Sin JUNE WRAP 18அசோகர், பௌத்தத்தை கண்ணும் கருத்துமாகப் பரப்பினார். அவர் மறைவுக்குப்பின், கொள்ளுப் பேரன் பிருகரத்திரனிடம் சேனாதிபதியாக இருந்த பார்ப்பனன் புஷ்யமித்ர சுங்கன், பட்டப் பகலில் அரசனைக் கொன்றுவிட்டு சாம்ராஜ்ஜியத்தைக் கைப்பற்றினார். உடனே, சேனைக்கு ஆணையிட்டு எங்கெல்லாம் பௌத்த பிட்சுகள் இருக்கிறார்களோ, அவர்களைத் தேடி, அவர்களின் தலையை வெட்டி வந்தால், இத்தனை பவுன் என்று அறிவித்தார். பௌத்தம் அடியோடு அழிக்கப்பட்டது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புஷ்யமித்ரன் மனுஸ்மிருதி தொகுத்தார். இராமாயணத்தைத் தொகுத்தார்.

மனுநீதியின் அடிப்படையில், மக்களை நான்கு வருணங்களாகப் - பிறவி உயர்வு - தாழ்வு உள்ளவர்களாகப் பகுத்தார். நூற்றுக்கு எழுபது பேருக்கு மேற் பட்டவர்களுக்கு, சூத்திரர்கள் - நான்காம் வர்ணத்துக்காரர்கள் என்றும், அவர் களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியறிவைக் கொடுக்கக் கூடாது என்றும் விதி செய்தார்.

20 விழுக்காடு மக்களை வர்ணத்துக்கு அப்பாற்பட்டவர்கள் - வெளியே உள்ளவர்கள் - தீண்டப்படாதவர்கள் - ஊருக்கு வெளியே குடியிருக்க வேண்டிய வர்கள் என்று மனுஸ்மிருதியில் விதித்தார். அவர்கள் பெறுமானம் உள்ள எதையும் உடைமையாகக் கொண்டிருக்கக் கூடாது என்று விதித்தார். பிராமணன் - சத்திரியன் - வைசியன் என்கிற ஒரு சிறு கூட்டத்தார் கல்வி உடைமைக்கும் சொத்து உடைமைக்கும் அதிகார உடைமைக்கும் உரியவர்கள் என அறி வித்தார். வெள்ளையன் காலம் வரையில், எந்தச் சட்டமும் இந்த சமூக அமைப்பைக் குலைக்கவில்லை.

தென்னாட்டில், இந்த அமைப்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சோழர்களால் முதன்மை தந்து பரப்பப்பட்டது. அது நிலைத்துவிட்டது.

திருக்குறளை எந்தப் புலவரும் எந்தத் தமிழ் அரசனுக்கும் அறிமுகப் படுத்தவில்லை. எல்லாத் தமிழ் அரசர்களுக்கும் மனுநீதி, இராமாயணம், பாரதம் முதலிய நூல்களே வாழ்க்கை நெறி நூல்களாக அறிமுகப்படுத்தப் பட்டன.

இந்தச் சூழலில் தான், 1865-க்குப் பிறகு, வடலூர் இராமலிங்க அடிகளார் சமரச-சன்மார்க்கத்தைப் பொது நெறியாக அறிவித்தார். அதன் பிறங்கடையே, சுயமரியாதை இயக்கம் ஆகும்.

தந்தை பெரியார் 1922 முதல் மனுஸ்மிருதி, இராமாயணம் இவற்றைக் கண்டித்தார். ஆனால், அவற்றைச் செல்வாக்கு இழக்கச் செய்ய, சமதர்ம ஆட்சி மட்டுமே தீர்வாக அமையும் என்று 1927-இல் திருநெல்வேலியில் அறிவித்தார். 1928இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், “சீர்திருத்தம் என்பது, ஒரு ஆட்சி அமைப்பாகாது; சோவியத் நாட்டில் உள்ளதைப் போல, சமதர்ம புரட்சியொன்றே தீர்வாகும்” என்று உறுதியாக அறிவித்தார். அதற்கு ஏற்ற எந்தவொரு ஏற்பாட்டையும் அவர் செய்யவில்லை.

அதேநேரத்தில், பார்ப்பனர் அல்லாதார் என்கிற 97 விழுக்காடு மக்களைக் கல்வியுரிமை, அரசு வேலை உரிமை, இவற்றுக்கு எல்லாப் பாதுகாப்பையும் தேடினார். அதில் ஓரளவு வெற்றி பெற்றார். அதற்குத் தென்னிந்தியர் நல உரிமைச் சங்க அரசு ((Justice Party Government)) ஆக்கம் அளித்தது (1920-1937).

அடுத்து காமராசர் தலைமையில் நடந்த காங்கிரசுக் கட்சி ஆட்சி (1954-1964) ஆக்கம் அளித்தது.

திராவிட கட்சிகளான தி.மு.க. ஆட்சிக் காலம் வரை யில் இடஒதுக்கீடு திட்டத்துக்குப் பெரியார் ஆக்கம் தேடினார்.

தந்தை பெரியார் அவர்கள் 24.12.1973இல் மறைந்தார்.

அதன் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1980 பிப்பிரவரியில் பிற்படுத் தப்பட்ட வகுப்பு மக்களுக்கு நாம் 60 விழுக்காடு கோரி, 50 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றோம். அதனால் தமிழகத்தில் மட்டும் கல்வியிலும் வேலையிலும் 69 விழுக்காடாக உயர்ந்தது. அது காப்பாற்றப்பட தி.க. ஒத்துழைப்புடன், அ.தி.மு.க. அரசு பாதுகாப்புத் தேடியது.

ஆனால் இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப் பட்டவர்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு, மா.பெ.பொ.க. சார்பில் 8.5.1978இல் இந்தியக் குடிஅரசுத் தலைவரிடம் வைத்த கோரிக்கை என்ன ஆனது?

1980இல் மண்டல்குழு அமையக் காரணமாக இருந்தது நம் கட்சிதான். 1990இல் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் மண்டல்குழு பரிந்துரையால் 27 விழுக்காடு நடுவண் அரசு வேலையிலும், அதன்பின் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு இடஒதுக்கீடு கிடைத்தது. இத்துடன் மட்டும் நிறைவடைய முடியுமா? விகிதாசார இடஒதுக்கீடே சரியான சமூக நீதியாகும்.

இதை வென்றெடுப்பது தந்தை பெரியாரின், மக்கள் நாயகக் கோரிக்கை வென்றெடுப்பதாகும்.

2018க்குப் பிறகு, இதில் மா.பெ.பொ.க.வும், “சிந்தனையாளன்” இதழும் முழு மூச்சுடன் பாடுபடுவோம் என்பது என் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் கோரிக்கையும் வேண்டுகோளும் ஆகும்.        - 

Pin It