மூன்று மாநிலங்களில் விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாட்டில் 1994ஆம் ஆண்டு முளைவிடத் தொடங்கியது. இதுவரை நச்சைப் பரப்பி உயிர்களைக் கொள்ளை கொண்ட ஸ்டெர்லைட் இப்போது நெஞ்சைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து உயிர்களைக் கொண்டு போய்விட்டது. “வேதாந்தா” நிறுவனத்தை உலக அளவில் பெரிய நிறுவனமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற அதன் நிறுவனர் அனில் அகர்வாலின் கனவால் அப்பாவி மக்கள் இங்கு பலியாகியிருக்கின்றனர். ‘வேதாந்தா’ என்றாலே தமிழர்களுக்கு எப்போதுமே வேதனைதான். இந்த நிறுவனம் இதுவரை செய்திருக்கும் விதி மீறல்களையும், கொடுத்திருக்கும் பொய் ஆவணங்களையும் பார்க்கும்போது இவர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் துணிபவர்கள் என்பது விளங்குகிறது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் சில நிபந்தனைகளின் பேரில் மறுப்பின்மைச் சான்றிதழ் (NOC) கொடுத்தன. குறிப்பாக விரைவான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (Environmental Impact Assessment) செய்ய வேண்டும் என்பதும், மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ. தொலைவிலேயே ஆலை அமைக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் வேதாந்தா பின்பற்றவில்லை. மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தாமலேயே சுற்றுச்சூழல்பாதிப்பு மதிப்பீடு (Environmental Impact Assessment) கொடுக்கப்பட்டது. மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ. தொலைவிலேயே ஆலை அமைக்கப்பட்டது. ஆலை அமைப்பதற்கும் செயலபடுவதற்கும் அனுமதி பெறும்போதே இவ்வளவு அத்துமீறல்கள் என்றால் ஆலை அமைக்கப்பட்ட பிறகு எவ்வளவு அத்துமீறல்களைச் செய்திருப்பார்கள்? ஆண்டிற்கு 4 இலட்சம் டன் காப்பர் என்ற இலக்குடன் செயல்பட்ட ஸ்டெர்லைட், உயிர்களைக்காவு வாங்கவும் தவறவில்லை. ஆலை தொடங்கிய நாளிலிருந்தே போராட்டங்களும் தொடங்கின. 1998 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வேதாந்தாவின் விபரீதங்களை உணர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே ஆலை மூடப்பட்டது. மீண்டும் ஆலையைத் திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தோடு, நாக்பூரை அடிப்படையாகக் கொண்ட National Environmental Engineering Research Institute (NEERI) என்னும் நிறவனத்தை ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது. இந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகளைக் குறைத்துக் காட்டியது. ஒரு கோடி மதிப்பிலான பல ஒப்பந்தங்கள் இந்நிறுவனத்திற்குப் பின்னர் கிடைத்தது இங்கு பொருத்திப் பார்க்கப்பட வேண்டியது.
2003 ஆம் ஆண்டு தமிழ் மாசுக் கட்டுபாட்டுவாரியம் ஆண்டிற்கு 70,000 டன்மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் 1,75,242 டன் காப்பர் ஆனோட்களை உற்பத்தி செய்தது.
இப்படி தொடர்ந்து மக்கள் எதிர்ப்பையும், நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்து வந்த ஸ்டெர்லைட் எந்த பின்னடைவையும் சந்திக்காமல் 2008 ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு 900 டன் என்ற அளவிலிருந்து 1200 டன் என்ற அளவிற்கு உற்பத்தியை அதிகப் படுத்தியது. சுற்றுச் சூழல் மாசையும் அதிகப்படுத்தியது. பல முறை நச்சுக் காற்று கசிந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார்களைக் குவித்தனர். இது போக பாதுகாப்பின்மையால் ஆலைக்குள் ஊழியர்களுக்குண்டான விபத்துகள் ஒரு பெரும்பட்டியலாக இருக்கிறது. 2010-2013 ஆம் ஆண்டுகளுக்குள் நடந்த 8 விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர்.
2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை செய்திருக்கும் விதி மீறல்களையும், சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளையும் சுட்டிக் காட்டிக் கடுமையாகக் கண்டித்தது. ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. ஆனால் ஆலையை மூட உத்தரவிட மறுத்துவிட்டது.
இந்த நிலையில்தான் இங்கு போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அதன் உச்ச கட்டமாகத் துப்பாக்கிச் சூடு. ஸ்டெர்லைட் ஆலை மக்களை நின்று கொன்றது. ஆனால் அரசு அன்றே கொன்றது.