதுகாக்க இந்திய அரசின் துணையோடும், உத்தரவோடுமே இத்தகைய மனிதப் படுகொலை நிகழ்ந்திருக்கிறது.
  1. அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்களின் தமிழரசன், ஸ்நோலின், சண்முகம், காளியப்பன், செல்வசேகர், கந்தையா, கார்த்திக் ஆகிய 7 பேரின் குடும்பத்தினரிடம் நயவஞ்சகமாக பேசியும், மி்ரட்டியும், அவசரக் கோலத்தில் உடனடியாக 7 பேரின் உடல்களைச் சடலக் கூ்ராய்வு செய்த காவல்துறை மற்றும் அரசின் நடவடிக்கை என்பது தடயங்களை மறைப்பதற்கான சந்தேகத்திற்குரிய நடவடிக்கை ஆகும்.
  1. போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்தவர்களை தூத்துக்குடிக்கு வெளியெ உள்ள காவல்நிலையங்களில், வல்லநாடு துப்பாக்கிச் சூடு தளத்தி்ல் வைத்து கொடூரமான முறையில் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சட்ட விரோதமாக காவலில் வைத்திருந்து நீதிமன்றம் தலையிட்ட பின்னரே நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினர்.
  1. ஸ்டெர்லைட்டை எதிர்த்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்துள்ளன. அதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பலரும் கலந்து கொண்டனர். வெளியூரில் இருந்து வந்தவர்கள்தான் வன்முறையைத் தூண்டியதாக காவல்துறைத் தெரிவிப்பது அப்பட்டமான பொய்யாகும். காவல்தறை இத்தகைய பொய்ப்பரப்புரையின் வாயிலாக தன்னால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையை மூடி மறைப்பதோடு, ஒரு பகுதி பிரச்சினைக்கு மற்ற பகுதியிலிருப்பவர்கள் அக்கறைச் செலுத்துவது கூடாது என்று அச்சுறுத்தும் பாசிசத்தை வெளிப்படுத்துகிறது.
  1. சட்ட விரோதக் காவலில் இருந்தவர்களை மீட்பதற்கும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் தூத்துக்குடி வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர், நீதித்துறை நடுவர்கள் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை ஆகும். 

பரிந்துரைகள் 

  1. 14 பேரின் உயிரைக் காவு வாங்கிவிட்டு, நூற்றுக்கணக்கான மக்களை உடல் ஊனமாக ஆக்கிவிட்டிருப்பது, கொடூரமான ஒடுக்குமுறை ஆகும். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை என்பது உரிய காரணத்தையும், அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக அமையவில்லை. மேற்படி அரசாணைக்கு எத்தகைய சட்ட வலிமையும் இல்லை. சட்ட வலிமையற்ற இந்த அரசாணைக்குப் பதிலாக மக்களுக்கும், இயற்கைக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நிறுவப்படுவதில்லை என்கிற கொள்கை முடிவினைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.
  1. துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையின் வெறித்தனமான வன்முறையினால் பலியான 14 பேரின் சாவிற்கும், நூற்றுக்கணக்கான மக்களின் இரத்தக் காயத்திற்கும் காரணமான காவல்துறையினர், ஏவிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது கொலை வழக்கு மற்றும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
  1. ஸ்டெர்லைட் ஆலையின் முதல் மற்றும் இரண்டாம் யூனிட்டுகளுக்காகத் தமிழக அரசு கையகப்படுத்திய விவசாய நிலங்களை உரிய விவசாயிகளிடமே திரும்ப வழங்க வேண்டும்.
  1. மக்களுக்கும், இயற்கைக்கும் பேரழிவு ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறிவியலாளர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் ஆகியோரைக் கொண்ட விசாரணை ஆணையம் அமைத்து, ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சிக்கல்கள், ஸ்டெர்லைட் ஆலையின் விதி மீறல்கள், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும், பாதிப்புகளை மறு சீரமைப்பு செய்வதற்கான முழுப் பொறுப்பையும் ஸ்டெர்லைட் நிறுவனத்தையே ஏற்கச் செய்ய வேண்டும்.
  1. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் கட்சிகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையிலான உறவு குறித்தும், ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அவர்கள் பெற்ற ஆதாயம் குறித்தும்; மே-22,23 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த வன்முறைக் குறித்தும் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.சந்துரு, திரு.ஹரிபரந்தாமன் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களைக் கொண்ட சுதந்திரமான விசாரணைக்குழுவினை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
  1. விசாரணை என்கிற பெயரில் அப்பாவி பொதுமக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கைது செய்யும், துன்புறுத்தும் நடவடிக்கைகள், சமூக முன்னணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் காவல்துறைக் கைவிட வேண்டும்.
  1. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட்ட வழக்குகள் அனைத்தையும் இரத்து செய்ய வேண்டும். கைது நடவடிக்கையை கைவிட வேண்டும்.
  1. காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் உயிரிழந்த பரத்ராஜாவின் குடும்பத்துக்கும் தமிழக அரசு முழு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
  1. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறையின் அடக்குமுறையால் பலியான 14 பேருக்கும் நினைவுச் சின்னம் அமைக்க, தூத்துக்குடியின் மையப்பகுதியில் அரசு இடம் ஒதுக்கித் தர வேண்டும். 

- மக்கள் உரிமைக் கழக உண்மை அறியும் குழு.

தொடர்புக்கு:99522 03690

Pin It