ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது மற்றும் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், நடைபெற்ற போராட்டங்கள்:
• 1992 குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை விரட்டி அடிக்கப்பட்டது. மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலையை அமைக்க அரசாங்கத்தால் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மக்கள் ஆலையை அடித்து நொறுக்கினர்.
• 15.7.1993 - இரத்தினகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்டெர்லைட் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார்.
• 1.8.1994 - தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது. தொடர்ச்சியாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது.
• 16.1.1995 - மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனம் அமைச்சகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கியது.
• 14.10.1996 - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது.
• 20.8.1997 - ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகேயுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வரும் புகையால் உடல்நலன் பாதிக்கப்பட்டு புகார் அளித்தனர்.
• 23.11.1998 - உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி ஆலை மூடப்பட்டது.
• 21.9.2004 - உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழு ஆலையில் நடத்திய சோதனைக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது கட்ட விரிவாக்கத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்தது. ஆனால், ஒரே நாளில் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் வழங்கியது.
• 16.11.2004 - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை லைசென்சு பெறாமலேயே உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது என்று குறிப்பிட்டிருந்தது.
• 28.9.2010 - ஏற்கனவே சுத்தமான சுற்றுச்சூழல் தேசிய அறக்கட்டளை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் சிலர் தொடர்ந்த வழக்கில் இந்த ஆலையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று நாட்களில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் 20 முறை விசாரணை நடந்தது. 20 முறையும் வைகோ டெல்லிக்குச் சென்று உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.
• 23.3.2013 - இந்த தொழிற்சாலையை மூடு வதற்கும், மின் இணைப்பை துண்டிப்பபதற்கும் ஜெயலலிதா ஆட்சி உத்தரவிட்டது.
• 2.4.2013 - உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என்று உத்தரவிட்டது. எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு கருதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பிப்பதற்கு இந்த தீர்ப்பு தடையாக இருக்காது என்று தெளி வாகக் குறிப்பிட்டிருந்தது. பொதுநலனுக்காக இந்த வழக்கு தொடுத்தவரை கோர்ட்டு பாராட்டுகிறது என்றும் கூறியது.
• 9.4.2013 - வைகோ தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், ஆலையை மூட திரும்பவும் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் தமிழக அரசும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகளை தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு டிஸ்மிஸ் செய்தது. அதை எதிர்த்து தமிழக அரசும், வைகோவும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
• 31.5.2013 - தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்து ஆலையை மூடும் உத்தரவை இரத்து செய்து, தொழிற்சாலையை இயங்க உத்தர விட்டது. இந்த உத்தரவை இரத்து செய்ய ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
• 12.2.2018 - ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
• 13.2.2018 - 250க்கும் மேற்பட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்தனர்.
• 17.3.2018 - ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்த வழக்கு தொடர்ந்தனர். மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதித்தது.
• 24.3.2018 - தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்துக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர்.
• 26.3.2018 - பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்தது.
• 21.5.2018 - மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
• 22.5.2018 அன்று குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் தொடங்கி 100 நாட்கள் ஆனது. தூத்துக்குடி நகரமே போர்க்களமானது. போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர், ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.